Friday, May 17, 2024
Homeஎழுத்தாக்கங்கள்நபீகள் நாயகம் நம் போன்ற மனிதனா?

நபீகள் நாயகம் நம் போன்ற மனிதனா?

தொடர் – 05

விஸால்

“நீங்கள் தொடர்ந்து நோன்பு நோற்காதீர்கள்” என்று நபீ (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுக்குக் கூறினார்கள். அதற்கு ஸஹாபாக்கள் நீங்கள் தொடர்ந்து நோன்பு நோற்கிறீர்களே நாயகமே ! என்று கேட்டார்கள். அதற்கு நபீ (ஸல்) அவர்கள் லஸ்த்து கஅஹதின் மின்கும் நான் உங்களில் எவரைப் போன்றவனு மில்லை. நான் உண்பதற்கு உணவு தரப்படுகிறேன், குடிப்பதற்குப் பானமும் தரப்படுகிறேன் என்று கூறினார்கள்.
ஆதாரம் : புஹாரி
அறிவிப்பு : அனஸ் (றழி)

தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டாமென்று நபீ(ஸல்) அவர்கள் ஸஹாபாக்களைத் தடை செய்தார்கள்.அதற்கு ஸஹாபாக்கள், நீங்கள் தொடர்ந்து நோன்பு நோற்கிறீர்களே நாயகமே ! என்று கேட்டார்கள், அதற்கு நபீஸல் அவர்கள் நான் உங்களைப் எவரைப் போன்றவனுமில்லை. நான் உண்பதற்கு உணவு தரப்படுகிறேன். குடிப்பதற்குப் பானமும் தரப்படுகிறேன் என்று கூறினார்கள்.
ஆதாரம் : புஹாரி
அறிவிப்பு : அப்துல்லாஹ் பின் உமர் (றழி)

நீங்கள் தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டாமென்று ஸஹாபாக்க​ளைத் தடை செய்த நபீ (ஸல்) அவர்கள், உங்களில் யாராவது தொடர்ந்து நோன்பு நோற்க விரும்பினால், ஸஹர் நேரம் வரை மட்டும் தொடர்ந்து நோற்கலாம் என்று கூறினார்கள்.

அதற்கு ஸஹாபாக்கள்; நீங்கள் தொடர்ந்து நோன்பு நோற்கிறீர்களே நாயகமே! என்று வினவியதற்கு நான் உங்களைப் போன்றவனில்லை. எனக்கு உணவு தருபவன் ஒருவன் இருக்கிறான். அவன் எனக்கு உணவு தருவான். எனக்குக் குடிக்கத் தருபவன் ஒருவன் இருக்கிறான். அவன் எனக்குக் குடிக்கத் தருவான். என்று நபீ ஸல் அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : புஹாரி
அறிவிப்பு : அபூ ஸயீத் (றழி)

ஒருவன் நோன்பை விஸால்”செய்வது கூடாது. ஸஹர் செய்து நோன்பு வைத்தால் மஃரிப் நேரம் அவன் நோன்பு திறந்துவிட வேண்டும்.

மஃரிப் நேரமாகியும் நோன்பு திறக்காமல் தொடர்ந்து மறுநாள் மஃரிப் நேரம் வரைக்கும் நோன்புடனிருந்தால்.  விஸால் என்று சொல்லப்படும். இவ்வாறு செய்தல் மார்க்கத்தில் கூடாது. இது தடுக்கப்பட்ட விஷயம்.

இத்தகைய விஸால் கூடாதென்பதற்குப் பல காரணங்கள் கூறலாம். அவற்றில் பிரதான காரணத்தை மட்டும் இங்கு எழுதுகிறேன்.

ஒருவன் தனக்கு நோய் வராவண்ணம் பாதுகாத்து நடந்து கொள்வது அவனின் கடமையாகும். இன்னதைச் சாப்பிட்டால் காய்ச்சல் வருமென்று அவன் அறிந்தால் அதைச் சாப்பிடுவது கூடாது. இன்னதைச் சாப்பிட்டால் வயிற்றுவலி வருமென்று அவன் அறிந்தால் அதைச் சாப்பிடுவது கூடாது.

இதேபோல் ஒருவன் தனது உடலுக்கு நோயை அல்லது பலவீனத்தை ஏற்படுத்தக்கூடிய உணவுவகைகளை உட்கொள்வதும், அல்லது அதற்கேற்ப நடந்து கொள்வதும் கூடாது.

ஒருவன் அல்லாஹ்வை வணங்க வேண்டுமென்பது மார்க்கத்தில் வேண்டப்பட்ட விஷயம்தான். அதேபோல் ஒருவன் தன்னாலியன்ற அளவு வணக்கம் செய்ய வேண்டுமென்பதும் வேண்டப்பட்ட விஷயமேயாகும்.

எனினும் ; அதற்காக உடலைப் பாதிக்குமளவுக்கு உணவின்றியும், கண்விழித்தும் வணக்கம் செய்வது மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். ஒரு சமயம் நபீ (ஸல்) அவர்கள் பள்ளிவாயலில் நுழைந்தார்கள். அங்கே இரு தூண்களுக்கிடையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். இது யாருடைய கயிறு எதற்காகக் கட்டப்பட்டுள்ளது என்று கேட்டார்கள்.

அங்கிருந்தவர்கள், இது ஸைனப் நாயகி (றழி) அவர்களின் கயிறு. இராவணக்கம் செய்து கொண்டிருக்கும் வேளை தூக்கம் அல்லது சோர்வு ஏற்பட்டால் இக்கயிற்றைப் பிடித்துத் தொங்கித் தனக்கேற்படும் தூக்கத்தையும் சோர்வையும் போக்கி உற்சாகத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள் என்று கூறினார்கள்.

அதற்கு நபீ (ஸல்) அவர்கள் இக்கயிற்றை அவிழ்த்து விடுங்கள் என்று கூறிவிட்டு உங்களில் ஒவ்வொருவரும் தன்னால் முடிந்த அளவு வணக்கம் செய்ய வேண்டுமென்றும் கூறினார்கள்.
ஆதாரம் :புஹாரி, முஸ்லிம்
அறிவிப்பு :அனஸ் (றழி)

இந்த ஹதீது நமக்குப் பல பாடங்களைத் தருகிறது. அவற்றில் நான் எழுதிவருகின்ற தலைப்புக்குப் பொருத்தமான விஷயத்தை மட்டும் இங்கு எழுதுகிறேன்.

ஸைனப் நாயகி (றழி) அவர்கள் வணக்கம் செய்வதற்காகத்தான் அவ்வாறு செய்தார்களேயன்றி வீண் விளையாட்டுக்காகச் செய்யவில்லை.

நபீ (ஸல்) அவர்கள் அதைத் தடுத்தது வெளியரங்கத்தில் வணக்கத்தைத் தடுத்தது போலிருந்தாலும், உண்மையிலே நபீயவர்கள் வணக்கத்தைத் தடுக்கவில்லை. எனினும் ; ஸைனப் நாயகியின் உடல் நலத்தைக் கருதியே அவர்கள் அவ்வாறு செய்தார்கள்.

எனினும் வணக்கம் செய்வது வேண்டப்பட்ட விஷயமாயிருப்பதுபோல் உடலைப் பாதுகாப்பதும், உடலைப் பாதிக்கக் கூடியவற்றைத் தவிர்த்துக் கொள்வதும் வேண்டப்பட்ட விஷயம்தான்.

ஐங்காலத் தொழுகை போன்ற பர்ழ் கடமையாக்கப்பட்ட வணக்கங்கள் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தினாலுங் கூட அவைகளை விட்டு விடக்கூடாது.

எனினும் ;ஸுன்னத்தான வணக்கங்களைப் பொறுத்தவரை அவற்றால் உடலுக்குத் தீமை ஏற்படுமாயின் அவற்றைத் தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

உதாரணமாக, இரவில் நடுநிசியில் விழித்தெழுந்து தஹஜ்ஜுத் எனும் இராவணக்கம் செய்து வரும் ஒருவனுக்கு அதனால் தலையிடி, மயக்கம் போன்ற வியாதிகள் ஏற்பட்டு உடலைப் பாதிக்குமாயின் அவன் அவ்வணக்கத்தை விட்டுவிட வேண்டும்.

நோன்பு நோற்கத் தடை செய்யப்பட்ட ஆறு நாட்களைத் தவிர ஏனைய நாட்களில் நோன்பு நோற்பது பயனுள்ள ஸுன்னத்தான அமலாகும்.

எனினும் ஆகுமாக்கப்பட்ட நாட்களில் தொடர்ந்து நோன்பு நோற்று வரும் ஒருவனுக்கு அதனால் உடலில் தாக்கம் அல்லது பலவீனம் போன்றவை ஏற்படுமாயின் அவர் அந்த வழமையை விட்டு விட வேண்டும்.

ஒரு சமயம் நபீ (ஸல்) அவர்களிடம் ஒரு பெண் வந்து அல்லாஹ்வின் றஸூலே! எனது கணவர் இரவெல்லாம் நின்று வணங்குகிறார். பகலெல்லாம் நோன்பு நோற்கிறார் என்று கூறினாள்.

தனது கணவன் தன்னுடன் உடலுறவு கொள்வதில்லையென்ற கருத்தைச் சொல்கிறாள் என்பதைப் புரிந்து கொண்ட நபீ (ஸல்) அவர்கள் அவளின் கணவனை அழைத்து நீங்கள் பகலெல்லாம் நோன்பு நோற்பதாகவும், இரவெல்லாம் நின்று வணங்குவதாகவும் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, நீங்கள் இதன் பிறகு ஒரு நாள் நின்று வணங்குங்கள், மறு நாள் உறங்குங்கள். ஒரு நாள் நோன்பு வையுங்கள், மறு நாள் நோன்பை விடுங்கள்.

நீங்கள் உங்கள் உடலுக்குக் கொடுக்க வேண்டிய கடமையுண்டு. அதை அதற்குக் கொடுக்க வேண்டும். நீங்கள் உங்கள் கண்ணுக்குக் கொடுக்க வேண்டிய கடமையுண்டு. அதை அதற்குக் கொடுக்க வேண்டும். நீங்கள் உங்கள் மனைவிக்குக் கொடுக்க வேண்டிய கடமையுண்டு. அதை அவளுக்குக் கொடுத்தாக வேண்டும். கடமையுள்ள ஒவ்வொருவருக்கும் அவரவர் கடமையைக் கொடுக்க வேண்டும் என்று நபீ (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் :புஹாரி, முஸ்லிம்
அறிவிப்பு :அப்துல்லாஹ் இப்னு
அம்றிப்னில் ஆஸ் றழி

இந்த நபீ மொழியும் முதலில் கூறிய நபீ மொழிபோல் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதாக அமைந்துள்ளது.

ஒருவன் தனது உடலுக்குக் கொடுக்க வேண்டிய கடமையைக் கொடுக்க வேண்டுமென்பதுதான் இஸ்லாம் கூறும் அறிவுரையாகும்.

இந்த அறிவுரையைப் பேணாமல் மேலதிக வணக்கத்தைக் கொண்டோ, வணக்கமல்லாத வேறு விஷயங்களைக் கொண்டோ உடலைப் பாதிக்குமளவு நடந்து கொள்வது குற்றமாகும்.

நாம் சிலரைப் பார்க்கிறோம். அவர்கள் இபாதத் இபாதத் என்று இரண்டு நாட்கள் செய்கிறார்கள். மூன்றாம் நாள் உடல் பலவீனமாகி சோம்பலும், சோர்வும் ஏற்பட்டுப் பத்து நாட்கள் பர்ளு கடமையான வணக்கத்தை விட்டு விட்டுச் சும்மா இருந்து விடுகிறார்கள்.

இன்னும் சிலர் இரவெல்லாம் வணக்கம் செய்கிறார்கள். தூக்க மேலிட்டால் ஸுப்ஹுத் தொழுகையின்றி உறங்கிவிடுகிறார்கள். இவர்கள் கண்ணுக்குரிய கடமையைக் கொடுக்காதவர்களாவர்.

இன்னும் சிலர் ஞானம் ஞானமென்றும், துறவறம் துறவறமென்றும் உண்ணாமலும், உறங்காமலும், ஒழுங்காக உடுக்காமலும், மனைவி மக்கள் குடும்பமென்ற சிந்தனையில்லாமலும், பள்ளியும் ஆட்களுமாய்க் காலங்கழிக்கிறார்கள். காடுமேடுகளிலும் சுற்றித்திரிகிறார்கள். இவர்கள் மனைவி மக்களின் கடமையைக் கொடுக்காதவர்களாவர்.

அல்லாஹ் படைத்த ஒவ்வொரு படைப்பும் படைப்புக்குக் கொடுக்க வேண்டிய கடமையுண்டு. ஒவ்வொருவரும் அவரவர் கடமையைச் செவ்வனே செய்ய வேண்டும்.

உடலாரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டுதான் மேற்கூறப்பட்ட விஷயங்கள் அனைத்தும் அமைந்துள்ளன. இந்த அடிப்படையில் விளக்கப்பட்ட விஷயம்தான் விஸால் நோன்புமாகும்.

ஒருவன் ஒருநாள் சாப்பிட்டு ஸஹர் சாப்பாட்டுடன் தொடர்ந்து பல நாட்கள் நோன்பு நோற்றால் நிச்சயமாக அவனின் உடல் பலவீனமாகிவிடும். அதனால் அவனுக்குப் பலவித நோய்கள் ஏற்பட்டு அவன் மரணித்து விடவுங்கூடும். இதை அடிப்படையாக வைத்துதான் நோன்பை விஸால் திறக்காமல் தொடர்ந்து பிடிப்பது விலக்கப்பட்டுள்ளது. ஹறாமாக்கப்பட்டுள்ளது.

எனினும் நபீ ஸல் அவர்களுக்கு மாத்திரம் நோன்பை விஸால் செய்வது ஆகுமாக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments