அல்லாஹ்வின் இறைநேசர் அம்பா நாயகம் (றஹ்) அவர்கள்

March 24, 2015
-அதிசங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ
அல்ஹாஜ் A. அப்துர் றஊப் (மிஸ்பாஹீ) அவர்கள்-
நான் சென்னையில் தங்கியிருந்த பொழுது தமிழ் நாட்டு உலமாக்கள் சிலரைச் சந்தித்தேன். அவர்கள் அனைவரும் கம்பம் செல்லுங்கள். அங்கு ஒரு மகான் இருக்கின்றார்கள். அவர்கள் அவ்லியாக்களில் ஒருவர் என்று சொன்னார்கள். கம்பம் நோக்கி விரைந்தேன். ஒரு நாட்காலை நேரம் சுமார் பத்துமணியளவிள் கம்பத்தில் கால் வைத்தேன். மகான் அவர்கள் தங்கியுள்ள தைக்காவை விசாரித்து அறிந்து கொண்டேன். உள்ளே நுழைந்தேன். ஒருவர் வந்து நீங்கள் யார்? எதற்காக வந்தீர்கள்? என்று கேட்டார். நான் ஒரு மௌலவீ இலங்கையைச் சேர்ந்தவன். மகானைச் சந்திக்க வந்தேன் என்றேன்.
கதவு திறக்கப்பட்டது. உள்ளே செல்ல அனுமதி கிடைத்தது. உள்ளே நுழைந்தேன். அங்கே கணீர் என்ற குரலில் ஒருவர் ஞானவிளக்கம் சொல்லிக் கொண்டிருந்த சத்தம் கேட்டது. அங்கே ஒரு பெரியார் கம்பீரமான தோற்றம். அடர்ந்த தாடி. கவர்ச்சிமிக்க முகம். சுமார் எழுவது வயது மதிக்கத்தக்கவர்.
என்னுடன் உரையாடத் தொடங்கினார்கள். மகானின் தைக்காவில் சுமார் இருபது மணி நேரம் நான் தங்கியிருந்தேன்.
என்னுடன் உரையாடிக் கொண்டிருந்த மகான் அவர்கள் முன் பின் தொடர் எதுவுமின்றி என்னிடம் உங்களுடைய தகப்பனாரின் ஜனாஸா நல்லடக்கத்தில் ”அப்தால்”களில் ஒருவர் கலந்து கொண்டார். என்று சொன்னார்கள். அப்தால் என்போர் அவ்லியாக்களில் ஒரு பிரிவினர். மகான் அவர்களின் இத்தகவல் அவர்கள் தான் ஜனாஸாவில் கலந்து கொண்ட அப்தால்களில் ஒருவர் என்பதை சூசகமாகக் காட்டுகிறது. தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த மகான் அவர்கள் எனது மனைவியின் தாய் பற்றியும் எனது குடும்பம் பற்றியும் சில உண்மைத் தகவல்கள் கூறினார்கள்.
இவை கேட்டு எனது மெய் சிலிர்த்தது. என்னைத் தூக்கிப் போட்டாற் போலிருந்தது. வியர்ந்து விட்டேன். நான் இந்த மகானை மூன்று முறை சந்தித்துள்ளேன். என்னுடைய முதல் சந்திப்பின் போது அவர்களுக்கு ஒரு மௌலவீ பணி செய்துகொண்டிருந்தார். அவர் என்னிடம் மகானின் “கறாமத்” அற்புதங்கள் பற்றிக் கூறிக்காட்டினார்.
ஸஹாபீ – நபித் தோழர் அப்துர் றஹ்மான் இப்னு அவ்ப் (றழி) அவர்கள் இரவு நேரத்தில் மகானிடம் வந்து உரையாடிச் செல்கிறார் என்றும் மகானின் தேவைக் கேற்ப பணம் கொடுத்துச் செல்கிறார்கள். என்றும் பணியாள் மௌலவீ என்னிடம் சொன்னார்.
அன்று காலை ஸுப்ஹு தொழுகை முடித்த பின் மௌலவீ என்னிடம் ஒரு இரகசியம் சொன்னார். குறித்த நபித் தோழர் அப்துர் றஹ்மான் இப்னு அவ்ப் (றழி) அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள ஒரு பள்ளிவாயலில் மிஹ்றாப் தொழுகை நடத்துமிடம் அமைந்துள்ள இடத்தில் தான் சமாதி கொண்டுள்ளார்கள். மகான் அவர்கள் தங்களின் சீடர்களில் சிலருக்கு மட்டுமே இந்த இடத்தைக் காட்டித் தந்துள்ளார்கள். மகான் அனுமதி தந்தால் உங்களுக்கும் அந்த இடத்தைக் காட்டித்தருவேன் என்று சொன்னார்.
மகானிடம் அனுமதி பெற்று வருமாறு மெளலவீயை நான் கெஞ்சிக் கேட்டேன். பயந்தவராக மகானிடம் சென்று உரையாடி விட்டு வந்த மௌலவீ நீங்கள் பாக்கியசாலி மகான் அனுமதி தந்து விட்டார்கள் என்றார்.
அந்த மௌலவீ என்னையழைத்துக் கொண்டு அந்த ஊருக்குச் சென்று அந்த இடத்தையும் காட்டித் தந்தார். அங்கு சற்று நேரம் தங்கியிருந்து சியாரத் செய்து பாத்திஹாவும் ஓதிவிட்டு திரும்பினேன். அவ்விடத்தை மற்றவர்களுக்குச் சொல்வதற்கு எனக்கு அனுமதியில்லாததால் அவ்விடத்தை நான் இங்கு குறிப்பிடவில்லை.
மகானின் தைக்காவில் நான் தங்கியிருந்த அன்று மாலை சுமார் ஐந்து மணியளவில் அவர்கள் தங்களின் சீடர்களிற் சிலருடன் பேசிக் கொண்டிருந்தார்கள். நானும் ஒரு பக்கம் அமர்ந்து கொண்டேன்.
யாரோ ஒருவர் அங்கு வந்து மகானிடம் தனது தேவையைக் கூறி பணம் கேட்டார். மகான் தனது இடுப்பில் அணிந்திருந்த அகலமான “பெல்ட்” வாரில் இருந்த பண நோட்டுக்கள் கொடுத்தார்கள். அவை கசங்காதவையாகவும் புதிதானவையாகவும் இருந்ததைக் கண்டு நான் வியந்தேன். சற்று நேரம் கழித்து இன்னும் ஒருவர் வந்து பணம் கேட்டார். அவருக்கும் புதிய பண நோட்டுக்கள் கொடுத்ததார்கள்.
இந்த நிகழ்வு மகானுக்கு ஸஹாபீ அப்துர் றஹ்மான் இப்னு அவ்ப் (றழீ) பணம் கொடுக்கின்றார்கள். என்று பணியாள் மௌலவீ சொன்னதை உறுதி செய்வது போல் இருந்தது.
மகான் அவர்களை நான் மூன்று முறை சந்தித்துள்ளேன். அவர்களிடமிருந்து பல ஞான முத்துக்களைப் பெற்றிருக்கிறேன். அவர்கள் தங்களை யார் என்று காட்டிக் கொள்ள விரும்பாததால் நீண்ட காலமாக இலைமறை காய் போன்றே வாழ்ந்து வந்துள்ளார்கள். அவர்கள் விரும்பாவிட்டாலும் அல்லாஹ் தனது நேசனை அறிமுகம் செய்ய விரும்பினான் போலும் காலப் போக்கில் அவர்களின் மகத்துவமும் தத்துவமும் கொஞ்சங் கொஞ்சமாக வெளிவரத் தொடங்கியது. படித்தவர்களும் பாமரர்களும் சாரிசாரியாக வரத் தொடங்கினர். தமிழ் நாட்டில் பிரசித்தி பெற்றிருந்த பல உலமாக்கள் அவர்களைச் சந்திக்கச் சென்றனர். இன்னும் பலர் அவர்களிடம் “பைஅத்” ஞானதீட்சை பெற்று அவர்களின் முரீது சீடர்களாயினர். இதனால் அவர்களின் இறுதிக் காலகட்டத்தில் அவர்கள் அறிமுகமாக வேண்டியாதாயிற்று.
நான் மகான் அவர்களைச் சந்தித்த மூன்று முறைகளில் இரண்டாம் மூன்றாம் முறைகளில் எனக்குப் பணம் தந்தார்கள். இன்னொரு சமயம் மர்ஹும் மௌலவீ MSM. பாறுக் காதிரீ அவர்கள் மகானச் சந்தி்க்கச் சென்ற போது ஐநூறு ரூபா இந்தியப் பணமும் ஒரு சேட் துணியும் ஒரு கைலியும் அவர் மூலம் எனக்கு அனுப்பி வைத்திருந்தார்கள்.
தந்தை வழியில் தனயன்…
மகான் அவர்களின் தந்தை அல் ஆலிமுல் பாழில் வல் ஆரிபுல் வாஸில் முஹ்ம்மத் ஸயீத் ஜல்வத் நாயகம் ஆவார்கள்.
இவர்கள் கீழக்கரை அறூஸிய்யஹ் மத்ரசாவில் சமாதி கொண்டு பல அற்புதங்கள் நிகழ்த்தி வரும் கல்வத் நாயகம் அவர்களின் சீடரும் கலீபாவும் ஆவார்கள்.
கல்வத் நாயகமவர்களுக்கு இருவர் கலீபாக்களாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவர்களில் ஒருவர் மகான் அவர்களின் தந்தை முஹம்மத் ஸயீத் ஜல்வத் நாயகம் அவர்கள் மற்றவர் மேலைப்பாளயத்தில் சமாதி கொண்டுள்ள சங்கைக்குரிய யுஸுப் நாயகம் அவர்கள்.
மகான் அவர்களின் தந்தை முஹம்மத் ஸயீத் ஜல்வத் நாயகம் அவர்கள் திரு மக்கா சென்று “ஹஜ்” வணக்கத்தை முடித்து விட்டு தங்களின் தாயகம் வந்த போது தங்களின் குரு கல்வத் நாயகம் அவர்களின் கட்டளைப்படி கம்பத்தில் தொடராக பன்னிரண்டு ஆண்டுகள் “கல்வத்” இருந்து இறையடி சேர்ந்தார்கள். இவர்களி்ன திருச்சமாதி கம்பத்தில் இவர்களின் தைக்காவிலேயே உள்ளது.
அம்பா நாயகம் அவர்களின் திருப்பெயர் அப்துர் றஹ்மான். இவர்கள் அம்பா நாயகம் என்றும் கம்பம் ஹஸ்றத் என்றும் பிரசித்தி பெற்றிருந்தார்கள்.
இவர்களும் தங்களின் தந்தை போல் குறித்த தைக்காவில் இருபத்தைந்து ஆண்டுகள் கல்வத் இருந்து ஹிஜ்ரி 1420 ஜுமாதுல் ஆகிறஹ் மாதம் பிறை மூன்றில் சுமார் 72 வயதில் தாறுல் பனாவை விட்டும் தாறுல் பகாவுக்குச் சென்றார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன். இவர்களும் தங்களின் தந்தைக்கு அருகில் துயில் கொள்வது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment