தொடர் – 03
நபீ(ஸல்) அவர்கள் ஒரு சமயம் “அஜூஉ யவ்மன் வ அஷ்ப உயவ்மன்” நான் ஒரு நாள் சாப்பிடுவேன், ஒரு நாள் பசியுடனிருப்பேன் என்று கூறினார்கள்.
இன்னுமொரு சமயம் “அன இப்னும் றஅதின் தஃகுலுல் கதீத” நான் காய்ந்த இறைச்சி சாப்பிடுகின்ற ஒரு பெண்ணின் மகன் என்றும் அவர்கள் அருளினார்கள்.
இந்தக் கூற்றுக்களிலிருந்தும் நபீ(ஸல்) அவர்களின் சாப்பாடு பற்றிய விவரம் தெளிவாகிவிட்டது.
சாப்பிடும் முறை பற்றிக் கூறிய இஸ்லாம் ஒரு மனிதன் தனது வயிற்றை மூன்று பகுதிகளாக வகுத்து ஒரு பகுதிக்கு உணவும், இன்னொரு பகுதிக்கு நீரும் கொடுக்க வேண்டுமென்றும், எஞ்சிய பகுதியைக் காலியாக வைத்திருக்க வேண்டுமென்றும் கூறுகிறது. இவ்வாறு சாப்பிடுபவன்தான் மனிதன்.
இதற்கு மாறாகக் கட்டுப்பாடெதுவுமின்றி வயிறு புடைக்கச் சாப்பிடுகின்றவன் உருவத்தில் மனிதனாக இருந்தாலுங்கூட அவன் எதார்த்தத்தில் மிருகம்தான்.
நபீ(ஸல்) அவர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் தங்களின் வயிற்றை மூன்றாகவோ முப்பதாகவோ பிரிக்காமல் உணவு கிடைத்தால் உண்பார்கள் இல்லையாயின் எத்தனை நாட்களாயினும் பட்டினியுடன் இருப்பார்கள். நபீ(ஸல்) அவர்கள் பசி பட்டினியுடன் இருந்த நாட்கள்தான் அவர்களின் வாழ்க்கையில் அதிகம். நபீ(ஸல்) அவர்கள் பசியுடனிருந்ததிலும், வயிற்றில் கல்லைக் கட்டியிருந்ததிலும் மெய்ஞ்ஞான அகமிய விளக்கம் உண்டு.
நபீ(ஸல்) அவர்கள் மிதமிஞ்சி உண்ணாமலிருந்ததுபோல் வீண் விளையாட்டுக்களிலும், காம இச்சையைத் தூண்டக்கூடிய நடவடிக்கைகளிலும் ஈடுபடவுமில்லை.
மேலே சொன்ன விவரங்களிலிருந்து நபீ(ஸல்) அவர்கள் தங்களின் வாழ்க்கையில் வயிறு நிரம்பச் சாப்பிடவில்லையென்பதும், ஊட்டச் சத்துள்ள மருந்து மாத்திரைகள் பாவித்தவருமில்லையென்பதும், காம இச்சையைத் தூண்டக்கூடிய விடயங்களில் ஈடுபடவில்லையென்பதும் தெளிவாகிவிட்டன.
எனவே ஒரு மனிதனுக்குக் காம இச்சையை உண்டுபண்ணக்கூடிய உணவு வகைகளோ மருந்து வகைகளோ நபியவர்கள் உட்கொள்ளாததினாலும் காம உணர்வை தூண்டக்கூடிய எந்தவொரு நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபடாததினாலும் நபீ(ஸல்) அவர்களிடம் காம இச்சை இருந்ததென்று சொல்வதற்கு எந்த நியாயமுமில்லை.
“ஸபப்” இல்லையாயின் “முஸப்பப்” இல்லையென்பது பொதுவிதி அதாவது ஒரு காரியம் உண்டாவதற்கு அவசியமான காரணம் இல்லாமற் போனால் அந்தக் காரியமும் இல்லாமற்போய்விடும்.
ஆகையால் நபீஸல் அவர்களும், ஏனைய நபிமார்களும் பலதார மணம் புரிந்ததற்கும், ஒரு இரவில் பல மனைவிகளுடன் உடலுறவு கொண்டதற்கும் காம இச்சை காரணம் என்று சொல்ல நியாயமில்லை.
இதற்கு மாறாக காம இச்சைதான் காரணமென்று கொள்ளுதல் பழையானதும், பகுத்தறிவுக்குப் பொருந்தாததுமாகும்.
ஏனெனில் ஊட்டச் சத்துக்கள் ஒன்றுமே பாவிக்காமலும், வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் கால் வயிறுகூட நிரம்பாத அளவு சாப்பிடும், ஏனைய நாட்களில் பட்டினி பசியுடன் இருந்ததும் வருகின்ற ஒரு மனிதன் ; நாலுக்கு மேற்பட்ட மனைவியர்களை வைத்திருப்பதற்கும், அவர்களுடன் ஒரே இரவில் பல தடவைகள் உடலுறவு கொள்வதற்கும் எவ்வாறு சக்தி பெறுவான்? ஒரு மனிதனால் அது எங்ஙனம் சக்தியாகும்?
எனவே நம்மைப் போல் மிதமிஞ்சிய உணவும், ஊட்டச் சத்துக்களும் உட்கொண்டும், சக்தியை ஏற்படுத்தக் கூடிய தற்கால நவீன மருந்து மாத்திரைகள் பாவித்தும் வருகிறவர்கள் நாலுக்கு மேற்பட்ட மனைவியர்களை வைத்துக் கொள்வதும், கூடுதலாக உடலுறவு கொள்வதும் காம இச்சையினாலென்று சொன்னால் அது பிழையானதுமில்லை. பகுத்தறிவுக்கு முரணானதுமில்லை. நபீமார்கள் பெண்களை அதிகமாக விரும்பினதும், அவர்களுடன் அதிகமாக உடலுறவு கொண்டதும் அவர்களின் ஆன்மீக வேகத்தைக் கொண்டதாயிருப்பதால், அவர்களின் ஆன்மீக வேகத்திற்கேற்றவாரு நாலென்ன நானூறு மனைவியர்களையும் அவர்கள் வைத்திருக்கலாம்.
நபீஸல் அவர்கள் பெண்களை அதிகமாக விரும்பினதற்கும், அவர்களுடன் அதிகமாக உடலுறவு கொண்டதற்கும் அவர்களின் காம இச்சைதான் காரணமென்று வழிகேடர்கள் கூறுகிறார்கள்.
இவர்களின் இக்கூற்று மேலே நான் கூறிவந்த விவரங்களைக் கொண்டு மறுக்கப்பட்டுவிட்டது.
நபீமார்கள் அதிகமாகப் பெண்களை விரும்பினதும், அதிகமாக அவர்களுடன் உடலுறவு கொண்டதும் அவர்களின் சிறப்பையும், ஆன்மீகப் பலத்தையும், அதன் வேகத்தையும் காட்டுகின்றதேயல்லாமல் அவர்கள் காம இச்சையுள்ளவர்கள் என்பதையல்ல.
நபீஸல் அவர்கள் அதிகமாகப் பெண்களை விரும்பினதும், அவர்களுடன் அதிகமாக உடலுறவு கொண்டதும் அவர்களின் ஆன்மீக வேகத்தினாலேயன்றி காம இச்சையினாலில்லை என்ற கூற்றை பின்வரும் இரண்டு அம்சங்களைக் கொண்டு நிரூபிக்கலாம்.
முதலாவது அம்சம்: நபீஸல் அவர்கள் முதலில் அன்னை கதீஜா (றழி) அவர்களைத் திருமணம் செய்த பொழுது அவர்களின் வயது நாற்பதாயும், நாயகம் ஸல் அவர்களின் வயது இருபத்தைந்தாயும் இருந்தது.
நபீஸல் அவர்கள் காம இச்சைக்காகத் திருமணஞ் செய்திருந்தால் தன்னைவிட பதினைந்து வயது கூடிய ஒரு விதவையைத் திருமணம் செய்திருக்கமாட்டார்கள். மாறாக வயதில் குறைந்த கன்னியொருத்தியையே காம சுபமனுபவிப்பதற்காகத் தெரிவு செய்து மணம் புரிந்திருப்பார்கள்.
ஏனெனில் ஒரு வாலிபன் காம சுகத்தை அனுபவிப்பதற்காக ஒரு பெண்ணை மணப்பதென்றால் தன்னைவிட வயதில் குறைந்தவளையே விரும்புவான் இது மனித இயல்பு.
நபீஸல் அவர்கள் நம்போன்ற மனிதனென்றால் இவ்வியல்பு அவர்களிடமும் இருந்திருக்க வேண்டும்.
இரண்டாவது அம்சம் : அன்னை கதீஜா றழி அவர்கள் ஒரு விதவை ஏற்கனவே திருமணமாகி கணவனை இழந்தவர். ஆனால் நபீஸல் அவர்கள் ஏற்கனவே திருமணம் செய்யாதவர்கள். கதீஜா நாயகி றழி அவர்கள்தான் பெருமானார் ஸல் அவர்களின் முதல் மனைவியாவார்.
நபீஸல் அவர்கள் பெண்களைக் கூடுதலாக விரும்பியது காம இச்சையினாலென்றிருந்தால் முதல் தரமாக வயதுகூடிய ஒரு விதவையைத் திருமணம் செய்திருக்கமாட்டார்கள்.
ஏனெனில் ; முதலில் திருமணம் செய்யாத இருபத்தைந்து வயதுள்ள ஒரு வாலிபன் காம இச்சைக்காகத் திருமணம் செய்வதென்றால் ஏற்கனவே திருமணம் செய்த ஒரு விதவையை திருமணம் செய்துகொள்ள விரும்பமாட்டான். இது மனித இயல்பு.
நபீஸல் அவர்கள் நம்போன்ற மனிதனென்றால் அவ்வியல்பு அவர்களிடமும் இருந்திருக்க வேண்டுமல்லவா?
காம இச்சையினால்தான் நபீஸல் அவர்கள் கூடுதலாகப் பெண்களை விரும்பினார்கள் என்றும், அதிகமான மனைவியர்களை வைத்திருந்தார்கள் என்றும் கூறுவது மேலே நான் எழுதிக் காட்டிய காரணங்களினால் “பாதில்” வீணாகிவிட்டது.
நபீஸல் அவர்கள் நம்போன்ற மனிதனென்றால் அவர்களும் நம்மைப்போல் நான்கு மனைவியர்களுக்குமேல் திருமணம் செய்யக்கூடாதென்று சட்டம் வந்திருக்க வேண்டும். மேலும் நம்போன்ற சாதாரண மனிதனுக்குள்ள இயற்கையும், இயல்பும், சுபாவமும் அவர்களுக்கும் இருந்திருக்க வேண்டும். இதன்படி வயதில் குறைந்த, அழகில் கூடிய கன்னி ஆயிஷா றழி அவர்களின் மூலமே அதிகமான குழந்தைகள் பிறந்திருக்கவும் வேண்டும்.
இந்நியாயங்களைக் கொண்டு நபீஸல் அவர்கள் நம்போன்ற மனிதனென்ற வழிகேடர்களின் வாதம் தவிடு பொடியாயிற்று.
அண்ணலின் அழைப்பு
ஒருவன் தொழுது கொண்டிருக்கையில் அவனைத் தனது பெற்றோர், மனைவி, மக்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் உட்பட எவர் அழைத்தாலும் அவர்களின் அழைப்புக்காக அவன் தொழுகையை விட்டுவிடுவது “ஹராம்” தண்டனைக்குரிய குற்றமாகும்.
எனினும் ; தொழுது கொண்டிருக்கும் ஒருவனை நபீஸல் அவர்கள் அழைத்தால் அக்கணமே அவன் தொழுகையை விட்டுவிட்டு நபீஸல் அவர்களின் அழைப்புக்குப் பதில் கூற வேண்டும். இது அவன்மீது கடமை. அவன் பதில் கூறவில்லையாயின் கடமையான ஒரு காரியத்தை விட்ட குற்றவாளியாவான்.
“புகஹாஉ” எனும் மார்க்கச் சட்ட மேதைகள் இது பற்றித் தமது சட்ட நூல்களில் விரிவாக வரைந்துள்ளனர். அச்சட்டத்துக்கு ஆதாரமாக திருக்குர்ஆனிலிருந்து ஒரு வசனத்தைக் கூறிக் காட்டுகின்றார்கள்.
“இஸ்தஜீபு லில்லாஹி வலிர்றசூலி இதா தஆகும்”
அல்லாஹ்வும், றஸுலும் உங்களை அழைத்தால் அவர்களுக்கு நீங்கள் பதில் கூறுங்கள்.
திருக்குர்ஆன் : 08-24 –
அல்லாஹ்வும் றஸூலும் அழைத்தால் அவர்களுக்குப் பதில் கூறவேண்டுமென்பது பொதுவான கட்டளை. இக்கட்டளைப்படி நபீ ஸல் அவர்களும், அல்லாஹ்வும் தொழுது கொண்டிருப்பவனை அழைத்தால் அவன் உடனே தனது வேலையையும் வணக்கத்தையும் விட்டுவிட்டு அவர்களுக்குப் பதில் கூறுவது கடமையாகும். பதில் கூறாமல் விடுவது தண்டனைக்குரிய குற்றம்.
இத்திருவசனத்தின்படி வணக்கத்தில் இருப்பவன் கூடத் தனது வணக்கத்தை நிறுத்திவிட்டு நபீயின் அழைப்புக்கு பதில் கூறுவது கடமை என்பது தெளிவாகிவிட்டது.
நபீஸல் அவர்களின் அழைப்புக்கு வணக்கத்தை விட்டுவிட்டு பதில் கூற வேண்டுமென்று திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறியிருப்பதினாலும் “புகஹா” மார்க்கச் சட்ட மேதைகள் சட்ட நூல்களில் கூறியிருப்பதினாலும் தொழுகை போன்ற பிரதான வணக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட நபீ ஸல் அவர்களின் அழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்பது தெளிவாகிவிட்டது.
மேலே கூறிக்காட்டிய விவகாரத்தில் இருந்தும் நபீஸல் அவர்கள் நம்போன்ற மனிதனில்லை என்பது தெளிவாகிவிட்டது.
வழிகேடன் நஜ்தியினதும், அவனின் முகவர்களினதும் கூற்றுப்படி நபீஸல் அவர்கள் நம்போன்ற சாதாரண மனிதனென்றால் தொழுகின்ற ஒருவனை நாம் அழைத்தால்க்கூட அவன் தொழுகையை விட்டுவிட்டு நமக்குப் பதில் கூற வேண்டுமல்லவா? அல்லது நபீ அழைத்தாலுங்கூட தொழுகையை விட்டுவிட்டு பதில் கூறக்கூடாதென்று சட்டம் வந்திருக்க வேண்டுமல்லவா? எங்கே சட்டம் இருக்கிறது? இதற்கு என்ன சொல்வார்கள்?
தொழுகை இறைவனுடன் வசனிக்கும் ஒரு மகோன்னத வணக்கமாகும். அவ்வணக்கத்தைக்கூட விட்டுவிட்டு நபீயவர்களின் அழைப்புக்குப் பதிலளிக்க வேண்டுமென்று திருக்குர்ஆன் கட்டளையிடுகிறதென்றால் அந்த நபீ நம்போன்ற சாதாரண மனிதன்தானா? என்பதை சிந்தித்துணர வேண்டும்.
அதான் ஒலிக்காத அண்ணல்
“அதான்” பாங்கு சொல்வதிலும், “இமாமத்” இமாமாக நின்று தொழுகை நடத்துவதிலும் எது சிறந்ததென்ற கேள்விக்கு தொழுகை நடாத்துவதைவிட பாங்கு சொல்வதுதான் சிறந்ததென்று மார்க்கச்சட்ட மேதைகள் கூறுகின்றனர்.
எல்லாக் காரியங்களிலும் சிறந்ததைத் தெரிவு செய்து செயற்பட்டு வந்த நபீஸல் அவர்கள் தங்களின் வாழ்க்கையில் ஒரு தடவையேனும் பாங்கு சொன்னதாக வரலாறு கிடையாது. எனினும் பல தடவைகள் இமாமாக நின்று தொழுகை நடத்தியிருக்கிறார்கள்.
எல்லாக் காரியங்களிலும் சிறந்ததைத் தெரிவு செய்து செயற்பட்டு வந்த நபீஸல் அவர்கள் பாங்கு விஷயத்தில் செய்யாமல் விட்டதேன்? என்பதை ஆராய வேண்டும். அவர்கள் பாங்கு சொல்லாமல் விட்டதற்குக் காரணம் என்னவெனில் அவர்கள் பாங்கு சொன்னால் “ஹய்ய அலஸ் ஸலாஹ்” “ஹய்ய அலல் பலாஹ்” என்று சொல்ல வேண்டும்.
அதாவது தொழுகைக்கு வாருங்கள்; வெற்றியின் பக்கம் வாருங்கள் என்று அழைக்க வேண்டும். நபீயவர்கள் அவ்வாறு அழைத்தால் மேற்கூறிய திருக்குர்ஆன் வசனத்தின்படி அவர்களின் அழைப்பைக் கேட்டவர்கள் அனைவரும் தமது வேலைகளை விட்டுவிட்டு உடனடியாகத் தொழுகைக்கு விரைந்து சமூகமளிக்க வேண்டும். அவ்வாறு வருதல் தவிர்க்க முடியாத கடமையாகிவிடும். இதனால் உடனடியாகத் தொழுகைக்கு வரமுடியாத நிலையிலிருப்போர் அனைவரும் தண்டனைக்குரிய குற்றவாளியாகிவிடுவர்.
எனவேதான் பாங்கு சொல்வதால் மக்களுக்கு இத்தகைய சிரமம் ஏற்படுமென்பதை அறிந்த நபீஸல் அவர்கள் பாங்கு சொல்லாமல் தொழுகையை மட்டும் முன்னின்று நடத்தினார்கள். அவர்கள் “றஹ்மத்” உலக மக்களின் அருட்கொடை என்ற உண்மையை இது நிரூபித்துக் காட்டுகிறது.
இந்த விவரத்தின் மூலமாக நபீயவர்களின் அழைப்புக்குப் பதில் கூறுவது கடமையென்பது தெளிவாகிவிட்டது.
“நான் பள்ளிவாயலில் தொழுது கொண்டிருந்தபொழுது நபீஸல் அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் பதில் கூறவில்லை. தொழுகையை முடித்துவிட்டு நபீஸல் அவர்களிடம் வந்தேன். “அல்லாஹ்வின் றஸூலே! நான் தொழுது கொண்டிருந்தேன். அதனால்தான் உங்களின் அழைப்புக்குப் பதில் கூறவில்லை. என்று சொன்னேன்.
அதற்கு நபீஸல் அவர்கள் “அல்லாஹ்வும் றஸூலும் உங்களை அழைத்தால் அவர்களுக்கு பதில் கூறுங்கள்” என்ற திருமறை வசனத்தை ஓதிக்காட்டி, அல்லாஹ் இவ்வாறு சொல்லியிருப்பது உமக்குத் தெரியாதா? என்று என்னிடம் திருப்பிக் கேட்டார்கள். என்று அபூ ஸயீத் பின் அல்முஅல்லா றழி அவர்கள் கூறினார்கள்.(ஆதாரம் :புஹாரி)
தொழுது கொண்டிருக்கின்ற ஒருவனை நபீஸல் அவர்கள் அழைத்தால் அவன் உடனே தொழுகையை விட்டுவிட்டு நபீஸல் அவர்களுக்கு பதில் கூற வேண்டுமென்பது இந்த ஸஹீஹான ஹதீது மூலமாக மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது.