Sunday, May 19, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஹாஜாஜீ அருள் பெற்ற லங்கர் அண்டா!

ஹாஜாஜீ அருள் பெற்ற லங்கர் அண்டா!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ_பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
அஜ்மீர் ஷரீப் தர்ஹா வளாகத்தில் பல அண்டாக்கள் உள்ளன. அவற்றில் மிகப் பெரியது ஒன்று உண்டு.
 
அஜ்மீர் வரும் பக்தர்கள் அங்குள்ள பெரிய அண்டாவில் சோறு, கறி சமைத்து அங்குள்ள பக்தர்களுக்கு கொடுக்க விரும்பினால் தர்ஹா அலுவலகத்தில் சமையலுக்கேற்ற பணம் செலுத்த வேண்டும். பல இலட்சம் ரூபாய் செலவிட வேண்டும். பதிவு செய்பவர்களின் முறைப்படியே சோறு, கறி சமைக்கப்படும். ஒருவர் அலுவலகத்தில் பணம் செலுத்தினால் ஒரு வருடத்தின் பின்னும் அவருக்கான முறை வரலாம்.
 
இச் சட்டியில் சமைக்கப்படும் உணவு குறைந்தது 5000 பக்தர்களுக்கு பங்கு வைக்க முடியும்.

இதேபோல் இன்னுமொரு அண்டா உண்டு. இது முதற் கூறிய அண்டாவை விட சற்றுச் சிறியது. இதிலும் நேர்ச்சை உணவு தயாரித்து பக்தர்களுக்கு வழங்கப்படும்.
இன்னும் பல சட்டிகள் உள்ளன. அவற்றில் ஒரு சட்டியில் தினமும் காலையும், மாலையும் கஞ்சி காய்ச்சி பக்தர்களுக்கு வழங்கப்படும்.
தினமும் அஜ்மீர் ஷரீபில் சுமார் ஐந்தாயிரம் மக்களுக்கு அஜ்மீர் ஹாஜா உணவு வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
அஜ்மீர் ஷரீப் தர்ஹா வளாகத்தில் மட்டும் தினமும் சுமார் ஐந்தாயிரம் ஏழைகள் ஹாஜாவின் பொருட்டால் உணவு சாப்பிட்டு மகிழ்கிறார்கள். அஜ்மீர் ஷரீபில் பல்லாயிரம் ஏழைகள் – பக்தர்கள் வாழ்ந்தாலும் அவர்களில் ஒருவர் கூட உண்ண உணவின்றி வாழ்பவர் இருக்கமாட்டார் என்றே சொல்ல வேண்டும்.
#அற்புத அண்டா:
அற்புத அண்டா என்று “தர்ஹா”வில் ஒரு சட்டி உண்டு. அதில் காலையும், மாலையும் “லங்கர்” கஞ்சி காய்ச்சி பக்தர்களுக்கும், ஏழைகளுக்கும் அன்பளிப்பாக வழங்கப்படும். இதன் மூலம் சுமார் மூவாயிரம் பேர் பயன் பெறுவார்கள்.
இச்சட்டியின் விஷேடம் என்னவெனில் இச்சட்டியில் கஞ்சி காய்ச்சும் வேளை அடுப்பில் நெருப்பு மிக வேகமாக எரிந்து கொண்டிருக்கும். அதன் சூடும், வெக்கையும் சுமார் இரண்டு மீற்றருக்கு அப்பாலும் உணரப்படும். ஆயினும் ஒருவர் அந்த சூட்டையும், வெக்கையையும் தாங்கிக் கொண்டு அந்த சட்டியை நெருங்கி அதைப் பிடித்தால் ஐஸ் கட்டியை பிடித்தாற் போல் இருக்கும். சூடு அறவே இருக்காது. இது ஹாஜாவின் அற்புதம் என்று அங்கு வாழும் படித்த, வரலாறு தெரிந்த பலர் கூறுகிறார்கள். நானும், என்னுடன் பயணித்தவர்களும் இவ் உண்மையை நேரில் கண்டோம். பிடித்தும் பார்த்தோம்.
அஜ்மீர் அரசர் கரீப் நவாஸ், ஸெய்யிதே ஆலம், அதாயே றஸூல், குத்புல் ஹிந்த் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ அஜ்மீரீ ஸன்ஜரீ உத்மானீ ஹாறூனீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் அருள் பெற விரும்பிய கேரளாவைச் சேர்ந்த ஒரு பக்தர் அஜ்மீர் வந்து ஹாஜாவின் சந்நிதானத்தில் 14 வருடங்கள் தங்கியிருந்தார். அவருக்கு அருளும் கிடைக்கவில்லை, பொருளும் கிடைக்கவில்லை. ஆயினும் வருடங்கள் 14 நகர்ந்து விட்டன.
ஒரு நாளிரவு நடு நிசியில் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்த அந்த மனிதர் ஹாஜா துயிலும் சுவர்க்கச் சோலைக்கு முன்னால் நின்று யா ஙரீப் நவாஸ்! நான் 14 ஆண்டுகளாக உங்களிடம் அருள் கேட்டும், வரம் வேண்டியும் உங்கள் காலடியில் பணிந்து கிடக்கிறேன். என்னை விடப் பிந்தி வந்த பலருக்கு அருளை அள்ளிக் கொடுத்து அனுப்பி வைத்தீர்கள். நானோ 14 ஆண்டுகள் உங்கள் காலடியில் கிடக்கிறேனே ஹாஜா! ஒரு நொடி நேரம் உங்களின் அருட் பார்வை என் மீது விழுந்தால் போதுமே! நான் மனிதனாகிவிடுவேனே ஹாஜா! என்று கண்ணீர் மல்க வேண்டி நின்றார்.
ஹாஜாவின் கருணைக் கதவு திறந்தது. அவர்களின் திருக் கப்று அசைந்தது. எழுந்தார்கள் ஏந்தல். அள்ளிச் சொரிந்தார்கள் அருளை. அவரை விழித்து என் அன்பரே! நண்பரே! இதன் மேல் பொறுக்க முடியாதோ? என்று ஹாஷ்யமாக கேட்டபின்,
14 ஆண்டுகள் பொறுத்திருந்த உன்னை வெறுங் கையோடு அனுப்ப நான் விரும்பவில்லை. அது எனக்கு அழகும் இல்லை. ஆனால் நீ என்னிடம் அழுது, சலித்து கொஞ்சும் மொழியில் கெஞ்சிக் கேட்கும் உன் குரல் கேட்டு இது காறும் இன்புற்றிருந்தேன். நான் தந்தால் நீ போய் விடுவாய். இதனால் உன் குரல் கேட்டு மகிழும் வாய்ப்பை இழந்து விடுவேன் என்று அஞ்சினேன். இதன் பிறகு என்னாலும் பொறுக்க முடியவில்லை. இதோ பிடி என்று எவராலும் விலை மதிக்க முடியாத இரத்தினக் கற்கள் மூன்றும், ஓதுவதற்கு ஒரு “ஸலவாத்”தும் கொடுத்தார்கள்.
பெற்றுக் கொண்டவர் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியவராயும், மன்னர் ஹாஜாவின் பொற் பாதம் முத்தியவராயும், பெற்றுக் கொண்ட பரிசில்களோடு வீடு திரும்பினார்.
ஹாஜாஜீ அவர்களால் தனக்கு வழங்கப்பட்ட மூன்று இரத்தினக் கற்களையும் மூன்று கோடி முப்பது இலட்சத்துக்கு விற்று அப்பணத்தை தனது மனைவி, மக்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், மற்றும் தனது ஊரிலுள்ள பள்ளிவாயலுக்கும் கொடுத்துவிட்டு தான் தனிமையாக வாழ்வதற்கென்று ஓர் இடம் தயாரித்து மரணிக்கும் வரை ஹாஜாஜீ வழங்கிய “ஸலவாத்”தை ஓதுவதிலும், மற்றும் வணக்க வழிபாடு செய்வதிலும் கவனம் செலுத்தி இறுதியில் “விலாயத்” எனும் ஒலித்தனம் அடைந்து “வபாத்” ஆனார்.
#வலீமாரால் அவர்களின் அன்பர்களுக்கு எதை வழங்க முடியும்? எதை வழங்க முடியாது?
எதையும் வழங்க முடியும். எப்போதும் வழங்க முடியும். ஏனெனில் அவர்களுக்கு எத்தடையுமில்லை. அவர்கள் எது செய்வதற்கும் அல்லாஹ்விடமிருந்து மொத்தமாக அதிகாரம் பெற்றவர்களாவர்.
“வலீ” என்ற சொல்லுக்கு அதிகாரம் பெற்றவர் என்று பொருள் வரும். எப்போது அவருக்கு அதிகாரம் கிடைத்ததோ அதே நொடியிலிருந்து அவர் அதிகாரம் பெற்றவரேயாவார். மொத்தமாக அதிகாரம் பெற்றவரேயன்றி இன்ன விடயத்திற்கு அதிகாரம் பெற்றவர், இன்ன விடயத்திற்கு அதிகாரம் பெறாதவர் என்பது கருத்தல்ல. அதிகாரம் பெற்றவர் தான் நாடியதை நாடிய நேரத்தில் செய்து விடுவார். இதற்கு அவருக்கு அதிகாரம் உண்டு. இது தவிர ஒவ்வொரு வேலையை செய்யுமுன்னும் அல்லாஹ்வின் அனுமதி அவசியம் என்பது கருத்தல்ல. இவையாவும் மொத்த அனுமதியில் அடங்கிவிடும். இவற்றில் எதற்கும் தனித்தனி அனுமதி தேவையில்லை.
உதாரணமாக ஒரு கடைக்கார முதலாளி தனது இடத்தில் இன்னொருவரை அமர்த்தி அவருக்கு அனைத்து அதிகாரங்களையும் கொடுத்து அவரைப் பொறுப்பாளராக ஆக்கி வைத்து கடை நடத்துவது போன்றாகும்.
அவரை பொறுப்பாளராக நியமிக்குமுன் அவரை அழைத்து இன்று முதல் நீதான் இக்கடையின் பொறுப்பாளர். இன்று முதல் உனக்கு கடை தொடர்பான அனைத்து அதிகாரங்களையும் நான் வழங்குகிறேன். உனக்கு மொத்தமாக “விலாயத்” அதிகாரம் தந்துவிடுகிறேன் என்று சொல்வது போன்று.
இவ்வாறு கடைக்காரன் அவனுக்கு மொத்தமாக அதிகாரம் வழங்கிவிட்டானாயின் அவன் தான் செய்கின்ற ஒவ்வொன்றுக்கும் உடனுக்குடன் அனுமதி கேட்கத் தேவையில்லை. அவன் எதை எப்போது செய்வதற்கும் முதலாளி வழங்கிய மொத்தமான அதிகாரம் போதும்.
இவ்வாறுதான் அல்லாஹ் ஒருவருக்கு “விலாயத்” எனும் ஒலித்தனம் வழங்குவதுமாகும்.
தாபன உரிமையாளரின் மொத்த அனுமதி பெற்றவன் தான் நினைத்த நேரம் நினைத்ததைச் செய்வதற்குப் போதும். அவன் ஒவ்வொரு வேலைக்கும் உரியவனிடம் அனுமதி பெறத் தேவையில்லை. இவ்வாறுதான் அல்லாஹ்விடமிருந்து “விலாயத்” அதிகாரம் பெற்ற மகான்களுமாவர்.
அவ்லியாஉகளில் ஒரு சாரார் உள்ளனர். அவர்கள் أَبْدَالْ “அப்தால்”கள் என்று அழைக்கப்படுவார்கள். இவர்கள் ஒரே நேரத்தில் பல இடங்களில் தமது இயற்கை உடலோடு தோற்றமளிக்கும் வல்லமை உள்ளவர்கள். இவ்வல்லமை بِالْأَوْلَى – விஷேடமாக أقطاب – “அக்தாப்” எனும் “குத்பு”மார்களுக்கும் உண்டு.
குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் ஒரு சமயம் ஒரே நேரத்தில் 40 இடங்களில் தோற்றமளித்துள்ளார்கள். வஹ்ஹாபீகள் இதை நம்ப மாட்டார்கள். அவர்களுக்கு நற்பாக்கியம் இல்லாமற் போனதற்கு நாம் என்ன செய்யலாம்? நக்குண்பதற்கும் “நஸீப்” வேணுமல்லவா?
ஒரு சமயம் குத்பு நாயகமவர்களின் சிஷ்யர்களில் நாற்பது பேர் அவர்களைத் தமது வீடுகளில் ஒரே நேரத்தில் நோன்பு திறப்பதற்கு அழைத்திருந்தனர். அவர்கள் நாற்பது சிஷ்யர்களின் வீடுகளுக்கும் ஒரே நேரத்தில் சென்று நோன்பு திறந்தார்கள்.
மறு நாள் சிஷ்யர்களில் ஒருவர் இன்னொரு சிஷ்யரைக் கண்ட போது நேற்றிரவு நாயகமவர்கள் எனது வீட்டில்தான் நோன்பு திறந்தார்கள் என்று சொன்னார். அதற்கு மற்றவர் என் வீட்டில்தானே திறந்தார்கள் என்றார். இருவருக்கும் இவ்விடயத்தில் தர்க்கம் ஏற்பட்டது. இருவரும் குத்பு நாயகமவர்களிடம் வந்து சொன்ன போது அவர்கள் ஏனைய 38 சிஷ்யர்களையும் இவ்விருவருடனும் ஒன்று சேர்த்து அல்லாஹ்வின் வலீமாருக்கு அவன் வழங்கிய வல்லமைகள் பற்றியும், “அப்தால்”களுக்கு அவன் வழங்கிய வல்லமைகள் பற்றியும் விபரமாக உரையாற்றிய பின் நாற்பது பேர்களின் வீடுகளிலும் நான்தான் நோன்பு திறந்தேன் என்றார்களாம்.
வலீமார் மனிதர்களாயினும் அவர்கள் அல்லாஹ்வின் “ஸிபாத்” தன்மைகள் பெற்றவர்களாவர். تَخَلَّقُوْا بِأَخْلَاقِ اللهِ “அல்லாஹ்வின் குணங்கள் கொண்டு நீங்களும் குணம் பெற்றுக் கொள்ளுங்கள்” என்ற பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் அறிவுரை பேணி வாழ்ந்து அவனின் தன்மைகள் பெற்ற மகான்களாவர்.
நபீமார், வலீமார் என்போர் ஒளி உணவு உட் கொண்டு ஒளி மயமானவர்களாவர். ஒளி என்பது எந்த உருவத்திலும் தோற்றும் வல்லமை உள்ளதாகும். வலீமாரும் குறிப்பாக “அப்தால்”கள் எவ் உருவத்திலும் தோற்றுவார்கள்.
மலக்கு – அமரர்களும் ஒளியால் படைக்கப்பட்டவர்களாதலால் இத்தன்மை அவர்களுக்கும் உண்டு. ஆயினும் மரியாதைக்காக அவர்கள் நாய், பன்றியின் தோற்றத்தில் தோற்றமாட்டார்கள் என்று நாம் சொல்ல வேண்டும். இதனால்தான் “மலக்” அல்லது “மலாயிகத்” அமரர்கள் என்ற சொல்லுக்கு வரை விலக்கணம் சொல்வோர் غَيْرَ الْكَلْبِ وَالْخِنْزِيْرِ நாய், பன்றியின் தோற்றத்தில் தவிர என்று சொல்லியுள்ளார்கள். இவ்வாறு சொல்லப்படுவது மரியாதை, “அதபு” ஒழுக்கம் என்பவற்றைக் கருத்திற் கொண்டேயாகும். ஆயினும் ஒளி என்பது எந்த ஒளியாயினும் அது பொதுவாக எல்லாத் தோற்றங்களிலும் – உருவங்களிலும் தோற்றும் வல்லமை உள்ளதேயாகும்.
அல்லாஹ்வும் இவ்வாறுதான். அவனின் திருப் பெயர்களில் “நூர்” ஒளி என்பதும் ஒன்றாகும். அவனின் ஒளிக்கும் மேலே நான் குறிப்பிட்ட விஷேட தன்மை உண்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இவ் அடிப்படையில் எல்லாப் படைப்புகளாயும் அவனே வெளியாகித் தோற்றினாலும் கூட மரியாதையைக் கருத்திற் கொண்டு நாய், பன்றியாக வெளியானவனும் அவன்தான் என்று அவ்விரண்டையும் குறிப்பாக்கிச் சொல்லாமல் இருப்பது சிறந்ததேயாகும். இதனால்தான் இவ்விரண்டையும் உள் வாங்கியதாக “எல்லாம் அவனே” என்று சொல்லப்படுகிறது.
#உலமாஉகளின் கவனத்திற்கு!
உலமாஉகளே! செயல்கள் எல்லாமே அல்லாஹ்வின் செயல்களாயிருந்தாலும் மேலே நான் சொன்ன “அதபு” ஒழுக்கம் என்பதைக் கருத்திற் கொண்டு சில செயல்கள் அல்லாஹ்வின் பக்கம் சேர்க்கப்படாமல் படைப்புகளின் பக்கம் சேர்க்கப்பட்டு திருக்குர்ஆன் வசனங்கள் அமைந்திருப்பதை உங்களின் சிந்தனைகளுக்கும், ஆய்வுகளுக்கும் தருகிறேன்.
அல்லாஹ் திருக்குர்ஆனில் وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِيْنِ நான் நோயுற்றால் அவன் சுகமாக்குவான் என்று கூறியுள்ளான். (திருக்குர்ஆன் – 26-80) இவ்வாறு சொன்னவர்கள் நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களாயிருந்தாலும் இது திருக்குர்ஆன் வசனமேயாகும். நம்பிச் செயற்பட வேண்டும்.
இத்திரு வசனத்தில் இரண்டு அம்சங்கள் உள்ளன. அவை நான் நோயுற்றால் என்பதும், அவன் சுகமாக்குவான் என்பதுமாகும்.
நோயைக் கொடுப்பதும், சுகத்தைக் கொடுப்பதும் இரண்டுமே அவன் செய்லகளாயிருக்கும் நிலையில் مَرِضْتُ நான் நோயுற்றால் என்ற செயல் படைப்பின் பக்கமும், فَهُوَ يَشْفِيْنِ அவன் சுகமாக்குவான் என்ற செயல் அல்லாஹ்வின் பக்கமும் சேர்த்துச் சொல்லப்பட்டுள்ளன. ஒரே அம்சத்தில் ஒரு செயல் படைப்பின் பக்கம் சேர்க்கப்பட்டும், இன்னொரு செயல் அல்லாஹ்வின் பக்கம் சேர்த்துச் சொல்லப்பட்டும் உள்ளன. எச் செயலாயினும் அது அல்லாஹ்வின் பக்கமே சேர்த்துச் சொல்லப்பட வேண்டும். ஏனெனில் اَلْأَفْعَالُ كُلُّهَا لِلّهِ செயல்கள் எல்லாமே அல்லாஹ்வுக்குரியவைதான் என்று “அகீதா” கொள்கை கூறிக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு செயலை மட்டும் அல்லாஹ்வின் பக்கமும், மற்றதை படைப்பின் பக்கமும் சேர்த்து சொல்லப்பட்டது “அதப்” ஒழுக்கம், மரியாதை என்பவற்றைக் கருத்திற் கொண்டேயாகும்.
ஏனெனில் நோய் கொடுத்தல், சுகம் கொடுத்தல் இரண்டிலும் நோய் கொடுத்தல் என்பது சுகம் கொடுத்தல் என்பதை விட சற்று வேதனையையும், நிம்மதியற்ற மன நிலையையும் ஏற்படுத்துவதால் அதைக் கருணையுள்ள, இரக்கமுள்ள இறைவன் பக்கம் சேர்க்காமல் “அதப்” ஒழுக்கம் பேணி படைப்பின் பக்கம் அதாவது நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் பக்கம் சேர்த்துச் சொல்லப்பட்டுள்ளது.
சுகம் கொடுத்தல் என்பது நோய் கொடுத்தலை விட எல்லா வகையிலும் சிறந்ததாயிருப்பதால் அதை அல்லாஹ்வின் பக்கம் சேர்த்துச் சொல்லப்பட்டுள்ளது.
இரண்டையுமே அல்லாஹ்வின் பக்கம் சேர்த்துச் சொல்வதாயின் وَإِذَا أَمْرَضَنِيْ فَهُوَ يَشْفِيْنِ அவன் என்னை நோயாளியாக்கினால் அவன்தான் சுகமாக்குவான் என்று சொல்ல வேண்டும். இவ்வாறு சொல்வதால் பிழை ஒன்றும் ஏற்படமாட்டாது. எனினும் நோயை அல்லாஹ் பக்கம் சேர்க்க வேண்டி ஏற்படும். இது “அதப்” ஒழுக்கமின்மையாகும்.
இதேபோன்றுதான் பின்வரும் வசனமுமாகும்.
مَا أَصَابَكَ مِنْ حَسَنَةٍ فَمِنَ اللَّهِ وَمَا أَصَابَكَ مِنْ سَيِّئَةٍ فَمِنْ نَفْسِكَ
உங்களுக்கு நல்லது ஏற்பட்டால் அது அல்லாஹ்வில் நின்றுமுள்ளதாகும். உங்களுக்கு கெட்டது ஏற்பட்டால் அது உங்களில் நின்றுமுள்ளதாகும். (திருக்குர்ஆன் 04-79)
ஒரு மனிதனுக்கு நல்லது ஏற்பட்டாலும், கெட்டது ஏற்பட்டாலும் இவ்விரண்டுமே அல்லாஹ்வில் நின்றுமுள்ளவை என்று நம்ப வேண்டும் என்பதே இஸ்லாமிய “அகீதா” கொள்கையாகும். இவ்வாறுதான் ஒரு விசுவாசி நம்ப வேண்டும்.
آمَنْتُ بِاللهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْقَدْرِ خَيْرِهِ وَشَرِّهِ مِنَ اللهِ تَعَالَى،
ஒரு விசுவாசி ஆறு விடயங்களை நம்பினவனாக இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால்தான் அவனை “முஃமின்” விசுவாசி என்று சொல்ல முடியும்.
அவை அல்லாஹ்வை நம்புதல், மலக்குகள் – அமரர்களை நம்புதல், வேதங்களை நம்புதல், றஸூல் – தூதர்களை நம்புதல், மறுமை நாளை நம்புதல், விதியில் நல்லதும், கெட்டதும் அல்லாஹ்வின் நின்றுமுள்ளவை என்று நம்புதல்.
இவ் ஆறு விடயங்களையும் நம்பினவன் மட்டும்தான் “முஃமின்” விசுவாசியாவான். இவ்வாறு நம்பினவனை மட்டுமே இஸ்லாம் விசுவாசி என்று ஏற்றுக் கொள்ளும்.
இங்கு நாம் ஆராய்ந்து அறிய வேண்டிய விடயம் நன்மை, தீமை இரண்டும் அல்லாஹ்வில் நின்றுமுள்ளவையா? அல்லது நன்மை மட்டும் அல்லாஹ்வில் நின்றும் உள்ளதா? என்பதேயாகும்.
“அகீதா” கொள்கையை பொறுத்த மட்டில் நான் அறிந்து நம்பியுள்ள விடயம் என்னவெனில் இரண்டும் அல்லாஹ்வில் நின்றுமுள்ளவை என்று நம்புதலே “ஈமான்” விசுவாசமாகும். நம்பிக்கையாகும்.
அல்லாஹ்வில் நின்றுமுள்ளவை என்றால் இதன் விளக்கம் என்ன என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். இது தொடர்பாக சற்று விளக்கமாக எழுத வேண்டுமாகையால் அடுத்த தொடரில் எழுதுவோம்.
இன்ஷா அல்லாஹ்!
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments