Friday, May 17, 2024
Homeஎழுத்தாக்கங்கள்நபீகள் நாயகம் நம் போன்ற மனிதனா?

நபீகள் நாயகம் நம் போன்ற மனிதனா?

தொடர் – 06

உடலாரோக்கியத்தையிட்டு அனைவருக்கும் ஹறாமாக்கபட்டுள்ள “விஸால்”நோன்பு நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் ஆகுமாக்கப்பட்டிருப்பதனால் அவர்கள் நம் போன்ற சாதாரண மனிதனில்லையென்பது புத்தி குறைந்தவர்களுக்குக் கூட விளங்கக் கூடிய விஷயமேயாகும்.

ஒரு மனிதன் சாப்பிடுவதால் அவனின் உடல் சக்தியோடும் ஆரோக்கியத்தோடுமிருக்கும். அவன் உணவைக் குறைத்தால் அல்லது முற்றாக அதை நிறுத்தினால் அவனின் உடல் மெலிந்தும், பலவீனமடைந்தும் போய் விடும். அதோடு நோய்களும் அவ்வுடலை தீண்டத்தொடங்கி விடும்.

இவை மனித உடலின் தன்மைகள் எனினும் மனிதனிலுள்ள ”றூஹானிய்யத்” ஆன்மீகம் பூரணத்துவம் பெற்றதாயும் சக்தி மிக்கதாயும் இருக்குமானால் அது ”ஜிஸ்மானிய்யஹ்” உடலின் தன்மைகளை மிகைத்து விடும்.

ஆன்மீகம் மிகைத்தவன் – றூஹுடைய மகாம் படித்தரத்தில் நிற்பவன் உண்ணாமலிருப்பதாலும், உறங்காமலிருப்பதாலும் அவனின் உடல் பலவீனமடையவோ, நோய்களுக்குள்ளாகவோ மாட்டாது. ஏனெனில் வெளிப்படையான நோயும், பலவீனமும் உடலுக்குள்ளவையேயன்றி றூஹ் – ஆன்மாவுக் குரியவையல்ல.

ஆன்மீகம் மிகைத்த நபிமார்களினதும், வலிமார்களினதும் வரலாறுகள் இதற்கு தக்க சான்றுகளாக உள்ளன.

இதற்குச் சான்றாக விரிவான இரு வரலாற்றை மட்டும் சுருக்கமாக இங்கு சுட்டிக்காட்டுகின்றேன்.

கொழும்பிலுள்ள பீர்ஸாஹிபு வீதிக்கு அப்படியொரு பெயர் வரக்காரணமென்னவென்று கொழும்பைச் சேர்ந்த விஷயம் தெரிந்த வயோதிபர் ஒருவரிடம் வினவிய போது அவர் பின்வருமாறு விவரித்தார்.

பீர்ஸாஹிபு வீதியில் தற்போது ”வலிய்யுல்லாஹ்” சமாதி கொண்டுள்ள “தர்ஹா” இருக்கும் இடம் அக்காலத்தில் பலாமரத் தோட்டமாக இருந்தது.

அங்கிருந்து இடிந்த கட்டிடமொன்றில் முஸ்லிம் வயோதிபர் ஒருவர் அழுக்கான கிழிந்த உடையில் வாழ்ந்து வந்தார். முஸ்லிம் மக்கள் அனைவரும் அவரை ஒரு யாசகன் என்று கணித்து அவருக்கு உதவி வந்தார்.

அவர் வாழ்ந்த கட்டிடத்தின் மறுபுறம் இவர் போல் கிழிந்த அழுக்கான ஆடையுடன் காபிரான மதகுரு ஒருவரும் வாழ்ந்து வந்தார். 

”காபிரீன்” கள் அனைவரும் அவரை ஒரு யாசகன் என்று கணித்து அவருக்கு உதவி வந்தனர்.

அந்நேரம் அந்த வீதிக்கு ”பீர்ஸாஹிபு வீதி” என்ற பெயர் இல்லாமலிருந்தது.

அவ்வீதியில் வாழ்ந்த எல்லா மத மக்களும் ஒன்று கூடி அதற்குப் பெயர் வைக்க விரும்பி ஆலோசனைநடத்திய போது அவ்விரு யாசகர்களையும் பரீட்சித்து அதில் வெற்றி பெருபவரின் பெயரை வைப்ப தென்று முடி வெடுத்தார்கள்.

யாசகர்களிருவரையும் அழைத்து உங்களிருவரையும் பரீட்சித்து அதில் வெற்றி பெருபவரின் பெயரை இவ்வீதிக்குச் சூட்ட விரும்புகிறோமென்று சொன்னார்கள்.

இருவரும் விருப்பம் தெரிவித்தனர். அவர்களிடம் நிபந்தனைகள் கூறப்பட்டன. தொடர்ந்து நாற்பது நாற்கள் இருவரையும் தனித்தனி அறையில் உணவும் நீருமின்றிப் பூட்டிவைத்தார்கள்.

பதினான்காம் நாள் காபிரான மதகுரு பூட்டிவைக்கப்பட்ட அறையிலிருந்து துர்நாற்றம் வீசத்தொடங்கியது. நாளடைவில் அது அதிகப்பட்டு அயலவர்களுக்கும் தொல்லை கொடுத்தது. மதகுரு இறந்து விட்டாரென்பதைத் தெளிவாக அவர்கள் அறிந்திருந்தும் நாற்பது நாற்களென்ற நிபந்தனையின்படி கதவு திறக்கப்படவில்லை.

நாற்பதாம் நாள் அதி காலை கதவிரெண்டும் ஒரே நேரத்தில் திறக்கபட்டன.

முஸ்லிம் துறவி தொழுகையில் ஸுஜுதுடைய நிலையில் இருக்கக் காணப்பட்டார். அவரின் அறையிலிருந்து உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் நறுமணம் கமழ்ந்தது.

ஆனால் காபிரான துறவியின் உடல் அழுகிப் புழுக்களுக்கு உணவாகிக் கிடந்தது. அதிலிருந்து எழுந்த துர்நாற்றம் கூடி நின்றவர்களை மயக்கியது.

இறுதியில் ஆன்மீகப் பலத்தால் தனது உடலின் தன்மையை வென்ற முஸ்லிம் துறவியின் பெயர் அவ்வீதிக்குச் சூட்டப்பட்டது.

அன்று முதல் இன்றுவரை அவ்வீதி ”பீர்ஸாஹிபு வீதி” என்றே அழைக்கப்படுகிறது.

இந்த வரலாறு ஆன்மீகப் பலன் கூடினவர்கள் எத்தனை நாட்களும் உண்ணாமலும், பருகாமலும் இருப்பார்கள் என்பதையும், ஆனால் அவர்களின் உடலுக்கு எவ்விதக் குறையு மேற்படாதென்பதையும் தெளிவாக விளக்குகிறது.

இவர் கூறி வந்த விளக்கத்துக்கு கொழும்பில் நடைபெற்ற ஆண்டும், திகதியுமில்லாத இத்துப்போன வரலாறொன்றையல்லவா கூறுகிறார் என்று சிலர்கேட்கக் கூடும்.

கொழும்பில் நடைபெற்ற வரலாற்றை நான் கூறியது அது அண்மைக் காலத்தில் நமது நாட்டில் நடைபெற்ற வரலாறென்பதினாலேயேயன்றி எனது கூற்றுக்கு திருக்குர்ஆனில் ஆதாரம் இல்லையென்பதினானல்ல.

திருக்குர்ஆன் கூறும் ”அஸ்ஹாபுல் கஹ்ப்” குகை வாசிகளின் வரலாறு இதற்குத்தக்க சான்றாக அமைந்துள்ளது.

அவர்கள் குகையொன்றில் முன்னூற்றொன்பது வருடங்கள் விழிக்காமல் ஒரே உறக்கத்தில் இருந்தார்கள். விழித்த பின் பூரண ஆரோக்கியமுள்ளவராகக் கானப்பட்டார்கள். முன்னூற்றொன்பது வருடங்கள் உண்ணாமலும்,பருகாமலும் ஒரே உறக்கத்திலும் அவர்கள் இருந்துங்கூட அவர்களின் உடலில் எவ்விதக் குறைபாடும் மாற்றமும் காணப்படவில்லை.

அந்தக் குகை வாசிகள் அமரர்களுமில்லை, ஜின்களுமில்லை, நபீமார்களுமில்லை, றஸுல்மார்களுமில்லை.எனினுமவர்கள் ஆன்மீகப் பலம்கொண்ட வலீமார்களேயாவர்.

ஆன்மீகப் பலம் பெற்று ”விலாயத்” ஒலித்தனம் பெற்ற வலிமார்களின் நிலை இவ்வாறுதானிருக்கும்.

ஒலித்தனம் பெற்ற வலிமார்கள் நிலை இவ்வாறென்றால் நபித்துவம் பெற்ற ஆன்மீகப் பலத்தில் வலீமார்களை வென்ற நபிகட்கரசர் முஹம்மத் (ஸல்) அவர்களின் நிலையும் எவ்வாறிருக்கும்?

எனவே அவர்களுக்கு மட்டும் ”விஸால்” திறக்காமல் தொடர்ந்து நோன்பு நோற்பது ஆகுமாக்கப்பட்டிருப்பதில் அர்த்தம் இருக்குதல்லவா?

இதுவரை கூறி வந்த விளக்கங்களிருந்து உண்ணாமலிருப்பதாலும், உறங்காமலிருப் பதாலும், உடல்பலவீனமாதல், நோய் ஏற்படுதல் போன்ற உடலின் தன்மைகளை மிகைத்த ஆன்மீகச் சக்தியுள்ளவர்கள் எத்தனையாண்டுகள் உண்ணாமலும்,பருகாமலிருந்தாலும் அதனால் அவர்களின் உடல் பலவீனமாகிவிடாதென்பதும், எத்தனையாண்டுகள் கண்விழித்தாலும் அதனால் அவர்களுக்கு எத்தகைய நோயும்ஏற்படாதென்பதும், இன்னும் நபி (ஸல்) அவர்கள் எல்லையற்ற ஆன்மீகப் பலம் வாய்ந்தவர்களாயிருந்த படியாலும் அவர்களுக்கு ”விஸால்” நோன்பு ஆகுமாக்கப்பட்ட தென்பதும் தெளிவாகி விட்டது.

நபி ஸல் அவர்களுக்கு ”விஸால்” நோன்பு ஆகுமாக்கப்பட்டிருப்பது நபி ஸல் அவர்கள் நம் பொன்ற மனிதனில்லையென்பதை நிரூபித்துக் காட்டுகிறது.

அண்ணலின் வயது அறுபத்துமூன்றல்ல

நான் இப்படியோரு தலைப்பை தெரிவு செய்து விளக்கம் எழுதக்காரணம் வழிகேடர்களின் போதனைகளும், நடவடிக்கைகளுமேயாகும்.

நபி (ஸல்) அவர்களின் தாற்பரியமும், எதார்த்தமும் புரியாத, அல்லது புரிந்திருந்தும் மனமுரண்டினால் அவர்களைக் கீழ்த்தரமாகக் கணித்து உலக மக்களுக்கு காட்டி வருகின்றவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவும், அவர்களின் அற்த்த மற்ற கூற்றுக்களை நம்பி மக்கள் வழிகேட்டில் விழுந்து விடக்கூடாதென்பதற்காகவும்தான் இத்தலைப்பை  தெரிவு செய்தேன்.

இவர்கள் மட்டுமன்றி “உலமா உர்றுஸும்” அல்லது ளாகிறுடைய உலமாக்கள் எனப்படுவோர் தமது உபதேசங்களிலும், மேடைப் பேச்சுக்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டுமென்றும் கூறுகிறார்களே தவிர நபி (ஸல்) அவர்களின் எதார்த்தம் பற்றி கூறுகிறார்களில்லை.

நபி ஸல் அவர்களை மஹப்பத் நேசிக்க வேண்டுமென்றுதான் சொல்கிறார்களேயன்றி அவர்கள் மீது நேசம் ஏற்படுவதற்கான வழியைக் காட்டிக் கொடுக்கிறார்களில்லை.

ஒருவன் இன்னொருவனை நேசிப்பதாயின் நேசிப்பவனுக்கு நேசிக்கப்படுபவன் பற்றிய முழு விவரங்களும், அவனின் சிறப்பியல்புகளும், அவனின் எதார்த்த அகமியங்களும் முதலில் தெரிந்திருக்க வேண்டும். இதுதான் ஒருவனுக்கு இன்னொருவன் மீது நேசம் ஏற்படுவதற்கான அம்சமும் வழியுமாகும்.

நேசத்தை ஏற்படுத்தக்கூடிய அம்சத்தையும், அதற்கான வழியையும் சொல்லாமல் “நேசியுங்கள் நேசியுங்கள்” என்று மட்டும் சொல்வது அறிவீனமும், பயனற்றதுமாகும். இதனால் யாருக்கும் நேசம் ஏற்பட்டுவிடாது.

இதை ஓர் உதாரணம் மூலம் தெளிவு படுத்துகிறேன்.

றபீக் என்பவனிடம் றஹீம் என்பவனைக் காட்டி இவனை நீ நேசிக்க வேண்டுமென்று சொல்வது போன்றுதான் நபி (ஸல்) அவர்களை நேசியுங்கள் என்று சொல்வதுமாகும்.

றஹீம் என்பவர் யார்? அவனின் அந்தரங்கங்கள் என்ன? அவனின் எதார்த்தம் என்ன? அவனிலுள்ள விஷேடமென்ன? அவனின் அகமியங்கள் என்ன? என்பது போன்ற விரங்கள் ஒன்றுமே றபீக்கிடம் கூறாமல் அவனிடம் றஹீமை நேசித்துக்கொள் என்று மட்டும் சொன்னால் நேசம் ஏற்படுவதற்கான அம்சம் தெரியாமல் அவன் எவ்வாறு நேசிப்பான்? அவனுக்கு எவ்வாறு நேசம்  ஏற்படும்.

எனினும்; றஹீம் என்பவன் ஓர் அறிஞன்; சிறந்த எழுத்தாளன்; திறமைமிக்க பேச்சாளன்; நற்குணமும் நல்லொழுக்கமும் உள்ளவன்; அவனின எதார்த்தம் இத்தகையது; அவனின் சிறப்பியல்புகள் இன்னின்னவை என்று கூறிக்காட்டிய பிறகு அவனை நேசித்துக்கொள் என்று கூறினால் அவனுக்கும் றஹீம் மீது நேசமும், பாசமுமத் தாராளமாக வந்து விடம்.

இவ்வாறுதான் நபி (ஸல்) அவர்களை நேசிக்குமாறு மக்களுக்குச் சொல்வதுமாகும். முதலில் அவர்களுக்கு நபி ஸல் அவர்கள் மீது பாசத்தையும், நேசத்தையும் ஏற்படுத்தக்கூடிய அம்சங்களைக் கூறிக்காட்ட வேண்டும்.

மக்களிடம் நபி ஸல் அவர்களின் எதார்த்தத்தையும், அநதரங்கத்தையும், சிறப்பையும் எடுத்து விளங்கிக் கூறாமல் நபீயை நேசியுங்களென்றும், அவர்களைப் பின்பற்றுங்களென்றும் காலமெல்லாம் கத்தித்திரிந்தாலும் அதனால் அவர்கள் காணும் பலன் ஒன்றுமே இல்லை.

எனவே நபி ஸல் அவர்களின் வயதைப் பொறுத்த அகமிய விளக்கத்தில் ஒரு சில குறிப்புகளை மட்டும் எழுதுகிறேன்.

நபி ஸல் அவர்களி கி.பி.570ல் அப்துல்லாவுக்கும் ஆமினாவுக்கும் அருந்தவப்புதல்வராக றபீஉனில் அவ்வல் பன்னிரெண்டாம் நாள் திங்கட்கிழமை அதிகாலை மக்கா நகரில் பிறந்து அறுபத்து மூன்றாண்டுகள் வாழ்ந்து இறையடி சேர்ந்தார்கள்.

இது அவர்களின் திருவுடல் தாயின் வயிற்றிலிருந்து வெளியான கணக்காகும். இதிலிருந்துதான் அவர்களின் வயது அறுப்பதுமூன்றெனக் கணிக்கப்பட்டுள்ளது.

எனினும், நபி (ஸல்) அவர்களின் எதார்த்தம் பற்றிப் பேசும் வலீமார்களும், ஞான மகான்களும் அவர்களின் திருவுடலுக்கு அறுபத்துமூன்று வயதென்பதை ஏற்றுக் கொண்டிருந்தாலும் கூட அவர்களின் எதார்த்தமென்று சொல்லப்படுகின்ற அல்ஹகீகதுல் முஹம்மதிய்யாவுக்கு இத்தனை வயதென்று எவராலும் சொல்ல முடியாதென்று கூறியுள்ளாரகள்.

ஆரீபீன்களும், அவ்லியாக்களும் தமது இக்கூற்றுக்கு காட்டியுள்ள ஆதாரங்களும் விவரங்களும் அனந்தம். அவற்றில் சிலதை மட்டும் இங்கு எழுதுகிறேன். விரிவான விளக்கம் தேவையானோர் நான் வெளியிடவுள்ள “வான்மறை மறுக்கும் வஹ்ஹாபிஸம்” என்று நூலைப் பார்த்துக் கொள்ளவும்.

உலகில் மனுக்குலத்தில் முதல் வெளிப்பாடாக நபி ஆதம் (அலை) அவர்கள் வெளிப்பட்டார்கள்.

முதலில் மனிதனான நபி ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டவுடன் தங்களின் கண்களைத் திறந்து பார்த்த பொழுது அர்ஷின் தூனில் “லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் றஸூலுல்லாஹ்” என்றெழுதப்பட்டிருந்தது கண்டு வியந்தவர்களாக “இறைவா! உண்ணுடைய பெயருடன் “முஹம்மத்” என்றொரு பெயரை இணைத்துள்ளாயே! அவர் யார்? என்று கேட்டார்கள்.

அதற்கு இறைவன் “அவர் உனது பிள்ளைகளில் ஒருவர்தான். அவர் கடைசிக்கட்டத்தில் வெளிவருவார் அவரின்ரேல் உன்னைக்கூடப்  படைத்திருக்க மாட்டேன் என்று கூறினான்.

நபி (ஸல்) அவர்கள் தந்தைக்கு முன்னுள்ள தனயனாகவும், வித்துக்கு முன் முளைத்த மரமாகவும், கருவுக்கு முன்னுள்ள குருவாகவும் விளங்குகிறார்கள்.

நபி ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்படுவதற்கு என்னிலடங்காத நவீன கொம்பியீட்டர் கருவிகளுக்கும் உட்படாத பல கோடியாண்டுகளுக்கும் முன் நபி (ஸல்) அவர்கள் படைக்கப்பட்டு விட்டார்கள்.

இதனால்தான் ஸூபிகளும், ஞானிகளும் நபி (ஸல்) அவர்களை “அபுர்நூஹ்” றூஹின் தந்தையென்றும், நபி ஆதம் (அலை) அவர்களை “அபுல் ஜிஸ்ம்” உடலில் தந்தையென்றும் வர்ணிக்கின்றார்கள். இக்கூற்றின் படி நபி ஆதம் (அலை) அவர்களுக்கு, நபி ஸல் அவர்கள் தான் றூஹின் தந்தையாவார்கள். நபி ஆதம் (அலை) அவர்கள் ஒரு வகையில் நபி (ஸல்) அவர்களுக்குத் தந்தையாகவும், இன்னோருவகையில் மகனாகவும் விளங்குகிறார்கள்.

முதல் மனிதனின் வயதைக் கட்டுப்படுத்தி விட்டாலும் கூட அவரின் பிள்ளைகளில் ஒருவரான நபி (ஸல்) அவர்களின் வயதைக் கட்டுப்படுத்திவிட முடியாது.

ஒரு சமயம் ஆதம் (அலை) அவர்கள் முதல் அனைத்து நபி மார்களுக்கும் “வஹீ” கொண்டு வந்த வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கும், நபி ஸல் அவர்களுக்கும் ஒரு  சம்பாஷனை நடந்தது.

நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் உங்களின் வயது எத்தனை? என்றுகேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல் “எனது வயது எனக்கே தெரியாது” எனினும், ஒரு விஷயத்தைக் கூறுகிறேன். அதிலிருந்து எனது வயதைக் கணித்துக் கொளுங்கள். “என்று சொன்னார்கள்.

“நாலாம் வானத்தில் ஒரு நட்சத்திரம் உண்டு. அது எழுபதாயிரம் வருடங்களுக்கொரு முறை மட்டும் வெளியாகும். அதை நான் எழுபத்திரண்டாயிரம் தடவை கண்டிருக்கின்றேன்” என்று கூறினார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் நான்தான் அந்த நட்சத்திரம் என்று புன்னகையுடன் சொன்னார்கள்.

இந்த வரலாறு “தப்ஸீர் றூஹுல் பயான்” “அல் அஸ்றாறூர் றப்பானிய்யஹ்” முதலான நூல்களில் கூறப்பட்டுள்ளது.

இந்த வரலாற்றிலிருந்து நபி ஸல் அவர்களின் வயதைக் கணக்கெடுத்தால் “ஐனூற்று நாலுகோடி”யென்று கணக்கு வந்தாலும் கூட அது சரியான வயதுக் கணக்கைத்தராது. ஏனெனில் ஜிப்ரீல் அதைக்காண்பதற்கு எத்னையாண்டுகளுக்கு முன்னாலிருந்து அது இருந்து வருகிறதென்பது அவருக்கே தெரியாத விஷயமாகும்.

எந்தவோரு மனிதனாலும் மட்டுப்படுத்திச் சொல்ல முடியாத எத்தனையோ கோடி ஆண்டுகாலம் வல்ல அல்லாஹ் சிருஷ்டிகளெதுவு மின்றித் தனித்திருந்தான்.

அப்பொழுது அல்லாஹ்வுக்கு தன்னிலே ஒரு “இஷ்க்” ஆசை ஏற்பட்டது. அவ்வாசை அவனில் சுயமாக ஏற்பட்டதேயன்றி இன்னொருவரால் வழக்கப்பட்டதல்ல.

அவன் தன்னை நோக்கி “நீ யார்? நீ அல்லாஹ் அல்லவா? உன்னில் எத்தனையோ வல்லமைகள் இருக்கின்றனவே! அவற்றை வெளிப்படுத்த வேண்டாமா? நீ மட்டும் இப்படியே இருந்து விட்டால் “றப்பு” எஜமான் என்றும் “அப்து” அடிமையென்றும், “காலிக்” படைத்தவனென்றும், “கல்கு” படைப்பு  என்றும் எவ்வாறு உன் வல்லமைகள் வெளிவரும்? உன்னிலுள்ள வல்லமைகளை வெளிப்படுத்தி நீ அவர்களைக் கண்டு மகிழ்வதற்கு உனக்கு விருப்பமில்லையா? என்றுகேட்டான்.

இறுதியில் அல்லாஹ் எடுத்த முடிவு என்ன? தன்னிலேற்பட்ட ஆசையை வெளிப்படுத்த வேண்டு மென்பதுதான்.

அல்லாஹ் இப்படியோரு முடிவு எடுத்ததினால்தான், இதை எழுதும் நானும் இதை வாசிக்கும் நீயும் வெளிவந்தோம். இன்றேல் நீயுமில்லை,நானுமில்லை. உலகுமில்லை ஒன்றுமே இல்லை.

தன்னிலுள்ள வல்லமைகள் எண்ணிலடங்காதவையாயிருந்தும் அவற்றில் முதன் முதலாக நபி (ஸல்) அவர்களின் பேரொளியைத்தான் வெளிப்படுத்தினான். படைத்தான்.

ஏனெனில்; அவனில் புதையுண்டிருந்த எண்ணற்கரிய படைப்புகளில் நபி (ஸல்) அவர்களின் ஒளிதான் அவனுக்கு மிக விருப்பமான தாயிருந்தது. இதனால்த் தான் முதலில் அவர்களின் ஒளியை வெளிப்படுத்தினான். படைத்தான்.

இது பற்றிப் பின்வரும் ஹதீதுக்குத்ஸியில் அல்லாஹ் தெளிவாக விளக்கியுள்ளான்.

“குன்து கன்ஸன் மக்பிய்யன். பஅஹ்பப்து அன் உஃறப பகலக்துல் கல்க பfபீ அறபூனி”

நான் யாருக்கும் தெரியாத மறைந்த பொக்கிஷமாயிருந்தேன். அப்பொழுது நான் அறியப்பட வேண்டுமென்று விரும்பி சிருஷ்டிகளைப் படைத்தேன் – சிருஷ்டிகள் என்னைக் கோண்டே என்னை அறிந்தன.
ஹதிதுக் குத்ஸி –
ஆதாரம்  ஈகாளுல் ஹிமம் பீஷர்கில் ஹிகம்.

இந்த ஹதீதில் “பfபீ” என்று மூன்று அறபு எழுத்துக்களைக் கொண்டு ஒரு சொல் வந்துள்ளது. இச்சொல்லுக்கு “எனவே என்னைக்கொண்டு” என்ற அர்த்தம் வரும்.

இந்த அர்த்தப்படி என்னைக் கொண்டே என்னை அறிந்தனர் என்ற கருத்து வரும்.

இது ஒரு வகையில் சரியாதாக இருந்தாலும் “பfபீ”فبي  என்ற சொல்லுக்கு தத்துவரீதியிலான இன்னோரு விளக்கமும் உண்டு. அதை இங்கு எழுதுகிறேன்.

“பfபீ” فبي  என்ற சொல்லில் மூன்றெழுத்துக்கள் உள்ளன. அவை முறையே fபே((ف, bபே(ب), யே(ي)  ஆகியன

இந்த மூன்று எழுத்துகளுக்கும் அறபு எண்கணித “அப்ஜத்” கணக்கின் படி கூட்டுத்தொகை 92 வரும். அதே போல் “முஹம்மத்” என்ற அறபுச் சொல்லிலுள்ள நான்கு எழுத்துக்களுக்கும் கூட்டுத்தொகை 92 வரும். 

எனவே, மேலே கூறிய “பfபீ” فبي என்ற சொல்லுக்கு முஹம்மதைக் கொண்டு என்னையறிந்தனர் என்று பொருள் கொள்ளவேண்டும்.

எனவே, “பfபீ” فبي  என்ற சொல்லுக்கு என்னைக் கொண்டு என்னை அறிந்தனர்” என்று விளக்கம் சொல்வதை விட “முஹம்மதை கொண்டு என்னை அறிந்தனர். என்று விளக்கம் சொவது மிகச் சிறந்ததென்று நான் கருதுகிறேன்.

ஏனெனில்; அல்லாஹ் ஒருவன் இருக்கிறானென்றும், அவன் தேவையற்றவன் என்றும்,அவன் யாரையும் பெறவில்லையென்றும், அவனை யாரும் பெறவில்லை யென்றும், அவனுக்கு நிகராக யாரும் இல்லை யென்றும், இன்னுமவன் யார்? அவனுக்கும், சிருஷ்டிக்குமுள்ள தொடர்பு எத்தகையது? என்றும் அல்லாஹ் பற்றிய விளக்கங்களைக் கூறி அவனை உலகுக்கு அறிமுகம் செய்துவைத்தவர்கள் அவர்களைத் தவிர வேறு யாருமில்லை.

இவ்வுண்மையை “ஸூறதுல் இக்லாஸ்”  விளக்கமாகக் கூறுகிறது. எனவே, நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் முதற்படைப்பாகவும், அவனை மக்களுக்கும் அறிமுகம் செய்துவைத்தவர்களாகவும் விளங்குகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் வானம், பூமி, கடல், மலை, மனு, ஜின் மற்றுமுள்ள சகல படைப்புகளை விடவும், முந்தினவர்களென்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

வானம், பூமி, கடல், மலை போன்றவற்றின் வயதை ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞானிகளும் கண்டுபிடிதாலும் கூட நபி (ஸல்) அவர்களின் வயதை எவராலும் கண்டுபிடிக்கமுடியாது. இதற்குக் காரணம் அவர்கள் முதல் சிருஷ்டியாக இருப்பதேயாகும்.

நபி ஸல் அவர்கள் தங்களுக்கும் முன்தோன்றிய நபிமார்களின் காலங்களிலும் இருந்துள்ளார்களென்பதற்குத் திருக்குர் ஆனிலிருந்து சில ஆதாரங்களை மட்டும் தருகிறேன்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments