Monday, May 20, 2024
Homeஎழுத்தாக்கங்கள்நீங்கள் எங்கு நோக்கினாலும் - எங்கு பார்த்தாலும் அங்கு அல்லாஹ்வின் முகம் உண்டு.

நீங்கள் எங்கு நோக்கினாலும் – எங்கு பார்த்தாலும் அங்கு அல்லாஹ்வின் முகம் உண்டு.

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

وَلِلَّهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ
நீங்கள் எங்கு நோக்கினாலும் – எங்கு பார்த்தாலும் அங்கு அல்லாஹ்வின் முகம் உண்டு.
(திருக்குர்ஆன் 2-115)


அல்லாஹ்வின் முகம் உண்டு என்றால் “அவனே உள்ளான்” என்று விளங்க வேண்டுமேயன்றி அவனின் முகம் மட்டும் உண்டு என்று விளங்குதல் பிழையாகும். அவனுக்கு “தாத்” உண்டு என்பது உண்மைதான். ஆயினும் அவனின் “தாத்” சிருட்டியின் “தாத்” போல் கை, கால், முகம் போன்ற பல உறுப்புக்களை உள்வாங்கிய, உருவமுள்ள, சடமுள்ள ஒன்று அல்ல என்றும் அது எது போன்றதுமல்லாதது என்றும் நம்புதல் வேண்டும். நீங்கள் எங்கு பார்த்தாலும் அங்கே அல்லாஹ்தான் உள்ளான் என்றால் அவனின் “தாத்” உள்ளமைதான் உண்டு என்று விளங்க வேண்டும். அவ்வாறு விளங்கினாலும் கூட எங்கு பார்த்தாலும் படைப்பு தானே உள்ளது. இவ்வாறிருக்கும் நிலையில் எங்கு பார்த்தாலும் அல்லாஹ்தான் உள்ளான் என்று எவ்வாறு சொல்ல முடியும்? என்று ஒருவன் சிந்திப்பானாயின் அவன் அல்லாஹ் யாரென்று அறியாதவன் என்றே சொல்ல வேண்டும். அவ்வாறு சிந்திப்பவன் அல்லாஹ் இவ்வாறுதான் இருப்பான் என்று அவனாக ஏதோ ஒன்றை கற்பனை செய்து கொண்டான் போலும்.

இவனுக்கு ஓர் உதாரணம் மூலம் அல்லாஹ் எவ்வாறு இருப்பான் என்று சொல்வோம்.

அல்லாஹ்வை அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பிய ஒருவன் இறைஞானி ஒருவரிடம் சென்று எனக்கு அல்லாஹ் யாரென்று சொல்லித் தாருங்கள் என்றான்.

அதற்கவர், எனக்கு கடற்கரையில் ஒரு தோட்டம் உண்டு. அது அமைதியான இடம். இன்று மாலை நாமிருவரும் அங்கு சென்று பேசிக் கொண்டிருப்போம். நான் உனக்கு எனது தோட்டத்தையும் காட்டித் தந்து அல்லாஹ் யாரென்றும், அவன் எத்தகையவன் என்றும் சொல்லித் தருகிறேன் என்றார். குறித்த நேரம் இருவரும் அங்கு சென்றனர்.

இறைஞானி அவனை அழைத்துக் கொண்டு தோட்டத்தை வலம் வந்து அங்குள்ள மரங்கள், செடி கொடிகள், மற்றுமுள்ள ஒவ்வொன்றையும் காண்பித்தார்.

மா மரத்தைக் காட்டி இது மா மரம் என்றும், முருங்கை மரத்தைக் காட்டி இது முருங்கை மரம் என்றும், அன்னாசி மரத்தைக் காட்டி இது அன்னாசி மரம் என்றும், சுரைக் கொடியைக் காட்டிய இது சுரைக் கொடி என்றும், தோட்டத்திலுள்ள கிணறைக் காட்டி இது கிணறு என்றும், குளத்தைக் காட்டி இது குளம் என்றும், இன்னும் இது போல் தோட்டத்தில் உள்ள அனைத்து மரங்கள், மற்றும் செடி கொடிகளையும் காண்பித்து விட்டு அங்குள்ள ஓர் இடத்தில் இருவரும் அமர்ந்து தேனீர் அருந்தினார்கள்.

மக்ரிப் தொழுகைக்கான நேரம் வந்தது. ஞான மகான் பள்ளிவாயலுக்குச் செல்வோம் என்று எழுந்தார்கள். அப்போது உடன் சென்றவன் அல்லாஹ்வை சொல்லித் தருவதாக அழைத்து வந்தீர்கள். சொல்லித் தரவில்லையே என்றான். இறைஞானி நான் சொல்லித் தந்து விட்டேன். நீ புரிந்து கொள்ளவில்லையா? என்று சொல்லியபின் அல்லாஹ் தொடர்பாக அவனுக்கு விளக்கம் கூறினார்.

அல்லாஹ்வை அறிய வேண்டும் என்ற தாகம் உள்ளவனே! முதலில் அல்லாஹ் என்ற சொல் எதையெல்லாம் உள்வாங்கிய சொல் என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே நான் உன்னை இங்கு அழைத்து வந்தேன். தோட்டம் என்ற சொல் மூலம் அல்லாஹ்வை விளக்கி வைக்க நினைத்தேன்.

தோட்டம் என்ற சொல் போன்றதே அல்லாஹ் என்ற பெயருமாகும். தோட்டம் என்ற பெயர் பல மரங்களையும், மற்றும் செடி கொடிகளையும், கிணறு, குளம் போன்றவற்றையும் உள்வாங்கிய ஓர் இடத்தின் பெயராகும். இவற்றை உள்வாங்காத வெறும் நிலத்துக்கு மட்டும் தோட்டம் என்று சொல்வதில்லை. மேற்கண்டவற்றை உள்வாங்கிய இடத்தின் பெயர்தான் தோட்டம் என்று பெயர் சொல்லப்படுகிறது.

இவ்வாறுதான் அல்லாஹ் என்ற பெயருமாகும். தோட்டம் என்ற பெயர் பல மரங்களையும், செடி, கொடிகளையும், மற்றுமுள்ளவற்றையும் உள்வாங்கிய ஒரு சொல்லாயிருப்பது போல் அல்லாஹ் என்ற சொல்லும் அனைத்து சிருட்டிகளையும், படைப்புகளையும் உள்வாங்கிய ஒரு சொல்லேயாகும்.

ஏனெனில் அல்லாஹ் என்ற சொல் அவனின் “தாத்”துக்குரிய பெயரேயன்றி “ஸிபத்” தன்மைக்குரிய பெயரல்ல. இதன் விபரம் முன்னர் எழுதப்பட்டுள்ளது.

அவனின் “தஜல்லியாத்” அனைத்தும் – வெளிப்பாடுகள் எல்லாமே அவனின் “தாத்”தின் வெளிப்பாடுகளேயாகும். எந்தவொரு படைப்பாயினும் அது அவனின் “தாத்”தின் வெளிப்பாடு என்பதே “வஹ்ததுல் வுஜூத்” பேசிய ஸூபீ மகான்கள் அனைவரின் ஏகோபித்த முடிவாகும்.

இது தொடர்பாக ஹிஜ்ரீ 905ல் கெய்ரோ அல்ஜாமிஉல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் அஷ்ஷெய்கு பத்றுத்தீன் அல் அலாயீ அல்ஹனபீ அவர்களுக்கும், அஷ்ஷெய்கு இப்றாஹீம் அல்மவாஹிபீ அஷ்ஷாதுலீ அவர்களுக்குமிடையில் ஒரு விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதம் பற்றி அல்குத்பு அஷ்ஷெய்கு அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “அல்யவாகீது வல் ஜவாஹிர்” எனும் நூல் முதலாம் பாகம் 61, 62ம் பக்கங்களில் விளக்கமாக எழுதியுள்ளார்கள்.

இந்த விவாதம் இறுதியில் அஷ்ஷெய்கு ஜலாலுத்தீன் ஸுயூதீ அவர்களின் ஞான குரு அல் ஆரிப் பில்லாஹ் முஹம்மத் அல் மக்ரிபீ அஷ்ஷாதுலீ அவர்களின் தலையீட்டால் சமாளிக்கப்பட்டது.

அவ் விவாத மாநாட்டில் அல்லாஹ் “தாத்” கொண்டுதான் படைப்புக்களாக வெளியாகி உள்ளான் என்று விவாதித்தவர்கள் முன்வைத்த ஆதாரங்களிற் சிலதை இங்கு எழுதுகிறேன்.
قال العلّامة الغزويني في شرح عقائد النّسفي ‘ أنّ قول المعتزلة وجمهورَ البخاريّة أنّ الحقّ تعالى بكلِّ مكانٍ بعلمه وقدرته وتدبيره دون ذاته باطلٌ،لأنّه لا يلزم أن من علم مكانا أن يكون فى ذلك المكان بالعلم فقط، إلّا إن كانت صفاتُه تنفكُّ عن ذاته كما هو صفةعلم الخلق لا علمُ الحق، اهـ
இமாம் அல்லாமா ஙஸ்வீனீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “ஷர்ஹு அகாயிதின் நஸபீ” எனும் நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.

அதாவது (“முஃதஸிலா” எனும் வழி கெட்ட கூட்டத்தவர்களும், புகாறாவைச் சேர்ந்தவர்களில் அநேகரும் அல்லாஹ் ஓர் இடத்தில் தனது அறிவு கொண்டும், தனது சக்தி கொண்டும், தனது நிர்வாகம் கொண்டு மட்டுமே உள்ளானே தவிர தனது “தாத்” கொண்டு அல்ல என்று கூறுகிறார்கள். அவர்களின் இக்கூற்று வீணானதாகும்) என்று.

இதன் சுருக்கம் என்னவெனில் வழி கெட்டவர்கள் என்று ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகளால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள “முஃதஸிலா” என்ற கூட்டதத்வர்களும், “புகாறா”வைச் சேர்ந்த அல்லாஹ் எங்கு இருந்தாலும் தனது அறிவு, சக்தி, நிர்வாகம் என்பவற்றைக் கொண்டு மட்டுமே உள்ளானேயன்றி தனது “தாத்” கொண்டில்லை என்று கூறியிருப்பது வீணானது என்று அல்லாமா ஙஸ்வீனீ அவர்கள் தங்களின் “ஷர்ஹு அகாயிதின் நஸபீ” எனும் நூலில் கூறியிருப்பதாக ஓர் ஆதாரத்தை வாதி முன் வைத்தார்.

மேற்கண்ட அறபு வசனத்தில் வந்துள்ள بَاطِلْ “பாதிலுன்” என்ற சொல்லை அதற்கு முன்னால் வற்துள்ள أَنَّ قَوْلَ “அன்ன கவ்ல” என்ற சொல்லுக்கு “கபர்” என்று விளங்க வேண்டும்.
(إنّ لفظ باطلٌ من العبارة المذكورة خبرٌ لقولِ المعتزلة)
மேற்கண்ட விடயத்தை இன்னும் சற்று விளக்கமாக எழுதுகிறேன். அதாவது அல்லாஹ் “தாத்” கொண்டு வெளியாகாமல் அறிவு, சக்தி எனும் தனது “ஸிபத்” தன்மை கொண்டு தான் வெளியாகியுள்ளான் என்று “முஃதஸிலா” வழிகெட்ட கூட்டம் சொல்வது முற்றிலும் பிழையானதாகும். அவன் “ஸிபத்” எனும் தன்மையுடனும், “தாத்” உடனுமே வெளியாகியுள்ளான் என்பதே சரியானதாகும்.

அல்லாஹ் “ஸிபத்” தன்மை கொண்டு மட்டுமன்றி “தாத்” உடனேயே வெளியாகியுள்ளான் என்று வாதிப்பவர் மேற்கண்ட இவ் ஆதாரத்தை கூறிய போது எதிர்த்தரப்பிலுள்ள எவருக்கும் பதில் கொடுக்க முடியாமல் போய் மௌனியாகினார்களே தவிர வேறு எதுவும் செய்ய முடியாமல் வேறென்ன ஆதாரம் உண்டு என்று கேட்டார்கள்.

அல்லாஹ் “ஸிபத்” எனும் தன்மை கொண்டு மட்டும் வெளியாகாமல் “தாத்” உடன்தான் வெளியாகியுள்ளான் என்று வாதிட்டவர்கள் தமது வாதத்திற்கு ஆதாரமாக பின்வருமாறு விளக்கம் கூறுகிறார்கள்.

“ஸிபத்” என்பது தன்மையாகும். “தன்மை” என்பது ஒருபோதும் தனியாக நிற்காது. அது “ஆதேயம்” என்று சொல்லப்படும். ஆதேயம் என்பது ஒரு போதும் தனியே நிற்காது. அது நிற்பதாயின் ஏதாவது ஒன்றில்தான் அது நிற்க வேண்டும். அதுவே அதன் ஆதாரம் எனப்படும்.

உதாரணமாக அப்துல்லாஹ்வின் அறிவு, சக்தி போன்று. அதாவது அவனின் அறிவும், சக்தியும் ஆதேயங்களாகும். அவ்விரண்டும் அவனின் “தாத்” உடலில்தான் தங்கி நிற்குமேயன்றி அந்த “தாத்”தை விட்டும் பிரிந்து நிற்காது.

அப்துல்லாஹ் எங்கு இருக்கின்றானோ அங்கே அவனில்தான் அவனின் அறிவும், சக்தியும் நிற்குமேயன்றி அவன் எங்கோ இருக்கும் நிலையில் அவனின் அறிவும், சக்தியும் அவனை விட்டும் பிரிந்து அவன் எங்கேயோ இருக்க அவ்விரண்டும் அவனை விட்டும் பிரிந்து வேறு எங்கேயோ இருக்கமாட்டாது. இதுவே எதார்த்தம்.

இதே கருத்தையே அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் “புதூஹாத்” எனும் நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

قال الشّيخ محي الدين فى باب حضـرات الأسماء من الفتوحات فى الكلام على اسمه الرقيب، اعلم أنّه ليس فى حضـرات الأسماء الإلهيّة ما يُعطي التَّنبيهَ على أنّ الحقّ تعالى معنا بذاتِه إلّا الإسم الرقيب، لأنّه نبَّهَ على أنّ الذات لا تنفكّ على الصفات لمن تأمّل،

ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ அவர்கள் தங்களின் “புதூஹாத்” எனும் நூலில் “அர்றகீப்” கண்காணிப்பவன் எனும் அல்லாஹ்வின் திரு நாமத்திற்கு விளக்கம் கூறுகையில் அல்லாஹ்வின் திரு நாமங்களில் அவன் தனது “தாத்” உடன்தான் வெளியாகியுள்ளான் என்பதை தெளிவாகக் காட்டக்கூடிய திரு நாமம் “றகீப்” கண்காணிப்பவன் எனும் திரு நாமம் போன்ற திரு நாமம் கிடையாது என்று கூறிவிட்டு ஒருபோதும் “தாத்”தை விட்டும் அதன் “ஸிபத்” பிரியமாட்டாது என்றும் கூறியுள்ளார்கள்.

ஆதாரம்: அல்புதூஹாத்,
பாடம்: றகீப் எனும் அல்லாஹ்வின் திரு நாமம் பற்றிய விளக்கம்.

குறிப்பு: قَالَ الْعَلَّامَةُ الْغَزْوِيْنِيْ என்றும், قَزْوِيْنِيْ என்றும் அச்சில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடரும்..

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments