தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
தொடர் – 1
“தரீகா” என்றாலே போதும். ஆன்மிகமே முன்னிற்கும். ஆன்மிகத்தின் உச்சி “பனா பில்லாஹ்” எனப்படும். அப்படியென்றால் அடியான் அல்லாஹ்வை அறிந்து, அவனை வணங்கி, அவனின் அன்பைப் பெற்றுவிட்டானாயின் அவன் இவனுக்கு வழிப்படுகிறான். அதாவது அவனிடம் நீ விரும்பியதை தருவேன் என்கிறான்.
அப்போது அல்லாஹ் இவனாக அவனாகி இவனுக்கு நான்கு பரிசில்களை வழங்குகிறான்.
இதை அவன் ஹதீஸ் குத்ஸீ மூலம் தெளிவாக சொல்கிறான்.
قال الله فى الحديث القدسيّ: وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ، فَإِذَا أَحْبَبْتُهُ: كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ، وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ، وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا، وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا، (رواه البخاري)
ஹதீதின் சுருக்கம்:
(அடியான் வணக்கங்கள் மூலம் என்னை நெருங்கிக் கொண்டே இருப்பான். நான் அவனை நேசிக்கும் வரை – விரும்பும் வரை நெருங்கிக் கொண்டே இருப்பான். நான் அவனை நேசித்தால் நான் அவனின் கேள்வியாகவும், பார்வையாகவும், அவனின் கையாகவும், அவனின் காலாகவும் ஆகிவிடுவேன்) என்று அல்லாஹ் கூறியுள்ளான்.
அல்லாஹ்வின் அன்பைப் பெற அடியான் தன்னை அல்லாஹ்வுக்காக அர்ப்பணிக்க வேண்டும். நல்லமல்கள் செய்ய வேண்டும். இடையறாது தவம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அடியான் அவனுக்கு தன்னை அர்ப்பணித்து நெருங்கும் போது அவனுக்கு அடியான் மீது பாசம் ஏற்படும். பாசம் ஏற்பட்டால் ஓர் அன்பளிப்பு கொடுக்க வேண்டாமா? இறைவன் தனது அன்பனுக்கு வழங்கும் சன்மானம் சாதாரணமானதாயிருக்குமா? என்னே புதுமை! அவன் கொடுத்த பரிசு “நீதான் நான்” அல்லது “நான்தான் நீ” என்ற நிகரற்ற பரிசாகும்.
அதை அவன் விபரமாகச் சொன்னான். அவனின் கேள்வியாக நான் ஆகிவிட்டேன் என்றான். அதாவது அடியான் என்ற பாத்திரத்தில் கேட்பவனாக நான் இருப்பேன். அடியான் கேட்பவனாக இருக்கமாட்டான்.
அடியானின் கேள்வி படைப்பு. என் கேள்வி படைப்பல்ல. இரண்டுக்கும் வேறுபாடு அவசியம் வேண்டும். இதுகாலவரை அவனின் கேள்வி கட்டுப்பாடுள்ளதாகவே இருந்தது. ஆனால் அது இன்றிலிருந்து கட்டுப்பாடற்றதாக ஆகிவிட்டது. கேட்பதற்கு தூரம் தடையாக இருக்காது. எத்தனை கோடி கிலோமீற்றருக்கு அப்பாலுள்ளதையும் கேட்கும் ஆற்றல் அவனுக்கு வந்துவிடும். எவ்வாறு கேட்பான் என்று கேட்டால் கேட்டவனிடமே கேட்க வேண்டுமென்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் அல்லாஹ் எங்களின் பேச்சை கேட்பதானது நாம் கேட்பது போன்ற கேள்வியாக அது இருக்காது.
அல்லாஹ் அவனுக்கு வழங்கிய இரண்டாவது பரிசு அடியானின் பார்வையாக அவன் ஆவதாகும். அதாவது அடியான் என்ற பாத்திரம் மூலம் அவன் பார்ப்பதாகும்.
அடியான் மூலம் அவன் பார்க்கும் போது அந்தப் பார்வை கட்டுப்பாடற்றதாகவே இருக்கும். எங்கிருந்தும், எதையும் பார்க்கலாம். அல்லாஹ்வின் பார்வைதான் அவனின் பார்வையாக இருக்கும்.
அல்லாஹ் அவனுக்கு வழங்கும் மூன்றாம் பரிசு அந்த அடியான் பிடிக்கும் கையாக அல்லாஹ் ஆவதாகும். அடியானின் கையாக அல்லாஹ் ஆனால் அவனின் கட்டுப்பாடுள்ள கை கட்டுப்பாடற்ற கையாகிவிடும். அவன் தனது கையால் ஓர் ஊரையே அதன் அத்திவாரத்தோடு தூக்கி அதை தலை கீழாய்ப் புரட்டிவிடுவான். அல்லாஹ்வின் கையென்றால் அது எத்தகையது என்று சொல்லவும் வேணுமா?
அல்லாஹ் அவனுக்கு வழங்கும் நாலாம் பரிசு அவனின் காலாக அல்லாஹ் ஆவதாகும். அவனின் காலுடைய கட்டுப்பாடுள்ள சக்தி கட்டுப்பாடற்றதாகிவிடுவதாகும். தனது காலால் ஒரு மணி நேரத்திற்கு ஐந்து கிலோ மீற்றர் தூரம் நடந்தவர் ஐந்து இலட்சம் கிலோமீற்றர் தூரத்தை ஐந்து நிமிடத்தில் கடக்கும் ஆற்றலைப் பெற்றுவிடுவார்.
தான் விரும்பிய அடியானுக்கு அல்லாஹ் வழங்கிய பரிசுக்கு நிகர் எது இருக்கிறது? தான் விரும்பிய அடியானுக்கு அல்லாஹ் பணச் செல்வத்தை பரிசாக வழங்கியிருக்கலாம். அல்லது அரசியல்வாதிகளுக்கு இருப்பது போல் அவுஸ்திரேலியாவில் ஐம்பதாயிரம் ஏக்கரில் ஓர் ஆப்பிள் பழத் தோட்டம் வழங்கியிருக்கலாம். அல்லது இவற்றை விடப் பெறுமதி மிக்கப் பரிசை வழங்கியிருக்கலாம்.
அவ்வாறெல்லாம் வழங்காமல் தனது அன்பின் வெளிப்பாடாக அவன் வழங்கியது தன்னையேயாகும். அல்லாஹ்வின் விலை என்ன? அவனுக்கு நிகர் என்ன?
அல்லாஹ் தனது விருப்பமான அடியானுக்கு வழங்கிய நான்கு பரிசில்களில் கேள்வியும், பார்வையும் இரண்டு “ஸிபாத்” தன்மைகளாகும். கேள்வியும், பார்வையும் உருவமும், சடமும் இல்லாதவைகளாகும்.
மற்ற இரண்டு பரிசில்களும் கையும், காலுமாகும். இவ்விரண்டும் சடமுள்ள பரிசில்கள். முந்தின இரண்டும் சடமற்ற பரிசில்களாகும்.
மனிதனுக்கு அல்லாஹ் இரவலாக ஏழு சக்திகள் வழங்கியிருக்கிறான். அவை “குத்றத்” சக்தி, “இறாதத்” நாட்டம், “ஸம்உ” கேள்வி, “பஸர்” பார்வை, “இல்ம்” அறிவு, “கலாம்” பேச்சு, “ஹயாத்” உயிர் என்பனவாம்.
இவ் ஏழும் “ஸிபாத்” தன்மைகள் எனப்படும். இவை சடமில்லாதவையாகும். இவற்றில் இரண்டை மட்டும் வழங்கியது ஏழையும் அவனுக்கு வழங்கியதற்கு சமமானதாகும். இரண்டு தன்மைகளை வழங்கியவனுக்கு ஏனைய தன்மைகளயும் வழங்குவது பெரிய காரியமல்ல.
இவ் ஏழு தன்மைகளையும் கொடுத்தான் என்றால் எழு தன்மைகளாகவும் அவன் வெளியானான் என்பதாகும். மற்ற இரண்டு பரிசில்களுமான கையும், காலும் சடமுள்ளவையாகும். இவ்விரு சட உறுப்புக்களாகவும் வெளியானவனுக்கு ஏனைய சட உறுப்புக்களாக வெளியாவது பெரிய காரியமல்ல.
இதன் சுருக்கம் என்னவெனில் அல்லாஹ் ஓர் அடியானை விரும்பினால் அவனுக்கு தன்னையே பரிசாக வழங்கிவிடுகிறான். தன்னையே பரிசாக வழங்கினான் என்றால் தானே அவனாக வெளியானான் என்ற கருத்தும், தானே அவன் மூலம் செய்கிறான் என்ற கருத்தும் வந்து விடும்.
இதனால்தான் இத்தன்மை பெற்ற வலீமார், மற்றும் நாதாக்கள் அனைவரும் மனிதர்களாக இருந்தும் கூட மனித சக்திக்கு அப்பாற்பட்ட பெரும் சாதனைகள் சாதித்தார்கள். அவற்றை நாம் “கறாமத்” என்று சொல்கிறோம்.
அல்லாஹ் அடியானின் காதாக ஆனான் என்றும், அல்லாஹ் அடியானின் கண்ணாக ஆனான் என்றும் கூறாமல் அவ்விரண்டின் “ஸிபாத்” தன்மைகளாக வெளியானான் என்று கூறியுள்ளான். அல்லாஹ் அடியானின் “ஸிபாத்” தன்மைகளாகவும், அடியானின் சடமாகவும் வெளியாகியுள்ளான் என்பதை மனிதர்களுக்கு விளங்கப்படுத்துவதற்காகவே தன்மைகளில் இரண்டு தன்மைகளையும், சடப் பொருட்களில் இரண்டையும் கூறியுள்ளான்.
அடியான் தனது “றப்பு” இரட்சகனை அறிந்து அவனை அடைந்து அவனில் “பனா” ஆகி இவன் அவனாவதானது சாதாரண விடயமல்ல. இந் நிலையடைய “நப்ஸ்” எனும் மனவெழுச்சியோடு கடுஞ்சமர் செய்ய வேண்டும். ஆடம்பர, நாகரீக் வாழ்வை முற்றாகத் துறக்க வேண்டும்.
தொடரும்..