Sunday, April 28, 2024
Homeஎழுத்தாக்கங்கள்பொய்யர்களின் புரட்டலா? பொறாமையின் சீற்றமா?

பொய்யர்களின் புரட்டலா? பொறாமையின் சீற்றமா?

(தொகுப்பு: மௌலவீ: அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ)


அன்புக்குரிய முஸ்லிம் சகோதர, சகோதரிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும்.

நபீமார் முதல் நல்லடியார் வரையிலான எவரின் பெயரை எழுதினாலும் அதனைத் தொடர்ந்து அவருக்காக “துஆ” பிரார்த்தனை செய்யும் பாணியில் ஏதாவதொரு வசனத்தை எழுதுவது நற்பண்பும், நல்லடியார்களின் வழக்கமுமாகும். இவ்வாறுதான் அவர்களில் எவரின் பெயரை மொழிந்தாலும் அதனைத் தொடர்ந்து அவருக்காக பிரார்த்தனை செய்வதுமாகும்.

இவ்வாறு செய்தல் ஸுன்னத் ஜமாஅத் கொள்கைவாதிகளினதும், ஸூபிஸவாதிகளினதும் கொள்கையும், உயர் பண்புமாகும். வஹ்ஹாபிகளோ இந்த நடைமுறையைப் பேணமாட்டார்கள்.

நபீமாரின் பெயர்களைத் தொடர்ந்து ஒருமையில் “அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம்” என்றும், பன்மையில் “அலைஹிமுஸ்ஸலாது வஸ்ஸலாம்” என்றும், ஸஹாபாக்கள், தாபியீன்கள், மற்றும் அவ்லியாஉகள் முதலானோரின் பெயர்களைத் தொடர்ந்து ஒருமையில் “றஹிமஹுல்லாஹ்” என்றும், பன்மையில் “றஹிமஹுமுல்லாஹ்” என்றும் சொல்வது சிறப்பான நடைமுறையாகும்.

இதேபோல் “அல்லாஹ்”வின் திருப் பெயர்களில் எந்தவொரு பெயராயினும் அதை தொடர்ந்து “ஜல்ல ஷஃனுஹு”, “ஜல்ல ஜலாலுஹு”, “தஆலா” போன்ற வசனங்களை மொழிவதும் சிறப்பான காரியமே.

மேற்கண்டவாறு பிரார்த்தனை வசனங்களைப் பயன்படுத்துவது சிறப்பான, நன்மை தரக் கூடிய விடயங்களேயன்றி அது “பர்ழ்ஐன்” என்றோ, “பர்ழ் கிபாயா” என்றோ சொல்வதற்கு ஆதாரமில்லை.

“பர்ழ் ஐன்” என்பது தொழுகை போன்று ஒவ்வொருவர் மீதும் கடமை என்பதையும், “பர்ழ் கிபாயா” என்றால் அதை ஓர் ஊர்வாசிகளில் ஒருவராவது செய்தால் போதும் என்பதையும் குறிக்கும்.

ஓர் எழுத்தாளன் தனது நூலில் மேற்கண்ட பிரார்த்தனை வசனங்களை எழுத வேண்டும். அதேபோல் ஒரு பேச்சாளன் தனது பேச்சில் மேற்கண்ட வசனங்களை மொழிய வேண்டும். இதுவே பேணுதலான, சிறந்த நடைமுறையாகும்.

ஆயினும் ஓர் எழுத்தாளன் அல்லது ஒரு பேச்சாளன் அவ்வாறு செய்யத் தவறினால் அதை அவனுக்கு அன்பாக உணர்த்தலாமேயன்றி அவரைக் “காபிர்” என்றோ, “முர்தத்” என்றோ சொல்வதற்கும், அவருக்கு எதிராக பிரசுரம் அச்சிட்டு அவமானப்படுத்துவதற்கும் எந்த ஓர் ஆதாரமும் கிடையாது.

நான் எழுதி வெளியிட்ட “வான்மறை மறுக்கும் வஹ்ஹாபிஸம்” என்ற நூல் 875, 876ம் பக்கங்களில் அண்ணலெம் பெருமானின் அன்புத் தந்தை அப்துல்லாஹ் றழியல்லாஹு அன்ஹு அவர்களையும், அவர்களின் அன்புத் தாயார் ஆமினா றழியல்லாஹு தஆலா அன்ஹா அவர்களையும் “காபிர்”கள் என்று சாடி எழுதியிருப்பதாக நம் நாட்டில் வாழும் “ஸுன்னத் ஜமாஅத்” மார்க்க அறிஞர்களிற் சிலர் பிரசுரம் வெளியிட்டிருப்பதாக அறிந்து நான் மிக வேதனையும், கவலையும் அடைகிறேன்.

நான் எழுதிய நூலில் மேற்குறித்த பக்கங்களில் நான் அவ்வாறு எழுதவுமில்லை. நான் இதுவரை அறபு, தமிழ் மொழிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளேன். அவற்றில் எந்த ஒரு நூலிலும் அவ்வாறு எழுதவுமில்லை. ஆயிரத்துக்கும் அதிகமான CDகள் பேசியுள்ளேன். அவற்றில் எந்தவொரு CDயிலும் அவ்வாறு பேசவுமில்லை. இது அன்றாட வாழ்க்கைச் செலவுக்கும் வசதியற்ற, என்மீது பொறாமை கொண்ட, அறபு மொழியிலான நூல்களை இலக்கண இலக்கியத்துடன் வாசிக்கக் கூடத் தெரியாத, பகலில் ஸுன்னீகளாயும், இரவில் வஹ்ஹாபீகளாயும் நடிக்கும் போலி வேஷதாரிகளின் சதி என்பதை பொது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக இந்தப் பதிவை தந்துள்ளேன்.

நான் எழுதிய மேலே குறித்த நூலில் குறித்த பக்கங்களில் அன்னை ஆமினா, ஸெய்யிதுனா அப்துல்லாஹ் றழியல்லாஹு அன்ஹுமா ஆகியோர்களின் பெயர்களுக்குப் பின்னால் மேலே எழுதிக் காட்டிய பிரார்த்தனை வசனங்களைக் கூறாமல் நான் விட்டிருக்கலாம். மனிதன் மறதியோடு பின்னிப் பிணைக்கப்பட்டவன். இதனால் ஒருவனைக் “காபிர்” என்றோ, “முர்தத்” என்றோ பொய்யான பிரச்சாரம் செய்வதற்கும், பிரசுரங்கள் வெளியிட்டு அவமானப்படுத்துவதற்கும் எந்தவொரு சட்ட நூல்களிலும் சட்டம் கிடையாது.

இவ்வாறுதான் எனக்கும், நான் கூறிய இஸ்லாமிய ஞானக் கருத்துக்களை ஏற்றுக் கொண்ட பல்லாயிரம் முஸ்லிம்களுக்கும் “முர்தத்” “புத்வா” வழங்கிவிட்டு ஆப்பிழுத்த குரங்குபோல் மாட்டிக் கொண்டு தவித்து நிற்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையினருமாவர். சாம்பலைக் கேட்டாவது சமாளித்து தந்திரமாக, நரிவழி செல்ல நினைத்தவர் கூட தோல்வியடைந்து இன்று தலை சொறிந்து நிற்கிறார்.

நபீமார், நபீ தோழர்கள், வலீமார் முதலானோரின் பெயர்களுக்குப் பின்னால் பிரார்த்தனை வசனங்கள் எழுதாதவர்களும், மொழியாதவர்களும் காபிர்கள் என்று வைத்துக் கொண்டால் அல்லாஹ் யார்? றஸூல்மார்கள் யார்? இமாம்கள், வலீமார்கள் யார்? இவர்களைக் காபிர்கள் என்றா சொல்வது? எத்தனை ஆதாரம் வேண்டும்? ஒன்றன் பின் ஒன்றாகக் கூறிக் கொண்டே இருப்போம். வேஷம் போடும் பச்சோந்திகள் கேட்கட்டும்.

அல்லாஹ்வும், அவனின் மலக்குகளும் நபீ முஹம்மத் மீது ஸலவாத் சொல்கிறார்கள். ஆகையால் விசுவாசிகளே! நீங்களும் அவர்கள் மீது ஸலவாத்தும், ஸலாமும் சொல்லுங்கள். (திருமறை 33-56)

இவ்வாறு விசுவாசிகளுக்கு திருமறை மூலம் கட்டளை பிறப்பித்த அல்லாஹ் திருக்குர்ஆன் (48-29) என்ற வசனத்தில் محمد رسول الله முஹம்மத் அல்லாஹ்வின் றஸூல் என்று மட்டும்தான் கூறியுள்ளானேயன்றி அவர்கள் மீது அவன் ஸலவாத் சொல்லவில்லையே! அல்லாஹ்வுக்கு என்ன “பத்வா” கொடுப்பது? யார் கொடுப்பது?

“ஸஹீஹுல் புகாரீ” என்ற நபீ மொழிக் கோர்வையை கோர்த்த இமாம் புகாரீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் حَدَّثَنَا، حَدَّثَنَا என்று ஒருவர் பின் ஒருவராக நபீ தோழர்களின் பெயர்களை அடிக்கிக் கொண்டு சென்றுள்ளார்களே எந்த ஒரு “ஸஹாபீ” நபீ தோழரின் பெயருக்குப் பின்னால் “றழியல்லாஹு அன்ஹு” என்று சொல்லியுள்ளார்கள்? இமாம் புகாரீ அவர்களுக்கு என்ன “பத்வா” கொடுப்பது? யார் கொடுப்பது?

இன்று அறபுக் கல்லூரிகளில் பல்கலைகளிலும் இமாம்களால் எழுதப்பட்ட பாடத்திட்டத்திலுள்ள நூல்களில் قال الشافعي ஷாபிஈ சொன்னார், قال النووي நவவீ சொன்னார், قال الغزالي கஸ்ஸாலீ சொன்னார் என்று எந்தவொரு பிரார்த்தனை வசனங்களுமின்றிக் கூறியுள்ளார்களே இவர்களுக்கு என்ன “பத்வா” கொடுப்பது? யார் கொடுப்பது?

வெசக் தினமொன்றில் பௌத மத வழிபாட்டுத் தலமான “பன்சல”வில் சங்கைக்குரிய மௌலானா மௌலவீ முப்தி றிஸ்வீ அவர்கள் கையில் வெசக் விளக்கேந்தி புத்த பெருமானை கௌரவித்தாரே இவருக்கு என்ன “பத்வா” யார் கொடுப்பது? யார் கொடுத்தது?

இது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிடம் கேள்விகள் கேட்டு பல பேனாக்களும், பேப்பர்களும் தீர்ந்து போய்விட்டன. அகில இலங்கை ஸூபிஸ ஸுன்னத் ஜமாஅத் உலமாஉகளைச் சேர்ந்த நாங்கள்தான் கேட்டோமே தவிர என்னை “முர்தத்” ஆக்கிய “பத்வா” குழு கேட்கவுமில்லை. என்னைக் “காபிர்” என்று அவமானப்படுத்த முன்வந்துள்ள பகல் வேஷக் காரர்கள் முன்வரவுமில்லை.

பொறுத்திருப்போம். இறைவனின் இறுதித் தீர்ப்பு மிகத் தொலைவில் இல்லை.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments