தொடர் – 04
இறை கூறும் சிறப்புரைகள்
நபீ ஸல் அவர்கள் உடலமைப்பில் நம்போன்றிருப்பினும், எதார்த்தத்திலும், அந்தஸ்த்திலும் அவர்கள் நம்மைப்போன்றவர்களில்லை என்பதற்கு இறைவன் கூறிக்காட்டும் சில சிறப்புரைகளை இங்கு அவதானிப்போம்.
“லா தஜ்அலூ துஆ அர்றஸுலி பைனகும் கதுஆஇ பஃளிகும் பஃளா”
உங்களுக்கிடையில் ஒரு சிலர் மறுசிலரை அழைப்பதுபோல் நபீயவர்களை அழைப்பதை ஆக்கிக் கொள்ளாதீர்கள்.
திருக்குர்ஆன் :24 – 63
இம்மறை வசனத்திற்கு இரண்டு விதமாக விளக்கம் எழுதப்பட்டுள்ளது.
ஒன்று : நீங்கள் றஸூல் அவர்களைப் பகைப்பட்டுக் கொள்ளும் பட்சத்தில் அவர்கள் உங்களுக்குப் பாதகமாகக் கேட்கும் “துஆ”வை நீங்கள் உங்களுக்குக்கிடையில் கேட்கும் துஆவைப் போன்று ஆக்கிவிடாதீர்கள், எண்ணிக் கொள்ளாதீர்கள்.
அதாவது நபீஸல் அவர்கள் ஒருவனுக்குப் பாதகமாகக் கேட்கும் துஆவுக்கும், மற்றவர்களில் ஒருவர் இன்னொருவருக்குப் பாதகமாகக் கேட்கும் துஆவுக்குமிடையில் வித்தியாசம் உண்டு.
நபீஸல் அவர்களின் துஆ எவ்வித தங்குதடையுமின்றி “கபூல்” ஏற்றுக் கொள்ளப்படும். மற்றவர்களின் துஆவுக்கு இந்த உத்தரவாதமில்லை.
மேலே சொன்ன திருவசனத்திற்கு இப்படியும் ஒரு விளக்கம் உண்டு இந்த விளக்கம் மேற்கூறிய திருவசனத்தில் வந்துள்ள துஆ என்ற சொல்லுக்குப் “பிரார்த்தனை” என்று அர்த்தம் வைத்துக் கொண்ட படியேயாகும்.
இரண்டு : உங்களில் ஒரு சிலர் மறுசிலரை அழைக்கும் பொழுது அவர்களின் பெயர்களைக்கூறி இப்றாஹீமே என்றும், இஸ்மாயீலே என்றும் அழைப்பதுபோல் நபீஸல் அவர்களை அவர்களின் பெயர் கொண்டு முஹம்மதே ! என்று அழைக்காதீர்கள்.
நீங்கள் அவர்களை அழைப்பதாயின் “யாறஸூலல்லாஹ்” என்றோ “யாநபிய்யல்லாஹ்” என்றோ கௌரவமாக அழையுங்கள்.
இந்த விளக்கம் மேற்கூறிய திருவசனத்தில் வந்துள்ள “துஆ” என்ற சொல்லுக்கு “அழைத்தல்” என்று அர்த்தம் வைத்துக்கொண்ட படியேயாகும்.
இத்திருவசனத்தின்படி நம்மில் ஒரு சிலர் மறுசிலரை பெயர் குறிப்பிட்டு முஹம்மதே ! என்று அழைக்காமல் “யாநபிய்யல்லாஹ், யாறஸூலல்லாஹ், யாஹபீபல்லாஹ்” என்பன போன்ற கௌரவமான வார்த்தைகளைக் கொண்டு அழைப்பது கடமையென்பதும், இவ்வாறு அழைக்காமல் அவர்களின் பெயர் கொண்டழைப்பது தண்டனைக்குரிய குற்றமென்பதும் தெளிவாக விளங்கிவிட்டது.
மேலே எழுதிக்காட்டிய திருவசனத்துக்கு இரண்டு விதமாக அர்த்தம் வைத்துக் கொண்டாலும் அவை இரண்டும் நபீஸல் அவர்களின் சிறப்பைத்தான் விளக்குகின்றன.
வழிகேடர் சொல்வதுபோல் நபீ(ஸல்) அவர்கள் நம்போன்ற சாதாரண மனிதனாயிருந்தால் நாம் நமது நண்பர்களை பெயர் சொல்லி அழைப்பது போல் அவர்களையும் பெயர் சொல்லி அழைக்கலாமல்லவா? அவர்கள் நம்போன்ற சாதாரண மனிதனாயிருந்தால் பெயர் சொல்லி அவர்களை அழைப்பதை திருக்குர்ஆன் தடுத்திருக்காதல்லவா?
நபீ(ஸல்) அவர்கள் நம்போன்ற சாதாரண மனிதனாயிருந்தால் அவர்களின் “துஆ” பிரார்த்தனை மட்டும் “கபூல்” ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு இறைவனின் உத்தரவாதம் தேவையில்லையல்லவா?
இன்னொரு வசனத்தைப் பாருங்கள். இதிலும் நபீஸல் அவர்களின் எதார்த்தச் சிறப்பை அல்லாஹ் எடுத்துரைத்துள்ளான்.
“யா அய்யு ஹல்லதீன ஆமனூ லாதர்பஊ அஸ் வாதகும்பவ்க ஸவ்தின் நபிய்யி வலா தஜ்ஹறூலஹூ பில்கவ்லி கஜஹ்ரி பஃளிகும் லிபஃளின் அன் தஹ்பத அஃமாலுகும் வ அன்தும் லாதஷ் உறூன்”
“விசுவாசிகளே நபீ பேசும் பொழுது நபீயினுடைய சப்தத்திற்கு மேல் உங்களின் சப்தத்தை உயர்த்திப்பேசாதீர்கள். அன்றி, உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் உரக்கப் பேசுவதைப்போல் அவரிடம் சப்தத்தை உயர்த்தி நீங்கள் உரக்கப் பேசாதீர்கள். ஏனெனில் உங்களின் நன்மையான செயல்களெல்லாம் பயனற்றுவிடும். இதனை நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள்.”
திருக்குர்ஆன் : 49 – 02
நம்மில் ஒருவர் மற்றொருவருடன் பேசும்பொழுது எவ்வித கட்டுப்பாடுமின்றி விரும்பியவாரு பேசமுடியும். ஒருவர் மற்றவரைவிடச் சப்தத்தை உயர்த்தியும் பேசலாம், தாழ்த்தியும் பேசலாம். இதுபற்றி மார்க்க ரீதியான தடை ஒன்றுமில்லை.
எனினும்; நபீஸல் அவர்களுக்கு முன்னால் இருப்பவர்கள் நபீயைவிட சப்தத்தைத் தாழ்த்திப் பேச வேண்டுமேயன்றி அவர்களைவிடச் சப்தத்தை உயர்த்திப் பேசக்கூடாது. அது தண்டனைக்குரிய குற்றமாகும்.
ஒருவன் அவ்வாறு பேசினால் அவன் ஆயிரம் கோடி வருடம் வயது கொடுக்கப்பட்டு அத்தனை வருடங்களும் இடையறாது வணக்கம் செய்தாலுங்கூட அவனின் அமல்களெல்லாம் அழிந்துபோதும். பயனற்றுப் போய்விடும்.
ஒருவர் நபீ(ஸல்) அவர்களின் சப்தத்தைவிடத் தனது சப்தத்தை உயர்த்திப் பேசுவதைத் தடைசெய்ததோடு மட்டும் அல்லாஹ் நின்றுவிடவில்லை. அவ்வாறு செய்பவர்களின் அமல்கள்கூட அழிந்துபோகுமென்றும் கூறியுள்ளான். எச்சரிக்கைக்கு மேல் எச்சரிக்கை இது எதனால்?
நபீ(ஸல்) அவர்களின் சப்தத்தைவிடத் தனது சப்தத்தை உயர்த்திப் பேசுபவனின் அமல்கள் அழிக்கப்படுகின்றன என்ற இறைவனின் கூற்று நபீ(ஸல்) அவர்களின் அந்தஸ்த்து எத்தகையதென்பதைத் தெளிவாக விளக்குகிறது.
திருக்குர்ஆனின் ஆதாரப்படியும், திரு நபீயின் நிறைமொழி தரும் ஆதாரப்படியும் ஒருவன் செய்த நல்லமல்கள் அவன் கொலை செய்வதினாலோ, கொள்ளையடிப்பதினாலோ விபச்சாரம் செய்வதினாலோ அழிந்துவிடமாட்டாது. அழிக்கப்படவுமாட்டாது. அவன் செய்த நல்லமல்கள் நல்லமல்களாகவே இருக்கும். எனினும் ; மேலே சொல்லப்பட்ட பாவச் செயல்களுக்கெல்லாம் அவனுக்குத் தண்டனை வழங்கப்படும் அவ்வளவுதான்.
ஆனால் நபீ(ஸல்) அவர்களின் சமூகத்திலே ஒருவன் அவர்களின் சப்தத்தைவிடத் தனது சப்தத்தை உயர்த்திப் பேசிவிட்டால் அவன் செய்த நல்லமல்களெல்லாம் அழிந்துவிடுமென்று திருக்குர்ஆன் கூறுகிறது.
ஆக, முன் கூறப்பட்ட கொலை, களவு, விபச்சாரம் போன்ற பாவச் செயல்களைவிட நபீயவர்கள் முன் சப்தத்தையுயர்த்திப் பேசுவது பெரும் பாவமென்பதும், அதன் காரணமாக ஏற்கனவே செய்த நல்லமல்கள் அழிக்கப்பட்டு விடுமென்பதும் தெளிவாகிவிட்டது.
ஒரு மனிதனின் அமல்கள் அவன் செய்கின்ற எந்த ஒரு பாவச்செயலாலும் அழிந்து போகமாட்டாது. எனினும் “ரித்தத்” எனும் மதமாற்றத்தின்மூலம் மட்டும்தான் ஒருவனின் நல்லமல்களெல்லாம் அழிந்து போகின்றன.
இதிலிருந்து நபீஸல் அவர்களின் சப்தத்தைவிடத் தனது சப்தத்தை உயர்த்திப் பேசினவன் எதார்த்தத்தில் மதம் மாறினவனாயிருப்பதினால்தான் அதைக் கொண்டு அவனின் அமல்கள் அழிந்துவிடுகின்றன என்று திருக்குர்ஆன் கூறியுள்ளது.
எனவே ஒருவன் நபீ(ஸல்) அவர்களின் சப்தத்தைவிடத் தனது சப்தத்தை உயர்த்திப்பேசினால் அவன் மதம் மாறிவிடுகிறானென்ற கருத்தும் இங்கே சூசகமாகச் சொல்லப்பட்டுள்ளது விளங்கப்படுகிறது.
எனினும் நபீ(ஸல்) அவர்களை இழிவுபடுத்தும், அல்லது கீழ்த்தரமாக கருதும் நோக்கத்தில் ஒருவன் அவர்களின் சப்தத்தைவிடத் தனது சப்தத்தை உயர்த்திப் பேசினால் அவன் காபிராகிவிடுகிறானென்பதில் எவ்வித கருத்து வேறுபாடும் இஸ்லாத்தில் இல்லை.
ஆனால் இழிவுபடுத்தும் நோக்கமின்றி சப்தத்தை உயர்த்திப் பேசுவது குற்றத்தை மட்டும் ஏற்படுத்துமேயன்றிக் “குப்ரை” ஏற்படுத்தாதென்று அறிஞர்கள் அனைவரும் ஒருமித்துக் கூறியுள்ளார்கள்.
மேலே எழுதிக்காட்டிய திருவசனத்தில் “நீங்கள் நபியைவிடச் சப்தத்தை உயர்த்திப் பேசுவதால் மட்டுமே உங்கள் அமல்களெல்லாம் அழிந்துவிடும்” என்ற அல்லாஹ்வின் ஆணையிலிருந்து உயர்த்திப் பேசுதல் “குப்ரை” ஏற்படுத்தி விடுமென்ற கருத்து சூசகமாகச் சொல்லப்பட்டுள்ளது.
இத்தகைய சிறப்பு உலகில் நபீஸல் அவர்களல்லாத வேறெவருக்கும் வழங்கப்பட்டிருக்கின்றனவா?
நபீஸல் அவர்களின் சப்தத்தைவிடத் தனது சப்தத்தை உயர்த்திப் பேசியவனின் நிலை இத்தகையதென்றால் அவர்களைத் தரக்குறைவாய் நினைத்தவனின் நிலையும் எத்தகையதென்பதை யூகித்துப்பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.
மேலே கூறிக்காட்டிய திருக்குர்ஆன் வசனங்களைக் கொண்டும் நபீ(ஸல்) அவர்கள் நம்போன்ற மனிதனில்லை என்பது தெளிவாகிறது.
பிறப்பின் சிறப்புக்கள்
நபீ(ஸல்) அவர்கள் பிறக்கும்பொழுது தலைக்கு எண்ணையிடப்பட்டவர்களாயும், “கத்னா” எனும் விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களாயும், கண்களுக்கு சுறுமா இடப்பட்டவர்களாயும், புன்னகைத்தவர்களாயும், தொழுகையில் “ஸூஜூது” செய்யும் அமைப்பில் இரு கைகளையும் பூமியில் ஊன்றித் தலையைச் சற்று உயர்த்தினவர்களாயும், வலது கைச் சுட்டு விரலைக் கொண்டு “ஒன்று” எனச்சுட்டிக் காட்டினவர்களாயும் பிறந்தார்கள்.
நபீ(ஸல்) அவர்கள் நம்போன்ற சாதாரண மனிதனாயிருந்தால் இத்தகைய பிறப்பம்சச்சிறப்புக்களும், விஷேசங்களும் அவர்களுக்கு இருக்குமா? அவர்கள் நம்போன்றவரென்றால் நமக்கும் இத்தகைய சிறப்புக்களும், விஷேசங்களும் இருக்க வேண்டுமல்லவா?
மனிதருள் மாணிக்கம், மாநிலத்தின் மறுவிலாதெழுந்த முழுமதி சம்பூரணோதயம் ஸர்தார் (ஸல்) அவர்களைத் தவிர வேறு யார்தான் இத்தகைய சிறப்பம்சங்களுடன் இப்பாரினில் பிறந்தார்?
அல்லாஹ்வை நினைக்கும் தொழுகையில் அண்ணலையும் நினைக்க வேண்டும்
ஒரு மனிதன் தொழுகையில் அல்லாஹ் அல்லாத எந்த ஒரு சிருட்டியை முன்னிலைப்படுத்திப் பேசினாலும் அவனின் தொழுகை “பாதில்” வீணாகிவிடும்.
தொழுகையில் அல்லாஹ்வை மட்டும்தான் முன்னிலைப்படுத்திப் பேசமுடியுமேயன்றி வேறெவரை முன்னிலைப்படுத்திப் பேசினாலும் தொழுகை வீணாகிவிடும். இதுதான் “புகஹாஉ” சட்டமேதைகளின் தீர்க்கமான முடிவு.
ஒருவன் தும்மிவிட்டு “அல்ஹம்துலில்லாஹ்” என்று சொன்னதை இன்னொருவன் கேட்டால் அதற்குப் பதிலாக “யர்ஹமுகல்லாஹ்” அல்லாஹ் உனக்கு அருள் செய்வானாக என்று கூற வேண்டும். இது பொதுவான ஒரு சட்டம்.
எனினும் தும்மிய ஒருவன் “அல்ஹம்துலில்லாஹ்” என்று சொன்னதைத் தொழுது கொண்டிருக்கின்ற இன்னொருவன் கேட்டால் வழமையாகப் பதில் சொல்வதுபோல் தும்மினவனை முன்னிலைப்படுத்தி “யர்ஹமுகல்லாஹ்” என்று சொன்னால் அவனின் தொழுகை “பாதில்” வீணாகிவிடும்.
எனினும், தொழுது கொண்டிருப்பவன் தும்மினவனுக்குப் பதில்கூற விரும்பினால் அவனை முன்னிலைப்படுத்தாமல் “யர்ஹமுஹூல்லாஹ்” அவனுக்கு அல்லாஹ் அருள் செய்வானாக என்று படர்க்கையில் மட்டும் சொல்ல முடியும்.
தொழுகையில் அல்லாஹ் அல்லாத வேறெவரையும் முன்னிலைப்படுத்தக் கூடாதென்பதை இச்சட்டம் வலியுறுத்துகிறது. உணர்த்துகிறது.
“ஷரீஅத்” இவ்வாறிருக்கும் பொழுது தொழுகையில் “அத்தஹிய்யாத்” ஓதும் பொழுது “அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்நபிய்யு” நபீயே உங்கள் மீது “ஸலாம்” உண்டாவதாக ! என்று நபீஸல் அவர்களை முன்னிலைப்படுத்திக் கூற வேண்டுமென்று “ஷரீஅத்” சட்டம் கூறுகிறது.
“ஹுஜ்ஜதுல் இஸ்லாம் அபூஹாமித் முஹம்மது கஸ்ஸாலி றஹ்” அவர்கள் “இஹ்யாஉ உலூமித்தீன்” என்னும் தங்களின் ஸுபிஸ நூலில் ஒரு மனிதன் தனது தொழுகையில் “அத்தஹிய்யாத்” ஓதும் பொழுது “அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்நபிய்யு” என்று சொல்லும் வேளை நபீ(ஸல்) அவர்களை தனது மனக்கண் முன் நிறுத்தி அவர்களை முன்னிலைப்படுத்தி “ஸலாம்” சொல்ல வேண்டுமென்று எழுதியுள்ளார்கள்.
தொழுகையில் “அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்நபிய்யு” என்று “ஸலாம்” சொல்லும்பொழுது நபீ(ஸல்) அவர்களின் உருவத்தைக் கற்பனை செய்ய வேண்டுமென்றும், அவர்களை முன்னிலைப்படுத்த வேண்டுமென்றும் சொல்லப்பட்டிருப்பதிலிருந்து நபீயவர்களின் அந்தஸ்து எத்தகையதென்பது தெளிவாகிவிட்டது.
அவர்களுக்கு மட்டும் இவ்விஷயத்தில் விதிவிலக்கப்பட்டதிலிருந்து அவர்கள் நம்மைப் போன்ற மனிதனில்லையென்பது தெளிவாகிவிட்டது.
நபீ(ஸல்) அவர்கள் நம்மைப்போன்ற மனிதனென்றால் தொழுகையில் அவர்களை முன்னிலைப்படுத்தினால் தொழுகை பாதிலாகி – வீணாகிவிட வேண்டும். ஆனால் தொழுகையின் போது “அத்தஹிய்யாத்தில்” அவர்களை நினைத்து முன்னிலைப்படுத்தி “ஸலாம்” கூறவில்லையென்றால்தான் தொழுகை வீணாகிவிடுமென்று அறிவுக்கடல் இமாம் கஸ்ஸாலி (றஹ்) அவர்களும், மற்றும் ஸுபிகளும் ஞானிகளும் கூறுகின்றார்கள்.
தொழுகையில் நபீஸல் அவர்களை முன்னிலைப்படுத்தி அவர்களுக்கு ஸலாம் கூறுவது கட்டாயக் கடமையாக்கப்பட்டுள்ளதால் அவர்கள் நம்போன்ற சாதாரண மனிதனில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
“அஸ்ஸலாமு அலைக்க” என்ற வசனத்தில் அலைக என்ற சொல்லிலுள்ள“க” என்றஎழுத்து ஒருவரை முன்னிலைப்படுத்துவதற்குரியதாகும்.
ஒருவன் தனக்கு முன்னால் எவருமில்லாத நேரத்தில் முன்னிலையைக் காட்டும் எழுத்தைக் கொண்டு முன்னிலைப்படுத்திப்பேச முடியாது. அவ்வாறு ஒருவன் பேசினால் அவனைக் காண்பவர்கள் பைத்தியக்காரனென்று சொல்வார்கள்.
இதன்படி தொழுது கொண்டிருக்கும் ஒருவன் “அஸ்ஸலாமு அலைக்க” என்று சொல்லும் பொழுது நபீ(ஸல்) அவர்களைத் தனது தலைக் கண்ணால் தனக்கு முன்னால் காண வேண்டும். இது தான் எதார்த்தம். இந்நிலையெய்துவதுதான் “கமாலிய்யத்” சம்பூரணம் எனப்படும் நபீமார்களும், வலீமார்களும் இந்நிலை யெய்தியவர்கள்தான். இந்நிலையடையாத எவரும் “அல்இன்ஸானுல் காமில்” சம்பூரணம் என்ற இடத்தையடையமாட்டான். அவன் மனக்கண் திறந்தவனாகவுமாட்டான். வணக்கத்தின் ருசியை அனுபவிக்கவுமாட்டான்.
தனக்கு முன்னால் தலைக் கண்ணாலும் காண்பது எல்லோராலும் சாத்தியமானதல்ல. அதற்குத் தகுதியில்லாதவர்கள் தமது மனக்கண்ணிலாவது அந்நேரம் அவர்களைக் காணவேண்டும்.
மனக்கண்ணால் காண்பதென்றால், அவர்களின் உடலமைப்பை தனது மனக்கண்முன் நிறுத்துவதைக் குறிக்கும். இதற்கு நபீ(ஸல்) அவர்களின் உடலமைப்புப் பற்றி அறிந்திருக்க வேண்டும். ஹதீதுக் கிரந்தங்களிலும் , வரலாற்று நூல்களிலும் அவர்களின் உடலமைப்புப் பற்றிய விவரங்கள் எழுதப்பட்டுள்ளன.