Thursday, May 2, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஸூபிஸ ஞானம் என்றால் என்ன?

ஸூபிஸ ஞானம் என்றால் என்ன?

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
“அத்தஸவ்வுப்” ஸூபிஸம் என்பதற்கு سيد الطائفة الصوفيّة ஸூபிஸ சமூகத்தின் தலைவர் அஷ்ஷெய்கு ஜுனைதுல் பக்தாதீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ள வரைவிலக்கணத்தை இங்கு எழுதுகிறேன்.
 
اَلتَّصَوُّفُ أَنْ يُمِيْتَكَ الْحَقُّ عَنْكَ وَيُحْيِيَكَ بِهِ،
“இறைவன் உன்னை விட்டும் உன்னை “மவ்த்” ஆக்கி – மரணிக்கச் செய்து அவனைக் கொண்டு உன்னை உயிராக்குவதாகும்” என்று கூறியுள்ளார்கள்.
இந்த மகானின் இவ் வரைவிலக்கணம் ஒன்று மட்டுமே ஸூபிஸத்தின் உச்சியைத் தொட்டுக் காட்டப் போதும்.

இவர்கள் இரண்டு அம்சங்களை உள் வாங்கிய நிலையில் தங்களின் வரைவிலக்கணத்தை அமைத்துள்ளார்கள். ஒன்று – அல்லாஹ் உன்னை விட்டும் உன்னை மரணிக்கச் செய்தல். இரண்டு அவனைக் கொண்டு உன்னை உயிர் வாழச் செய்தல். இத் தொடரில் முதல் அம்சத்தை மட்டும் விளக்கி வைக்கிறேன். இரண்டாம் அம்சத்தை அடுத்த தொடரில் எழுதுவேன். இன்ஷா அல்லாஹ்!
 
உன்னை விட்டும் இறைவன் உன்னை மரணிக்கச் செய்தலும், அவனைக் கொண்டு உன்னை உயிர் பெறச் செய்தலும் என்ற இவ்வரைவிலக்கணம் பரந்து விரிந்த ஸூபிஸ தத்துவத்தை சாறாய்ப் பிழிந்து அதை ஒரு “கப்”பில் பருகத் தந்தது போல் அமைந்துள்ளது. இவ்விரு அம்சங்களையும் அறிந்து கொண்டால் போதும்.
சகோதரனே அப்துல் பத்தாஹ்!
உன்னை விட்டும் அல்லாஹ் உன்னை மரணிக்கச் செய்தல் என்றால் என்ன? இதை முதலில் அறிய வேண்டும்.
சகோதரா! உன்னிடம் “நான்” என்ற உணர்வு உள்ளதா? இல்லையா? அதாவது நீ ஒருவன் இருப்பதாக நீ உணர்கிறாயா? இல்லையா? நிச்சயமாக உணர்வாய். நீ இதை மறுக்கமாட்டாய்.
 
இங்கு ஒரு விடயத்தை அறிந்து கொள்ள வேண்டும். أَنَا “அன” “நான்” என்பதில் இரண்டு வகையுண்டு. ஒன்று “நான்” என்ற மமதை அல்லது “நான்” என்ற கர்வம் எனலாம். மற்றது நான் எனும் உணர்வு. அதாவது நான் ஒருவன் உள்ளேன் என்ற உணர்வு எனலாம். முந்தினது அதாவது நான் என்ற மமதை அல்லது கர்வம் அறபு மொழியில் أَنَانِيَّةْ “அனானிய்யத்” என்றும், இரண்டாவது அதாவது நான் எனும் உணர்வு “நான் ஒருவன் உள்ளேன்” என்ற உணர்வு. இதை அறபு மொழியில் أَنِّيَّةْ “அன்னிய்யத்” என்று சொல்லப்படும்.
 
இமாம் ஜுனைத் அல் பக்தாதீ அவர்கள் “ஸூபிஸம்” என்பதற்குச் சொன்ன வரைவிலக்கணத்தின் படி “ஸூபிஸம்” என்பது ஒருவன் தானில்லை என்றும், தன்னாகத் தோற்றுபவன் – உள்ளவன் அல்லாஹ்தான் என்றும் உணரும் நிலையாகும்.
ஒருவனிடம் “நான்” எனும் உணர்வு இருப்பது அவன் அல்லாஹ்வை அறிவதற்கும், அவனை அடைவதற்கும் தடை கல்லாக நிற்கும் பெரும் திரையாகும். இத்திரை நீக்கப்பட வேண்டும். அதாவது நான் ஒருவன் இல்லையென்று முதலில் அறிவு ரீதியாக அறிந்து கொள்ள வேண்டும். அந்த அறிவு திட்டமானதாயிருத்தலும் வேண்டும்.
பின்னர் இந்நிலை அனுபவரீதியாக மாறிவிடும். அதாவது அனுபவரீதியாக “நான்” இல்லை என்பதை உணர முடியும்.
 
இது குறித்து ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறகையில்
إِنْ تَغَيَّبْتُ بَدَا – وَإِنْ بَدَا غَيَّبَنِيْ
“நான் மறைந்தால் அவன் – அல்லாஹ் வெளியாகுவான். அவன் வெளியானால் நான் மறைந்து விடுவேன்” என்று கூறியுள்ளார்கள்.
 
நம்மில் – நம்மாக அவன் வெளியாவதை உணர்வதற்கு நாம் இல்லாமற் போக வேண்டும். ஒருவன் நான் இருக்கின்றேன் என்று உணர்ந்து கொண்டு இருக்கும் வரை அவன் வெளியாகமாட்டான். இதுவே எதார்த்தம். இதற்கு மாற்றமில்லை.
قال الله تعالى وَاذْكُرْ رَبَّكَ إِذَا نَسِيْتَ،
“நீ மறந்தால் உனது இரட்சகனை – அல்லாஹ்வை நினைத்துக் கொள்”
இத்திரு வசனத்தை அறபு மொழி இலக்கணத்துடன் தொடர்பு படுத்தி ஆய்வு செய்தால் விளக்கம் இன்னும் துலங்கும்.
 
மொழியிலக்கணம்: இவ்வசனத்தில் வந்துள்ள اُذْكُرْ என்ற சொல்லுக்கு ஒரு “மப்ஊல்” செயப்படு பொருள் தேவை. அது வசனத்தில் رَبَّكَ என்று வந்துள்ளது. இதன் பொருள் உனது இரட்சகனை நினைத்துக் கொள் என்பதாகும்.
 
இதன் பின்னால் إِذَا نَسِيْتَ என்று ஒரு சொல் வந்துள்ளது. இதன் பொருள் நீ மறந்தால் என்று வரும். இதற்கு ஒரு “மப்ஊல்” செயப்படு பொருள் வேண்டும். ஆனால் அது திரு வசனத்தில் கூறப்படவில்லை. கூறப்படாத காரணத்தால் அது எதுவென்று அறிய வேண்டும்.
அது இதுதான் என்று சொல்லும் விடயத்தில் “ளாஹிர்” வெளிரங்க உலமாஉகளுக்கும், “பாதின்” உள்ரங்க உலமாஉகளுக்கும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. அவ்விரு தரப்பினரின் கருத்துக்களையும் இங்கு சுருக்கமாக எழுதுகிறேன்.
 
இத்திரு வசனத்தில் வந்துள்ள نَسِيْتَ நீ மறந்தால் என்ற சொல்லுக்கு செயப்படு பொருள் ஒன்று அவசியம். அது திரு வசனத்தில் கூறப்படவில்லை. கூறப்படாத அந்த “மப்ஊல்” செயப்படு பொருள் رَبَّكَ என்றிருக்கும் என்று வெளிரங்க உலமாஉகள் கூறுகின்றார்கள். இவர்களின் கூற்றுப்படி திரு வசனத்தின் பொருள் “உனது “றப்பு” இரட்சகனை நீ நினைத்துக் கொள். உனது இரட்சகனை நீ மறந்தால்” என்று பொருள் வரும்.
இவ்வாறு பொருள் கொள்ளுதல் “அக்ல்” புத்திக்குப் பொருந்தாத பொருளாகும். ஏனெனில் اَلْمَنْسِيُّ مَنْسِيٌّ لَا يَتَصَوَّرُ ذِكْرُهُ மறந்தது மறந்ததே! அதை நினைக்க முடியாது. மறக்காமல் நெஞ்சில் – உள்ளத்தின் அடித்தளத்திலேனும் பதிந்துள்ள ஒன்றையே நினைக்க முடியும். மறந்தது மறந்ததுதான். அதை இன்னொருவர் நினைவூட்டினால் மட்டுமே அதை நினைக்க முடியும்.
 
எனவே, வெளிரங்க உலமாஉகள் சொல்வது போல் نَسِيْتَ என்ற சொல்லுக்கு رَبَّكَ உனது இரட்சகனை என்பதை செயப்படு பொருளாகக் கொண்டால் وَاذْكُرْ رَبَّكَ إِذَا نَسِيْتَ رَبَّكَ நீ உனது இரட்சகனை மறந்தால் உனது இரட்சகனை நினைத்துக் கொள் என்று பொருள் வரும். இப் பொருள் பொருந்தாது. ஆகையால் வெளிரங்க உலமாஉகளின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.
 
இதற்கு உள்ரங்க உலமாஉகள் சொல்கின்ற கருத்தைக் கவனிப்போம். இவர்கள் نَسِيْتَ என்ற சொல்லுக்கு رَبَّكَ என்று “மப்ஊல்” செயப்படு பொருள் கூறாமல் نَفْسَكَ என்று செயப்படு பொருள் அமைத்து وَاذْكُرْ رَبَّكَ إِذَا نَسِيْتَ نَفْسَكَ நீ உன்னை மறந்தால் உனது இரட்சகனை நினைத்துக் கொள் என்று கருத்துக் கொள்வார்கள். இவ்வாறு கருத்துக் கொள்வதே நான் மேலே கூறி வந்த விளக்கத்திற்குப் பொருத்தமானதாகும். இதன்படி ஒருவன் தன்னை மறந்தால்தான் தனது இரட்சகனை நினைக்க முடியும் என்ற உண்மை தெளிவாகிறது. நீ உன்னை மறந்தால் நீ அவன்தான் என்பது உனக்கு சொல்லாமலேயே விளங்கும்.
 
இப்போது வாசக நேயர்களுக்கு இமாம் ஜுனைத் பக்தாதீ அவர்கள் “தஸவ்வுப்” என்ற சொல்லுக்கு கூறிய வரைவிலக்கணத்தின் இரண்டு அம்சங்களில் முந்தின அம்சம் தெளிவாக விளங்கியிருக்கும். அதுதான் أَنْ يُمِيْتَكَ الْحَقُّ عَنْكَ அல்லாஹ் உன்னை விட்டும் உன்னை மரணிக்கச் செய்தல் என்ற தத்துவமாகும்.
 
இமாம் ஜுனைத் பக்தாதீ அவர்கள் أَنْ يُمِيْتَكَ الْحَقُّ “அல்லாஹ் உன்னை மரணிக்கச் செய்வதாகும்” என்றதோடு மட்டும் நின்று கொள்ளாமல் அதன் பின் عَنْكَ உன்னை விட்டும் என்று சொல்லியிருப்பது ஊன்றிக் கவனிக்க வேண்டிய விடயமாகும். அவர்கள் عَنْكَ என்ற சொல்லைக் கூறாமல் வரைவிலக்கணத்தை முடித்திருந்தால் “உன்னை விட்டும்” என்ற கருத்துக்கு இடமில்லாமற் போயிருக்கும். عنك என்ற இச் சொல்லைக் கூறியதினால்தான் உன்னை விட்டும் உன்னை மரணிக்கச் செய்தல் என்ற பொருள் வந்தது. இச் சொல்லைக் கூறாமல் வலிந்துரையை அவர்கள் முடித்திருந்தால் உன்னை அவன் மரணிக்கச் செய்வதாகும் என்று மட்டுமே பொருள் விளங்கப்பட்டிருக்கும். நீ உன்னை மறப்பதென்பதற்கு வழியில்லாமற் போய்விடும்.
அல்லாஹ் உன்னை விட்டும் உன்னை மரணிக்கச் செய்தல் என்றால் இது موت حقيقي எதார்த்தமான மரணமல்ல. இதற்கு موت مجازي என்று அறபியில் சொல்லப்படும். அதாவது தன்னுணர்வில் தான் மரணிப்பதாகும்.
 
ஸூபிஸத்தின் முதல் அம்சம் அல்லாஹ் ஒருவனை அவனை விட்டும் மரணிக்கச் செய்தல் என்றால் அடியான் எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல் அல்லாஹ் அவனை அந்த நிலைக்கு ஆளாக்குதல் என்பது கருத்தல்ல. செய்பவன் அல்லாஹ்வாக இருந்தாலும் அடியான் அவ்வாறு மரணிப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும்.
இது குறித்தே நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் பின்வருமாறு கூறினார்கள்.
 
مُوْتُوْا قَبْلَ أَنْ تَمُوْتُوْا،
“நீங்கள் மரணிக்குமுன் மரணித்து விடுங்கள்” என்று கூறினார்கள். இது இயற்கை மரணத்தைக் குறிக்காது. மனிதன் தனது உணர்வில் மரணிக்கும் மரணம் مَوْتٌ مَجَازِيٌّ என்பதையே குறிக்கும்.
 
மரணத்தை இயற்கை மரணம், செயற்கை மரணம் என்று இரண்டாகப் பிரித்தால் செயற்கை மரணம் என்ற موت مجازي என்பதற்கு மனிதனின் முயற்சி அவசியமாகும்.
ஒருவன் தனது முயற்சியாலும், அல்லாஹ்வின் நல்லனுகூலத்தாலும் செயற்கை மரணம் அடைந்தானாயின் அவன் நடமாடும் “மையித்”தாகவே இருப்பான்.
நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
 
قال النبي صلّى الله عليه وسلّم: مَنْ مَاتَ فَقَدْ قَامَتْ قِيَامَتُهُ
“ஒருவன் மரணித்தால் அவனின் மறுமை அவனுக்கு வந்து விட்டது” என்று நபீ அலைஹிஸ்லஸாது வஸ்ஸலாம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
மறுமை வந்தவன் மறுமையில் உள்ளவற்றைக் காண்பான். அறிவான். செயற்கை மரணம் என்று நான் குறிப்பிடும் மரணம் அடைந்தவன் இவ்வுலகத்தில் பிறர் பார்வையில் அவன் உயிரோடு இருந்தாலும் கூட அவன் எதார்த்தத்தில் மரணித்தவனேயாவான்.
 
நாமும் செயற்கை மரணம் அடைந்து இவ் உலகிலிருந்து கொண்டு சொர்க்க வாழ்வு வாழ அருள் புரிவானாக! ஸூபிஸ ஞானத்தின் பூட்டப்பட்ட ஞானக் கதவுகளை எமக்குத் திறந்தருள் புரிவானாக!
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments