Monday, May 20, 2024
Homeஎழுத்தாக்கங்கள்கொரோனா வைரஸ் விடைபெற்றுச் சென்றாலும் கூட அது மீண்டும் வர சாத்தியம் உண்டு!

கொரோனா வைரஸ் விடைபெற்றுச் சென்றாலும் கூட அது மீண்டும் வர சாத்தியம் உண்டு!

தொகுப்பு: ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலி)

தற்போது பூமியில் ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற கொரோனா வைரஸ் விடை பெற்றுச் சென்றாலும் கூட அது மீண்டும் வெளியாகச் சாத்தியமுண்டு.

ஏனெனில் அது விடைபெற்றுச் சென்றாலும் கூட பூமியில்தான் மறைந்திருக்குமேயன்றி அது வேறெந்த மண்டலத்திற்கும் போகாது. ஆகையால் அது மீண்டும் தலை காட்டாதென்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

இக்கருத்து எனது சொந்தக் கருத்தல்ல. இவ்வாறு கருத்துச் சொல்வதற்கு நான் விஞ்ஞானியுமல்ல. விலங்கியல் ஆய்வாளனுமல்ல. எனினும் பின்வரும் நபீ மொழியிலிருந்து நான் புரிந்து கொண்ட கருத்தே இது. அவ்வாறிருந்தாலும் கூட அல்லாஹ் நாடினால் அது மீண்டும் வராமல் தடை செய்ய அவனால் முடியும். அவன் அவ்வாறு விரும்புவதாயின் பூமியில் வாழும் மக்கள் புனிதமானவர்களாயிருத்தல் வேண்டும்.

عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «إِنَّ هَذَا الْوَجَعَ أَوِ السَّقَمَ رِجْزٌ عُذِّبَ بِهِ بَعْضُ الْأُمَمِ قَبْلَكُمْ، ثُمَّ بَقِيَ بَعْدُ بِالْأَرْضِ، فَيَذْهَبُ الْمَرَّةَ وَيَأْتِي الْأُخْرَى، فَمَنْ سَمِعَ بِهِ بِأَرْضٍ، فَلَا يَقْدَمَنَّ عَلَيْهِ، وَمَنْ وَقَعَ بِأَرْضٍ وَهُوَ بِهَا فَلَا يُخْرِجَنَّهُ الْفِرَارُ مِنْهُ

நிச்சயமாக இந்த வலி, அல்லது நோய் அசுத்தமானது. உங்களுக்கு முன் வாழ்ந்த சமுகத்தவர்கள் அதன் மூலம் வேதனை செய்யப்பட்டுள்ளார்கள். பின்பு அந்த நோய் பூமியில் தங்கிவிட்டது. அது ஒரு சமயம் போகும். இன்னொரு சமயம் வரும். எங்காவது ஓர் இடத்தில் இருப்பதாக கேள்விப்பட்டவர் அங்கு செல்ல வேண்டாம். ஒருவர் எங்காவது ஓர் இடத்தில் இருக்கும் போது அங்கு அது வந்தால் அவர் அந்த இடத்தை விட்டும் வெளியேறவும் வேண்டாம். (அந்த நோயைப் பயப்படுவது அவனை வெளியேற்றிவிட வேண்டாம்)

ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்
உஸாமதுப்னு ஸைத் றழியல்லாஹு அன்ஹு

இந்த நபீ மொழியை ஆதாரமாகக் கொண்டே நான் மேற்கண்டவாறு கூறினேன். இதன் மூலம் தொற்று நோய் என்று கருதப்படுகின்ற எந்த ஒரு பயங்கர நோயாயினும் அது எக்காலமும் ஒரே இடத்திலேயே இருக்கவுமாட்டாது. வேறெங்கு போனாலும் அங்கும் எல்லாக்காலமும் இருக்கவுமாட்டாது. அதாவது அது வரும் போகும்.

இந்த நபீ மொழியை ஆதாரமாகக் கொண்டே அது வரும் போகும் என்று சொன்னேன்.

கொரோனாவுக்கு மட்டும் இத்தன்மை இல்லை. தொற்று நோய் என்று வைத்தியர்களாலும், சுகாதாரத் துறையினராலும் சொல்லப்படுகின்ற பயங்கர நோய்கள் அனைத்திற்கும் உண்டு.

இவ்வாறு பயங்கர நோய் நாட்டில் பரவினால் வைத்தியர்களும், சுகாதாரத்துறையினரும் கூறும் ஆலோசனைகளைச் செவியேற்று செயல்படுவது நாட்டு மக்களின் கடமையாகும். எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாதென்று அவர்கள் கூறுகின்றார்களோ அவ்வாறு நாட்டு மக்கள் அனைவரும் செயல்பட வேண்டும். பத்தியம் பேண வேண்டும்.

அதோடு மட்டும் நின்று விடாமல் பொதுவாக எல்லா நோய்களுக்கும் பொது நிவாரணியாக பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் கூறிய மருந்துகளையும் வைத்தியர்களின் ஆலோசனைப்படி பாவிக்க வேண்டும்.

நோய் பரவிய கால கட்டத்தில் மட்டுமன்றி எல்லாக் காலங்களிலும் “ஷரீஆ” மார்க்கத்தில் கூறப்பட்ட சுத்தம், சுகாதாரம் பேண வேண்டும். எப்போது எது சாப்பிடுவதாயினும் முதலில் கைகள் இரண்டையும் சுத்தமாக கழுவிக் கொள்ளுதல் வேண்டும். சாப்பிடு முன் கைகளைக் கழுவிக் கொள்வது சுகாதார அடிப்படையில் பல மதத்தவர்களும் செய்து கொண்டாலும் கூட எந்தவொரு மதத்திலும் அது மார்க்க அனுஷ்டானமாக சொல்லப்பட்டதாக நான் அறியவில்லை. இஸ்லாம் மார்க்கம் மட்டுமே சாப்பிடு முன் கை கழுவுதலை “ஸுன்னத்” மார்க்கமாக்கியுள்ளதென்று நான் அறிகிறேன்.

வாரத்திற்கு ஒரு தரம் கை, கால் நகங்களை வெட்டிக் கொள்ளுதலும் இஸ்லாம் மார்க்கத்தில் மட்டுமே மார்க்கமாக்கப்பட்டுள்ளது. இதுவும் சுத்தம், சுகாதாரம் என்ற அடிப்படையில் மார்க்கமாக்கப்பட்டதேயாகும்.

பயங்கர நோய் பரவியிருக்கும் கால கட்டத்தில் ஒவ்வொருவரும் மார்க்க நடைமுறைகளைப் பேணி நடப்பதுடன் அதிகமாக அல்லாஹ்விடம் நோய்களிலிருந்து பாதுகாப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும். “துஆ” அதிகமாக கேட்க வேண்டும். “துஆ” என்பது மருந்துகளில் மிகச் சிறந்த மருந்தாகும்.

எப்போது குடிப்பதாயினும், சாப்பிடுவதாயினும் வலது கையால் சாப்பிடவும், குடிக்கவும் வேண்டும். சுகாதாரத்திற்கு சம்பந்தமில்லாது போனாலும் வலதைப் பாவிப்பதில் இறையருள் உண்டு. யார் எதைச் சாப்பிடும் போதும், குடிக்கும் போதும் “பஸ்மலா” சொல்ல வேண்டும். அதாவது “பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம்” என்று சொல்லியே எதையும் உட்கொள்ள வேண்டும். இது நஞ்சை முறிக்கும், கிருமிகளைக் கொல்லும் இது இறைவன் சொல்லித் தந்த மந்திரமாகும். நஞ்சும் முறியும், கிருமியும் சாகும்.

பயங்கர நோய் நல்ல மனிதர்களுக்கு வருமா?

கொரோனாவாயினும், வேறு பயங்கர நோயாயினும் வைத்தியர்களால் தொற்று நோய் என்று சொல்லப்படுகின்ற பயங்கர நோய்கள் மார்க்க வழிமுறைகளையும், நடைமுறைகளையும் பேணி வாழ்கின்ற நல்லடியார்களுக்கு ஏற்படுமா? இது பற்றி சிறிய அளவில் ஓர் ஆய்வு.

மலக்குகள், நபீமார்கள் தவிர மற்றவர்கள் அனைவருக்கும் சிறிய நோய்களோ, பெரிய நோய்களோ, அல்லது கொரோனா போன்ற பயங்கர நோய்களோ வருவதற்கு சாத்தியமுண்டு. மற்றவர்கள் என்போர் வலீமார், குத்புமார் போன்ற ஆன்மீக உயர் பதவி பெற்றவர்களாவர். இவர்களுக்கும் வரச் சாத்தியம் உண்டு. சாத்தியம் உண்டு என்பதால் வந்தே ஆகும் என்பது கருத்தல்ல. எனது கருத்து என்னவெனில் அவர்களுக்கு வருவது مُمْكِنْ சாத்தியம் என்பதாகும். مُحَالْ அல்ல. அதாவது அசாத்தியமல்ல.

ஆயினும் “மலக்” அமரர்களுக்கு சிறிய நோயோ, பெரிய நோயோ எந்த ஒரு நோயும் வராது. அசாத்தியம். இதற்கான காரணம் ஆன்மீகத்தோடு தொடர்புள்ளதால் அது விரிவாக எழுத வேண்டியதாகும்.

நபீமார்களுக்கு நோய்கள் வருவதற்கு சாத்தியமுண்டு ஆயினும் அவர்களுக்கு பயங்கர நோய்களோ, மனிதர்களின் பார்வையில் அருவருப்பான நோய்களோ வராது. ஆயினும் காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி, தடிமல் போன்ற சிறிய வியாதிகள் வருவதற்கு சாத்தியமுண்டு. வந்தும் இருக்கிறது.

நபீமாருக்குப் பைத்தியம், வெண் குஷ்டம், கருங் குஷ்டம், சப்பாணி (முடம்), கை சொத்தி, குருடு ஊமை போன்ற பயங்கர வியாதிகளும் மனிதர்கள் அவர்களை நெருங்குவதற்கு அருவருப்பான நோய்களும் வரமாட்டா.

நபீ ஐயூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உடலில் சொறி, சிரங்கு ஏற்பட்டு சீள், சலம் வடிந்ததாகவும், புழுக்கள் மேய்ந்ததாகவும், சில நேரம் புழுக்கள் உடலில் இருந்து கீழே விழுந்தால் அவற்றை அவர்கள் எடுத்து தங்களின் உடலில் வைத்து உனக்குரிய உணவை சாப்பிட்டுக் கொள் என்று சொன்னதாகவும் ஒரு கதை முஸ்லிம்களுக்கிடையில் நடமாறுகிறது. இது இஸ்லாமிய “அகீதா” கொள்கைக் கோட்பாட்டிற்கு முரணானதாகும். அறபு நூல்களில் எழுதப்பட்டதெல்லாம் ஆதாரபூர்வமானதல்ல.

நபீமார் தவிர நல்ல மனிதர்களுக்கு பயங்கர நோய்கள் வராதென்று அபிப்பிராயம் முஸ்லிம்களுக்கிடையே உள்ளது.

நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள்,

«أَشَدُّ النَّاسِ بَلَاءً الْأَنْبِيَاءُ، ثُمَّ الْعُلَمَاءُ، ثُمَّ الْأَمْثَلُ فَالْأَمْثَلُ»

கடும் சோதனைகளுக்குள்ளானவர்கள் நபீமார்களாவர். அவர்களையடுத்து உலமாஉகளாவர். அவர்களையடுத்து மார்க்கப் படித்தரங்களில் உயர்ந்தவர்களாவர் என்று அருளியுள்ளார்கள்.

بلاءٌ – “பலாஉன்” என்ற சொல் பொதுவாக சோதனை, கஷ்டம், துன்பம், நோய் என்பவற்றை உள்வாங்கிய ஒரு சொல்லாகும். இச் சொல் நோயை மட்டும் குறிக்காது. இச்சொல்லின் தாற்பரிம் புரியாத பலர் இதற்கு நோய் என்று மட்டும் பொருள் வைத்துக் கொண்டு தவறான விளக்கம் கூறுகின்றார்கள். விஷயம் அப்படியல்ல. இச் சொல் எதையெல்லாம் உள்வாங்கிய சொல் என்று விளங்கிக் கொண்டார்களானால் “அகீதா” கொள்கைக்கு முரணாக பேசமாட்டார்கள்.

இமாம் மன்ஸூர் அல்ஹல்லாஜ் அவர்கள் “அனல் ஹக்” என்று சொன்னதற்காக அவர்களை அரை குறை ஆலிம்கள் ஒன்று சேர்ந்து கொலை செய்ததும், அவர்களுக்கு ஏற்பட்ட சோதனைதான்.

என்னை விசாரித்து விளக்கம் கேட்காமல் அரை வேக்காடுகளும், பொறாமைக்காரர்களும் என்னையும், எனது கருத்தை ஏற்றுக் கொண்டவர்களையும் மதம் மாறியவர்கள் என்றும், எங்களைக் கொலை செய்யலாம் என்றும் “பத்வா” வழங்கியது எனக்கும், எனது மக்களுக்கும் ஏற்பட்ட சோதனைதான்.

“எல்லாம் அவனே” என்ற இமாம் ஙஸ்ஸாலீ அவர்களின் ஆதாரங்கள் தொடரும்.

இமாம் ஙஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் ஹிஜ்ரீ 450ல் “தூஸ்” என்ற ஊரில் பிறந்தார்கள். “தூஸ்” ஈரானின் குறாஸானிலுள்ள பழமை வாய்ந்த பட்டணம். ஹிஜ்ரீ 505ல் தூஸ் நகரிலேயே மரணித்தார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments