Saturday, May 4, 2024
Homeஎழுத்தாக்கங்கள்விவாதம் மூலம் தீர்வு கண்டால் என்ன?

விவாதம் மூலம் தீர்வு கண்டால் என்ன?

(தொகுப்பு மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ)

விவாதம் மூலம் தீர்வு கண்டால் என்ன?

மேற்கண்டவாறு ஒருவர் என்னிடம் கேட்டால் அவருக்கு நான் கூறும் பதில் பின்வருமாறு.

கேள்வி நல்ல கேள்விதான். ஸூபிஸ வழி செல்லும் ஸூபி மகான்கள் விவாதத்தை விரும்பவில்லை. இதுவே எனது பிரதான காரணம். இதற்கும் ஒரு விளக்கம் தருகிறேன். இது தவிர இன்னும் பல காரணங்கள் உள்ளன. அவற்றுக்கும் விளக்கம் தருகிறேன். நான் கூறும் விளக்கத்தை பொது மக்கள் அறிந்தால்தான் நான் விவாதத்திற்கு பின்வாங்குவதைச் சரியென்று ஏற்றுக்கொள்வார்கள்.

முதலில் ஸூபிகள் விவாதத்தை விரும்பவில்லை என்பதற்கான ஆதாரத்தையும், காரணத்தையும் எழுதுகிறேன்.

سمعت سيّدي عَلِيًّا الخَوَّاص رضي الله عنه يقول ( الجَدَال في الشريعة مِن بَقَايَا نِفَاقٍ في القلب ، لأنّه يُريد به إدحاضَ حُجَّةِ الْغَيْرِ ، وفي القرآن العظيم . ” فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّىٰ يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا ” فَنَفَى الْإِيْمَانَ – الكاملَ – عمَّن يَجِد في الحكم عليه بالشرِيعة حَرَجًا، ومعلوم أنَّ الجَدالَ مع (أئمة الشرِيعة ) جَدَالٌ معه صلّى الله عليه وسلّم . وإن تَفَاوَت المقامُ ، فإنّ العلماء على مدرجة الرُّسُل سَلَكُوْا ، فكما يجب علينا الإيمان والتّصديقُ بِكُلِّ ما جائت به الرّسل ، وإن لم نَفهَمْه ، فكذلك يجب علينا الإيمان والتّصديقُ بكلام الأئمة إذا لم نفهمه ، حتّى يأتينا عن الشارع ما يخالِفُه)
( الميزان الخضرية، لعبد الوهّاب الشعراني ص – ٤٨ )

(மொழியாக்கம்)

ஷரீஅத்துடைய விடயத்தில் தர்க்கம் செய்வது நயவஞ்சகத்தனத்தின் எஞ்சிய பகுதியாகும். தர்க்கத்தின் மூலம் ஏனைய அறிஞர்களின் ஆதாரம் பொய்யாக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّىٰ يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا

உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில் அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக ஆகமாட்டார்கள். (04 – 65)

இந்த வசனத்தில் ஷரீஅத்தில் ஒருவனுக்கு பாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டு அதைக் குற்றமாக கருதக் கூடியவனில் ஈமான் பூரணமாக இல்லை என அல்லாஹுதஆலா கூறுகின்றான்.

எனவே ஷரீஅத்துடைய இமாம்களுடன் ஒரு மனிதன் தர்க்கம் செய்து அவர்களின் உண்மையான ஆதாரத்தை பொய்யாக்க நாடுவது நபீ ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களோடு தர்க்கம் செய்வது போன்றாகும். அறிவில் படித்தரம் வித்தியாசப்பட்டாலும் உலமாஉகள் றஸுல்மார்களின் வழியில் நடந்தவர்களாவர். றஸுல்மார்கள் கொண்டுவந்த தத்துவத்தை நாம் புரிந்து கொள்ளாவிட்டாலும் அவர்கள் கொண்டு வந்த அனைத்தையும் உண்மைப்படுத்தி ஈமான் கொள்வது எமக்கு அவசியமாக இருப்பது போல இமாம்களின் பேச்சுக்களின் காரணத்தை நாம் புரியாமல் விட்டாலும் நபீ ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடத்திலிருந்து இமாம்களுடைய பேச்சுக்கு மாற்றமானது எங்களுக்கு கிடைக்கும் வரை அவர்களுடைய பேச்சுக்கள் அனைத்தையும் உண்மைப்படுத்தி நம்பிக்கை கொள்வது கடமையாகும்.

தர்க்கமும் ஆய்வுகளும் இன்றி இமாம்களின் பேச்சுக்களை நம்பிக்கை கொள்வது அவசியமாகும். காரணம் ஷரீஅத்துடன் ஹகீகத்தின் அடிப்படையில் அவர்கள் தங்களின் மத்ஹபுகளை உருவாக்கியுள்ளார்கள்.

ஷரீஅத்துடைய இமாம்களின் பேச்சுக்கள் அனைத்தும் அல்குர்ஆனினதும், ஹதீதினதும், ஸஹாபாக்களின் சொற்களினதும், சரியான கஷ்பு – இறை உதிப்பினதும் அடிப்படையில் அமைந்ததாகும்.

விவாதிக்க நான் விரும்பாததற்கான காரணங்களில் மார்க்க விடயத்தில் விவாதம் செய்வதை ஸூபி மகான்கள் விரும்பவில்லை என்ற காரணத்திற்காக நானும் விரும்பவில்லை.

நான் விவாதத்தை விரும்பாததற்கான இரண்டாவது காரணம் பின்வருமாறு.

அதாவது வாதி, பிரதி வாதி இருவரினதும் “நிய்யத்” எண்ணம் தூய்மையானதாக இருக்க வேண்டும். வெற்றி, தோல்வி அவர்களின் இலட்சியமாக இல்லாமல் மனப் பக்குவமுடையவர்களாக இருக்க வேண்டும்.

ஓரு காலத்தில் “தீன்” மார்க்கத்திற்கென்று வாழ்பவர்கள் இருந்தார்கள். வாய் திறந்தால் உண்மைதான் பேசுவார்கள். உள்ளத்தில் ஒன்றிருக்கும் நிலையில் உதட்டால் இன்னொன்று பேசமாட்டார்கள்.

هُمْ قَومٌ، إذا تكلّموا تكلّموا لله ، وإذا سكتوا سكتوا لله ، وإذا قاموا قاموا لله ، وإذا جلسوا جلسوا لله ، وإذا أكلوا أكلوا لله، وإذا شربوا شربوا لله، وإذا ناموا ناموا لله وإذا سحروا سحروا لله، (وفي رواية بدل لله بالله والثاني هو الأنسب عندي)

இது ஹதீதின் வசனமல்ல. அவ்லியாஉகள், ஸூபீ மகான்களின் பேச்சு. இவ்வாறான வசனம் ஞான மகான்களின் நூல்களில் இடம்பெற்றுள்ளன.

ஒரு கூட்டம் உலகத்தில் இருந்தது. அவர்கள் பேசினால் அல்லாஹ்வுக்காக பேசுவார்கள். வாய் மூடி மௌனிகளானாலும் அல்லாஹ்வுக்காகவே மௌனிகளாவார்கள். அவர்கள் எழுந்தாலும் அல்லாஹ்வுக்காகவே எழுவார்கள். அவர்கள் அமர்ந்தாலும் அல்லாஹ்வுக்காகவே அமர்வார்கள். சாப்பிட்டாலும் அல்லாஹ்வுக்காகவே சாப்பிடுவார்கள். அவர்கள் பருகினாலும் அல்லாஹ்வுக்காகவே பருகுவார்கள். அவர்கள் உறங்கினாலும் அல்லாஹ்வுக்காகவே உறங்குவார்கள். அவர்கள் கண்விழித்திருந்தாலும் அல்லாஹ்வுக்காகவே கண்விழித்திருப்பார்கள்.

இத்தகைய ஒரு கூட்டம் உலகத்தில் வாழ்ந்துள்ளனர். அவர்களை அல்லாஹ் தன் பக்கம் எடுத்துக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் மணமகன்களாவர். அவ்லியாஉகள், மஷாயிகுமார்கள் போன்று. அல்லது அவர்கள் அல்லாஹ்வின் மணமகள்களாவர். றாபிஅதுல் அதவிய்யா, நபீஸதுல் மிஸ்ரிய்யா ஆகியோர் போன்று. இக்காலத்தைப் பொறுத்த வரை அத்தகையோர் இல்லை. ஆகையால் தூய்மையான எண்ணமில்லாதவர்களுடன் விவாதிப்பது நேரத்தை வீண் செய்வதாகவே ஆகும். பயனொன்றும் கிடைக்காது.

கடந்த காலத்தில் “ஸுன்னத் ஜமாஅத்” உலமாஉகளுக்கும், வஹ்ஹாபிஸ உலமாஉகளுக்கும் நடந்த பல மாநாடுகள் எந்த ஒரு பயனுமின்றிக் கலைந்துள்ளது. மாநாடு கலைந்த பின் ஒவ்வொரு குழுவும் தாம் வென்றதாகவே பிரசுரம் அச்சிட்டு வினியோகிப்பார்கள். கண்ட பலனொன்றுமில்லை கண்ணே றஹ்மானே என்று மஸ்தான் சொன்னது போல் கதை முடிந்து விடும்.

நாளை காலை 10 மணிக்கு விவாத மாநாடு உள்ளதென்றால் விவாதிப்போர்களில் ஒவ்வொரு குழுவினரும் அதற்கு முந்தின இரவு தமக்கிடையே ஒரு இறுதிக் கூட்டம் கூட்டுவார்கள். அதில் சில முடிவுகளும் எடுப்பார்கள். அவற்றில் ஒன்று (நாம் வெற்றி பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும். நாம் தோல்வி காணும் சாத்தியமிருக்குமாயின் எவ்வாறாயினும் கூட்டத்தைக் குழப்ப வேண்டும், கூட்டம் கலைந்த பின் நாங்கள்தான் வெற்றி பெற்றோமென்று ஒரு துண்டு பிரசுரம் வெளியிட வேண்டும்) என்பதாகும்.

இவ்வாறு “நிய்யத்”தோடு வருபவர்களுடன் விவாதித்து எந்த ஒரு பலனும் கிடைக்கப் போவதில்லையாதலால் மார்க்க விடயத்தை விவாதம் மூலம் தீர்த்துக் கொள்வது கூடாது. எனினும் அரசியல் பிரச்சினை, வேறு பிரச்சினை எதுவாயினும் விவாதம் மூலம் தீர்க்க உடன்படலாம்.

நான் விவாத்தை விரும்பாததற்கான மற்றொரு காரணம் உலமாஉகளில் விவாதம் தொடர்பாக முன்நிற்பவர்கள் விஷப்பாம்புகள் போன்றவர்களாவர். சதிகாரர்களாவர். அங்கு வரவேண்டும், இங்கு வரவேண்டும் என்று கூறி என்னை இனம் தெரியாதவர்களைக் கொண்டு கொலை செய்வதே இவர்களின் திட்டமாகும். இதை நான் ஆதாரத்தோடு சொல்கிறேன். இது எனது கற்பனையல்ல.

1979 – 1980 களில் “பத்வா” வழங்கப்பட்ட ஆரம்ப காலகட்டத்தில் கொழும்பு கலாச்சார அமைச்சிலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அவ்வேளை அமைச்சின் முக்கிய பதவிகளில் அன்ஸார், ஜெம்ஸித் ஆரிப் என்ற இருவர் இருந்தார்கள். அவர்கள்தான் அழைத்திருந்தார்கள் என்னுடன் அமைச்சுக்குள் பிரவேசிப்பதற்கு மூன்று பேர்களுக்கு மட்டுமே அனுமதியிருந்தது. மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் நாங்கள் பாதுகாப்பு கேட்டபோது ஒரே ஒருவர் மட்டுமே தரப்பட்டது.

நாங்கள் ஐம்பது பேர்கள் இரண்டு “பஸ்” வாகனம் எடுத்துப்போவதற்கான ஒழுங்குகள் செய்தோம். வண்டிகள் இரண்டும் மட்டக்களப்பு வண்டிகள்.

மட்டக்களப்பு பிலால் எம்போரியம் உரிமையாளர் அல்ஹாஜ் கலீல் அவர்களின் தந்தை மர்ஹும் S. கச்சி முஹம்மது – SK ஹாஜியார் அவர்களின் தலைமையிலும், அல்ஹாஜ் MLM ஆரிபீன் அவர்களின் தலைமையிலும் பயணம் ஒழுங்கு செய்யப்பட்டது.

ஒரு நாள் மாலை ஐந்து மணிக்குப் புறப்பட்டு அன்றிரவு இடையில் தங்கியிருந்து காலையில் கலாச்சார அமைச்சுக்குப் போவதாக முடிவு செய்திருந்தோம்.

இதற்கிடையில் எங்களை வாகனத்தோடு அழித் தொழிக்கத் திட்டமிட்டு நாங்கள் பயணிக்கவிருந்த இரண்டு வண்டிகளின் இலக்கங்களும் காத்தான்குடியிலுள்ள ஒரு சீமானின் தலைமையில் கொந்தராத் குழு ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. கொன்றக்ட் காரர்கள் வழியில் காட்டுப் பகுதியில் எங்களின் வாகனத்தை நிறுத்தி பெற்றோல் ஊற்றி எரிப்பதற்கு காத்தான்குடியிலுள்ள காலஞ்சென்ற ஓர் அடியாளின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாங்கள் பயணிக்கவிருந்த வண்டிகளில் ஒன்று பழுதடைந்ததால் கல்முனையிலிருந்து வேறு வண்டி எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது. எங்களின் பயணம் சில மணி நேரம் தாமதமாயிற்று. இதனாலும், எதிர்பாராமல் இடையில் ஓர் ஊரில் அன்றிரவு தங்கியிருந்து காலையில் கலாச்சார அமைச்சுக்குப் போவதென்று முடிவு செய்யப்பட்டதாலும் இடை வழியில் எங்களை கொலை செய்ய நின்ற கொழும்பு கொந்தராத்து காரர்களின் குறிதவறி விட்டது. அல்லாஹ் மிக அறிந்தவன். இதனால் நாங்கள் உயிர் தப்பி அன்று காலை 10 மணியளவில் கலாச்சார அமைச்சை அடைந்தோம். கொந்தராத் காரர்கள் ஒரு சிறிய பஸ் வன்டியிலும், இரண்டு ஆட்டோக்களிலும் பெற்றோல் கலன்கள் சகிதம் அங்கு வந்திருந்தார்கள்.

நான் வாகனத்திலிருந்து இறங்கு முன் சிறிய சலசலப்பொன்று நடைபெறுகின்றதென்று விளங்கிக் கொண்டேன். ஏனெனில் எங்கள் குழுவின் தலைவர்களில் ஒருவராக வந்த SK ஹாஜியார் அவர்கள் கையில் ஓர் செக் புத்தகத்தை வைத்துக் கொண்டு அதை என்னுடன் வந்தவர்களிடம் உயர்த்திக் காட்டி பஸ் வண்டி இரண்டும் எரிக்கப்பட்டால் நாம் புதிய பஸ் வண்டி இரண்டு எடுத்துக் கொண்டுதான் ஊருக்குப் போவோம். யாரும் கவலைப்பட வேண்டாம் என்று சத்தமிட்டுக் கொண்டிருந்தார்.

இவ்வாறு சலசலப்பு ஏற்பட்டதோடு எங்களுடன் வந்த பொலிஸ் 119 (வன் வன் நைன்) அவசர பொலிஸ் பிரிவுக்கு போன் செய்து அவர்களை அங்கு வரவைத்த பிறகு அடியாட்கள் அனைவரும் கலைந்து போய்விட்டார்கள்.

நான் உள்ளே சென்றதும் அங்கேயும் ஒரு சதி ஏற்பாடு இருந்ததை நான் அறிந்து கொண்டேன்.

அமைச்சின் பொறுப்பாளர் அன்ஸார் விவாதத்தை துவங்கலாமா? என்று பொதுவாக கேட்டார். ஆம் என்றார்கள் மற்றவர்கள். காத்தான்குடி உலமா சபை சார்பாக மூன்று பேர்களும், கொழும்பு உலமா சபை சார்பாக மூன்று பேர்களும் வந்திருந்தார்கள்.

நான் என்ன விவாதம் என்று கேட்டேன். அதற்குத்தானே உங்களை அழைத்தோம் என்றார் அன்ஸார். அவர்கள் அனுப்பிய கடிதத்தைக் காட்டி இதில் கலந்துரையாடல் என்றுதான் எழுதப்பட்டுள்ளதென்று கூறினேன். அன்ஸார் தலைகுனிந்தார் மற்றவர்களும் வாயடைத்துப் போயினர்.

இறுதியில் விவாதமுமின்றி, கலந்துரையாடலுமின்றி கூட்டம் கலைந்தது. திஹாரி வரை பொலிஸ் பாதுகாப்போடு ஊருக்கு வந்தோம்.

இத்தகைய சதிகாகரர்களின் அழைப்பை நம்பி எவ்விடத்துக்கும் செல்ல நான் தயாராக இல்லை. அறிவுத் தாகம் கொண்டவர்களுக்கு அள்ளிவழங்கத் தயாராக உள்ளேன்.

(குறிப்புகள்)

குறித்த சீமான் கொழும்பில் கடை வைத்திருந்த ஒரு செல்வந்தன். இவர் கொழும்பிலுள்ள நாட்டாமைகளோடு தொடர்புள்ளவர். இதனால் கொந்தராத்து காரர்களை ஏற்பாடு செய்வது இவருக்கு மிக எழிதாக இருந்தது போலும்.

காத்தான்குடி நூரானிய்யா பள்ளிவாயல் வளாகத்தில் நடைபெற்ற மீலாத் விழா ஒன்றின் போது குறித்த சீமானின் பெயர் கூறாமல் “சிலோன் சீமான்” என்று அவரைச் சுட்டிக் காட்டிப் பேசியவன் நான் தான்.

இவர் காத்தான்குடி சந்தைக்கு கறி வாங்க காரில் வந்தால் கார் ஓட்டுனர் இறங்கி அவரின் பக்கமுள்ள கதவைத் திறக்கும் வரை அவர் இறங்காத கௌரவமுள்ள ஒரு பணிவான மனிதன். அவர் என்னை பச்சையாக சப்பி துப்புவதற்கும் விருப்பமான மனிதன்தான்.

சங்கைக்குரிய மௌலானா வாப்பா அப்துர் றஷீத் கோயாத் தங்கள் றஹிமஹுல்லாஹ் அவர்கள் மீது அவருக்கு இருந்த பொறாமை காரணமாக ஒரு சமயம் முஹ்யித்தீன் தைக்காப் பள்ளி வாயலின் முன்னின்ற அவர் தனது பணத் திமிரின் நிமித்தம் பள்ளிவாயல் படியில் காலால் உதைத்து (மலையாளத்தான் வந்த பள்ளியை கழுவுங்கள்) என்று பகிரங்க வீர முழக்கம் செய்தவரும் இவர்தான்.

இறுதியில் மௌலானா வாப்பா அவர்களின் சாபத்திற்குள்ளாகி வெளியிறங்க முடியாமல் பல வருடங்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார். மனைவி மக்கள் கூட அருகில் சென்று கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் ஒரு நாளைக்கு 1500 ரூபா வீதம் இரண்டு கூலியாட்களின் பராமரிப்பிலேயே கிடந்து இறந்தார்.

இவர்தான் என்னையும், என்னுடன் கலாச்சார அமைச்சுக்கு இரண்டு பஸ்ஸில் வந்தவர்களையும் பஸ்ஸுடன் எரித்துச் சாம்பலாக்க திட்டமிட்டிருந்த ஹாஜி மகான்.

காத்தான்குடியிலிருந்து உலமாஉகள் பலரும், பொது மக்களில் சிலரும் ஒரு பஸ் வண்டியில் வந்திருந்தார்கள். அந்தக் குழுவுக்கு காத்தான்குடியிலுள்ள ஓர் அடியாள் ஒருவரே தலைவராக வந்திருந்தார். அவர் என்னைக் கண்டால் எப்போதும் என்ன தம்பி என்று கேட்பவர் நானும் என்ன காக்கா என்று கேட்பவன்.

ஒரு நாள் காத்தான்குடி நாகையடி அவ்லியா வீதி வழியால் நான் வந்து கொண்டிருந்த வேளை இந்த அடியாள் மாட்டு வண்டி ஒன்றில் கடற்கரை மண் ஏற்றி வந்து ஒருவரின் வீட்டில் இறக்கிக் கொண்டிருந்தார். நான் அவரிடம் என்ன காக்கா இந்த வேலை செய்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கவர் (நான் செய்த கறுமங்களுக்கு அல்லாஹ் என்னை இவ்வாறு வைத்துள்ளான்) என்று கண்ணீர் சுரந்தவராக என்னிடம் கூறினார்.

இத்தகைய சதிகாரர்கள் அழைக்கும் இடத்திற்கு விவாதிக்க நான் செல்வதை விரும்பவில்லை. மேற்கண்ட மூன்று காரணங்களுக்காகவே விவாதம் செய்ய நான் விரும்புவதில்லை.

நான் பேசுகின்ற ஞானம் தொடர்பாக என்னுடன் பேச வருவோருடன் நான் பேசுவதற்கு என்றும், எப்போதும் தயாராக உள்ளேன். அல்ஹம்துலில்லாஹ்! இது வரை பேசிக் கொண்டே இருக்கிறேன். இன்றுள்ள சூழ் நிலையில் இனிப்பைத் தேடி எறும்புதான் வரவேண்டும். டொக்டரைத் தேடி நோயாளிதான் போக வேண்டும். எந்த மகான் வருவதாயினும் அவர் இஸ்லாமிய முறைப்படி வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்.

அல்லாஹ் சொன்னதையே நான் சொல்கிறேன். கண்மணி நாயகம் சொன்னதையே நான் சொல்கிறேன். இமாம்கள், ஸூபி மகான்கள், வலீமார்கள் சொன்னதையே நானும் சொல்கிறேன். மேற்கண்ட மகான்கள் அறபியில் சொன்னதையே நான் தமிழில் சொல்கிறேன். கருத்துக்குரியவர்கள் அவர்கள்தான். நான் அல்ல. இதுவே உண்மை.

எந்த ஒரு அறிஞனுக்காவது நான் சொல்வது பிழையென்று விளங்கினால் அவர்தான் என்னிடம் வந்து விளக்கம் கேட்க வேண்டும். நான் அவரிடம் சென்று விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. اَلْعِلْمُ يُعْطَى وَلَا يَأْتِيْ அறிவு வழங்கப்படும். ஆனால் அது எவரின் காலடிக்கும் செல்லாது.

நான் சொல்லுகின்ற கருத்து ஒவ்வொன்றையும் “ஷரீஆ” என்ற اَلْمِحَكُّ – “அல்மிஹக்கு” உரை கல்லில் உரைத்துப் பார்த்த பிறகுதான் எழுதுகிறேன், பேசியும் வருகிறேன்.

اَلْمِحَكُّ هو حَجَرٌ يُحَكُّ بِهِ لِلْإِخْتِبَارِ والإِنْتِقاد.
அது ஒரு கல். தங்கம் அல்லது வெள்ளியை உரைத்து கலப்புள்ளதா? கலப்பில்லாததா? என்பதைக் கண்டறியப் படும். இக்கல் தங்கம் வெள்ளி வியாபாரிகளிடம் உண்டு.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments