Sunday, May 5, 2024
Homeஎழுத்தாக்கங்கள்அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவர்  அஷ்ய்க் றிஸ்வி முப்தீ அவர்களுக்கு பகிரங்க மடல்

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவர்  அஷ்ய்க் றிஸ்வி முப்தீ அவர்களுக்கு பகிரங்க மடல்

அஷ்ஷெய்க் MIM. றிஸ்வி முப்தீ,
தலைவர்,
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா,
கொழும்பு.
21.12.2020

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவர்  அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தீ அவர்களுக்கு பகிரங்க மடல்

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹ்

இஸ்லாமிய ஸூபித்துவ இறைஞான தத்துவங்களை மக்களுக்கு போதிப்பதனாலும் சாத்விகத்தின் பால் வழிகாட்டுவதனாலும் முஸ்லிம்கள் மத்தியில் ஆத்மீக வளர்ச்சியை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு அதிசங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் (மிஸ்பாஹீ, பஹ்ஜீ) அவர்களின் வழிகாட்டலில் சுமார் 40 ஆண்டுகளாக நாம் செயற்பட்டு வருகின்றோம். இலங்கை வாழ் முஸ்லிம்களின் பாரம்பரிய இஸ்லாமிய கலாச்சாரங்களையும், விழுமியங்களையும் பாதுகாப்பது எமது பிரதான நோக்கங்களில் ஒன்றாகும்.

அண்மையில் “காதியானிகள், காத்தான்குடியில் அப்துர் றஊபின் குழுவினர், ஷீஆக்களைத் தவிர இலங்கையில் உள்ள ஏனைய அனைத்து முஸ்லிம்களும் ஸுன்னத் வல் ஜமாஅத்தினர்” என நீங்கள் குறிப்பிட்டதாக 09.10.2020ம் திகதி விடிவெள்ளி பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

உங்களின் இந்தக் கூற்றின் மூலம் அதிசங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் (மிஸ்பாஹீ, பஹ்ஜீ) அவர்களும் அவர்களை ஆதரிக்கும் உலமாக்களும் முரீதீன்களும் முஹிப்பீன்களும் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு முரண்பட்டவர்கள் என்று கூறியுள்ளீர்கள்.

அத்துடன் காத்தான்குடியிலும் இலங்கையின் பல பாகங்களிலும் பரந்து வாழும் ஸூபி முஸ்லிம் சமூகமான எங்களை “காத்தான்குடியில் அப்துர் றஊபின் குழுவினர்” என்று கூறி சிறுமைப்படுத்தி காட்டவும் முயற்சித்துள்ளீர்கள்.

அதிசங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் (மிஸ்பாஹீ, பஹ்ஜீ) அவர்களும் அவர்களை ஆதரிக்கும் ஸூபி முஸ்லிம் சமூகமான நாங்களும் உண்மையான ஸூபிகளின் வழியில் பாரம்பரியமாக ஸுன்னத்வல் ஜமாஅத் கொள்கைகளை பின்பற்றி வாழ்பவர்களாகும். வஹ்ஹாபிஸத்தையும் அதனுள் மறைந்துள்ள தீவிரவாதத்தையும் எதிர்த்து சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பிரச்சாரம் செய்பவர்களாகும். இது உலகறிந்த உண்மையாகும். இவ்வாறான எங்களை ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு முரண்பட்டவர்கள் என்று நீங்கள் கூறியதற்கான காரணம் என்ன ?

தற்போது நீங்கள் தலைமை வகிக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் 1979ம் ஆண்டு “ஏகத்துவக் கொள்கையில் ஊடுருவல்” எனும் பெயரில் வழங்கப்பட்ட “பத்வா” – மார்க்கத் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு எங்களை ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு முரண்பட்டவர்கள் என்று கூறினீர்களா?.

அந்தத் தீர்ப்பில் உள்ளவாறு நீங்கள் சொல்வதாயின் ஸூபி முஸ்லிம்களாகிய எங்களை முர்தத்கள் – இஸ்லாத்தை விட்டும் நீங்கியவர்கள் என்றும் அந்த வகையில் நாங்கள் இஸ்லாமிய சட்டப்படி கொலை செய்யப்பட வேண்டியவர்கள் என்றும் தானே நீங்கள் சொல்லியிருக்க வேண்டும். அதைவிடுத்து எங்களை ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு முரண்பட்டவர்கள் என்று நீங்கள் எந்த அடிப்படையில் கூறினீர்கள்?.

மேலும் 1979ம் ஆண்டு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் வழங்கப்பட்ட மேற்குறிப்பிடப்பட்ட மார்க்கத் தீர்ப்பு இஸ்லாமிய ஷரீஆ மார்க்கச் சட்ட வழிமுறைகளுக்கும், நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கும், அடிப்படை மனித உரிமைக்கும் முற்றிலும் விரோதமானது என்பது உங்களுக்குத் தெரியாதா? அல்லது இவை அனைத்தும் தெரிந்தும் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக திட்டமிட்டு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழங்கிய மார்க்கத் தீர்ப்பை மறைக்கும் நோக்கில் எங்களை ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு முரண்பட்டவர்கள் என்று நீங்கள் கூறினீர்களா?

இஸ்லாமிய ஸூபித்துவ இறைஞான கருத்துக்களை, “வஹ்ததுல் வுஜூத்” (உள்ளமை ஒன்று) எனும் தத்துவத்தை பேசிய அதிசங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் (மிஸ்பாஹீ, பஹ்ஜீ) அவர்களுக்கும் அவர்களின் கருத்துக்களைச் சரிகண்டுள்ள ஸூபி முஸ்லிம் சமூகமான எங்களுக்கும் முர்தத்கள் – இஸ்லாத்தை விட்டும் நீங்கியவர்கள் என்றும், முர்தத்கள் இஸ்லாமிய சட்டப்படி கொலைசெய்யப்பட வேண்டியவர்கள் என்றும் தீர்ப்பளிக்க அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?.

இவ்வாறு தீர்ப்பளிக்க அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கு எந்த அதிகாரமுமில்லை என்பது மட்டுமல்ல இவ்வாறு தீர்ப்பளித்ததற்காக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதையும் நீங்கள் மறந்து விடாதீர்கள்.

ஏனெனில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவை கூட்டிணைப்பதற்கான சட்ட மூலம் பாராளுமன்றத்தில் 1997ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டபோது சட்டரீதியாக பத்வா வழங்குவதற்கான அதிகாரத்தை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கோரியிருந்தது. எனினும் அச்சட்ட மூலம் 2000ம் ஆண்டு பாராளுமன்றத்தினால் சட்டமாக்கப்படுகின்ற போது பத்வா வழங்குவதற்கான அதிகாரம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கு வழங்கப்படவில்லை என்பதனால் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கு “பத்வா” – மார்க்கத்தீர்ப்பு வழங்குவதற்கு தடை உள்ளது என்பது வெளிப்படையான உண்மையாகும்.

மேலும் எமது நாட்டில் சட்ட ரீதியாக “பத்வா” – மார்க்கத்தீர்ப்பு வழங்குவதற்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கு தடையுள்ள போதிலும் இஸ்லாமிய ஷரீஆ சட்ட அடிப்படையில் சரியான பின்பற்றுதல்களையும் நடைமுறைகளையும் கையாண்டு நீதியானதும் நேர்மையானதுமான முறையில் மார்க்கத் தீர்ப்பினை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வெளியிட்டதா என்பதை உங்களுக்கு ஞாபகமூட்டுவது பொருத்தம் என நினைக்கிறோம்.

அந்த வகையில் 1979ம் ஆண்டு காத்தான்குடி மார்க்கட் சதுக்கத்தில் நடைபெற்ற மீலாத் விழாவின் போது அதிசங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் (மிஸ்பாஹீ, பஹ்ஜீ) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சாதாரண மனிதன் என்று நினைப்போருக்கு அவர்கள் நம்போன்றவர்களல்லர், “ஹகீகத்துல் முஹம்மதிய்யஹ்” – முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் யதார்த்தம், “மழ்ஹறுல் அதம்மு” – அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வுடைய சம்பூரண வெளிப்பாடு ஆகிய அகமிய உண்மைகளை வெளியிட்டார்கள். இவற்றுக்கெல்லாம் அடிப்படையான தத்துவமான “வஹ்ததுல் வுஜூத்” (உள்ளமை ஒன்றே) என்பதன் அடிப்படையில் எல்லாம் அவனே எனும் ஏகத்துவத்தை எமது ஷெய்கு நாயகம் அவர்கள் பேசினார்கள்.

இதை அடிப்படையாகக் கொண்டு 1979-03-31ம் திகதி மருதானை ஸாஹிராக்கல்லூரியின் கபூர் மண்டபத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினர் ஒன்று கூடினர். பின்னர் அதிசங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் (மிஸ்பாஹீ, பஹ்ஜீ) அவர்களுடைய பேச்சடங்கிய ஒலிநாடாவின் சில பகுதிகளை மாத்திரம் கேட்டுவிட்டு, குற்றம் சாட்டப்பட்டவரிடம் நேரடியாக எந்த விசாரணையும் நடத்தாமலும், ஒலிநாடாவில் சொல்லப்பட்ட கருத்துக்களுக்கு உரியவரிடத்தில் விளக்கம் கோராமலும், ஒரே அமர்விலேயே அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினர் தீர்ப்பளித்தனர். மிக அவசரமாக அடுத்த நாள் 1979-04-01 அன்று அதிசங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் (மிஸ்பாஹீ, பஹ்ஜீ) அவர்களையும் அவர்களுடைய கருத்தைச் சரிகண்டவர்களையும் முர்தத் (இஸ்லாத்தை விட்டும் மதம்மாறியவர்கள்) என்ற தீர்ப்பை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பகிரங்கமாக மக்களுக்கு அறிவித்தது.

முஸ்லிம்களை முர்தத் மதம்மாறியவர்கள் என்று தீர்ப்பளிப்பது இஸ்லாமிய ஷரீஆ சட்ட மரபின் படி பாரதூரமான விடயமாகும். ஒருவரின் பேச்சு குப்ருக்கும், குப்ர் அல்லாததற்கும் சாத்தியமானதாக இருந்தால் அவரை முர்தத் என்றோ காபிர் என்றோ அவரை கொலை செய்வது ஆகுமானது என்றோ தீரப்பளிக்கக் கூடாது. மாறாக அவரது பேச்சின் நோக்கத்தை கேட்டறிந்து அதன் படி செயற்பட வேண்டும் என ஷாபிஈ மத்ஹபின் சட்ட நூல்களில் கூறப்பட்டுள்ள நடைமுறை மட்டுமல்லாது இஸ்லாமிய ஷரீஆவின் அடிப்படைச் சட்டமுறையும் இங்கு பின்பற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மார்க்கத் தீர்ப்பில் எந்தவொரு நியாயமான நடைமுறைகளும் பின்பற்றப்படாமல் அநீதி நடந்தேறியுள்ளதையும், முன்கூட்டியே தீர்ப்பை முடிவு செய்துவிட்டு பின்னர் மாநாட்டைக் கூட்டியதையும் இங்கு அவதானிக்க முடியும். இது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் இழைக்கப்பட்ட பாரிய வரலாற்று அநீதியாகும். இது “பத்வா” (மார்க்கத் தீர்ப்பு) வழங்கும் இஸ்லாமிய ஷரீஆ சட்ட அடிப்படையின் படி சரியான நடைமுறைதானா?

இஸ்லாமிய ஷரீஆ சட்ட அடிப்படைக்கு முற்றிலும் பிழையான நடைமுறைகளினூடாக 1979ம் ஆண்டு வழங்கப்பட்ட அந்தத் தீர்ப்பிலாவது “வஹ்ததுல் வுஜூத்” – உள்ளமை ஒன்றே எனும் தத்துவத்தை மறுப்பதற்கான சரியான ஆதாரங்கள் ஏதேனும் முன்வைக்கப்பட்டுள்ளதா? அதுவும் இல்லை. அத்துடன் தீர்ப்புச் செய்வதற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட ஆதாரங்களும் தவறானது. மாறாக “அல் ஹுலூல், அல் இத்திஹாத்” – (இறங்குதல், இரண்டறக் கலத்தல்) கொள்கைகளுக்கெதிரான ஆதாரங்களே அத்தீர்ப்பில் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் எங்களை ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு முரண்பட்டவர்கள் என்று நீங்கள் எவ்வாறு கூற முடியும்?.

அத்தோடு 2015ம் ஆண்டு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நடாத்திய மனாகிபுஸ் ஸஹாபா மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் எல்லாம் அவனே எனும் வஹ்ததுல் வுஜூத் – உள்ளமை ஒன்றே என்ற சிந்தனை இஸ்லாமிய சிந்தனைக்கு முற்றிலும் முரணான குப்ரை ஏற்படுத்தும் சிந்தனை என நீங்கள் தீர்மானித்திருந்தீர்கள். அவ்வாறாயின் எங்களை காபிர்கள் என்றுதானே நீங்கள் சொல்லியிருக்க வேண்டும். அதைவிடுத்து எங்களை ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு முரண்பட்டவர்கள் என்று நீங்கள் எவ்வாறு கூறினீர்கள்?

மேலும் கருத்துக்களுக்குத்தான் பத்வா வழங்குகின்றோம் ஆட்களுக்கு பத்வா வழங்குவதில்லை எனக் கூறும் நீங்கள் உட்பட அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினர் 1979ம் ஆண்டு வெளியிட்ட “பத்வா” – மார்க்கத் தீர்ப்புப் புத்தகம் உட்பட அண்மையில் நீங்கள் தெரிவித்த கருத்துக்களில் அதிசங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் (மிஸ்பாஹீ, பஹ்ஜீ) அவர்களின் பெயரை ஏன் குறிப்பிட்டீர்கள்? இதிலிருந்து நீங்களும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும் பேச்சுக்கு மாற்றமான செயலை புரிபவர்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றீர்களா?

அல்லாஹுதஆலா தனது “தாத்” உள்ளமையைக் கொண்டும், “ஸிபாத்” தன்மைகளைக் கொண்டும், “அஸ்மாஉ” திருநாமங்களைக் கொண்டும் சிருஷ்டிகளாக வெளியாகியிருக்கின்றான். படைப்புக்களாகத் தோற்றுவது அவன்தான். அவனைத் தவிர வேறில்லை. அவன் மாத்திரமே இருக்கின்றான். அவனுடைய “தாத்” – உள்ளமை அழியாமலும், மாறுபடாமலும், விகாரப்படாமலும் அவன் எவ்வாறிருந்தானோ அவ்வாறேயிருக்கும் நிலையில் பிரபஞ்சமாகவும் படைப்புக்களாகவும் அவனே “தஜல்லீ” – வெளியாகியுள்ளான். அவனது வெளிப்பாடான பிரபஞ்சம், படைப்பு அவனை விட்டும் பிரிந்ததுமல்ல,

அவனுக்கு வேறானதுமல்ல, அது அவன் தானானதுதான் என்பதே “வஹ்ததுல் வுஜூத்” உள்ளமை ஒன்று என்பதாகும். மெய்ப்பொருள் ஒன்று என்பதன் அடிப்படையில் எல்லாம் அவனே எனும் தௌஹீத் ஆகும். இதுவே அத்தஜல்லிய்யாதுல் இலாஹிய்யஹ் (இறை வெளிப்பாடுகள்) என ஸூபி ஞானிகளால் குறிப்பிடப்படுகின்றது.

“வஹ்ததுல் வுஜூத்” உள்ளமை ஒன்று எனும் கொள்கையானது குப்ரான கொள்கை என்பதை நிரூபித்து அல்குர்ஆன், அல்ஹதீஸ், அல் இஜ்மா, அல் கியாஸ் அடிப்படையிலும் ஸூபி ஞானிகளின் கருத்துக்களின் அடிப்படையிலும் உங்களால் பொதுமக்களுக்கு பகிரங்கமாக எழுத்து மூலம் தெளிவுபடுத்த முடியுமா?

எல்லாம் அவனே என்பது இஸ்லாமிய சிந்தனைக்கு முற்றிலும் முரணான குப்ரை ஏற்படுத்தும் சிந்தனை எனக்கூறும் நீங்கள் أنه ا لكلّ – நிச்சயமாக அவனே எல்லாம். وأن ليس فى الوجود غيره – உள்ளமையில் அவனுக்கு வேறான எதுவுமில்லை என இஹ்யாஉ உலூமித்தீன் எனும் நூலில் கூறும் ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் ஙஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்களுக்கு என்ன தீர்ப்பு கூறப் போகின்றீர்கள்.?

فما فى الوجود إلّا الله அல்லாஹ்வைத் தவிர உள்ளமையில் வேறொன்றும் இல்லை என புதூஹாதுல் மக்கிய்யஹ் எனும் நூலில் கூறும் அஷ்ஷெய்ஹுல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் அவர்களுக்கு நீங்கள் என்ன தீர்ப்பு கூறப்போகின்றீர்கள்.?

அறிந்துகொள்! வுஜூதில் – உள்ளமையில் அல்லாஹ்வையும் அவனது செயல்களையும் தவிர வேறில்லை. “எல்லாம் அவனே” என கல்வத்தின் இரகசியங்கள் எனும் நூலில் கூறும் அஷ்ஷெய்ஹு அப்துல் காதிர் ஸூபி ஹழ்றத் காதிரீ காஹிரீ றஹிமஹுல்லாஹ் (கொழும்பு குப்பியாவத்தை மையவாடியில் சமாதி கொண்டிருப்பவர்கள்) அவர்களுக்கு நீங்கள் என்ன தீர்ப்பு கூறப்போகின்றீர்கள்.? இதுபோன்ற கருத்துகளைக் கூறிய ஸூபியாக்களுக்கும் தரீக்காக்களின் ஷெய்குமார்களுக்கும் நீங்கள் என்ன தீர்ப்பு கூறப்போகின்றீர்கள்.?

அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தீ அவர்களே!

“காதியானிகள், காத்தான்குடியில் அப்துர் றஊபின் குழுவினர், ஷீஆக்களைத் தவிர இலங்கையில் உள்ள ஏனைய அனைத்து முஸ்லிம்களும் ஸுன்னத் வல் ஜமாஅத்தினர்” என்ற உங்களின் கூற்றின் படி தப்லீக் ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத்துக்கள், ஜமாஅத்தே இஸ்லாமி போன்ற வஹ்ஹாபிஸ அமைப்புகளை ஸுன்னத் வல் ஜமாஅத்திற்குட்பட்ட பாரம்பரிய முஸ்லிம்கள் எனவும் வஹ்ஹாபிஸத்துக்கு எதிரான எங்களை ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு முரண்பட்டவர்கள் என்றும் நீங்கள் கூறியுள்ளீர்கள்.

அவ்வாறாயின் அல்குர்ஆன், அல்ஹதீஸ் மட்டுமே இஸ்லாமிய மூலாதாரங்கள் எனக்கூறி அல் இஜ்மா, அல் கியாஸ் என்ற இஸ்லாமிய மூலாதாரங்களை மறுப்பவர்களும், அல்லாஹ் அர்ஷ் என்ற சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளான் அல்லது அர்ஷுக்கு அப்பால் இருக்கின்றான் என்றும் தறாவீஹ் தொழுகை எட்டு றக்அத்கள் மட்டுமே தொழவேண்டும் என்றும் நபிமார்கள், வலிமார்களின் நினைவு தினங்களில் கொடியேற்றுதல், மௌலித் ஓதுதல், கத்தம் ஓதுதல், றாதிப், வளீபா, மீலாத் நிகழ்வுகள், ஸலவாத், மனாகிப் மஜ்லிஸ்களை நடாத்துதல், அன்னதானம் (கந்தூரி) வழங்குதல், கூட்டு துஆ ஓதுதல், திக்ர் மஜ்லிஸ் நடாத்துதல், வஸீலாத் தேடுதல், தல்கீன் ஓதுதல் போன்றவை ஷிர்க் என்றும் பித்அத் என்றும் நபிமார்கள், வலிமார்களின் கப்றுகளை ஸியாரத் – தரிசித்தல் அதற்காக பிரயாணம் செய்தல் ஷிர்க் என்றும் கப்று வணக்கம் என்றும் கூறுபவர்கள் யார்? ஸுன்னத் வல் ஜமாஅத்தினரா? வஹ்ஹாபிகளா? இவ்வாறான கொள்கைகளுக்கு எதிராக ஏதேனும் “பத்வா” – மார்க்கத் தீர்ப்புக்களை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழங்கியுள்ளதா?

இவை எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மேற்கொண்டு பல நூறு அப்பாவி மக்களை கொன்றழித்தவர்கள் யார்? ஸுன்னத் வல் ஜமாஅத்தினரா? வஹ்ஹாபிகளா? மேலே குறிப்பிட்ட அனைத்து விடயங்களையும் மேற்கொள்பவர்கள் வஹ்ஹாபிகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தீவிரவாதி ஸஹ்றான் ஹாஷிம் காத்தான்குடியில் தனது வஹ்ஹாபிஸ அடிப்படைவாதக் கருத்துக்களை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா 1979ம் ஆண்டு வழங்கிய “பத்வா” – மார்க்கத்தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு ஸூபிஸ சமூகமான எங்களுக்கு எதிராக பேச ஆரம்பித்தான். இதனால் 2013ம் ஆண்டிலிருந்து ஸஹ்றான் ஹாஷிமுக்கு எதிராக நாம் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் 11 முறைப்பாடுகளை செய்தோம். பின்னர் 2016, 2017ம் ஆண்டு காலப்பகுதியில் காத்தான்குடியில் ஸஹ்றான் ஹாஷிமும் அவனது குழுவினரும் தீவிரவாத மற்றும் தேசவிரோத கருத்துக்களை பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்தனர். இது பற்றி நாட்டின் தலைவர்களுக்கும் அரசாங்க உயர் அதிகாரிகளுக்கும் நாம் அறிவித்தோம். முஸ்லிம் மக்கள் மீதும் இஸ்லாமிய மார்க்கம் மீதும் தற்போது எமது நாட்டில் தோன்றியுள்ள தப்பபிப்பிராயங்களை இல்லாமல் செய்து நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும் பல வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்தோம். நீங்களும் உங்களது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும் ஸஹ்றான் ஹாஷிம் எனும் தீவிரவாதிக்கு எதிராக எத்தனை முறைப்பாடுகளைச் செய்தீர்கள்? நீங்கள் தீவிரவாதி ஸஹ்றான் ஹாஷிம் பற்றி யாருக்கு அறிவித்தீர்கள்.?

எனினும் 1979ம் ஆண்டு தொழில் நுட்பம் குறைந்த காலத்தில் காத்தான்குடியில் நடைபெற்ற மீலாத் தின நிகழ்வில் எமது அதிசங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ அவர்கள் பேசிய பேச்சினைக் கேட்டு “பத்வா” – மார்க்கத் தீர்ப்பை வழங்க அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் முடியுமாயின் தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்த காலகட்டத்தில் தீவிரவாதி ஸஹ்றான் ஹாஷிம் பேசிய வஹ்ஹாபிஸத்திற்கு ஆதரவானதும் நாட்டிற்கு எதிரானதுமான பகிரங்க பேச்சுக்களைக் கேட்டு உங்களால் “பத்வா” – மார்க்கத் தீர்ப்பு வழங்க முடியாமல் போனது ஏன்? இதன் இரகசியம் என்ன?

இவ்வாறான சூழ்நிலையில் நீங்கள் எங்களைப் பற்றி தெரிவிக்கும் பொறுப்பற்ற கருத்துக்களையும் பிழையான தகவல்களையும் எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை அழுத்தமாக தெரிவித்துக் கொள்கின்றோம்.

அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தீ அவர்களே!

அல்லாஹ் மீது சத்தியமாகச் நாம் சொல்கின்றோம். நபீ முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும், வலீமார்களையும், ஷெய்குமார்களையும் முன்னிலைப்படுத்தி நாம் சொல்கின்றோம்.

அல்லாஹ் ஒருவன். அவன் தனித்தவன். இணை துணை இல்லாத தூயவன். தன்னைக் கொண்டே நிலைபெற்றவன். அவனை யாரும் படைக்கவில்லை. எல்லாவற்றையும் அவனே படைத்தான். எல்லாம் அவனளவிலேயே தேவையாகின்றன. சகல சிருஷ்டிகளும் அவனைக் கொண்டே ஆகி இருக்கின்றன. அவன் தன்னைக் கொண்டு நிலைபெற்றுள்ளான். ஆரம்பம், முடிவு அவனுக்கில்லை. சிருஷ்டிகளுக்கு மாற்றமானவன். அவனைப் போல் எதுவுமில்லை. அவனே கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான். இடம், சடம், காலம், திசை என்பனவைகளை விட்டும் பரிசுத்தமானவன். அவன் தூயவன்.

அவன் படைப்புகளை படைக்க முன்னர் எப்படி இருந்தானோ அப்படியே இப்போதும் இருக்கின்றான். அவனின்றி ஒரு அணுவும் அசையாது. எல்லாம் அவனது நாட்டப்படியே நடக்கின்றது. அவனே முந்தியவன், அவனே பிந்தியவன், அவனே வெளியானவன், அவனே உள்ளானவன், உள்ளத்தில் ஏற்படும் எண்ணங்கள் அனைத்திற்கும் அவன் மாற்றமானவன் எனவும் லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் றஸூலுல்லாஹ் எனவும் நாம் ஈமான் கொண்டுள்ளோம். அல்லாஹ்தஆலாவின் ஏவல்களை எடுத்து அவனது விலக்கல்களைத் தவிர்ந்து நாம் நடக்கின்றோம். நாம் தொழுகின்றோம், நோன்பு நோற்கின்றோம், ஸகாத் கொடுக்கின்றோம், ஹஜ் செய்கின்றோம். அல்லாஹ்வின் வேதமான அல்குர்ஆனையும் நபீ முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஸுன்னத்தையும் நாம் ஏற்று நடக்கின்றோம்.

நாங்கள், குலபாஉர் றாஷிதீன்களை கண்ணியப்படுத்தி அவர்களின் சொற்படி நடக்கின்றோம். ஏனைய ஸஹாபாக்கள் அனைவரையும் கண்ணியப்படுத்துகின்றோம். ஷாபிஈ மத்ஹபையும், இமாம் ஷாபிஈ றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களையும் பின்பற்றுகின்றோம். காதிரிய்யஹ் தரீக்காவையும் குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றஹிமஹுல்லாஹ் அவர்களையும் பின்பற்றுகின்றோம். ஏனைய தரீக்காக்களையும் மஷாயிஹ்மார்களையும் மதிக்கின்றோம். இஸ்லாமிய அகீதாவில் இமாம் அபுல்ஹஸன் அல்அஷ்அரீ றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களைப் பின்பற்றுகின்றோம்.

நாங்கள் ஸூபிஸ நடைமுறைகளில் இறைஞானிகளான ஸூபியாக்களைப் பின்பற்றுகின்றோம். ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் ஙஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அஷ்ஷெய்குல் அக்பர் வல்மிஸ்குல் அத்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் ஆகிய ஸூபியாக்கள் போதித்த அடிப்படையில் வஹ்ததுல் வுஜூத் – உள்ளமை ஒன்று, உள்ளமை என்பது அல்லாஹ். அல்லாஹ் ஒருவன். அவனது உள்ளமை மாத்திரமே இருக்கின்றது. படைப்புகள் சுயமான உள்ளமை அற்றவை. அல்லாஹ்வின் உள்ளமையைக் கொண்டே அவை இருக்கின்றன. உண்மையில் படைப்புகள் என்பது இல்லை அல்லாஹ் மாத்திரமே இருக்கின்றான். படைப்புகளாகத் தோற்றுவது படைப்புகள் அல்ல அல்லாஹ்வின் உள்ளமைதான் படைப்புகளாக நமக்குத் தோற்றுகின்றது.

அல்லாஹ் யதார்த்தமான உள்ளமையானவன் என்பது போல் படைப்புகளும் யதார்த்தமான உள்ளமையானவை என நம்புதல் இணையாகும் என்றும் எல்லாம் அவனே அவன் மாத்திரமே இருக்கின்றான், அவனைத் தவிர ஒன்றுமில்லை, எல்லாம் என நமக்குத் தோற்றுவது மாயை ஆகும். உள்ளமையில் அவன் மட்டும் இருக்கின்றான். இதனால் அவனுக்கு இணையில்லை என்றும் நாம் ஈமான் கொண்டு அதை மக்களுக்கு போதிக்கின்றோம். இவ்வாறு ஈமான் கொண்டுள்ள நாங்கள் பரிசுத்த முஃமின்கள் – இறை விசுவாசிகள்.

இந்தக் கருத்துக்களை நாம் எமது சொந்த இஷ்டப்படி சொல்லவில்லை. அல்குர்ஆனையும், அல்ஹதீஸையும் ஆதாரமாகக் கொண்டு ஸூபியாக்களும் ஷெய்குமார்களும் தமது நூல்களில் கூறிய கருத்துக்களின் அடிப்படையிலேயே நாம் மக்களுக்குப் போதிக்கின்றோம்.

படைப்புகளில் அல்லாஹ்தஆலா இறங்கியிருக்கின்றான் என்பதை வலியுறுத்தும் “அல் ஹுலூல்” கொள்கையையும், படைப்புகளுடன் அல்லாஹ் இரண்டறக் கலந்துவிட்டான் என்பதை வலியுறுத்தும் “அல் இத்திஹாத்” கொள்கையையும் நாம் தெளிவாக மறுக்கின்றோம்.

அல்குர்ஆனுக்கும், அல்ஹதீஸுக்கும், நான்கு மத்ஹபுகளின் இமாம்களின் கருத்துகளுக்கும், ஸூபியாக்களினதும், தரீக்காக்களை ஆரம்பித்த ஷெய்குமார்களினதும் கருத்துக்களுக்கும் மாற்றமான சகல கொள்கைகளையும் நாம் மறுக்கின்றோம். எல்லாம் வல்ல அல்லாஹ் எங்களின் நிலைகளையும் எங்களின் உள்ளத்திலுள்ளவைகளையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.

இவ்வாறு எமது நிலைப்பாட்டை நாம் பலதடவைகள் வெளியிட்டுள்ளோம். இவ்வளவு தெளிவாக பகிரங்கமாக எங்களின் நிலைப்பாட்டை நாங்கள் தெளிவுபடுத்திய பின்னரும் யாராவது எங்களைக் காபிர் என்றோ முஷ்ரிக் என்றோ முர்தத் என்றோ ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு முரண்பட்டவர்கள் என்றோ கூறினால் அவர்களின் முடிவை அல்லாஹ்விடம் நாம் பாரம் கொடுக்கின்றோம்.

அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தீ அவர்களே!

1979ம் ஆண்டு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் அநீதியான தீர்ப்பு வழங்கப்பட்டதிலிருந்து கடந்த 41 வருடங்களாக பல்வேறு அடக்குமுறைகளுக்கும் உரிமை மீறல்களுக்கும் எமது ஸூபிஸ சமூகம் ஆளாக்கப்பட்டு வருகின்றது. காத்தான்குடியிலும், வெளியூர்களிலும் ஸூபிஸ கொள்கையில் வாழ்கின்ற பல்லாயிரம் முஸ்லீம்கள் சமய, சமூக, அரசியல், பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு அவர்களின் வீடுகள், உடைமைகள், வியாபாரஸ்தலங்கள் என்பன உடைத்தும், எரித்தும் சேதமாக்கப்பட்டு அகதிகளாகவும் ஆக்கப்பட்டனர்.

அத்தோடு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் 1979ம் ஆண்டு மார்க்கத் தீர்ப்பினை அடிப்படையாகக் கொண்டு 29.05.1998ம் ஆண்டு ஸ_பி மார்க்கப் பெரியார் மௌலவீ ஆளுஆ. பாறூக் காதிரீ அவர்கள் காத்தான்குடியிலுள்ள அவர்களின் வீட்டில் வைத்து வஹ்ஹாபிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்கள். மேலும் 1979ம் ஆண்டு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழங்கிய மார்க்கத் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டே ஸஹ்றான் ஹாஷிம் என்ற தீவிரவாதி தனது பிரச்சாரங்களை காத்தான்குடியில் ஆரம்பித்து தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்தான். இவ்வாறு மேற்சொன்ன அனைத்து சம்பவங்களும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா 1979ம் ஆண்டு வழங்கிய அநீதியான தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டே மேற்கொள்ளப்பட்டன என்பதை உங்களுக்கு மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துகின்றோம்.

அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தீ அவர்களே!

இஸ்லாமிய ஷரீஆ சட்ட அடிப்படைகளுக்கு முற்றிலும் பிழையானதும், அநீதியானதும், எமது தாய் நாட்டினது சட்டத்திற்கு எதிரானதுமான 1979ம் ஆண்டு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழங்கிய மார்க்கத் தீர்ப்பினை சரிகண்ட நீங்கள் ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் 22.11.2019ம் திகதியன்று காத்தான்குடிக்கு விஜயம் செய்தீர்கள். அப்போது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழங்கிய எந்தவொரு “பத்வா” – மார்க்கத்தீர்ப்புக்களும் வாபஸ் பெறப்படவில்லை எனவும் நீங்கள் பகிரங்கமாகக் கூறியிருந்தீர்கள்.

அதுமட்டுமல்லாமல் நீங்களும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும் 1979ம் ஆண்டு வெளியிட்டு நடைமுறைப்படுத்தி வரும் “பத்வா” – மார்க்கத்தீர்ப்புப் புத்தகத்தில் “வஹ்ததுல் வுஜூத்” – உள்ளமை ஒன்று என்ற கொள்கை பிழையானது என்று அல்குர்ஆன், அல் ஹதீஸ், அல் இஜ்மா, அல் கியாஸ் அடிப்படையில் எதுவித ஆதாரத்தையும் முன்வைக்காமல் தொடர்ச்சியாக இலங்கை வாழ் அப்பாவி முஸ்லிம் மக்களை பிழையாக இன்றுவரை வழிநடாத்தி வருகின்றீர்கள்.

எனவே அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழங்கிய மார்க்கத் தீர்ப்பில் உறுதியாய் இருக்கும் நீங்கள் “வஹ்ததுல் வுஜூத்” – உள்ளமை ஒன்று என்பது குப்ரான கொள்கை என்பதை நிரூபித்து அல்குர்ஆன், அல்ஹதீஸ், அல் இஜ்மா, அல் கியாஸ் அடிப்படையிலும் ஸூபி ஞானிகளின் கருத்துக்களின் அடிப்படையிலும் பொதுமக்களுக்கு பகிரங்கமாக எழுத்து மூலம் தெளிவுபடுத்த வேண்டும் என்பதை எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெயரால் மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துகின்றோம். நன்றி.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் நேரான வழியில் நடத்துவானாக!

வஸ்ஸலாம்.

மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA (Hons.)
செயலாளர் – அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம்
வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பு.
காத்தான்குடி.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments