Wednesday, May 1, 2024
Homeஎழுத்தாக்கங்கள்இறைவனின் சோதனைகளும், தண்டனைகளும் புதியனவாகவும், புதுமையானவையாகவுமே இருக்கும்

இறைவனின் சோதனைகளும், தண்டனைகளும் புதியனவாகவும், புதுமையானவையாகவுமே இருக்கும்

சோதனை மேல் சோதனை போதுமே யா பாரீ!
சோதனைதான் வாழ்க்கையென்றால் தாங்காது கல்பீ!
சோதனை மேல் சோதனை போதுமே யா பாரீ!

(தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ )

உலகில் அனாச்சாரங்களும், அட்டூழியங்களும், பஞ்சமாபாதகங்களும் தலைவிரித்தாடினால் சோதனைகளும், தண்டனைகளும் புதுப்புதுப் பாணியில் இறங்குமேயன்றி பழைய பாணியில் இறங்காது.

முன் வாழ்ந்த நபீமாரின் சமூகத்தினர் கல் மழை, பெருங்காற்று, தவளை மழை, பேன் மழை, வெட்டுக் கிளி முதலானவை மூலம் சோதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும், தண்டிக்கப்பட்டுள்ளார்கள் என்றும்,  இதற்கு முன்னர் பதிவு செய்திருந்தோம்.

இப்பதிவில் நபீ ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் சமூகத்தவர்களான “தமூத்” கூட்டத்தினருக்கும், நபீ ஹுத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் கூட்டத்தினருக்கும் வழங்கப்பட்ட தண்டனைகள் பற்றி குறிப்பிடுகிறோம்.

كَذَّبَتْ ثَمُودُ وَعَادٌ بِالْقَارِعَةِ ، فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا بِالطَّاغِيَةِ ، وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ ، سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَمَانِيَةَ أَيَّامٍ حُسُومًا فَتَرَى الْقَوْمَ فِيهَا صَرْعَىٰ، كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ ،

“தமூத்” கூட்டத்தினரும், “ஆத்” கூட்த்தினரும் இதயங்களைத் திடுக்கிடச் செய்யக் கூடிய மறுமை நாளைப் பொய்யாக்கினார்கள்.

ஆகவே “ஸாலிஹ்” நபீயின் கூட்டத்தவர்களாகிய “தமூத்” கூட்டம் ஒரு பெரிய சத்தத்தைக் கொண்டு அழிக்கப்பட்டனர். இன்னும் “ஹுத்” நபீயின் கூட்டத்தாராகிய “ஆத்” கூட்டத்தினர் பெரும் சத்தத்தோடு கடுங்குளிர் கலந்த கொடுங்காற்றைக் கொண்டு அழிக்கப்பட்டார்கள்.

ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ச்சியாக அவர்கள் மீது அதை அவன் வசப்படுத்தி வீசச்செய்து இருந்தான். ஆகவே நபீயே! அப்பொழுது நீங்கள் அங்கே இருந்திருப்பின் அவற்றில் அக்கூட்டத்தினரை அடிப்பாகங்களோடு சாய்ந்து கிடக்கும் ஈச்சமரங்களைப் போன்று பிணங்களாக கிடந்ததை நீங்கள் கண்டிருப்பீர்கள். ஆகவே இன்றைக்கும் அவர்களில் எஞ்சியிருப்போரை நீங்கள் காண்கிறீர்கள்.
(திருக்குர்ஆன் – 101 – 1,2,3,4,5)

நபீ ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கூட்டத்தவர்கள் “தமூத்” கூட்டமென்று அழைக்கப்பட்டார்கள்.

صَالِحٌ نَبِّيٌّ عَرَبِيٌّ بَعَثَهُ الله إِلَى قَوْمِهِ ثَمُوْدَ لِهِدَايَتِهِمْ فَكَذَّبُوْهُ ، فَزَلْزَلَتْ بِهِمُ الْأَرْضُ. وَهُوْدٌ نَبِيٌّ من أنبياء الله أرسله الله الى قومه عادٍ ، لِدَعْوَتِهِمْ إِلى عبادة الله فكذّبوه فنجّاه الله وأهلكهم.
“தமூத்” கூட்டத்தினர் “தாஙியா” பெரும் சத்தத்தைக் கொண்டு அழிக்கப்பட்டார்கள். ஒரு கூட்டமே சத்தத்தைக் கொண்டு அழிக்கப்பட்டார்களென்றால் அந்தச் சத்தம் எவ்வாறிருந்திருக்கும் என்று நாம் கற்பனை செய்து பார்த்தால் கூட அது புரியாது. அந்தச் சத்தத்தோடு பூமி நடுங்கி – குலுங்கி அந்த நடுக்கத்தினாலும், குலுக்கத்தினாலும் அவர்கள் அங்குமிங்கும் தூக்கியெறியப்பட்டு செத்து மடிந்தார்கள்.

இவர்கள் செய்த பாவங்கள் பல இருந்தாலும் அவற்றில் மிகப் பிரதான பாவம் அவர்கள் மறுமை நாளைப் பொய்யாக்கியதேயாகும்.

அல்லாஹ்வையும், றஸூல்மார்களையும், வேதங்களையும், மலக்குகளையும், மறுமை நாளையும், நன்மையான தீமையான “களா – கத்ர்” விதிகளையும் நம்புவது அதாவது ஆறு விடயங்களை நம்புவது “ஈமான்” நம்பிக்கைக்குரிய நிபந்தனைகளாகும், எந்த ஒரு நபீயின் சமூகத்தவர்களாயினும் இவ் ஆறு விடயங்களையும் நம்பவே வேண்டும். இவற்றில் ஒன்றையேனும் மறுத்தவன் “முஃமின்” விசுவாசியாக இருக்க மாட்டான்.

“தமூத்” கூட்டத்தை விடுவோம். இன்று வாழும் நபீ முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் சமூகத்தவர்களிற் சிலர் முஸ்லிம் என்ற பெயரிலும், உடையிலும் இருந்தாலும், முஸ்லிமான பெற்றோருக்குப் பிறந்தவர்களாக இருந்தாலும் அவர்களின் நாகரீகப் போதை அவர்களின் தலைகளைத் தாக்கியதால் மறுமையை மறுக்கின்றார்கள். அவர்களிடம் குடிக்காதீர், விபச்சாரம் செய்யாதீர், மறுமையில் தண்டனையுண்டு என்று நாம் கூறினால் மறுமையா? அதென்ன சாமான்? தண்டனையா? அது ஒரு கிலோ என்ன விலை? என்று கேட்கிறார்கள்.

மறுமையென்று ஒன்றில்லை என்று ஒருவன் தனது வாயால் சொல்லா விட்டாலும் கூட அவன் கொடிய பாவங்களை முண்டியடித்துக் கொண்டு செய்வது அவன் மறுமையை நம்பவில்லை என்பதையே காட்டுகிறது. இவர்களும் “தமூத்” கூட்டத்தினர் போன்றும், “ஆத்” கூட்டத்தினர் போன்றுமே தண்டிக்கப்படுவார்கள். அழித்தொழிக்கப்படுவார்கள்.

ஒரு நாட்டில் ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் பெரும் சத்தத்தோடு கடுங்குளிர் கலந்த காற்று வீசினால் அந்நாட்டவர்கள் எவ்வாறு செத்து மடிந்திருப்பார்கள் என்று நாம் கற்பனை செய்து பார்த்தால் கூட எமது கற்பனைக்கு எட்டாது.

முன் வாழ்ந்த நபீமாரின் சமூகத்தில் அந்த நபீமாரைப் பொய்யாக்கியும், அட்டூழியம், அனாச்சாரங்கள் செய்தும் வாழ்ந்தவர்கள் தண்டிக்கப்பட்டது போல் பெருமானார் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சமூகத்தினர் தண்டிக்கப்படவில்லை. இது பெருமானாருக்கு இறைவன் வழங்கிய ஒரு கண்ணியமேயாகும். தவிர அவர்களில் இன்று வாழும் சமூகத்தினர் அட்டூழியமின்றியும், அனாச்சாரமின்றியும் வாழ்கிறார்கள் என்பது கருத்தல்ல. பொங்கி வரும் கடல் அணையை உடைக்குமாயின் ஊரே அழிந்து விடுவது போல் உலகில் அட்டூழியம், அநீதி, அட்டகாசம், கொலை, கொள்ளை, விபச்சாரம் என்பன மலிந்து விட்டால் கொரோனா போன்ற அல்லது அதை விடப் பெரிய தண்டனைகள் வந்தேயாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments