Sunday, May 19, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஒருவனின் “நஸீப்” தலைவிதி நல்லதாயினும், கெட்டதாயினும் அது நடந்தே தீரும். ஆயினும் கெட்ட விதியை அவனின்...

ஒருவனின் “நஸீப்” தலைவிதி நல்லதாயினும், கெட்டதாயினும் அது நடந்தே தீரும். ஆயினும் கெட்ட விதியை அவனின் “துஆ” பிரார்த்தனையாலும், அவன் வழங்கும் தான தர்மங்களாலும் நல்வழியாக மாற்ற முடியும். இவ்விரண்டும் அவனின் கெட்ட விதியை தட்டும்.

எனதூரைச் சேர்ந்த ஒருவர் என்னிடம் அவராக விரும்பி “பைஅத்” ஞான தீட்சை கேட்டார். அவர் ஒரு “ஸுன்னீ” என்பதும், இறைஞானத் தாகமுள்ளவர் என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும். ஆகையால் நான் சம்மதம் தெரிவித்து அவரை எனது “முரீத்” ஞான மாணவனாக, ஆன்மிக சிஷ்யனாக ஆக்கிக் கொண்டேன்.

இவர் எனது “முரீத்” சிஷ்யனாக பத்து வருடங்களுக்கு மேலாக இருந்துள்ளார்.

குறித்த பத்து வருடங்களில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இவர் எனக்கு மாறு செய்யவுமில்லை. என்னை மறக்கவுமில்லை. கண்ணியமாகவும், கௌரவமாகவும் நடந்து கொண்டார்.

இவர் அறபு நாடு ஒன்றில் வேலை செய்பவர். கைபேசி மூலம் தொடர்புள்ளவராகவே இருப்பார்.

நாட்டுக்கு வந்தால் முதலில் மனைவி மக்களைச் சந்திப்பார். இரண்டாவதாக என்னையே சந்திப்பார். வெறுங்கையோடு கூட வரமாட்டார். ஏதாவது எனது பாவனைக்குரிய சாமானோடுதான் வருவார்.

“வஹ்ததுல் வுஜூத்” ஞானம் என் மூலமே தெரிந்து கொண்டார். தெரிந்து கொண்டார் என்பதை விட அக்கடலில் மூழ்கியவர் என்றே சொல்ல வேண்டும்.

இவர் நல்லவர். பக்தி உள்ளவர். இவர் தனது உயிரை விட என்னை நேசிப்பவர். இவர் இவ்வாறு இருந்து வரும் காலத்தில் இவர் வேலை செய்கின்ற அறபு நாட்டிற்கு இலங்கையைச் சேர்ந்த ஒருவர் சென்றுள்ளார். இவர் “பைஅத்” கொடுக்கும் ஒரு ஷெய்கு ஆவார். அந்நாட்டில் வேலை செய்கின்ற இலங்கை நாட்டவர்களிற் பலர் இவர் தங்கியிருந்த இடத்திற்கு அவரைச் சந்திக்கச் சென்றுள்ளனர். எனது “முரீது”ம் அவர்களுடன் சென்றுள்ளார்.

அங்கு சென்றிருந்த “ஷெய்கு” இலங்கை நாட்டில் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர். “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தில் ஆழமானவர். அவருக்குள்ள அறபு மொழித் திறமையைவிட தமிழ் மொழியில் வித்துவான் என்றால் அது மிகையாகாது.

இவரை நான் நேரில் காண வேண்டுமென்று நீண்ட நாட்களாக முயற்சித்து ஒரு நாள் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. கொழும்பில் சந்திக்குமாறு ஒரு முகவரி தந்தார். அங்கு நானும், ஒரு டொக்டரும், இன்னொருவரும் சென்றோம். அவர் வீட்டின் வெளியே பாதையோரம் வந்து நின்று இரு கரங்களையும் உயர்த்தி எங்களை வரவேற்றார். உள்ளே சென்றோம்.

நான் “ஷெய்கு” அவரிடம், நீங்கள் துவிதம் பேசுகின்றீர்களா? அத்வைதம் பேசுகின்றீர்களா? என்று சொன்னால் போதும். விளக்கம் ஒன்றும் தேவையில்லை என்று சொன்னேன். நான் அத்வைதம் பேசுகின்றேன் என்றார். இது எனக்குப் போதும். கொள்கையில் நாம் ஒன்றுதான் என்று சொல்லிவிட்டு போவதற்கு விடை தாருங்கள் என்றேன். ஏதாவது குடித்துவிட்டுச் செல்லுங்கள் என்று கூறி கௌரவமாக உபசரித்தார். விடை பெற்று வந்தோம்.

இவர்தான் நான் குறிப்பிட்ட ஷெய்கு ஆவார். இவர்தான் எனது “முரீது” சிஷ்யன் அறபு நாட்டில் சந்தித்த ஷெய்கு ஆவார். எனது சிஷ்யன் இவரை சந்தித்த பின் என்னுடைய தொடர்பை முற்றாகத் துண்டித்துக் கொண்டார். அன்று முதல் இன்று வரை எனது சிஷ்யன் என்னுடன் தொடர்பு கொள்வதில்லை.

அறபு நாட்டில் வேலை செய்கின்ற எனதூர் வாசி ஒருவர் குறித்த எனது சிஷ்யன் அவரிடம் “பைஅத்” செய்து அவரிடம் “முரீத்” ஆகிவிட்டார் என்று அறிவித்திருந்தார். இதன் பிறகு நானும் எனது சிஷ்யனுடன் தொடர்பு கொள்ள விரும்பவில்லை. சுமார் ஐந்து வருடங்கள் கடந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

எனது சிஷ்யன் இன்னொரு ஷெய்கிடம் “பைஅத்” பெற்றது அவரின் விதியாகும். எனினும் அந்த சிஷ்யன் என்னிடம் ஒரு வார்த்தையேனும் அது பற்றிக் கூறாமல் இன்னொருவரிடம் “பைஅத்” பெறுவதையோ, பெற்றதையோ நான் ஆட்சேபிக்கவில்லை. ஏனெனில் “தரீகா” வழியில் இவ்வாறு நடைபெறுவது உண்டு. எனினும் அவர் என்னிடம் கூறிவிட்டு அவரிடமோ, வேறு எவரிடமோ “பைஅத்” பெற்றிருக்கலாம். இதில் குறை ஒன்றுமே இல்லை. ஏனெனில் “ஷெய்கு” ஆன்மிக குருமாரில் இரு பிரிவினர் உள்ளனர். இரு வகையினர் உள்ளனர். இவர்கள், شَيْخُ التَّرْبِيَةِ என்றும், شَيْخُ الْبَرَكَةِ என்றும் ஸூபிஸ – தரீகா வழியில் அழைக்கப்படுவார்கள்.

“ஷெய்குத்தர்பியா” என்பவர் சிஷ்யனை ஆன்மிக வழியில் வளர்ப்பவர் என்று அழைக்கப்படுவார். “ஷெய்குல் பறகா” என்பவர் “பறகத்” அருள் பெறுவதற்கான குரு என்று அழைக்கப்படுவார்.

“ஷெய்குத் தர்பியா” என்பவர் தனது بَصِيْرَةْ “பஸீறத்” அகப்பார்வை மூலம் – ஞானப் பார்வை மூலமே சிஷ்யனை ஆன்மிகத்தில் வளர்க்கும் ஆற்றல் பெற்றவராயிருப்பார். சுருங்கச் சொன்னால் “விலாயத்” ஒலித்தனம் பெற்றவராயிருப்பார்.

இவர் கடல் ஆமை போன்றவராவார். அதாவது கடலாமை கரையில் மட்டும் முட்டையிடும். கடலின் உள்ளே முட்டையிடாது. ஆயினும் அது கடலினுள் சென்று தனது பார்வையை கரையில் மண்ணுள் மறைந்துள்ள முட்டையில் செலுத்தி கருக்கட்ட வைக்கும். ஒரு ஆன்மிகக் கவிஞர் பின்வருமாறு கூறியுள்ளார்.

கடலாமை முட்டை கரைதனிலிட்டபின்
கடலில் இறங்கித் தியானம் செய்து
உடனே முட்டை பொரிக்கும் உவமை போல்
உள்ளமையாகுமாம் என் பிறவி

இவ் ஆமை போன்றவராகவே “ஷெய்குத் தர்பியா” சிஷ்யனை வளர்க்கும் “ஷெய்கு” இருப்பார். ஆமைக்கும், முட்டைக்கும் பல திரைகள் இருந்தாலும் கூட ஆமையின் கண் பார்வையிலுள்ள அபார சக்தி மூலம் அது கரையிலுள்ள முட்டைகளில் கருவை ஏற்படுத்துவது போல் குறிப்பிட்ட குரு மதீனா நகரில் இருந்தாலும், பக்தாதில் இருந்தாலும், அஜ்மீரில் இருந்தாலும், நாகூரில் இருந்தாலும் தனது சிஷ்யன் எங்கிருந்தாலும் அவர் தனது “பவர்” ஆன்மிகப் பார்வை மூலம் அவனை உயிராக்கிவிடுவார். “இன்ஸான் காமில்” – முழு மனிதனாகவும் ஆக்கிவிடுவார்.

இதற்குத் தகுதியுள்ளவர்தான் “ஷெய்குத் தர்பியா” ஆவார். இவரே “இன்ஸான் காமில்” முழு மனிதனாகவும் இருப்பார்.

“ஷெய்குல் பறகா” என்பவர் யாரெனில் ஷெய்குமார் பரம்பரையில் உள்ளவராயிருப்பார். அவர் இறைஞானம் தெரிந்தவராயும் இருப்பார். தெரியாதவராயும் இருப்பார். எனினும் “பைஅத்” வழங்கி “முரீத்” சிஷ்யர்களை வளர்ப்பவராக இருக்கமாட்டார். ஆயினும் பரம்பரையாக ஷெய்குமார் வழி வந்தவராக மட்டும் இருப்பார். இவரிடம் “பறகத்” அருளை நாடி “பைஅத்” பெறலாம். இவரும் குறைந்தபட்சம் “ஷரீஆ” தெரிந்தவராயும், “முரீத்” சிஷ்யர்களை கொள்கை வழி நடத்த தகுதியுள்ளவராயும் இருக்க வேண்டும்.

நான் முதலில் “பைஅத்” செய்தது “ஷாதுலிய்யா தரீகா”வின் ஷெய்குமார்களில் ஒருவரான, சுமார் 1960ம் ஆண்டளவில் இலங்கை நாட்டுக்கு வந்த மதிப்பிற்குரிய மர்ஹூம் அஸ்ஸெய்யித் டொக்டர் முஹம்மதுல் பாஸீ றஹிமஹுல்லாஹ் அவர்களிடமாகும். அதன் பிறகு அதி சங்கைக்குரிய ஞானமேதை, காமில் வலீ அப்துல் காதிர் ஆலிம் ஸித்தீகீ ஸூபீ றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் “பைஅத்” செய்து அவர்களின் “கலீபா”வாகவும் ஆக்கப்பட்டேன். அதன் பிறகு இறுதியாக அதி மரியாதைக்குரிய, நபீ வழித் தோன்றல், “கறாமத்” காரணக் கடல், அஸ்ஸெய்யித் அப்துர் றஷீத் கோயாத் தங்கள் மௌலானா வாப்பா அவர்களிடம் “பைஅத்” செய்தேன்.

நான் குறிப்பிடும் “முரீத்” என்னிடம் சொல்லிவிட்டு இன்னொருவரிடம் “பைஅத்” செய்திருக்கலாம். இவ்விடயத்தில் அவர் தவறிவிட்டார். எவர் மூலமேனும் சத்தியத்தை அறிந்து கொண்டாராயின் முதலில் அல்லாஹ்வுக்கு நன்றி சொல்பவனும், மகிழ்ச்சி அடைபவனும் நானாகவே இருப்பேன்.

இதனால்தான் ஒருவரின் விதியின் படியே எதுவும் நடக்கும் என்று தலைப்பில் குறிப்பிட்டிருந்தேன்.

பழம் நழுவிப் பாலில் விழுந்தால் அது மகிழ்ச்சிக்குரியதே! ஆனால் பாழடைந்த கிணற்றில் விழுந்தால், அப்ஸோஸ். அப்ஸோஸ்.

واحسرتا على ما فرطت فى جنب الله،

காதிமுல் கவ்மி,
மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments