Sunday, May 19, 2024
Homeஎழுத்தாக்கங்கள்நான் கற்றதை மற்றவர்களுக்குச் சொல்வது என் கடமை! மற்றவர்கள் அதை ஏற்றுக் கொள்வதும், மறுப்பதும் அவர்களின்...

நான் கற்றதை மற்றவர்களுக்குச் சொல்வது என் கடமை! மற்றவர்கள் அதை ஏற்றுக் கொள்வதும், மறுப்பதும் அவர்களின் உரிமை!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
முஸ்லிம்கள் “அகீதா” இறையியற் கொள்கையில் பின்பற்ற வேண்டியவர்கள், இஸ்லாமிய அறிஞர்களில் அதிகமானவர்களால் சரி காணப்பட்ட இமாம் அபுல் ஹஸன் அல் அஷ்அரீ றஹிமஹுல்லாஹ் அவர்களும், கொள்கையில் அவர்களைச் சார்ந்தவர்களும், மற்றும் அபூ மன்ஸூறுல் மாதுரீதீ அவர்களும், கொள்கையில் அவர்களைச் சார்ந்தவர்களுமேயாவர். றஹிமஹுமுல்லாஹ்.
 
முஸ்லிம்கள் “மத்ஹப்” அடிப்படையில் பின்பற்ற வேண்டியவர்கள், இஸ்லாமிய அறிஞர்களில் அதிகமானவர்களால் சரி காணப்பட்ட இமாம் ஷாபிஈ, இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல், இமாம் அபூ ஹனீபா, இமாம் மாலிக் ஆகியோரும், இவர்களைச் சார்ந்தவர்களுமேயாவர். றஹிமஹுமுல்லாஹ்.
 

முஸ்லிம்கள் “ஹதீது” நபீ மொழி அடிப்படையில் பின்பற்ற வேண்டிய, இஸ்லாமிய அறிஞர்களில் அதிகமானவர்களால் சரி காணப்பட்ட இமாம் புகாரீ, இமாம் முஸ்லிம், இமாம் துர்முதீ, இமாம் அபூ தாவூத், இமாம் நஸயீ, இமாம் இப்னு மாஜஹ் ஆகியோரும், இவர்களைச் சார்ந்தவர்களுமேயாவர். றஹிமஹுமுல்லாஹ்.
முஸ்லிம்கள் “தஸவ்வுப்” ஸூபிஸம் என்ற அடிப்படையில் பின்பற்ற வேண்டிய, இஸ்லாமிய அறிஞர்களில் அதிகமானவர்களால் சரி காணப்பட்ட இமாம் “ஸெய்யிதுத் தாயிபா” ஜுனைத் அல் பக்தாதீ, இமாம் ஙஸ்ஸாலீ, இமாம் குஷைரீ, இமாம் இப்னு அறபீ, இமாம் அப்துல் கரீம் அல் ஜீலீ, மற்றும் தரீகாக்களின் தாபகர்களான முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ, அபுல் ஹஸன் அலீ ஷாதுலீ, மற்றும் இவர்களின் கொள்கை வழி சார்ந்த “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை ஏற்றுக் கொண்டவர்களுமேயாவர்.
நான் மேலே எழுதியவற்றுக்கு முரணான கொள்கையுள்ளவர்களும் முஸ்லிம்களில் உள்ளனர்.
 
“அஹ்லுல் குர்ஆன்” என்றும், “அஹ்லுல் ஹதீத்” என்றும், “அஹ்லுல் பாதின்” என்றும், “அஹ்லுள்ளாஹிர்” என்றும் பல்வேறு கொள்கையுள்ளவர்களும் முஸ்லிம்களில் உள்ளனர்.
அவர்கள் தொடர்பாக நாம் ஆராய முற்பட்டால் பல வருடங்கள் ஆராய வேண்டி வரும். அது எமக்கு அவசியமில்லை.
 
நாம் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை வாதிகளாகையால் நாம் கொள்கையில் பின்பற்ற வேண்டிய அபுல் ஹஸன் அல்அஷ்அரீ இமாம் பற்றி சற்று ஆராய்வோம்.
இன்று ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைவாதிகள் எவரிடம் நீங்கள், “கொள்கையில் – “அகீதா”வில் எந்த இமாமை பின்பற்றுகிறீர்கள்? என்று கேட்டாலும் அவர் இமாம் அபுல் ஹஸன் அஷ்அரீ அவர்களை என்றே சொல்வார். நீங்கள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிடம் இப்படியொரு கேள்வியைக் கேட்டாலும் கூட அவர்களும் இவ்வாறே சொல்வார்கள். எந்த ஒரு மௌலவீயாயினும், உஸ்தாதாயினும் அவர்களும் இவ்வாறுதான் சொல்வார்கள்.
இதற்கு மாறாக யாராவது சொன்னால் அவர் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையுள்ளவராக இருக்கமாட்டார்.
 
இமாம் அஷ்அரீ அவர்களின் கொள்கை என்ன?
கொள்கையில் இரண்டு வகை உண்டு. ஒன்று – اَلْوُجُوْدُ عَيْنُ الْمَوْجُوْدِ என்றும், மற்றது اَلْوُجُوْدُ غَيْرُ الْمَوْجُوْدِ என்றும் சொல்லப்படும். “வுஜூத்” உள்ளமை என்றாலும், “தாத்” என்றாலும் இரண்டும் ஒன்றென்பதே ஸூபீகளின் தீர்க்கமான முடிவு.
 
اَلْوُجُوْدُ عَيْنُ الْمَوْجُوْدِ
என்றால் “உள்ளமை என்பது படைப்பு தானானது” என்ற கொள்கை, மற்றது اَلْوُجُوْدُ غَيْرُ الْمَوْجُوْدِ என்றால் “உள்ளமை வேறு, படைப்பு வேறு” என்ற கொள்கை.
இவ்விரு கொள்கைகளிலும் இமாம் அபுல் ஹஸன் அல்அஷ்அரீ என்ற இமாம் – கொள்கையில் நாம் பின்பற்ற வேண்டிய இமாம் அவர்கள் اَلْوُجُوْدُ عَيْنُ الْمَوْجُوْدِ “உள்ளமை என்பது படைப்பு தானானதேயன்றி, அதற்கு வேறானதல்ல” என்ற கொள்கையுள்ளவர்களாவர்.
 
உலகில் தோன்றிய நபீமார், றசூல்மார், நபீ தோழர்கள், மற்றும் அவ்லியாஉகள், ஸூபீ மகான்கள், தரீகாக்களின் ஷெய்குமார் அனைவரும் இதே கொள்கையுள்ளவர்களாகவே இருந்துள்ளனர். இதற்கு மாறான கொள்கையுள்ளவர்கள் சரியான ஆய்வின்படி விசுவாசிகள் அல்லர். அதாவது “குப்ர்” நிராகரிப்புள்ள காபிர்களேயாவர்.
 
அதிசயம் என்னவெனில் தம்மை, “அஷ்அரிய்யா” கொள்கைவாதிகள் என்றும், இமாம் அபுல் ஹஸன் அவர்களைப் பின்பற்றுகிறவர்கள் என்றும், இப்னு அறபீ, ஙஸ்ஸாலீ, அப்துல் வஹ்ஹாப் ஷஃறானீ போன்றவர்கள் சரியான கொள்கையுள்ளவர்கள் என்றும் சொல்லி வருகின்றவர்கள் அவர்களின் கொள்கைக்கு முரணான الوجود غير الموجود உள்ளமை என்பது படைப்புக்கு வேறானதென்று நம்பியும், சொல்லியும் வருவதேயாகும். இது மாபெரும் அதிசயம். இவர்கள் கொள்கையறியாப் பிணங்கள். வெறும் வெங்காயங்கள். உப்பில்லாப் பண்டங்கள்.
 
இதற்கு உதாரணமாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவைச் சேர்ந்தவர்களையும், இன்னும் பல உலமாஉகளையும், பொது மக்களில் நூற்றுக்கு தொண்ணூறு வீதமானவர்களையும் குறிப்பிடலாம்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா எனக்கு எதிராக வெளியிட்ட பத்வாவில் – என்னிடமுள்ள பிரதி 02ம், 03ம் பக்கங்களில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
 
أمّا بعد، فخلاصة الجواب عمّا فى السؤال المذكور ما يأتي قريبا إن شاء الله تعالى كما عليه الأئمّة الأربعة أبو حنيفة ومالك والشّافعيّ وأحمد ومن تبعهم كأبي منصور الماتريدي وأبي الحسن الأشعري وأبي منصور البغداديّ والغزّالي والنّووي وابن عربي والشّعراني وابن حجر والسيوطي وغيرهم ممّن جمع بين المنقول والمعقول وبين الشّريعة والطريقة والحقيقة والمعرفة رضي الله عنهم،
அறபு வசனங்களின் சாராம்சத்தை மட்டும் எழுதுகிறேன். உலமா சபை எனக்கு எதிராக வழங்கிய “பத்வா” சரியென்பதற்கு 13 இமாம்களின் பெயர்களை ஆதாரங்களாக கூறியுள்ளார்கள்.
 
இவர்கள் அனைவரும், குறிப்பாக கொள்கையின் இமாம் என்று கூறப்படுகின்ற இமாம் அபுல் ஹஸன் அஷ்அரீ, மற்றும் இமாம் ஙஸ்ஸாலீ இமாம் இப்னு அறபீ ஆகியோரும் اَلْوُجُوْدُ عَيْنُ الْمَوْجُوْدِ உள்ளமை என்பது படைப்பு தானானதேயாகும் என்று தமது நூல்களில் பல இடங்களில் பகிரங்கமாகவும், தெளிவாகவும் சொன்னவர்களேயாவர். அவற்றில் சிலர் கூறிய ஆதாரங்களை இங்கு குறிப்பிடுகிறேன்.
 
இமாம் அபுல் ஹஸன் அஷ்அரீ
قال ابن العطّار فى حاشيتِه على شرح الجلال المحلّي على جمع الجوامع ‘ والوجودُ عند الأشعريّ عينُ الموجود ‘ (4-471)
وقد اختُلِف فى الوجود هل هو عينُ الموجود أو غيرُه، كما سيأتي، فقال الأشعريّ الوجودُ عينُ الموجود، وقد اختلَف العلماء فى فهم المراد من عبارة الأشعريّ، فبعضُهم أبقاها على ظاهرها، (تحفة المريد شرح جوهرة التوحيد، للشّيخ إبراهيم وللشّيخ برهان الدين، ص 63، تعريف الوجود)
இமாம் இப்னுல் அத்தார் அவர்கள் இமாம் ஜலாலுத்தீன் அல்மஹல்லீ அவர்கள் “ஜம்உல் ஜவாமிஇ” எனும் நூலின் விரிவுரை நூலின் “ஹாஷியா”வில் பின்வருமாறு சொல்லியுள்ளார்கள்.
 
اَلْوُجُوْدُ عَيْنُ الْمَوْجُوْدِ
அல்லாஹ்வின் உள்ளமை என்பது படைப்பு தானானதே.
ஆதாரம்: ஹாஷியா இப்னில் அத்தார்.
பாகம், 04, பக்கம் 471
உள்ளமை என்பது படைப்பு தானானதா? அல்லது வேறானதா? என்பதில் அறிஞர்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. இமாம் அபுல் ஹஸன் அஷ்அரீ றஹிமஹுல்லாஹ் அவர்கள், اَلْوُجُوْدُ عَيْنُ الْمَوْجُوْدِ – அல்லாஹ்வின் உள்ளமை என்பது படைப்பு தானானதே என்று கூறியுள்ளார்கள்.
 
அஷ்அரீ அவர்களின் இப்பேச்சின் கருத்து என்ன என்பதில் அறிஞர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. சிலர் அவர்களின் இவ்வசனத்தின் மேல்வாரியான பொருள் கொண்டு அல்லாஹ்வின் படைப்புகள் அவனின் உள்ளமை தானானதே என்று சொல்லியுள்ளார்கள். இன்னும் சில குறை குடங்கள் அதற்கு வேறு விதமாக வலிந்துரை கொண்டு அவனின் உள்ளமை படைப்புகளுக்கு வேறானதென்று இமாம் அஷ்அரிய்யின் கருத்தை திசை திருப்புகிறார்கள்.
 
இவர்கள் யாரெனில் அஷ்அரீ அவர்களின் اَلْوُجُوْدُ عَيْنُ الْمَوْجُوْدِ உள்ளமை படைப்பு தானானது என்ற கூற்றைச் சொல்லப் பயந்தவர்களாவர். இவர்கள் يُحَرِّفُوْنَ الْكَلِمَ عَنْ مَوَاضِعِهَا திருக்குர்ஆனில் வருகின்ற சில சொற்களுக்கு அவற்றுக்குரிய பொருள் கொடுக்கப் பயந்து வேறு பொருள் கொடுப்பவர்கள் என்று இகழப்பட்டவர்கள்.
ஒரு சொல்லுக்கு வெளிப்படையான பொருள் கொள்வதால் எந்த ஒரு சிக்கலும் ஏற்படாதென்றிருந்தால் வெளிப்படையான பொருள் கொள்வது தவறாகமாட்டாது. இதற்கு மாறாக அச் சொல்லுக்கு வெளிப்படையான பொருள் கொள்வதால் ஏதாவது சிக்கல் ஏற்படுமென்றிருந்தால் மட்டுமே அதற்கு வேறு பொருள் கொள்ள வேண்டும். இதுவே நியாயம்.
 
அஷ்அரீ அவர்களின் மேற்கண்ட வசனத்திற்கு மேல்வாரியான பொருள் கொண்டால் படைப்புகள் எல்லாம் அவன்தான் – அல்லாஹ்தான் என்று பொருள் வரும். இவ்வாறு பொருள் வருவது எதார்த்தத்தின் படி சரியானதேயன்றி பிழையானதல்ல. பயப்படுபவர்களுக்காக நாம் பொருளை மாற்ற மாட்டோம்.
மேலே எழுதிய அஷ்அரிய்யின் வசனம் மூலம் اَلْوُجُوْدُ عَيْنُ الْمَوْجُوْدِ அல்லாஹ்வின் உள்ளமை படைப்பு தானானதென்று சொன்னவர்களில் அஷ்அரீ அவர்களும் ஒருவர் என்பது விளங்கப்படுகிறது.
 
இமாம் அஷ்அரீ அவர்கள் ஹிஜ்ரீ 260 அல்லது 270ல் “பஸறா”வில் பிறந்து 324ல் “பக்தாத்” நகரில் மறைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் ஏனைய வரலாற்றுக் குறிப்புகள் தேவையானோர் எம்முடன் தொடர்பு கொள்ளலாம்.
 
தொடரும்….
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments