Friday, May 3, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஷரீஆ, தரீகா, ஸூபிஸம், ஹகீகா, மஃரிபா பற்றி ஓர் சிறு விளக்கம்

ஷரீஆ, தரீகா, ஸூபிஸம், ஹகீகா, மஃரிபா பற்றி ஓர் சிறு விளக்கம்

 
தொகுப்பு: ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலி)
 
அன்புக்குரிய அல்லாஹ்வின் அடியார்களே!
 
“ஷரீஆ” உடல் போன்றதும், “தரீகா” உயிர் போன்றதுமாகும்.
“ஷரீஆ” உடல் போன்றதும், “ஸூபிஸம்” உயிர் போன்றதுமாகும்.
“ஷரீஆ” உடல் போன்றதும், “ஹகீகா” உயிர் போன்றதுமாகும்.
“ஷரீஆ” உடல் போன்றதும், “மஃரிபா” உயிர் போன்றதுமாகும்.

எவர் எது சொன்னாலும் ஷரீஆ, தரீகா, ஹகீகா இம்மூன்றும் உள்வாங்கப்பட்டதே “தீனுல் இஸ்லாம்” இஸ்லாமிய மார்க்கமாகும். ஒரே நேரத்தில் ஒருவனில் இம்மூன்றும் செயல்பட்டால் மட்டுமே அவன் “தீன்” மார்க்கத்தில் உள்ளான் என்ற கருத்து வரும்.
 
ஒருவன் தனக்கு “ஷரீஆ” மட்டும் போதும், வேறொன்றும் தேவையில்லையென்று சொன்னால் அவன் “தீன்” மார்க்கத்தில் இல்லை என்றே முடிவு செய்ய வேண்டும். இவ்வாறுதான் இன்னொருவன் தனக்கு “தரீகா” மட்டும் போதும், வேறொன்றும் தேவையில்லை என்று சொல்வதுமாகும். இதேபோன்றுதான் ஒருவன் தனக்கு “ஹகீகா” மட்டும் போதும், வேறொன்றும் தேவையில்லை என்று சொல்வதுமாகும்.
 
ஞானிகளிற் சிலர், ஷரீஆ, தரீகா, ஹகீகா, மஃரிபா என்ற நான்கு வழிகள் பற்றியும் பேசுவார்கள். இன்னும் சிலர் “மஃரிபா” என்ற நாலாம் வழியை அதற்கு முன்னுள்ள மூன்று வழிகளில் உள் வாங்கி மூன்று வழிகள் என்றும் பேசுவார்கள். ஒரு மனிதன், ஞான மகான்கள் கூறிய நான்கு வழிகளையும், அல்லது நாலாவதை மூன்றுள்ளடக்கி மூன்று வழிகளையும் பேச வேண்டும்.
 
எவ்வாறு பேசினாலும் ஒரு முஸ்லிம் நாற் சக்கரங்கள் கொண்ட அல்லது முச்சக்கரங்கள் கொண்ட வண்டியில் பயணித்தால் மட்டுமே அவர் “தீன்” பயணம் செய்தவராவார்.
 
ஆகக் குறைந்த பட்சம் ஒரு முஸ்லிம் மூன்று வழிகளிலும் அல்லாஹ்வை நோக்கிப் பயணிக்க வேண்டும்.
 
இன்னும் சில ஞான மகான்கள் நாலு வழிகளையும் இரண்டு வழிகளில் சுருக்கியும் பேசுவார்கள். இரண்டு வழிகள் பற்றி அவர்கள் பேசுவதால் மற்ற இரு வழிகளும் தேவையில்லை என்று அவ்விரண்டையும் கழித்துவிட்டார்கள் என்பது கருத்தல்ல.
 
அதாவது “ஷரீஆ” வழியென்றும், “ஹகீகா” வழியென்றும் பேசுவார்கள். இது தொடர்பாக முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
 
مَنْ تَشَرَّعَ وَلَمْ يَتَحَقَّقْ فَقَدْ تَفَسَّقْ
وَمَنْ تَحَقَّقَ وَلَمْ يَتَشَرَّعْ فَقَدْ تَزَنْدَقْ
وَمَنْ جَمَعَ بَـيْـنَـهُمَا فَـقَـدْ تَـحَـقَّـقْ
 
ஒருவன் “ஷரீஆ” மட்டும் கற்று அவன் “ஹகீகா”வை அறியவில்லையானால் அவன் “பாஸிக்” கெட்டவனாகிவிட்டான்.
 
ஒருவன் “ஹகீகா”வை மட்டும் கற்று “ஷரீஆ”வை அறிந்து கொள்ளவில்லையானால் அவன் “சிந்தீக்” ஆகிவிட்டான். எவன் இருவழிகளையும் கற்று அதன்படி செயல்படுகின்றானோ அவன்தான் உயர் ஞானியும், உயிர் ஞானியுமாவான்.
 
இவ்வாறு இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் மட்டும் கூறவில்லை. அவர்கள் போல் ஞான மகான்களிற் பலர் கூறியுள்ளார்கள். “ஸூபிஸம்” தொடர்பான நூல்களில் அதிகமான நூல்களில் இத்தத்துவத்தை காண முடியும்.
 
ஷரீஆ, தரீகா இரு வழிகள்
இறைவன் தந்த நல் வழிகள்
இரண்டும் விட்டோன் இரு விழிகள்
இழந்தோன் யாஹூ யா அல்லாஹ்!
(ஒரு கவிஞன்)
 
“ஷரீஆ” தவிரவுள்ள அனைத்து வழிகளும், (தரீகா, ஹகீகா, மஃரிபா என்பவையாவும்) அல்லாஹ்வினாலோ, நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களினாலோ கொண்டு வரப்பட்டதல்ல. அவை மூன்றும் போதைக்கடிமையான “மஸ்தான்” போன்றவர்களால் ஏற்படுத்தப்பட்ட வழிகள் என்று சொல்பவர்கள் எக்காலத்திலும் இருந்துதான் வருகிறார்கள். இவர்கள் “யஹூதீ” வமிசத்தைச் சேர்ந்தவர்கள் என்று நான் நினைக்கிறேன்.
 
இவர்களில் ஒருவன்தான் குண்டுதாரிக் கொலை காரன் சஹ்றான் என்பவன். இவன் காத்தான்குடியில் இருந்த நேரம் அடிக்கடி இவ்வாறு பேசுவான். அவ்லியாஉகளை ஏசுவான். நாதாக்களை சபிப்பான்.
 
ஒரு நாளிரவு இவன் காத்தான்குடியில் ஒலி பெருக்கியில் பின்வருமாறு பேசுகிறான். இவனின் பேச்சை நான் எனது காதுகளால் கேட்டே இதை எழுதுகிறேன்.
 
ஷெய்குல் அக்பர் என்று ஒருவன் இருந்தான். இவனைப் பெரிய மனிதன் என்று சிலர் சொல்கிறார்கள். இவன் “ஷெய்குல் அக்பர்” அல்ல. இவன் “ஷெய்தான் கபீர்” பெரிய ஷெய்தான் என்று ஊரெல்லாம் கேட்க உளறினான். ஒப்பாரி வைத்தான்.
 
இவன் பேச்சை முடிப்பதற்குள், “இறைவா! உனது மகான் இப்னு அறபீ நாயகம் அவர்களை இவன் “ஷெய்தான் கபீர்” என்று சொன்னது என்னால் தாங்க முடியவில்லை. உனது வலீமாரைப் பகைப்பவர்களுடன் நீ போர் தொடுப்பதாகச் சொல்லியுள்ளாய்! என் கண் முன் இவனைச் சின்னா பின்னமாக்கி விடுவாயாக! என்று மனமுருகி என் றப்பிடம் கேட்டேன். என் றப்பு எனக்கு இரக்கம் காட்டிவிட்டான். إِنَّهُ لَا يُخْلِفُ الْمِيْعَادَ நிச்சயமாக அவன் அடியார்களுக்கு கொடுத்த வாக்கிற்கு மாறு செய்யமாட்டான். இது நான் என் வாழ்வில் அனுபவ அடிப்படையில் கண்ட உண்மையாகும். வலீமாரை இழிவு படுத்துவோர் அனைவரும் சிதறியே சாவர் என்பதற்கு ஹதீது குத்ஸியில் ஆதாரம் உண்டு.
 
இன்னொரு சம்பவத்தையும் இங்கு எழுதுகிறேன். இந்த சம்பவமும் நல்லடியார்களின் சாபத்தை பயந்து கொள்ள வேண்டும் என்பதையே உணர்த்துகிறது. ஒரு புனித “றமழான்” நோன்பு மாதம். அல் ஜாமிஅதுர் றப்பானிய்யா அறபுக் கல்லூரி மாணவர்களிற் சிலர் “ஸஹர்” முடித்துவிட்டு ஜாமிஆவை அடுத்திருந்த புகாரீ மண்டபத்தில் உறங்கிக் கொண்டிருந்தார்கள். எதிர்பாராமல் காலை சுமார் 6.30 மணியளவில் மட்டக்களப்பு பொலீஸ் குழுவொன்று வந்து உறங்கிக் கொண்டிருந்த மாணவர்கள் அனைவரையும் அடித்து ஓடச் செய்துவிட்டு பள்ளிவாயலில் கட்டப்பட்டிருந்த ஒலி பெருக்கி, மற்றும் உபகரணங்களையும் எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். ஊரில் பெரும் சலசலப்பு. சிலருக்கு கொண்டாட்டம். இன்னும் சிலருக்கு திண்டாட்டம். சிலர் பட்டாசு கொழுத்தி மகிழ்ந்தார்கள். இன்னும் சிலர் படைத்தவனிடம் நீதி கேட்டு கரம் உயர்த்தினார்கள்.
 
மறுநாள் பத்ரிய்யா பள்ளிவாயல் நிர்வாகிகள் மட்டக்களப்பு பொலீஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு அனைவரும் சென்றிருந்தார்கள்.
 
அங்கு பத்ரிய்யாக் குழுவுக்கு எதிராக வந்திருந்த சம்மேளனம், உலமா சபையைச் சேர்ந்த சிலர் அவர்கள் சொல்ல வேண்டிய முறைப்பாடுகளைச் சொன்னார்கள். பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயல் நிர்வாகிகள் தமது முறைப்பாடுகளைக் கூறினார்கள்.
 
விசாரித்த பொலீஸ் அதிகாரி பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு “ஜாவா” முஸ்லிமாக இருந்தார். அவர் விசாரணை நடத்த, அவருக்கு உதவியாயிருந்ததவர் அனைத்து முறைப்பாடுகளையும் பதிவு செய்து கொண்டிருந்தார்.
 
பத்ரிய்யா பள்ளிவாயல் குழுவுக்கு எதிராக வந்திருந்த குழுவைச் சேர்ந்த ஒருவர் பொலீஸ் அதிகாரியிடம், (சேர்! இவர்கள் தமது பள்ளிவாயல் உள்ளே சின்னச் சின்ன சிலைகளை வைத்துள்ளார்கள். அவற்றை அகற்றச் சொல்லுங்கள். அவர்கள் அகற்றினால் எங்களுக்கும், அவர்களுக்கும் எந்தப் பிரச்சினையும் கிடையாது) என்று புனித றமழான் மாதம் நோன்புடன் மேற்கண்டவாறு பயங்கரப் பொய்யொன்றைக் கூறினார்.
 
ஸுப்ஹானல்லாஹ்! பத்ரிய்யா ஜுமஆப் பள்ளிவாயல் தலைவர் அல்ஹாஜ் மீ. அ. மு. இப்றாஹீம் என்பவர் (“அல்லாஹு அக்பர்” என்று தன்னை மறந்து பயங்கர சத்தத்தோடு அதிகாரி முன்னாலிருந்த மேசையில் தனது கையால் அடித்து, இவன் பொய் சொல்கிறான். எங்களின் பள்ளிவாயலில் ஒரு சிறு சிலையேனுமில்லை. நாங்கள் அல்லாஹ்வை வணங்குகிறோமேயன்றி சிலையை வணங்கவில்லை) என்று சீறிப் பாய்ந்து தன்னைக் கொன்றோல் பண்ண முடியாத நிலையில் சிலையிருப்பதாகச் சொன்னவரை விரலால் சுட்டி நீ மூளை சிதறியே சாவாய் என்று சபித்தார். இது பொலீஸ் நிலையத்தில் நடந்த உண்மைச் சம்பவம். இதில் கலந்து கொண்டவர்களில் பலர் மரணித்துவிட்டார்கள். இன்னும் சிலர் உயிருடன் உள்ளார்கள்.
 
பொலீஸ் அதிகாரி முஸ்லிமாயிருந்ததாலும், காலம் நோன்பு காலமாக இருந்ததாலும் அனைவரையும் அமைதிப்படுத்திவிட்டு பொலீஸ் அதிகாரி ஒருவரின் தலைமையில் பொலீஸ் குழு ஒன்றை காத்தான்குடியிலுள்ள பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயலை சோதனை செய்து பாருங்கள். சிலைகள் இருந்தால் எடுத்து வாருங்கள் என்று கட்டளையிட்டு அனுப்பி வைத்தார்.
 
இரு தரப்பினரும் அங்கேயே அமைதி காத்தவர்களாக இருந்தார்கள். சுமார் இரண்டு மணி நேரங்களின் பிறகு வந்த பொலீஸ் குழு சிலைகள் எதுவும் அங்கு இல்லை என்று கூறினர். ஆத்திரமடைந்த முஸ்லிம் பொலீஸ் அதிகாரி அனைவருக்கும் ஒற்றுமை தொடர்பாக சிறிது நேரம் பேசிவிட்டு அனுப்பி வைத்தார்.
 
இந்தச் சம்பவம் நடந்த காலத்தில் காத்தான்குடியில் பொலீஸ் நிலையம் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
நோன்பாளி இப்றாஹீம் ஹாஜியாரின் சாபம் வீணாகவில்லை. அவர் சாபமிட்டவாறே சம்பவம் நடந்தது.
 
وَسَبْعَةٌ لَا يَرُدُّ اللهُ دَعْوَتَهُمْ – مَظْلُوْمٌ وَالِدٌ ذُوْ صَوْمٍ وَذُوْ مَرَضٍ
وَدَعْوَةٌ لِأَخِيْ بِالْغَيْبِ ثُمَّ نَبِيْ – لِأُمَّةٍ ثُمَّ ذُوْ حَجٍّ بِذَاكَ قُضِـيْ
 
ஏழுபேர்களின் பிரார்த்தனைகளை அல்லாஹ் நிச்சயமாக ஏற்றுக் கொள்வான். தட்டிவிடமாட்டான்.
 
ஒருவன் – مَظْلُوْمٌ அநீதி செய்யப்பட்டவன். அடித்தோ, ஏசியோ, துன்புறுத்தியோ, அநீதியான நடவடிக்கை மூலமோ அநீதி செய்யப்பட்டவன். உதாரணமாக ஒருவனுக்கு சம்மேளனக் கூட்டத்தில் நீ றஊப் மௌலவீயின் ஆதரவாளனாயிருப்பதால் உனக்கு சம்மேளனத்தால் காணி தரவோ, உதவி செய்யவோ முடியாது என்று சொல்லப்பட்டவன் போன்று. உரியவன் உயிரோடுதான் உள்ளான். எங்கு வந்தேனும் உண்மை சொல்ல அவன் விருப்பத்தோடுதான் உள்ளான்.
 
இரண்டு – وَالِدٌ பெற்றோர். தந்தை அல்லது தாய். தமது மகன்களால் அல்லது மகள்களால் வேதனைப்படுத்தப்பட்ட பெற்றோர்.
 
இன்று பெற்றோருக்கு பிள்ளைகள் செய்யும் வேதனை எல்லையை கடந்து செல்வதைக் காண்கிறோம். வரம்பை உடைத்துக் கொண்டு அநீதி நடைபெறுகிறது. அநீதி செய்யப்பட்ட பெற்றோர் மனமொடிந்து, மனமுருகி இறைவா! என்றாலே போதும். பெற்றோரின் மனதை வேதனைப் படுத்தினவன் எவனாயினும் அவன் பெற்றோரின் சாபத்திற்குள்ளாவது நிச்சயம்.
 
ஏழு பேர்களையும் தனித்தனியாக விபரிக்க வாய்ப்பின்றி சுருக்கிக் கொள்கிறேன்.
மூன்று – ذو صوم நோன்பாளி.
நான்கு – ذو مرض நோயாளி.
ஐந்து – ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு மறைமுகமாக – அவனில்லாத இடத்தில் அவனுக்காக கேட்கும் துஆ.
ஆறு – ஒரு நபீ தனது சமுகத்திற்காக கேட்கும் துஆ.
ஏழு – ஏற்றுக் கொள்ளப்பட்ட “ஹஜ்” செய்தவன் கேட்கும் துஆ. வியாபார நோக்குடன் சென்று வருபவன் அல்ல.
 
மேற்கண்ட ஏழுபேர்களின் “துஆ”க்களும் தங்கு தடையின்றி ஏற்றுக் கொள்ளப்படும் என்பதை அனைவரும் அறிந்து அல்லாஹ்வைப் பயந்து செயல்பட வேண்டும்.
 
ஒரு பணக்காரன் தனது பணப் பலத்தைக் கொண்டு மட்டும் எதையும் சாதிக்கலாம் என்று நினைப்பதும், ஒரு பயில்வான் தனது உடற் பலத்தைக் கொண்டு எதையும் செய்யலாம் என்று நினைப்பதும், ஒரு மந்திர காரன் தனது மந்திரத் திறமை கொண்டு எவரையும் வெல்லலாம் என்று நினைப்பதும், ஓர் அரசியல்வாதி தனது அரசியல் பலத்தைக் கொண்டு தான் விரும்பியதைச் செய்யலாமென்று நினைப்பதும் வடிகட்டிய முட்டாள் தனம் என்பதை அவர்கள் ஒவ்வொருவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
 
நான் பேசிவருகின்ற ஸூபிஸ தத்துவம் – வஹ்ததுல் வுஜூத் ஞானம் புராணக்கதையோ, கிராமத்துப் பழங்கதையோ அல்ல. இது திருக்குர்ஆனுக்கோ, நபீ மொழிக்கோ முரணானதும் அல்ல. மற்றும் ஆரீபீன்கள், இறைஞானிகள், ஸூபீ மகான்கள், குத்புமார்கள், மற்றும் நபீமார், ஸித்தீகீன்கள், நல்லடியார்களின் பேச்சுக்கோ, கருத்துக்கோ முரணானதுமல்ல.
 
இவ்வாறிருக்கும் நிலையில் நான் பேசிய கருத்துக்கள் உலமா சபையினருக்கு பிழையாகத் தெரிந்தால் அவர்களின் கடமை என்னவெனில் என்னிடம் கேட்டிருக்க வேண்டும். நான் அவர்களுக்கு பதில் கொடுத்திருப்பேன்.
 
فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ
நீங்கள் அறியாதவர்களாயிருந்தால் அறிஞர்களிடம் கேளுங்கள். (திருமறை 16-43)
 
இத்திருவசனத்தின் படி கருத்துக் கூறிய என்னை விசாரிக்க வேண்டும். இது முதல் அம்சம்.
 
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா எனக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்கள். அதில் கொழும்பில் நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்று கேட்டிருந்தார்கள். நான் அவர்களின் அக்கடிதத்திற்கு மறுநாளே பதில் அனுப்பிவிட்டேன்.
 
அந்தக் கடிதத்தில், இந்த விவகாரம் தொடர்பாக எனக்கும், காத்தான்குடி உலமா சபைக்குமிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பதால் நாங்களே இப்பிரச்சினையை தீர்த்துக் கொள்கிறோம் என்று எழுதியிருந்தேன்.
 
இதோடு என்னுடனான தொடர்பை உலமா சபை துண்டித்துவிட்டு அவர்களாக எடுத்த முடிவுதான் (நானும், எனது கருத்துக்களைச் சரி கண்டவர்களும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்பதும், எங்களைக் கொலை செய்ய வேண்டும்) என்பதுமாகும்.
 
எனது கருத்துக்களை வாசிப்பவர்கள் எனக்காக, எனது ஆரோக்கியத்துக்காக ஒரு நொடி நேரம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments