Friday, May 17, 2024
Homeஎழுத்தாக்கங்கள்நபீகள் நாயகம் நம் போன்ற மனிதனா?

நபீகள் நாயகம் நம் போன்ற மனிதனா?

தொடர் – 02

நான் உங்களைப் போன்றவனல்ல, எனக்கு உணவு தருபவன் ஒருவன் இருக்கிறான். அவன் எனக்கு உணவு தருகிறான். எனக்குக் குடிக்கத் தருபவன் ஒருவன் இருக்கிறான். அவன் எனக்குக் குடிக்கத் தருகிறான். என நபீ ஸல் அவர்கள் அருளினார்கள்.
ஆதாரம்     : புஹாரி
அறிவிப்பு  :  அனஸ் றழி

இந்த நபீ மொழியில் நான் உங்களைப் போன்றவனில்லையென்று நபீ ஸல் அவர்கள் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.

நபீ (ஸல்) அவர்கள் நம் போன்ற மனிதனில்லையென்பதற்கு இதைவிடத் தெளிவான ஆதாரம் வேறென்னதான் வேண்டும்?

எனக்கு உணவு தருபவன் ஒருவன் இருக்கிறான். அவன் உணவு தருவான். எனக்கு குடிக்கத் தருபவன் ஒருவன் இருக்கிறான் அவன் குடிக்கத் தருவான். என்று நபீ ஸல் அவர்கள் கூறிய கூற்றில் ஆழமான தத்துவம் மறைந்துள்ளது.

ஏனெனில், உலகிலுள்ள சர்வ படைப்புகளுக்கும் உணவு கொடுக்கவும், குடிக்கக் கொடுக்கவும் அல்லாஹ் ஒருவனே இருக்க நபீ ஸல் அவர்கள் தங்களை மட்டும் குறிப்பிட்டுக் கூறியதில் ஓர் இரகசியம் இருக்க வேண்டுமல்லவா? இவ்வாறு சொல்லியிருப்பதில் இரகசியமும், தத்துவமும் இல்லையென்றால் நபீயவர்களின் கூற்றுப்படி மற்றப்படைப்புகளுக்கு உணவு கொடுப்பதும், குடிக்கக் கொடுப்பதும் யார்?

இது வரை சொன்ன விபரங்களில் இருந்து நபீ (ஸல்) அவர்கள் நான் உங்களைப் போன்ற மனிதனென்றும் நபீ யூனுஸ் பின் மத்தாவைவிட என்னைச் சிறப்பாக்கிவிடாதீர்கள் என்றும் கூறியது அவர்களின் பணிவை வெளிப்படுத்துவதற்கேயன்றி, அவர்களின் எதார்த்தத்தை வெளிப்படுத்துவதற்காக அல்ல என்ற உண்மையும், நான் உங்களைப் போன்ற மனிதனில்லையென்று அவர்கள் கூறியது அவர்களின் எதார்த்தத்தை வெளிப்படுத்துவதற்காக என்ற உண்மையும் தெளிவாகியிருக்கும்.

எனவே எதார்த்தத்திலும், அகமியத்திலும் நபீ ஸல் அவர்கள் நம்போன்ற மனிதனில்லையென்பது தெளிவாகிவிட்டது.

ஒளி

கத்ஜாஅகும் மினல்லாஹி நூறுன் வகிதாபுன் முபீன் அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஓர் ஒளியும், தெளிவான வேதமும் வந்துவிட்டன.
திருக்குர்ஆன் : 05 15

இந்த விஷயமும் வழிதவறிய கொள்கையுடையோர் மறுத்துவரும் ஒரு விஷயமேயாகும். அவர்கள் நபீ ஸல் அவர்களை ஒளியில்லையென்று கூறிவருகிறார்கள்.

மேலே கூறிய திருவசனத்தில் தெளிவான வேதம் என்று திருக்குர்அனும், ஒளியென்று நபீ(ஸல்) அவர்களும் குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.

இதிலிருந்து நபீ (ஸல்) அவர்கள் நூர் ஒளியென்பது தெளிவாகிவிட்டது.

மேலும் நபீஸல் அவர்கள் ஒளியென்பதற்கும், அவர்களின் ஒளியிலிருந்துதான் அனைத்து சிருஷ்டிகளும் படைக்கப்பட்டுள்ளன என்பதற்கும் பல ஹதீதை ஸுபிகளும் ஞானிகளும் கையாண்டுள்ளனர்.

நபீஸல் அவர்கள் ஒளியில்லை என்பதை நரூபித்துவிட ஆதாரம் தேடியலையும் இவர்கள் மேலே சொன்ன திருவசனத்தில் நபீ(ஸல்) அவர்கள் ஒளியென்று அல்லாஹ் தெளிவாகக் கூறியிருப்பது பற்றி என்ன சொல்வார்களோ?

வழிதவறியோர் கொள்கைக்கு மாறாக திருக்குர்ஆன் கூறிவிட்டபடியால் அவர்கள் தமது மனமுரண்பாட்டின் காரணமாக திருக்குர்ஆனைக்கூட மறுத்துவிடவும் கூடும்
(மஆதல்லாஹ்)

நான் கூறுகின்ற கருத்து திருக்குர்ஆனுக்கும், திருநபீயின் நிறை மொழிக்கும் மாறாக இருந்தால் எனது கருத்தைத் தூக்கியெறிந்துவிட்டுத் திருக்குர்ஆனையும், ஹதீதையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சட்ட மேதை இமாம் ஷாபிஈ றழி அவர்கள் சொல்லியிருக்க நஜ்தி ஸாஹிபும், அவரின் ஏஜெண்டுகளும் மேற்கண்டவாறு திருக்குர்ஆன் நபீ(ஸல்) அவர்கள் ஒளியென்று வலியுறுத்தியிருந்தும் அதை ஏற்றுக் கொள்ளாது மறுத்துரைத்து அவர்கள் ஒளியென்பதற்கு என்ன ஆதாரமென்று கேட்பது அவர்களின் மனமுரண்டையும், வரம்பு மீறிய முரட்டுத்தனமான பிடிவாதக் கொள்கையையுமே எடுத்துக் காட்டுகிறது.

நபீஸல் அவர்கள் ஒளியாயிருப்பதால் அவர்கள் நம்போன்ற மனிதனில்லை என்பது தெளிவாகிவிட்டது

நிழலில்லா நபி

நபீஸல் அவர்களுக்கு நிழலில்லை என்பது உலகத்து அறிஞர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்ட ஓர் உண்மையாகும்.

நம்போன்ற ஒரு சாதாரண மனிதன் வெயிலிலோ, அல்லது மின்னொளியிலோ நிற்கும்போது அவனுக்கு நிழல் விழுவதை நன்றாகக் காணமுடியும்.

எனினும் : நபீஸல் அவர்கள் வெயிலில் நின்றாலும், நிலவொளியில் நின்றாலும் அவர்களுக்கு நிழல் விழாது.

இதற்கு இரண்டு பிரதான காரணங்கள் கூறப்படுகின்றன.

ஒன்று :

நபீஸல் அவர்கள் ஒளிமயமானவர்களாயிருப்பதால் ஒளிக்கு நிழலில்லையென்ற தத்துவத்தின்படி அவர்களுக்கு நிழலில்லாமற் போயிற்று.

இரண்டு :

நபீஸல் அவர்களின் நிழல் பூமியில் விழுவதையும், அது விழுந்த இடங்களில் மக்கள் காலால் அல்லது பாதணியால் மிதித்துவிடுவதையும் விரும்பாத இறைவன் அவர்களுக்கு நிழலை கொடுக்கவில்லை.

நபீஸல் அவர்களுக்கு நிழலில்லாமற் போனதற்கு மேற்கூறப்பட்ட இரண்டு காரணங்களல்லாத வேறு காரணங்கள் உண்டு. காரணம் எதுவாயிருந்தாலும் அவர்களுக்கு நிழலில்லையென்பது மறுக்க முடியாத ஓர் உண்மையாகும்.

இவர்கள் சொல்வதுபோல் நபீஸல் அவர்கள் நம்போன்ற சாதாரண மனிதனாயிருந்தால் அவர்களுக்கு நம்போன்ற நிழல் இருக்கவேண்டு மல்லவா?

எனவே இதிலிருந்து நபீஸல் நம்போன்ற மனிதனில்லையென்பது வௌ்ளிமடைபோல் விளங்கும்.

வியர்வை

நபீஸல் அவர்களின் வியர்வை கஸ்தூரி வாசமுள்ளது. அவர்களின் உடலிலும், கஸ்தூரி மணமே கமழ்ந்து கொண்டிருக்கும்.

நபீஸல் அவர்கள் ஒரு வழியால் போனார்களாயின் அவர்கள் நடந்து சென்ற அவ்வழியில் மூன்று நாள்வரை கஸ்தூரி மணம் கமழ்ந்துகொண்டே இருக்கும். அம்மணத்தைக் கொண்டு அவ்வழியால் நபீஸல் அவர்கள் போயுள்ளார்களென்பதை ஸஹாபாக்கள் அறிந்து கொள்வார்கள் அவர்கள் கஸ்தூரி மணங்கமழும் எம்மான்.

நபீஸல் அவர்கள் ஒரு வழியால் சென்றார்களாயின், அவ்வழியால் செல்பவர்கள் நபிகளாரின் வியர்வையின் நறுமணத்தைக் கொண்டு அவர்கள் அவ்வழியால் சென்றுள்ளார்கள் என்பதை அறிந்து கொள்வார்கள்.

ஆதாரம்      :தாரமீ
அறிவிப்பு : ஜாபிர் றழி

நபீஸல் அவர்களின்  வியர்வையை ஸஹாபாக்கள் மிகப் பக்குவமாக எடுத்துச் சிறிய சீசாக்களில் வைத்துக் கொள்வார்கள். அத்தர் போன்ற வாசனைத் திரவியங்களுக்குப் பதிலாக அதைப் பாவித்து வந்தார்கள்.

நபீஸல் அவர்கள் நம்போன்ற மனிதனென்றால், அவர்களின் வியர்வையிலும், உடலிலும் கஸ்தூரி மணம் கமழ்ந்திருக்குமா? அதில் கஸ்தூரி மணம் கமழ்ந்திருக்காவிட்டால் நபித்தோழர்கள் அதை பக்குவமாக பாதுகாத்து அத்தர் போன்ற வாசனைத் திரவியங்களுக்குப் பதிலாக பாவித்திருப்பார்களா?

இவர்கள் சொல்வதுபோல் நபீஸல் அவர்கள் நம்போன்ற சாதாரண மனிதனாயிருந்தால், அவ்வாறு சொல்லுவோரின் வியர்வையிலும் கஸ்தூரி மணம் கமழ்ந்திருக்க வேண்டுமல்லவா? அதை அவர்களின் பக்தர்கள் பக்குவமாக எடுத்து போத்தல்களில் அடைத்து வாசனைத்திரவியமாக பாவித்திருக்கவும் வேண்டுமல்லவா? இவ்வாறு நடந்ததோ? இதற்கு வரலாறுதான் உண்டா?

வியர்வை தொடர்பாகச் சொல்லப்பட்ட விபரத்திலிருந்தும் நபீஸல் அவர்கள் நம்போன்ற மனிதனில்லை என்பது தெளிவாகிவிட்டது.

சுவடு

கால் பாதச் சுவடுகள் பதியக்கூடிய மணல் போன்ற இடத்தில் நபீஸல் அவர்கள் நடந்தால், அவர்களின் காலடிச்சுவடுகள் மணலில் பதியாது. எனினும்; கல், பாறை போன்ற சுவடுகள் பதிய முடியாத இடத்தில் நபீயவர்கள் நடந்தார்களாயின், அவற்றின்மேல் திருப்பாதங்களின் சுவடுகள் பதிந்துவிடும்.

நஜ்திஸாஹிபு சொல்வதுபோல் நபீஸல் அவர்கள் நம்போன்ற மனிதனென்றால் நமக்கும் இத்தன்மை இருக்க வேண்டுமல்லவா? அல்லது அவரின் ஏஜென்டுகளில் ஒருவருக்காவது இருக்க வேண்டுமல்லவா? இதற்கு வரலாறு உண்டா?

சுவடு தொடர்பாக நான் எழுதிய விபரத்திலிருந்தும் நபீஸல் அவர்கள் நம்போன்ற மனிதனில்லையென்பது தெளிவாகிவிட்டது.

திருமணம்

திருக்குர்ஆனின் தீர்ப்பின் படியும், ஹதீதுகளின் தீர்ப்பின் படியும் “புகஹாஉ” சட்டக்கலை மேதைகளின் தீர்ப்பின்படியும் ஒருவர் ஒரே நேரத்தில் நான்கு பெண்களை மட்டும்தான் திருமணம் செய்யலாம். நான்கு பெண்களை மனைவியர்களாக வைத்திருக்க முடியும். நாலுக்குமேல் திருமணம் செய்வது அதாவது ஏக காலத்தில் நான்கு மனைவியர்களுக்குமேல் வைத்திருப்பது “ஹராம் தண்டனைக்குரிய குற்றமாகும்.

எனினும் நபீஸல் அவர்களுக்கு மாத்திரம் ஏக காலத்தில் நான்கு மனைவியர்களுக்குமேல் திருமணம் செய்து கொள்ள அனுமதியுண்டு.

நபீஸல் அவர்கள் வபாத் இறையடி சேர்ந்த நேரம் ஒன்பது மனைவியர் உயிருடன் இருந்தார்களென்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. நபியவர்களின் வபாத்துக்குமுன் ஏக காலத்தில் பதின்மூன்று மனைவியர் இருந்ததற்கும் ஆதாரமுண்டு.

நபீஸல் அவர்கள் நம்போன்ற மனிதனென்றால் நபியவர்களும் ஏககாலத்தில் நான்கு திருமணங்களுக்குமேல் செய்திருக்கக் கூடாது. அல்லது நாமும் அவர்கள்போல் நாலுக்குமேல் திருமணம் செய்யலாமென்று சட்டம் வந்திருக்க வேண்டும்.

ஒரே நேரத்தில் நாலுக்கு மேற்பட்ட மனைவியர்களை வைத்திருக்க நபீஸல் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதில் ஓர் இரகசியமுண்டு.

நபீமார்கள் நாலுக்கு மேற்பட்ட மனைவியர்களை வைத்திருந்ததற்கும் நபீ ஸுலைமான் அலை அவர்கள் ஒரே இரவில் ஐந்நூறு மனைவியர்களுடன் உடலுறவு கொண்டதற்கும், நபீஸல் அவர்கள் ஒரே இரவில் ஒன்பது மனைவியர்களுடன் உடலுறவு கொண்டதற்கும், ஹதீதுக் கிரந்தங்களிலும், வரலாற்று நூல்களிலும் ஆதாரங்கள் உள்ளன.

நபீமார்களுக்கு பல மனைவியர் தேவைப்பட்டதற்கும், அவர்கள் ஒரே இரவில் பல தடவை உடலுறவு கொண்டதற்குமுள்ள காரணம் பற்றிச் சுருக்கமாக எழுதுகிறேன். நான் கூறப்போதும் காரணத்தைத் தெரிந்து கொள்ளுமுன் நபீமார்களுக்கு அதிகமான மனைவியர் தேவைப்பட்டதற்கும், ஒரே இரவில் பல தடவை உடலுறவு கொண்டதும் ஷஹ்வத் எனும் காம இச்சையினாலா? அல்லது வேறு காரணத்தினாலா? என்பதை அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

ஷஹ்வத் எனும் காம இச்சையினாலென்று வைத்துக் கொண்டால் நபீமார்கள் காம இச்சைக் கூடினவர்களென்ற கருத்து வந்துவிடும். இக்கருத்து நபீமார்களின் அந்தஸ்த்தைப் பொறுத்துப் பிழையான கருத்தாகும்.

இக்கருத்து இரண்டு வகையில் பிழையென்று நிரூபிக்கலாம்.

ஒன்று காம இச்சையென்ற இகழப்பட்ட குணம் இல்லாமை.

இரண்டு அதற்கான காரணம் இல்லாமை.

காம இச்சையென்பது இகழப்பட்ட குணமேயன்றி புகழப்பட்ட குணமில்லை. இகழப்பட்ட குணமொன்றும் நபீமார்களிடம் இருக்காது. அவர்களனைவரும், குறிப்பாக நபீஸல் அவர்களும் சகல தீக்குணங்களைவிட்டும் பாதுகாக்கப்பட்ட பரிசுத்தவான்களாவார்கள். எனவே நபீமார்கள் அதிகமான திருமணம் செய்ததும், அதிகமாக உடலுறவு கொண்டதும் காம இச்சையினாலில்லையென்பது தெளிவாகிவிட்டது.

காம இச்சையென்பது மிதமிஞ்சி உண்பதாலும், பல்வேறு ஊட்டச் சத்துக்களுள்ள உணவு, மருந்து மாத்திரைகள் சாப்பிடுவதாலும், காம உணர்வைத் தூண்டக்கூடிய நடவடிக்கைகளினாலும் ஏற்படக்கூடிய ஒன்றாகும். இவைதான் காம இச்சைக்கு அடிப்படைக் காரணங்களாக விளங்குகின்றன.

நபீமார்கள் பரிசுத்தமானவர்கள், உயர் குணங்கள் நிறைந்தவர்கள் மேலே கூறிய இகழப்பட்ட இக்காரணங்களிலொன்றும் நபீமார்களிடம் காணப்படவில்லை. நபீமார்களிலெவரும் மிதமிஞ்சி உண்டதாகவோ, ஊட்டச்சத்துக்கள் பாவித்ததாகவோ, காம இச்சையைத் தூண்டக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவோ வரலாறு எதுவுமில்லை.

நபீஸல் அவர்களின் வீட்டில் தொடர்ந்து மூன்று நாட்கள் அடுப்பு எரிந்ததில்லையென்று ஹதீதுகள் கூறுகின்றன.

அதாவது நபீஸல் அவர்களின் வீட்டில் தொடர்ந்து மூன்று நாட்கள் எதுவுமே சமைக்கப்படவில்லையென்றும் அந்த ஹதீதுகள் கூறுகின்றன.

அகழ்ப் போரின்போது ஒரு ஸஹாபி நபித்தோழர் கடும் பசியால் தனது வயிற்றில் ஒரு கல்லைக் கட்டிக் கொண்டிருந்தார். பசியை சமாளிப்பதற்காக அவர் அவ்வாறு செய்தார்.

போர் செய்து நின்ற அவர் ஒரு கட்டத்தில் பசியைத் தாங்க முடியாதவராய் நபீஸல் அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் றஸூலே ! இதோ பாருங்கள்” என்று தனது சட்டையை உயர்த்திக் காட்டினார். அவரின் வயிற்றில் ஒரு கல் கட்டப்பட்டிருப்பதைக்கண்ட நபீஸல் அவர்கள் தங்களின் சட்டையை புன்னகையுடன் உயர்த்திக் காட்டினார்கள். என்னே புதுமை ! நபீயவர்களின் திருவயிற்றில் மூன்று கற்கள் கட்டப்பட்டிருந்தன.

இவ்வரலாறும் தொடர்ந்து மூன்று நாட்கள் அடுப்பு எரிக்கப்படவில்லையென்ற வரலாறும், நபீஸல் அவர்களின் சாப்பாடுபற்றிய விளக்கத்தை விளக்குகின்றது. 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments