Saturday, May 18, 2024
Homeஎழுத்தாக்கங்கள்அல்லாஹ் மிகப் பெரியவன்! அவனே யாவும் அறிந்தவன்!

அல்லாஹ் மிகப் பெரியவன்! அவனே யாவும் அறிந்தவன்!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
(நான் பேசியும், எழுதியும் வருகின்ற “வஹ்ததுல் வுஜூத்” மெய்ப் பொருள் ஒன்று (எல்லாம் அவனே) எனும் ஸூபிஸ தத்துவம் புரியாதவர்கள் எவராயினும் – அவர்கள் முப்தீகளாயினும், முல்லாக்களாயினும், உஸ்தாதுமார்களாயினும், “தரீகா”வுடைய ஷெய்குமார்களாயினும், பண்டிதர்களாயினும், பட்டதாரிகளாயினும், அல்லது எவர்களாயினும் குறித்த ஞானத்தை என்னிடம் கற்றுக் கொள்ள விரும்பினால் மட்டும் (விவாதம் செய்யும் நோக்கத்திற்காக அல்ல) முன்கூட்டியே என்னுடன் தொடர்பு கொண்டு நேர காலத்தைப் பெற்ற பின் வருமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
நிபந்தனைகள்:

கற்றுக் கொள்ள வர விரும்புவோருக்கான நிபந்தனைகள்.
 
01. ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை நூறு வீதமும் ஏற்றுக் கொண்டவர்களாயிருத்தல்.
 
02. உண்மையை – சரியானதை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் உள்ளவர்களாயிருத்தல்.
 
03. வருபவர்கள் என்னிடம் குறைந்தது மூன்று நாட்கள் தங்கியிருத்தல்.
 
04. வருபவர்கள் 10 பேர்களுக்கு மேற்படாத குழுவாக இருத்தல்.
 
வருபவர்களுக்கு மூன்று வேளை உணவு, மற்றும் தேனீர், குடிபானம், தங்குமிட வசதிகள் இலவசம்.
 
அன்புள்ள சகோதரர்களே!
 
“ஹுலூல் – இத்திஹாத்” என்று இருவகையான கொள்கைகள் உள்ளன. இவ்விரு கொள்கைகளும் “குப்ர்” அல்லது “ஷிர்க்” என்பதில் சந்தேகமே இல்லை.
“ஹுலூல்” என்றால் இறங்குதல் என்று பொருள். அல்லாஹ் அவனின் படைப்பில் இறங்குகிறான் என்று நம்புதல் “ஹுலூல்” கொள்கை எனப்படும். இவ்வாறு நம்புதல் “குப்ர்” அல்லது “ஷிர்க்” எனப்படும். இது வழிகேடான கொள்கையாகும். இது ஏன் வழிகேடானது என்பதற்கான விளக்கம் பின்னால் வரும்.
 
“இத்திஹாத்” என்றால் இரண்டு வஸ்துகள் ஒன்றாகக் கலத்தல் என்று பொருள். அல்லாஹ் அவனின் படைப்புடன் கலந்துள்ளான், அதோடு கலக்கின்றான் என்று நம்புதல். இவ்வாறு நம்புதலும் “குப்ர்” அல்லது “ஷிர்க்” என்றுதான் சொல்லப்படும்.
“ஹுலூல்” என்றால் இறங்குதல் என்று பொருள் சொன்னேன். இதற்கு வண்டையும், மலரையும் உதாரணமாகக் கொள்ளலாம். ஒரு வண்டு தேன் சுவைப்பதற்காக ஒரு மலரில் வந்திறங்குவது போல் அல்லாஹ் ஒரு படைப்பில் வந்து இறங்குகிறான் என்று நம்புவது போன்று. இவ்வாறுதான் ஒரு படைப்பில் வந்து இறங்குகிறான் என்ற நம்புதல் பிழையாகும். அதாவது இணை வைத்தலாகும்.
 
“இத்திஹாத்” என்றால் இரண்டு வஸ்துகள் ஒன்றாகக் கலத்தல் என்று பொருள் சொன்னேன். அதற்கு சீனியையும், நீரையும் உதாரணமாகக் கொள்ளலாம். ஒரு “கப்”பில் – குவளையில் நீரை எடுத்து அதில் சீனியைக் கலத்தல் போன்று. இவ்வாறு செய்தால் இரண்டும் கலந்து ஒன்றாகிவிடும். இதேபோல் அல்லாஹ் படைப்புடன் கலந்து ஒன்றாகிவிடுதல் என்று நம்புதல் பிழையாகும். அதாவது இணை வைத்தலாகும்.
 
மேற்கண்ட இவ்விரு வகையான கொள்கையும் “ஷிர்க்” இணை வைத்தலாகும். இவ்வாறு நம்புவோரை இஸ்லாம் “முஷ்ரிகீன்” பட்டியலிலேயே சேர்க்கும். நாம் யாரையெல்லாம் காபிர், முஷ்ரிக் என்று சொல்கிறோமோ அவர்கள் அனைவரும் இவ்வாறு நம்புபவர்களேயாவர்.
ஒரு முஸ்லிமுக்குப் பிறந்த ஒருவனாயினும் அவன் மேற்கண்டவாறு அல்லாஹ்வை நம்பியிருந்தானாயின் அவன் முஸ்லிம் பெயரில் இருந்தாலும் அவன் இணை வைத்தவனேயாவான்.
 
இவ்வாறு நம்பினவன் “முஷ்ரிக்” ஆவதற்கான காரணம் என்ன என்பதை இங்கு விளக்கி வைக்கிறேன்.
இறங்குதல் என்பதற்கு இரண்டு வஸ்துக்கள் வேண்டும். இரண்டு வஸ்துக்கள் இல்லையென்றால் இறங்குதல் என்பதற்கே இடமில்லாமற் போய்விடும். ஒன்று இறங்கும் வஸ்து. இரண்டு இறங்குமிடம்.
அல்லாஹ் படைப்பில் இறங்குகிறான் என்று வைத்துக் கொண்டால் படைப்பு என்பது அல்லாஹ்வுக்கு வேறான ஒரு வஸ்து என்பது விளங்குகிறது. இங்கு நாம் சிந்திக்க வேண்டிய விடயம் என்னவெனில் படைப்பு அல்லாஹ்வுக்கு வேறான ஒன்றெனில் அது அல்லாஹ் போல் சுயமாக, தனக்குத் தானாக உண்டானதா? அல்லது அல்லாஹ்வால் படைக்கப்பட்டதா? என்று சிந்திக்க வேண்டும். அது அல்லாஹ் போல் தனக்குத் தானாக, சுயமானதாக உண்டானதுதான் என்றால் சுயமாக உண்டாகும் விடயத்தில் அல்லாஹ் போல் இன்னுமொன்று உண்டு என்று நம்ப வேண்டும். இவ்வாறு நம்புதல் “ஷிர்க்” எனும் இணை வைத்தலை ஏற்படுத்திவிடும். ஆகையால் அவ்வாறு கொள்ள முடியாது.
 
எனவே, படைப்பு என்பது சுயமாக உண்டானதல்ல என்றால் அல்லாஹ் எதிலிருந்து அதைப் படைத்தான் என்று சிந்திக்க வேண்டும். இது பற்றிச் சிந்திக்கும் போது அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ள பின்வரும் திரு வசனத்தை சிந்தையில் எடுத்து சிந்திக்க வேண்டும்.
إِنَّمَا أَمْرُهُ إِذَا أَرَادَ شَيْئًا أَنْ يَقُولَ لَهُ كُنْ فَيَكُونُ
அல்லாஹ் ஏதாவதொரு வஸ்தை படைக்க நாடினால் அவன் நாடிய வஸ்துவுக்கு “குன்” நீ ஆகு என்று சொல்வான். உடனே அது ஆகிவிடும். “நீ ஆகு” என்று சொல்வதே அவன் கட்டளை “அம்று” ஆகும்.
(திருக்குர்ஆன் 36-82)
 
இத்திரு வசனத்தில் ضَمِيْرْ என்று அறபு இலக்கணத்தில் சொல்லப்படுகின்ற “பிரதிப் பெயர்கள்” ஆறு உள்ளன. விபரமாக எழுதுகிறேன். கவனித்து வாசிக்கவும்.
ஒன்று – إِنَّمَا أَمْرُهُ அவனின் கட்டளையாகிறது என்பது இதன் பொருள். இதில் “ஹூ” என்று ஒரு எழுத்து வந்துள்ளது. இது அல்லாஹ்வையே குறிக்கும். இதுவே “ழமீர்” பிரதிப் பெயர் என்று சொல்லப்படுகிறது.
இரண்டு – إِذَا أَرَادَ شَيْئًا அவன் ஒரு வஸ்தை நாடினால் – படைக்க நாடினால் என்பது இதன் பொருள். இதில் வந்துள்ள أَرَادَ நாடினான் என்ற சொல்லில் ஒரு ضَمِيْرْ பிரதிப் பெயர் மறைந்துள்ளது. அது “ஹுவ” என்றிருக்கும். அது அல்லாஹ்வைக் குறிக்கும். ஏனெனில் أَرَادَ என்ற சொல்லின் பொருள் அவன் நாடினால் என்பதாகும். இது மறைந்த பிரதிப் பெயர் என்று சொல்லப்படும்.
 
மூன்று – أَنْ يَقُوْلَ என்றால் அவன் சொல்வதாகும் என்று பொருள். يَقُوْلَ என்ற சொல்லில் ஒரு பிரதிப் பெயர் மறைந்துள்ளது. அது அல்லாஹ்வைக் குறிக்கும். அது “ஹுவ” என்றிருக்கும்.
நான்கு – لَهُ அதற்கு என்று பொருள் வரும். இதில் “ஹு” என்பது பிரதிப் பெயர். இது முன்னால் கூறப்பட்ட شَيْئًا ஒரு வஸ்து என்பதைக் குறிக்கும்.
ஐந்து – كُنْ “நீ ஆகு” என்று இதற்குப் பொருள். இதில் أَنْتَ – நீ என்ற பொருளுக்குரிய ஒரு பிரதிப் பெயர் உண்டு. இது முன்னால் கூறப்பட்ட شَيْئًا என்பதைக் குறிக்கும்.
ஆறு – فَيَكُوْنُ அது ஆகிவிடும். இதில் “ஹுவ” என்ற பிரதிப் பெயர் மறைந்துள்ளது. இது முன்னால் கூறப்பட்ட شَيْئًا என்பதைக் குறிக்கும்.
 
இச்சிறிய வசனத்தில் மறைந்தும், மறையாமலும் மொத்தம் ஆறு பிரதிப் பெயர்கள் உள்ளன. அவற்றில் ஐந்து “ஹு” என்ற பிரதிப் பெயர்கள். ஒன்று மட்டும் أَنْتَ என்ற பிரதிப் பெயராகும்.
இத்திரு வசனத்தின் பொதுவான, மொத்தமான கருத்து என்னவெனில் அல்லாஹ் ஒரு வஸ்தைப் படைக்க நாடினால் அதற்கு – அந்த வஸ்துவுக்கு நீ ஆகு என்று சொல்வான். அது அவன் நாடிய பொருளாக ஆகிவிடும் என்பதாகும்.
 
இத்திரு வசனத்தின் மூலம் நாம் விளங்க வேண்டிய விடயம் என்னவெனில், அல்லாஹ் ஒரு வஸ்தைப் படைக்க நாடும் போது அந்த வஸ்து இல்லாமலேயே இருந்தது. அதாவது படைக்கப்படவில்லை. ஆயினும் அல்லாஹ்வின் நாட்டத்தில் இருந்தது. அவன் தனது நாட்டத்திலிருந்த அந்த வஸ்துவுக்கு “நீ ஆகு” என்றான் அவன் நாடிய வஸ்தாக அந்த நாட்டம் ஆனது. படைப்பாக வெளி வந்தது. அது படைக்கப்படுமுன் அந்த வஸ்து அவன் நாட்டத்தில் இருந்ததென்றால் அந்த வஸ்து அவ்வேளை எங்கே இருந்தது? அவனில்தானே இருந்தது. அது அவனின் உள்ளமையில் இருந்த நேரம் அது அவனின் “தாத்” தானாக இருந்ததா? அல்லது அதற்கு வேறாக – அவனை விட்டும் பிரிந்ததாக இருந்ததா? என்று நாம் ஆய்வு செய்தால் அது அவனின் “தாத்” தானானதாகவே இருந்தது என்று முடிவு செய்வதைத் தவிர வேறு எந்த முடிவும் செய்யவே முடியாது.
ஏனெனில் அல்லாஹ் வெளிப்படுத்த நாடிய வஸ்துக்கள் எவையாயினும் அவற்றை வெளிப்படுத்து முன் அவை اَلشُّؤُوْنُ الذَّاتِيَّةْ “தாத்தோடுள்ள கருமங்கள்” என்றுதான் ஸூபீ மகான்களால் சொல்லப்பட்டு வருகின்றன. இது اصطلاحات الصوفيّة “இஸ்திலாஹாதுஸ் ஸூபிய்யா” ஸூபீகளின் கலைச் சொற்களைச் சேர்ந்ததாகும்.
 
இதை ஓர் உதாரணம் மூலம் தெளிவு படுத்தலாம். மிக உன்னிப்பாக ஆய்வு செய்ய வேண்டும்.
ஒரு “போல் பென்”னை எடுத்துக் கொள்வோம். அதனுள் மை இருக்கிறது. அந்த மையை அல்லாஹ்வின் “தாத்” என்று நாம் கற்பனை செய்து கொள்வோம். அந்த மையில் எத்தனையோ எழுத்துக்கள் அடங்கியுள்ளன. அவ் எழுத்துக்கள் அந்த மை தானானவையாக இருக்குமேயன்றி அந்த மைக்கு வேறானவையாக இருக்கமாட்டாது. யாராவது வேறானவையாக இருக்குமென்று சொன்னால் அதைப் புத்தி ஏற்றுக் கொள்ளவும் மாட்டாது. அந்த மையில் அடங்கியுள்ள எழுத்துக்கள் போன்றவையே அல்லாஹ்வின் “தாத்”தில் அடங்கியுள்ள படைப்புக்களாகும். அந்த மை வேறாகவும், எழுத்துக்கள் வேறாகவும் பிரிந்திருக்காமல் மையும் எழுத்தும் ஒன்றாயிருப்பது போல் அல்லாஹ்வின் “தாத்”தும் – உள்ளமையும் அதில் அடங்கியுள்ள அனைத்துப் படைப்புக்களும் ஒன்றாகவே இருக்கும்.
 
பேனாவில் உள்ள மையில் இலட்சக் கணக்கான எழுத்துக்கள் அடங்கியுள்ளது போல் அல்லாஹ்வின் “தாத்”தில் கோடிக்கணக்கான படைப்புக்கள் அடங்கியிருக்கும். எழுத்துக்கள் வெளியாகாமல் இருக்கும் வரை மையும், எழுத்துக்களும் ஒன்றாகவே இருக்கும். எழுத்துக்கள் மை தானானவைதான் என்று சொல்வதற்கு சாத்தியமானதாகவே இருக்கும். இவ்வாறுதான் அல்லாஹ்வின் “தாத்”தும் அதில் அடங்கியுள்ள படைப்புக்களுமாகும். படைப்புக்கள் “தாத்”துதான் என்று சொல்வதற்கு சாத்தியமானதாகவே இருக்கும்.
பேனாவை தாளில் வைத்து ஓர் எழுத்து எழுதினால் – அந்த மையானது ஓர் எழுத்தின் வடிவம் – தோற்றம் பெற்றுவிட்டால் அத் தோற்றத்துக்குரிய பெயரை அதற்குச் சொல்வோம். அ, இ, மு என்றும் ABC என்றும் சொல்வோம். இதேபோல் அல்லாஹ்வின் “தாத்”தில் அடங்கியிருந்த படைப்புக்களில் ஒன்று வெளியானால் அதன் தோற்றத்திற்கேற்றவாறு அதற்குப் பெயர் சொல்வோம். கடல், ஆறு, மலை என்று சொல்வோம்.
 
எவ்வாறு தோற்றத்திற்கேற்றவாறு பெயர்கள் சொன்னாலும் எழுத்துக்கள் மை தானானவையாக இருப்பது போல் படைப்புக்களும் அல்லாஹ்வின் “தாத்” தானானவையாகவே இருக்கும்.
எழுத்துக்கள் மையின் “தஜல்லீ” வெளிப்பாடு என்று சொல்வது போல் படைப்பு “தாத்”தின் வெளிப்பாடு என்று சொல்வோம்.
எவ்வாறு மையானது எழுத்துக்களாக வெளியானதோ அந் நேரத்திலிருந்து அவற்றுக்கு اَلشُّؤُوْنُ الْخَارِجِيَّةْ “அஷ்ஷுஊனுல் காரிஜிய்யா” என்று சொல்வோம்.
 
மை எழுத்துக்களாக வெளியானதால் மை வேறு, எழுத்து வேறு என்று சொல்லமாட்டோம். இதேபோல் அல்லாஹ்வின் “தாத்” படைப்பாக வெளியானதால் “தாத்” வேறு, படைப்பு வேறு என்றும் சொல்லமாட்டோம். சொல்லவும் முடியாது.
இதுவரை நான் எழுதிய விபரங்கள் மூலம் அல்லாஹ்வின் “தாத்” ஒன்றுதான் பல ஆலங்களாகவும், பல வஸ்துக்களாகவும், பல கோள்களாகவும், பல கோலங்களாகவும் வெளியாகியுள்ளது.
فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ
நீங்கள் எங்கு நோக்கினாலும் நோக்கப்பட்டது எதார்த்தத்தில் அல்லாஹ்வின் “தாத்” அல்லது “வுஜூத்” உள்ளமையேயன்றி வேறொன்றில்லை.
 
தொடரும்…
 
அடுத்த தொடர் “மை”க்கும், எழுத்துக்களுக்குமுள்ள தொடர்பும், அல்லாஹ்வின் “தாத்”திற்கும், படைப்புக்குமுள்ள தொடர்பாகும்.
குறிப்பு: எழுத்து மூலம் நான் கூறும் விளக்கத்தை விட பேச்சு மூலம் நான் கூறும் விளக்கம் விளங்குவதற்கு மிக எளிதானதாயிருக்கும். ஆகையால் தெளிவான விளக்கம் பெற விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொண்டால் பழைய, புதிய பயான்கள் சுமார் 900 பயான்கள் அடங்கிய USB pen Drives கள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்படும்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments