Friday, May 3, 2024
Homeஎழுத்தாக்கங்கள்“வஹ்ததுல் வுஜூத்” என்பது ஸூபிஸமேதான்

“வஹ்ததுல் வுஜூத்” என்பது ஸூபிஸமேதான்

وحدة الوجود هي معنى التصوّف وجوهره،
“வஹ்ததுல் வுஜூத்” என்பது ஸூபிஸமேதான். அது வேறு, இது வேறு என்பது கருத்தல்ல.
இரண்டும் விலியுறுத்தும் கருத்து “எல்லாம் அவனே” என்ற தத்துவம்தான்.
 
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
“தஸவ்வுப்” என்றால் என்ன? என்பதற்கு ஸூபீகளின் தலைவர் سيد الطائفة الصوفيّة ஜுனைத் பக்தாதீ அவர்கள் கூறிய வரைவிலக்கணம் பற்றி சில நாட்களுக்கு முன் நான் எழுதியிருந்தேன்.
 
அவர்களின் வரைவிலக்கணம் இரண்டு அம்சங்களைக் கொண்டது என்று குறிப்பிட்டு அவ்விரு அம்சங்களில் முந்தின அம்சம் பற்றி ஓரளவு விளக்கம் எழுதியிருந்தேன். இரண்டாவது அம்சத்திற்கு விளக்கம் எழுதவில்லை.

அந்த வரைவிலக்கணத்தை மீண்டும் ஒரு முறை எழுதுகிறேன்.
اَلتَّصَوُّفُ هُوَ أَنْ يُمِيْتَكَ الْحَقُّ عَنْكَ وَيُحْيِيَكَ بِهِ،
“ஸூபிஸம் என்பது அல்லாஹ் உன்னை விட்டும் உன்னை மவுத்தாக்கி அவனைக் கொண்டு உன்னை உயிர் பெறச் செய்வதாகும்”
இவ்விரு அம்சங்களில் அல்லாஹ் உன்னை விட்டும் உன்னை மரணிக்கச் செய்தல் என்ற முந்தின அம்சம் பற்றி எழுதிவிட்டேன்.
 
இரண்டாவது அம்சம் அவனைக் கொண்டு உன்னை உயிர் வாழச் செய்தல் என்பதாகும்.
அவனைக் கொண்டு உன்னை உயிர் வாழச் செய்தல் என்றால் உன்னால் வெளியாகும் எச் செயலாயினும் அச் செயல் அவனின் செயல் என்று நீ உணர்தல். உன் செயலென்று நீ உணர்வதல்ல. உணரவும் கூடாது.
 
இதன் சுருக்கம் என்னவெனில் ஸூபிஸம் என்றால் நீ என்று ஒருவன் இல்லையென்றும், உன் மூலம் வெளியாகும் செயல்கள் எல்லாம் அவனின் செயல்கள் என்றும் நீ உணர்வதாகும். இவ்வாறு உணர்தல் மட்டுமே ஒரு நிகரற்ற வணக்கம்தான். இவ் உணர்வோடு ஒருவன் இருந்தானாயின் அவன் வணக்கத்திலேயே இருக்கின்றான் என்று பொருள்.
 
மேலும் ஜுனைத் பக்தாதீ அவர்கள் “தஸவ்வுப்” ஸூபிஸம் என்பதற்கு இன்னுமொரு வரைவிலக்கணம் கூறியுள்ளார்கள். இவர்கள் பக்தாத் நகரில் பிறந்து அங்கேயே வாழ்ந்து, அங்கேயே மரணித்தார்கள். ஹிஜ்ரீ 297. இவர்களின் பூர்வீகம் ஈரான் நாட்டிலுள்ள “நஹாவந்து” என்ற ஊராகும்.
 
اَلْإِمَامُ جُنَيْدْ أَعْمَقُ صَوْفِيَّةِ الْقَرْنِ الثَّالِثِ،
இமாம் ஜுனைத் பக்தாதீ அவர்கள் மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த மிக ஆழமான ஸூபிஸ கொள்கையுள்ளவர்களாவர். இவர்களின் காலத்திலேயே இமாம் ஹல்லாஜ், இமாம் ஷிப்லீ ஆகியோர் வாழ்ந்தனர்.
இமாம் ஜுனைத் அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை ஏற்றுக் கொண்டவர்களாயினும் அதை மிகத் தெளிவாக மக்கள் மத்தியில் கூறாமல் இருந்தார்கள்.
 
قال أبو إسماعيل الهَروِي ‘الجنيد كان مُتمكِّنًا وما كان له بُوحٌ، وكان يعظّم الأمر والنّهي، وأخذ الطريق من الأصل، فلا جرمَ كان مقبولا لِجميع الفِرق، أي أنّه مع كونه مؤمنا بعقيدة الصّوفيّة، إلّا أنّه كان يكتُمُها عن النّاس، ويُظهر تعظيم الشـريعة، ولهذا قبِله الصوفيّة وغيرُهم،
அவர்கள் வெளரங்கத்தில் “ஷரீஆ”வுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். இதனால் பல கருத்துள்ளவர்களும், பல கூட்டத்தவர்களும் இவர்களை ஏற்றுக் கொண்டார்கள். இவர்கள் ஸூபீகளின் கொள்கையான “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையை ஏற்றுக் கொண்டாலும் கூட அதைப் பகிரங்கமாகச் சொல்லாமல் மறைத்தார்கள். “ஷரீஆ”வையே கண்ணியப்படுத்துபவர்களாகவும் இருந்தார்கள். இதனால்தான் இவர்களை ஸூபீகளும், மற்றவர்களும் ஏற்றுக் கொண்டனர்.
 
قال عبد الله اليافعي، هو مِن شُيوخ الصوفيّة فى القرن الثامن الهجري، وُلد سنة 698 هـ، فى عَدْن، وأقام بمكّة، توفّي 768 هـ،
ஹிஜ்ரீ எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸூபீகளின் குருமார்களில் ஒருவரான அப்துல்லாஹ் அல் யாபிஈ அவர்கள் எமன் நாட்டில் “அத்ன்” என்ற இடத்தில் ஹிஜ்ரீ 698ல் பிறந்து திரு மக்கா நகரில் 768ல் மறைந்தார்கள். இவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
 
لما سُعي بالصوفية إلى بعض الخُلفاء أمَرَ بِضَرْبِ رِقَابِهم، فأمّا الجنيدُ فتَسَتَّرَ بالفقه، (نشر المحاسن الغالية لليافعي، ص 422)
அக்காலத்தில் – கலீபாக்களின் ஆட்சிக் காலத்தில் ஸூபீகளில் சிலரை ஆட்சியாளர்களிடம் கொண்டு செல்லப்பட்ட போது அவர்களைக் கொலை செய்யுமாறு அவர்கள் கட்டளையிட்டனர். ஆயினும் ஸூபீகளில் ஒருவரான ஜுனைத் பக்தாதீ அவர்கள் மட்டும் “ஷரீஆ”வின் சட்டத்தை கேடயமாக்கிக் கொண்டார்கள். அதாவது “ஷரீஆ”வின் சட்டங்களை வெளிப்படையாகவும், ஸூபிஸத்தை மறைத்தும் சொல்லத் தொடங்கினார்கள். இதனால் அவர்கள் கொலையிலிருந்து தப்பினார்கள்.
 
இமாம் ஜுனைத் அவர்களைப் பற்றி “அல்யவாகீத் வல் ஜவாஹிர்” எனும் நூலில் இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ அவர்கள் கூறுகையில் அவர்கள் ஸூபிஸத்தின் எதிரிகளுக்குப் பயந்து ஸூபிஸ ஞானம் பேசாமல் இருந்தார்கள். யாராவது ஸூபிஸ ஞானம் தொடர்பாக விளக்கம் கேட்டால் கேட்டவர்களை தங்களின் வீட்டினுள்ளே அழைத்துச் சென்று கதவுகளைப் பூட்டி திறப்பை தங்களின் தொடைகளுக்கு கீழே வைத்துக் கொண்டு பேசுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
 
ஆட்சியாளர்களுக்கும், பொறாமைக் காரர்களுக்கும் பயந்த ஸூபிஸ ஞானத்தைக் கரைத்துக் குடித்த பலர் மௌனிகளாக இருந்ததற்கு வரலாறுண்டு. இக்காலத்தில் கூட சிலர் மௌனிகளாயிருப்பதை நான் அறிவேன். அவர்களையும் சபைக்கு இழுத்தெடுப்பதற்கு எனக்கு உள்ளத்தில் விருப்பம் இருந்தாலும் கூட அவர்களின் நன்மை கருதி எனது நாவையும், பேனாவையும் பாதுகாத்துக் கொண்டிருக்கிறேன்.
“வஹ்ததுல் வுஜூத்” கொள்கை பல கோணங்களில் பொய்யாக்கப்படுவதற்கு எதிரிகளால் கடும் சதிகளும், முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வரும் இக்காலத்தில் உண்மையை விளங்கியவர்களும், எதார்த்தம் தெரிந்தவர்களும் வாய் மூடி மௌனிகளாயிருப்பது அவர்களுக்கே பிழை என்று தெரிந்தும் கூட அவர்கள் மௌனம் சாதிப்பது சத்தியத்தை மறைப்பதற்கு சாம்பிராணி போடுவது போன்றதாகும் என்பதை வாய் மூடி இருப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
 
இக்கால கட்டத்தைப் பெறுத்த வரை “வஹ்ததுல் வுஜூத்” கொள்கை சரியென்று ஏற்றுக் கொண்ட உலமாஉகள் இவ் அறிவை உயிராக்க முன் வரவில்லையானால் அவர்கள் எவரையும் கொலை செய்யாது போனாலும் கொலை காரனுக்கு வாள் தூக்கி கொடுத்தவர்கள் போன்றவர்களேயாவர் என்பதை அவர்கள் புரிந்து செயல்பட வேண்டும்.
 
இமாம் ஹல்லாஜ் அவர்கள் பகிரங்கமாகக் கொலை செய்யப்பட்ட போது தாம் அவ்வேளை அங்கு இருந்திருந்தால் அவர்களுக்கு கை கொடுத்திருப்போம் என்று அவர்களின் காலத்தின் பின் வந்த குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்களும், ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் ஙஸ்ஸாலீ அவர்களும் கண்ணீர் வடித்துக் கூறியிருப்பதை இப்போது வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஷெய்குமார்களும், தரீகாக்களின் கலீபாஉகளும் சிந்தனையில் எடுத்துச் செயல்பட வேண்டும்.
 
ஷாதுலிய்யா தரீகா சகோதரர்களே!
 
நீங்கள் பின்பற்றுகின்ற “தரீகா”வின் தாபகர் அல்குத்புல் அக்பர் அபுல் ஹஸன் ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” பேசவில்லையா? அவர்கள் கோர்வை செய்த “அஹ்ஸாப்” அவ்றாதுகளில் வஹ்ததுல் வுஜூத் ஞானம் சொல்லப்படவில்லையா? “வளீபா யாகூதிய்யா”வில் “வஹ்ததுல் வுஜூத்” கருத்துக்கள் கூறப்படவில்லையா?
 
காதிரிய்யா தரீகாவின் சகோதரர்களே!
குத்பு நாயகம் அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் சொல்லவில்லையா? அவர்கள் தங்களின் கிதாபுகளில் எழுதவில்லையா?
 
ரிபாஇய்யா தரீகாவின் சகோதரர்களே!
ஸுல்தானுல் ஆரிபீன் ஸெய்யித் அஹ்மத் கபீர் ரிபாயீ நாயகம் “வஹ்ததுல் வுஜூத்” பேசவில்லையா? எழுதவில்லையா? இந்த ஞானத்தைச் சரிகாணவில்லையா?
 
தரீகாவாதிகளே!
நீங்கள் தரீகாவில் இருப்பதால் மட்டும் ஜெயம் பெற முடியாது. வருடத்தில் ஒரு தரம் கந்தூரி நடத்துவதால் மட்டும் ஜெயம் பெற முடியாது. “ஹழ்றா” செய்வதால் மட்டும் ஜெயம் பெற முடியாது. றாதிப் நடத்துவதால் மட்டும் ஜெயம் பெற முடியாது. ஷெய்குமார்களின் பெயரால் சாம்பிராணி போடுவதால் மட்டும் ஜெயம் பெற முடியாது.
 
இவையெல்லாம் செய்ய வேண்டியவைதான். நானும் செய்து கொண்டே இருக்கிறேன்.
ஆயினும் ஸூபிஸம் என்பது தரீகாவுடன் பின்னிப் பிணைந்த ஒரு விடயமாதலால் தரீகா வழி செல்லும் நீங்கள் ஸூபிஸ ஞானத்தையும் அறிந்து செயல்பட வேண்டும். அது போலிகளாலும், வஹ்ஹாபீகளாலும் பொய்யாக்கப்படாமல் நீங்களும் பாடுபட வேண்டும். தரீகா வழி செல்லும் நீங்கள் ஸூபிஸ ஞானத்தை அறியாதிருப்பது உங்கள் கையில் பால் இருக்க அது பாலென்று விளங்காமல் தேடி அலைவது போன்றதாகும்.
 
கைக்குள் வெண்ணையை வைத்து
நெய்க்கழுத பாவி கலை கற்று
மறிவற்ற பாவி
கற்பகவிருட்சத்தினடியிலே
காஞ்சிலங் காய் தேடி
நின்ற பாவி
என்று குணங்குடியார் சொன்னது போல் வெண்ணை கையிலிருக்கும் நிலையில் நெய்க்கழத் தேவையில்லையே!
 
“வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பகிரங்கமாகப் பேசியவர்களுக்குப் பல சோதனைகள், வேதனைகள் நடந்தது உண்மைதான். நபீமாருக்கு நடந்துள்ளன. ஸஹாபாக்களுக்கும் நடந்துள்ளன. வலீமாருக்கும் நடந்துள்ளன.
சிலர் சோதனைகளையும், வேதனைகளையும் பயந்து பேசாமல் மௌனிகளாயிருந்தார்கள்.
 
இன்னும் சிலர், கேட்போர் புரிந்தாலும், புரியாவிட்டாலும் தமது மனதிலுள்ள தாகத்தை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பேசினார்கள். ஆயினும் கேட்பவர்களில் எவரும் அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதைக் கூட விளங்கியிருக்கமாட்டார்கள்.
தரீகாக்களின் தாபகர்களான மஷாயிகுமார்கள் அனைவரும் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசியவர்களும், எழுதியவர்களும் என்பதை தரீகாவாதிகள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
 
தரீகாவாதிகளே!
 
நீங்கள் உறங்கியது போதும். இதன் பிறகாவது விழித்தெழுங்கள். ஸூபிஸத்தையும், தரீகாக்களையும் அழித்தொழிப்பதற்காக திட்டமிடும் விஷமிகள் இன்னும் சில மாதங்களில் அல்லது வருடங்களில் உங்களின் சாவியாக்களையும், உங்களின் தைக்காக்களையும் தரை மட்டமாக்கிவிட மாட்டார்கள் என்று நினைக்கிறீர்களா? அவ்வாறு நீங்கள் நினைத்தால் உங்களின் நினைப்பு தவறானதென்றே நான் சொல்வேன். வெள்ளம் வந்து ஊரை அழிக்குமுன் அணை கட்டிப் பாதுகாப்பு எடுத்துக் கொள்ளுங்கள். குட்டிச் சுவராயினும் ஒரு தரம் தட்டிப் பாருங்கள்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments