Monday, May 13, 2024
Homeஎழுத்தாக்கங்கள்உலகப் பிரசித்தி பெற்ற நான்கு 'குத்பு'மாரும் 'வஹ்ததுல் வுஜூத்' ஞானம் பேசியவர்களேயாவர்.

உலகப் பிரசித்தி பெற்ற நான்கு ‘குத்பு’மாரும் ‘வஹ்ததுல் வுஜூத்’ ஞானம் பேசியவர்களேயாவர்.

(தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ)

இறைஞானிகளும், குறிப்பாக ஸூபிஸ மகான்களும் உலகில் தோன்றிய ஞானமகான்களில் நால்வரை மட்டுமே “குத்பு”கள் என்று குறிப்பிடுகிறார்கள். الأقْطَابُ الْأَرْبَعَةُ என்றே வசனம் எழுதியுள்ளார்கள். ஞான மகான்களின் நூல்களில் இவ்வசனத்தைக் காணலாம்.

படித்தவர்களாலும், பாமரர்களாலும் பொதுவாக அவ்லியாஉகள் என்று சொல்லப்படுபவர்கள் பின்வருமாறு தரம் பிரிக்கப்பட்டுள்ளார்கள்.

ثلاثمأة وهم النُّقَبَاءُ، وسبعون وهم النُّجباءُ، وأربعون وهم البُدَلَاءُ، وعَشَرَةٌ وهم الأَخْيَارُ، وسبعةٌ وهم العُرَفَاءُ، وخمسَةٌ وهم الأَنْوَارُ، وأربعةٌ وهم الأوتادُ وثلاثة وهم المختارون، وواحدٌ وهو الغَوْثُ، ويُقالُ له الْقُطْبُ.

300பேர் “நுகபாஉ” என்றும், 70 பேர் “நுஜபாஉ” என்றும், 40 பேர் “புதலாஉ” என்றும், 10 பேர் “அக்யார்” என்றும், 7 பேர் “உறபாஉ” என்றும், 5 பேர் “அன்வார்” என்றும், 4 பேர் “அவ்தாத்” என்றும், 3 பேர் “முக்தார்” என்றும், ஒருவர் “கவ்து” என்றும் அழைக்கப்படுவார்கள். இவர்தான் “குத்பு” என்றும் அழைக்கப்படுவார்.

ஒவ்வொரு காலத்திலும் மேலே குறித்த 440 பேர்களும், குறித்த பெயர்களால் அழைக்கப்பட்டு உயிருடன் இருப்பார்கள்.

இவர்களில் குத்பு – கவ்து என்ற உச்சகட்ட உயர் பதவியிலுள்ள ஒருவர் “வபாத்” மரணித்தால் அவருக்கு அடுத்த கீழ்ப்பதவியிலிருந்த மூன்று “முக்தார்”களில் ஒருவர் “குத்பு” என்ற அந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவார். முக்தார்களில் ஒருவர் மரணித்தால் அவருக்கு அடுத்த கீழ்ப்பதவியிலிருந்த நான்கு “அவ்தாத்”களில் ஒருவர் “முக்தார்” என்ற அந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவார். இவ்வாறு மேற்பதவியிலுள்ள ஒருவர் மரணிக்கும் போது கீழ்ப்பதவியிலுள்ள ஒருவர் அந்த இடத்துக்கு நியமிக்கப்படுவார். இறுதியில் “நுகபாஉ” என்ற பதவியிலிருக்கும் 300 பேர்களில் ஒருவர் மரணித்தால் அந்த இடத்திற்கு பொதுமக்களில் தகுதியான ஒருவர் நியமிக்கப்படுவார். இவ்வாறு தரம் பிரிக்கும் பொறுப்பு – அதிகாரம் குத்பு நாயகம் முஹ்யித்தீன் அவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது.

நான் மேலே எழுதிய இந்தக் கருத்தை மறுக்க எவராவது நினைத்தால் அவர் ஞானமகான்களின் இரண்டொரு நூல்களை மட்டும் வாசித்து விட்டு மறுக்க முன்வராமல் அவர்களின் பல நூல்களை வாசித்த பின் மறுப்பதற்கு முன்வருவது அறிவுடைமையாகும்.

ஏனெனில் ஞான மகான்களால் கூறப்பட்ட, அல்லது கூறப்படுகின்ற கருத்துக்கள், தத்துவங்கள் எல்லாமே எல்லா ஞான நூல்களிலும் இருக்கும் என்று கொள்ள முடியாது. ஒருவர் ஐந்து ஞான நூல்கள் எழுதியுள்ளார் என்றால் அவர் ஞானக் கருத்துக்கள் அனைத்தையுமே அவற்றில் உள்வாங்கியிருப்பார் என்று கொள்ள முடியாது. அவர் எழுதிய ஐந்து நூல்களிலும் உள்வாங்காத ஒரு கருத்து இன்னொருவர் எழுதிய நூலில் உள்வாங்கப்பட்டிருக்க இடமுண்டு.

ஆகையால் ஞான மகான்களால் கூறப்பட்ட கருத்துக்களை அவர்களிற் சிலரால் எழுதப்பட்ட ஒரு சில நூல்களை மட்டும் வாசித்து விட்டு அந்தக் கருத்து பிழையென்று சொல்வதோ, அப்படியொரு கருத்து அவர்களால் கூறப்படவில்லையென்று சொல்வதோ, ஒற்றைக் காலில் நின்று அவ்வாறு வாதிடுவதோ அறிஞர்களுக் குரிய பண்பல்ல,

ஸூபி மகான்கள் சொல்வது போல் “குத்பு”மார் நால்வர் மட்டும்தான் என்று வைத்துக் கொண்டால் ஒவ்வொரு காலத்திற்கும் ஒரு “குத்பு” இருப்பார் என்ற பெரும்பாலான ஞானமகான்களின் கருத்துக்கு இவர்களின் கூற்று முரண்படும்.

எனவே ஞானமகான்களில் எவரின் கருத்தையும் பிழைகாணாமல் அனைவரின் கருத்தையும் உள்வாங்கி இதற்கு ஒரு முடிவு சொல்லப்பட்டிருப்பதாக நான் வாசித்த நூல்களில் காணமுடியவில்லை. ஆகையால் ஞான மகான்களில் எவருடைய கருத்தையும் பிழை கண்டு தூக்கியெறியாமல் அனைவரின் கருத்துக்களையும் உள்வாங்கிச் செயல்படுவதற்கு நான் ஒரு வழியை கூற விரும்புகிறேன். நான் கூறும் வழி சரியானதென்று காண்பவர்கள் அவ்வழியிற் செல்ல வேண்டுமென்றும், பிழையானதென்று காண்பவர்கள் அதற்கான ஆதாரங்களோடு எனக்கு அறிவிக்குமாறும் அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன். இதுவே சரியான வழி.

இவ்வழியிற் செல்லாமல் இவ்வாறு கருத்துக் கூற இவர்யார் என்று என்னை இழிந்துரைப்பதால் எந்த ஒரு பயனும் எவருக்கும் கிடைக்கப் போவதில்லை. الدينُ النصيحةُ لِأخيه المسلم ஒரு முஸ்லிம் தவறு செய்யும் போது அதை அவனுக்குச் சுட்டிக் காட்டி அவனை நல்வழிப் படுத்துவதே மார்க்கம் என்பது திரு நபியின் அருள்வாக்கு. இந்த அருள் வாக்கை ஒரு புறம் தள்ளி விட்டு, “அவன் கெட்டான் முர்தத்” என்றும், அவனின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறி கருத்து வேறுபாடுகளுக்கும், பகைமைக்கும் வித்திடுவது அறிஞர்களின் பண்பல்ல. இதைப் பொது மக்கள், குறிப்பாக மாரக்க அறிஞர்கள் கவனத்திற் கொள்ளவேண்டும்.

“குத்பு”, “குத்பிய்யத்” என்பது உச்சகட்ட உயர் பதவியை குறிக்கும். “குத்பு” என்பவரே “கவ்து” என்றும் அழைக்கப்படுவார்.

“குத்பு”மார் அனைவரும் “குத்பிய்யத்” குத்பாயிருத்தல் என்ற விடயத்தில் ஒரேமாதிரியிருந்தாலும் “மர்தபா” தரத்தில் ஒரு சிலரை விட மறு சிலர் சிறந்தவர்களாயிருக்கவும் முடியும். இந்த வகையைக் கருத்திற் கொண்டு ஏனைய “குத்பு”மாரை விட குறித்த நால்வரும் தரத்தில் உயர்ந்தவர்களாயிருந்தால் அவர்களை மிகைப்படுத்தி “குத்பு”மார் நால்வர்தான் என்று ஞானமகான்களும், ஸூபிமகான்களும் சொல்லியிருக்க முடியும். இவ்வாறு சொன்னதால் ஏனைய “குத்பு” மார்
“குத்பு”மாரல்ல என்ற கருத்து வந்து விடாது.

உதாரணமாக ஒரு கலையில் கலாநிதிப் பட்டம் பெற்றவர்கள் ஐந்து பேர் உள்ளார்களாயின் அவர்கள் ஐவரும் கலாநிதிப் பட்டத்தில் ஒரே மாதிரி இருந்தாலும் கூட அவர்களின் திறமைகளில் ஒரு சிலர் மறு சிலரை விட சிறந்தவர்களாயிருப்பதற்கு வாய்ப்பு உண்டு. இந்த வகையில் குறித்த சிறந்தவர்களை மட்டும் பொது மக்கள் கலாநிதியென்று கதைப்பதுண்டு. இதனால் மற்றவர்கள் கலாநிதிகளல்ல என்று கருத்து வந்து விடாது.

இவ்வாறு தான் ஸூபி மகான்கள் நான்கு பேர்களை மட்டும் “குத்பு”மார் என்று சொன்னதுமாகும். இது எனது ஆய்வில் நான் கண்டது.

மேற்கண்ட 440 பேர்களும் பொதுவாக “அவ்லியாஉ” வலீமார்கள் என்றே அழைக்கப்படுவார்கள். இவர்கள் அனைவரும் “விலாயத்” என்ற வலித்தனத்தில் ஒன்று பட்டவர்களாகவே இருப்பார்கள்.

ஸூபி மகான்கள் குத்புமார்கள் என்று கூறியவர்களின் பெயர் விபரம் பின்வருமாறு.

01) குத்புல் அக்தாப் அஷ் ஷெய்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர்
ஜீலானீ அவர்கள்
(தோற்றம் – ஹிஜ்ரி 470) (மறைவு – ஹிஜ்ரி 561)

02) அஸ் ஸெய்யித் இப்றாஹீம் அத் தசூக்கி அவர்கள்
(தோற்றம் – ஹிஜ்ரி 633) (மறைவு – ஹிஜ்ரி 676)

03) அஸ் ஸெய்யித் அஹ்பத் பதவீ அவர்கள்
(தோற்றம் – ஹிஜ்ரி 596) (மறைவு – ஹிஜ்ரி 675)

04) அஸ் ஸெய்யித் அஹ்மத் கபீர் ரிபாயீ அவர்கள்
(தோற்றம் – ஹிஜ்ரி 512) (மறைவு – ஹிஜ்ரி 578)

பதவிப் பெயர்கள் கூறப்பட்ட 440 பேர்களும் வலீமார் பட்டியலில் உள்ளவர்ளேயாவர். இவர்கள் அனைவரும் “வஹ்ததுல் வுஜுத்” ஞானத்தை சரிகண்டவர்ளேயாவர். இவர்களில் எவரும் குறித்த ஞானத்தை பிழையென்றோ, “குப்ர்” என்றோ, “ஷிர்க்” என்றோ சொன்னதற்கு எந்த ஒரு நூலிலும் நான் ஆதாரத்தைக் காணவில்லை.

குறிப்பிட்ட 440 பேர்களும் அவ்லியாஉகளாகவும், இறைஞானக் கடல்களாகவும் இருந்தாலும் கூட இவர்கள் அனைவரும் ஞான நூல்கள் எழுதியதற்கு ஆதாரமில்லை. எழுத்து துறையில் திறமை உள்ளவர்கள் மட்டும் எழுதினார்கள். மற்றவர்கள் பேசியுள்ளார்கள். ஆயினும் அவர்களில் எவரும் “வஹ்ததுல் வுஜுத்” பிழையென்றோ, “குப்ர்” என்றோ, “ஷிர்க்” என்றோ சொன்னதற்கு எந்த ஓர் ஆதாரமும் இல்லை. நான் எழுதுவதையும், வாசிப்பதையும், பேசுவதையுமே வேலையாக கொண்டவன். ஒரு நாளில் கூட வாசிக்காமலும், எழுதாமலும் நான் இருந்ததில்லை. நான் என் தந்தை வழியிற் செல்பவன். அவர்கள் “வஹ்ததுல் வுஜுத்” ஞானத்தைக் கரைத்துக் குடித்த மகான் ஆவார்கள். அவர்கள் என்ன கொள்கையில் வாழ்ந்தார்கள் என்பது அவர்களுடன் நெருங்கியிருந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். صاحبُ البيت اَدْرَى بما فيه வீட்டுக் காரனுக்கே வீட்டிளுள்ளது தெரியும். காத்தான்குடி மக்கள் அவர்களைப் புகழ்ந்து பேசுவார்கள். என்னை இகழ்ந்து பேசுவார்கள். தகப்பன் வழிகேடான கொள்கை ஒன்றும் பேசவில்லை. ஆனால் மகன்தான் பேசுகிறார் என்று பேசிக் கொள்வார்கள்.

எனது தந்தை “வஹ்ததுல் வுஜுத்” ஞானத்தில் ஒரு “கிங்” போன்றிருந்தார்கள் என்பதை அவர்கள் புரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். என் தந்தை குறித்த ஞானத்தில் மங்காதொளிரும் தாரகையாக இருந்தார்கள் என்பதற்கு அவர்களின் கைப்பட எழுதிய ஆதாரங்கள் நிறைய உள்ளன. தேவையானோர் நேரில் வந்து பார்த்துக் கொள்ளலாம். இது தொடர்பாக நான் எழுதிய “அல் கிப்ரீதுல் அஹ்மர்” என்ற நூலில் “அப்துல் ஜவாத் ஆலிமும், வஹ்ததுல் வுஜுதும்” என்ற தலைப்பில் விபரமாக எழுதியுள்ளேன். இந்நூல் சுமார் 2000 பக்கங்களைக் கொண்ட விரிவான நூலாகும். இந்நூல் 2021 ஏப்ரல் மாதம் வெளியாகும். அறபு மொழியும், அதன் மொழியாக்கமும் இதில் உள்ளது. “வஹ்ததுல் வுஜுத்” தொடர்பாக இது வரை எழுதப்படாத விரிவான நூல். வாழைப் பழத்தை உரித்து வாய்க்குள் வைப்பது போல் ஆதாரங்களுடன் எழுதப்பட்ட அற்புத நூலாகும். இது “வான்மறை மறுக்கும் வஹ்ஹாபிஸம்” என்ற நூல் போல் ஓர் இலவச வெளியீடுதான்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments