Saturday, May 18, 2024
Homeஎழுத்தாக்கங்கள்“காபிர்” என்ற சொல் தருகின்ற மெய்ஞ்ஞான தத்துவம்!

“காபிர்” என்ற சொல் தருகின்ற மெய்ஞ்ஞான தத்துவம்!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ

“காபிர்” என்ற அறபுச் சொல் யாரைக் குறிக்குமென்று ஆய்வு செய்து பார்ப்போம்.

இச்சொல்லுக்கு அறபு மொழி அகராதியில் பல பொருள் இருந்தாலும் முஸ்லிம்கள் இச்சொல்லை இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கே பயன்படுத்துகின்றார்கள்.

இலங்கையில் வாழும் பௌத மதத்தினரும், இந்து மதத்தினரும், கிறித்துவ மதத்தினரும் “கலிமா” சொல்லி இஸ்லாத்தில் இணைந்து கொள்ளாத காரணத்தினால் இவர்கள் அனைவரும் “காபிர்”கள் என்றே அழைக்கப்படுகின்றனர்.

இஸ்லாம் மார்க்கத்தில் இணைந்து கொள்ளாத அனைவரையும் இச்சொல் குறிக்கும். இச்சொல் இவர்களை இழிவாகக் குறிக்கும் சொல் அல்ல. மாறாக இவர்களின் கொள்கையை சுட்டிக் காட்டும் பெயரே ஆகும். “வஹ்ஹாபீ” என்ற சொல் போன்று.

“காபிர்களின் உறவு கரண்டைக் காலின் கீழ்” என்று அவர்கள் பற்றிப் பேசும் முஸ்லிம்களில் சிலர் சொல்வதுண்டு. இந்த வசனம் அவர்களை இழிவாகக் காட்டும் வசனமென்று எண்ணியே முஸ்லிம்களிற் பலர் சொல்லி வந்துள்ளார்கள். அவர்களுடன் எந்த வகையிலும் உறவு வைத்துக் கொள்ளக் கூடாதென்பதைக் கருத்திற் கொண்டே இவ்வசனம் பயன்படுத்தப்பட்டது. தற்போது இவ்வசனம் பாவிப்பதை முஸ்லிம்கள் நிறுத்தி விட்டார்கள். இதற்குக் காரணம் புரிந்துணர்வும், அறிவு வளர்ச்சியுமேயாகும்.

எனினும் நான் இவ்வசனத்தைக் காபிர்களை உயர்வாகக் காட்டும் வசனமென்றே கருதுகிறேன். ஏனெனில் “காபிர்களின் உறவு கரண்டைக் காலின் கீழ்” என்று சொல்வதற்கும், “காபிர்களின் உறவு காலின் கீழ்” என்று சொல்வதற்கும் வித்தியாசமுண்டு. “கரண்டைக் காலின் கீழ்” என்ற வசனம் காபிர்களுடனான உறவை முற்றாக முறித்துக் கொள்ளாமல் ஓரளவு உறவை வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தையும், “காலின் கீழே” என்ற வசனம் அவர்களுடனான உறவை முற்றாக முறித்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தையும் தரும். இதை கூரிய புத்தியுள்ளவர்கள் ஆய்வு செய்தால் இவ்வுண்மை துலங்கும்.

கொரோனா வியாதி உள்ளவனின் கையை அந்த நோய் இல்லாத ஒருவன் தொடுவது சுகாதார, மருத்துவ ரீதியில் தடுக்கப்பட்டதேயன்றி மார்க்க ரீதியில் தடுக்கப்பட்டதல்ல. ஒரு முஸ்லிம்; காபிரின் கையை மட்டுமன்றி அவனின் உடலைக் கூட தனது உடலோடு சேர்த்துக் கொள்ளவும் முடியும். கை பட்டால் கையைக் கழுவ வேண்டுமென்றோ, உடல் பட்டால் உடலைக் கழுவ வேண்டுமென்றோ இஸ்லாம் சொல்லவில்லை.

وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ ஆதமுடைய மக்களை – மனிதர்களை நாங்கள் சங்கைப்படுத்தியுள்ளோம் என்று அல்லாஹ் கூறியுள்ளான்.

இவ்வசனத்தின் விரிவுரை بِطَهَارَةِ أَبْدَانِهِمْ அவர்களின் உடலைச் சுத்தமாக்கி அவர்களை சங்கைப்படுத்தியுள்ளோம் என்பதாகும். இதன் மூலம் மற்ற மதத்தவர்களின் உடல் அசுத்தமானதல்ல என்பது தெளிவாகிறது.

இவ்வாறு கூறிய இறைவன் மாற்று மதத்தினர் அனைவரையும் “காபிர்”கள் என்று குறிப்பிட்டுள்ளான். இச்சொல்லுக்கு நிராகரிப்பவன் என்று பொருள் வரும். இந்தப் பொருளுக்குரிய சொல்லை ஏன் அவர்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றது? என்பதற்கான காரணம் புரியாமலேயே முஸ்லிம்கள் இச்சொல்லை மற்ற மதத்தினருக்குப் பயன்படுத்தி வருகிறார்கள். முஸ்லிம்களிடம் நீங்கள் மற்ற மதத்தினரை “காபிர்”கள் என்று ஏன் சொல்கிறீர்கள்? என்று கேட்டால் அவர்கள் இறைவனை மறுக்கின்றார்கள், அவனை நிராகரிக்கின்றார்கள் என்று சொல்வார்கள்.

மதமொன்றைப் பின்பற்றி நடக்கும் ஒருவன் எந்த வகையிலும் இறைவனை நிராகரிக்கவோ, மறுக்கவோ மாட்டான். அதேபோல் இறைவனை மறுப்பவன் எந்தவொரு வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று இறைவனை வழிபடவுமாட்டான். பௌத மதத்தைச் சேர்ந்தவன் விகாரைக்குச் செல்லவுமாட்டான். இந்து மதத்தைச் சேர்ந்தவன் கோயிலுக்குச் செல்லவுமாட்டான். கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவன் தேவாலயத்திற்குச் செல்லவுமாட்டான். இவர்கள் தமது வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதே இவர்கள் இறைவனை மறுக்கவுமில்லை, நிராகரிக்கவுமில்லை என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரமாகும்.

இறைவனை முற்றாக நிராகரிப்பவன் “முல்ஹித்” என்று அழைக்கப்படுவான். தமிழில் நாத்திகன் என்று சொல்லப்படுவான். இவனுக்குப் பள்ளிவாயலுமில்லை, விகாரையுமில்லை, தேவாலயமுமில்லை, கோவிலுமில்லை. இவன் ஒன்றிலும் அடங்காதவன். இவன் பற்றி எந்தவொரு கருத்தும் நான் சொல்வதற்கில்லை.

பொதுவாக பௌதர்கள், இந்துக்கள், கிறித்துவர்கள் ஆகியோரை “காபிர்” நிராகரிப்பவர்கள் என்று அழைப்பதற்கான காரணம் அவர்கள் இறைவனை நம்பினாலும்கூட அவனே சர்வ சிருட்டிகளாகவும், படைப்புக்களாகவும், மற்றுமுள்ள சீவ ராசிகளாகவும், பறப்பன, நடப்பன, ஊர்வன அனைத்துமாயும் உள்ளான் என்பதை நிராகரிப்பவர்களாக உள்ளதேயாகும்.

இன்னோர் – மற்ற மதத்தவர்கள் “ஹுலூல், இத்திஹாத்” அடிப்படையில் இறைவனை நம்பினவர்களேயன்றி “வஹ்ததுல் வுஜூத்” அடிப்படையில் அவனை நம்பினவர்களல்ல. “ஹுலூல் இத்திஹாத்” என்ற கொள்கை இஸ்லாமிய “அகீதா” கொள்கைக்கு முரண்பட்ட கொள்கையாகும்.

அவர்கள் படைப்புக்கள் உண்டென்றும், அவற்றில் அல்லாஹ் இருக்கின்றான் அல்லது அதோடு கலந்துவிடுகின்றான் என்ற கொள்கையுடையவர்களாகவே உள்ளனர்.

ஹுலூல் – இத்திஹாத்

நான் எழுதி வெளியிட்ட அநேக நூல்களிலும், பல கட்டுரைகளிலும் இத்தலைப்பில் விரிவாக எழுதியுள்ளேன். ஆயினும் சுருக்கமாக சுட்டிக் காட்டுகிறேன்.

“ஹுலூல்” என்றால் இறங்குதல் என்று பொருள். உதாரணமாக ஒரு தேனீ ஒரு மலரில் இறங்குதல் போன்று.

“இத்திஹாத்” என்றால் இரண்டு பொருள் கலந்து ஒன்றாதல் போன்று. உதாரணமாக சீனி நீருடன் கலந்து இரண்டும் ஒன்றாதல் போன்று.

மேலே கூறிய “ஹுலூல்” என்பதற்கும், “இத்திஹாத்” என்பதற்கும் இரண்டு பொருட்கள் தேவையாகின்றன. இதுவே துவிதக் கொள்கை எனப்படும். காபிர்களின் கொள்கை துவிதக் கொள்கைதான். அவர்கள் இறைவன் மனிதனில் இறங்குகின்றான் அல்லது கலந்து விடுகின்றான் என்பார்கள். இவர்களின் இக் கொள்கைக்கு இரண்டு பொருட்கள் அவசியம் தேவை. ஒன்று இறைவன். மற்றது படைப்பு. இறைவன் “காஇமுன் பிநப்ஸிஹீ” தன்னைக் கொண்டு நிலை பெற்றவன். படைப்பு “காஇமுன் பிஙய்ரிஹீ” அவனைக் கொண்டு நிலை பெற்றது. அவனைக் கொண்டு நிலை பெற்றதென்றால் அவனே படைப்பாக வெளியானான் என்பதாகும். இதற்கு மாறாக படைப்பு தன்னைக் கொண்டு நிலைபாடானதென்று விளங்குதல் “ஷிர்க்” என்ற இணையை ஏற்படுத்திவிடும். நுணுக்கமாக ஆய்வு செய்தால் முடிச்சு அவிழ்ந்து விடும். இஸ்லாம் துவிதக் கொள்கை “ஷிர்க்” அல்லது “குப்ர்” என்று தெளிவினுந் தெளிவாக கூறுகிறது. எனினும் அத்வைதம் இரண்டில்லை என்ற கொள்கை உடையதால் அதை இஸ்லாம் “தவ்ஹீத்” என்று கூறுகின்றது.

நான் பேசி வரும் ஞானம் ஹுலூலும் இல்லை, இத்திஹாதும் இல்லை. அதே போல் இரண்டைக் குறிக்கும் துவிதமுமில்லை. நான் பேசுவது ஒன்றை அடிப்படையாகக் கொண்ட “வஹ்ததுல் வுஜூத்” ஞானமேயாகும். இந்த ஞானத்தில் “ஷிர்க்” என்பதற்கு இடமேயில்லை.

இஸ்லாம் தவிரவுள்ள ஏனைய மதத்தைச் சேர்ந்தவர்கள் இறைவனை ஸூபீ மகான்கள் கூறும் “வஹ்ததுல் வுஜூத்” அடிப்படையில் நம்பினவர்களுமல்ல. மாறாக “ஹுலூல் – இத்திஹாத்” அடிப்படையிலேயே இறைவனை நம்பியுள்ளார்கள். இவ்வாறு நம்புதலை இஸ்லாம் நிராகரிக்கின்றது.

சிலைகளையும், சிருட்டிகளையும் வணங்குபவர்களிடம் இவை உங்களின் இறைவனா என்று கேட்டால் இல்லை என்றும், அவன் வேறு இவை வேறு என்றும், இவை அவனளவில் எங்களை நெருக்கமாக்கின்றவை என்றுமே கூறுவார்கள்.
مَا نَعْبُدُهُمْ إِلَّا لِيُقَرِّبُونَا إِلَى اللَّهِ زُلْفَى
நாங்கள் இவற்றை வணங்கவில்லை. எனினும் இவை அவன் பக்கம் எங்களை நெருக்கமாக்கி வைக்கின்றன என்று சொல்வார்கள். (39-3)

எனவே, “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் “குப்ர்” அல்லது “ஷிர்க்” என்று சொல்வோரும், உலகில் வணங்கப்படுகின்ற சிலைகள், மற்றும் படைப்புக்களும் இறைவனுக்கு வேறானவை என்று சொல்வோரும் “குப்ர்” என்ற நிராகரிப்பிலேயே இருக்கின்றார்கள். இவர்கள் இறையியலை தெளிவாக விளங்கிச் செயல்பட வேண்டும்.

நானும், என்னுடன் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசிக் கொண்டிருக்கும் மௌலவீமார்களும் வழிகேட்டில் இருப்பதாக நினைக்கும் சகோதரர்கள் எவராயினும் எம்மைத் தப்பாக விளங்கி அல்லாஹ்வினதும், நபீமார்களினதும், வலீமார்களினதும் சாபத்திற்குள்ளாகிவிடாமல் என்னை நேரில் சந்தித்து விளக்கம் பெற்றுக் கொள்ளுமாறு அன்பாய் கேட்டுக் கொள்கின்றேன்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையைச் சேர்ந்தவர்கள் எனக்கும், எனது கருத்தைச் சரிகண்டவர்களுக்கும் “முர்தத்” என்று வழங்கிய “பத்வா”வை மிக விரைவில் யஹூதிகளின் பீக்குழியில் தூக்கியெறிவோம். இன்ஷா அல்லாஹ்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments