தொடர் – 08
- அது மறைவான செய்திகளில் உள்ளது. அதை நாங்கள் உங்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கிறோம்.
திருக்குர்ஆன் – 03 – 44
அல்லாஹ் நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு, நபி ஸகரிய்யா நபி யஹ்யா, நபி ஈஸா மற்றும் மர்யம் (அலை) போன்றோரின் செய்திகளைக் கூறிக்காட்டும் போது மேற்கண்டவாறு கூறியுள்ளான்.
மேற்கூறப்பட்ட நபிமார்களும், வலிய்யத் மர்யம் அவர்களும் நபி (ஸல்) அவர்களுக்கு முன் வாழ்ந்தவர்கள். அவர்களுக்கு நடந்த சம்பவங்கள் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியாது. அவையாவும் நபி (ஸல்) அவர்களைப் பொறுத்த வரை மறைவான செய்தியாகும்.
மறைவான செய்திகளையெல்லாம் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு “வஹி” மூலம் அறிவித்துக் கொடுத்தான். அவர்கள் அறிந்து கொண்டு மக்களுக்குச் சொல்லிக் காட்டினார்கள்.
மறைவான செய்திகளை யார் அறிவதாயினும், இந்த வகையில்தான் அறியமுடியுமேயன்றி அல்லாஹ் சுயமாக அறிந்து கொள்வது போல் “தாதீ”சுயமாக அறிந்து கொள்ள முடியாது.
- “அவை மறைவான செய்திகளில் நின்றுமுள்ளவை. அவற்றை நாங்கள் உங்களுக்கு வஹி மூலம் அறிவிக்கின்றோம். நீங்களும், உங்கள் கூட்டத்தவர்களும் இதற்கு முன்னால் அந்தச் செய்தியை அறிய வில்லை.
திருக்குர்ஆன் –11-49
நபி நூஹ் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு முன்னுள்ளவர்கள். அவர்களுக்கு நடந்த சம்பவங்களெதுவும் இவர்களுக்குத் தெரியாது.
இந்த மறைவான செய்திகளை “வஹி” மூலம் அல்லாஹ் அறிவித்துக் கொடுத்து நபி (ஸல்) அவர்கள் அறிந்து கொண்டு மக்களுக்குப் போதித்தார்கள்.
03.அல்லாஹ் இவ்வேதத்தையும் ஞானத்தையும் உம்மீது அருட்செய்து நீ அறியாதிருந்தவற்றையும் உமக்கு கற்பித்திருக்கின்றான்.
திருக்குர்ஆன் –04 – 113
மேற்கண்ட திருவசனங்கள் போல் இத் திருவசனத்தின் மூலமும் நபி (ஸல்) அவர்கள் அறியாமலிருந்த விஷயங்களையெல்லாம் அல்லாஹ் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தான் என்பதும், நபி (ஸல்) அவர்கள் மறைவான செய்திகளை அறிந்துள்ளார்கள் என்பதும் தெளிவாகின்றது.
04.அவ்விருவரும் அவ்விடத்தில் நம் அடியாரில் ஒருவரைக் கண்டார்கள். அவருக்கும் நம்முடைய சொந்தமான அருளையளித்து நம்முடைய சொந்தமானதொரு ஞானத்தையும் நாம் அவருக்குக் கற்பித்தோம்.
திருக்குர்ஆன் –18 – 65
நபி மூஸா (அலை) அவர்களும், அவர்களுடன் சென்ற வாலிபரும் கழிர் (அலை) அவர்களைக் கண்டார்கள்.
அந்த கழிர் (அலை) அவர்களைப் பற்றித்தான் அல்லாஹ் மேற்குறிப்பிட்ட திருவசனத்தில் பிரஸ்தாபித்துள்ளான். அவருக்கே நம்முடைய சொந்தமான அருளையளித்து நம்முடைய சொந்தமானதொரு ஞானத்தையும் நாம் அவருக்குக் கற்பித்திருப்பதாக அல்லாஹ் இத்திருவசனத்தின் மூலம் கூறியுள்ளான்.
“வஅல்லம்னாஹு மில்லதுன்னா இல்மா”
இந்த வசனத்திற்கு நம்முடைய சொந்தமானதொரு ஞானத்தையும் நாம் அவருக்குக் கற்பித்திருந்தோம்.என்று சுருக்கமாகப் பொருள் கூறிக்கொண்டாலும் இந்த வசனம் “இல்முல்லதுன்னீ “என்றும் “இல்முல் பாதின்” என்றும் சொல்கின்ற அந்தரங்கமான அறிவைக் குறிக்கும்.
இந்த அறிவுதான் “இல்முல்கைப்” என்னும் மறைவான செய்திகள் பற்றிய அறிவாகும்.
இதிலிருந்து கழிர் (அலை) அவர்களும் மறைவான செய்திகளை அறிந்திருந்தார்கள் என்பது தெளிவாகும்.
கழிர் (அலை) அவர்கள் ஒரு நபியா? அல்லது வலியா? என்பதில் அறிஞர்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனினும் பலம் வாய்ந்த ஆதரங்களின் படி அவர்கள் ஒரு வலியேயன்றி நபியல்ல.
இந்தக்கருத்தின் படி மறைவான செய்திகளை நபிமார்கள், றஸூல்மார்கள், அறிந்தது போல் வலிமார்களும் அறிவார்களென்பது நிரூபனமாகிறது.
- வானத்திலோ, பூமியிலோ மறைவாக இருகும் எதுவுமே லவ்ஹூல் மஹ்பூழ் எனும் அவனுடைய தெளிவான குறிப்புப் புத்தக்கத்தில் பதியப்படாமலில்லை.
திருக்குர்ஆன் –27 – 75
இத்திருவசனம் எந்த வகையில் நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான செய்திகள் தெரியுமென்பதை காட்டுகிறது?இது பற்றிச் சுருக்கமாக இங்கு எழுதுகிறேன்.
“அல்குர்ஆன்” என்பது “லவ்ஹுல் மஹ்பூல்” எனும் அவனின் தெளிவான குறிப்புப் புத்தக்கத்தில்பதியப்பட்டிருந்ததேயாகும்.
இத்திருவசனத்தில் வந்துள்ள “கிதாபுன் முபீன்” என்பது”லவ்ஹுல் மஹ்பூல்” எனும் அல்லாஹ்வின் தெளிவான குறிப்புப் புத்தக்கத்தைக் குறிக்கின்றது என்று வேறுசிலரும் அபிப்பிராயம் தெரிவிக்கின்றனர்.
அது அவ்விரண்டில் எதைக் குறித்தாலும், அவ்விரண்ட்டிலுமுள்ள அனைத்து விஷயங்களையும் நபி (ஸல்) அவர்கள் அறிந்தவர்கள்தான்.
“கிதாபுன் முபீன்” என்று திருக்குர்ஆன்தான் சுட்டிக் காட்டப்பட்டுள்ள தென்று வைத்துக் கொண்டு ஆராய்ந்தால் அது வானம், பூமி இரண்டிலுமுள்ள மறைவான விஷயங்கனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. சுருங்கக் கூறினால் அதில் இல்லாதது ஒன்றுமில்லையென்றே சொல்ல வேண்டும்.
இத்தகைய சம்பூரணமான வேதம் அருளப்பட்ட நபி அவ்வேதத்திலுல்ல சகல விஷயங்ளையும் உள்ளடக்கிய ஒரு வேதமாயிருந்தால் அந்த வேதம் அருளப்பட்ட நபியும் சகல விஷயங்களையும் அறிந்தவராகத் தான் இருப்பார்.
இதிலிருந்து நபி (ஸல்) அவர்கள் வானம், பூமி இரண்டிலுமுள்ள மறைவான செய்திகளையெல்லாம் அறிந்தவர்களென்பது தெளிவாகி விட்டது.
“கிதாபுன் முபீன்” என்று”லவ்ஹுல் மஹ்பூல்” தான்சுட்டிக்காட்டப்பட்டுள்ள தென்று வைத்துக் கொண்டு ஆராய்ந்தால் அதிலிருப்பதெல்லாம் நபி (ஸல்) அவர்களுக்கு எவ்வாறு தெரியும்? என்ற கேள்வி வரும்.
இந்தக் கேள்விக்கு விடை காண்பதாயின்? ஞானிகள் கூறும் தத்துவத்தின் பக்கம் நமது சிந்தனையத் திருப்பவேண்டும்.
இத்தத்துவம் இறஞானக் கோட்டைக்குள் பிரவேசித்தவர்களுக்கும், நபி (ஸல்) அவர்களின் எதார்த்தத்தைப் புரியாதவர்களுக்கும் பெரியதோர் குழப்பத்தை ஏற்படுத்தி விடும். எனவே விரிக்காமல் சுருக்கமாய்ச் சொல்லிவிடுகிறேன்.
நபி(ஸல்) அவர்களின் அறிவு “லவ்ஹுல் மஹ்பூழில்” இருப்பவற்றில் நின்றுமுள்ளதா? அல்லது”லவ்ஹுல் மஹ்பூழில்”இருப்பதெல்லாம் நபி (ஸல்) அவர்களின் அறிவில் நின்றுமுள்ளதா?
நபி(ஸல்) அவர்களின் அறிவு “லவ்ஹுல் மஹ்பூல்” இருப்பவற்றில் நின்றுமுள்ளதென்று வைத்துக் கொண்டால் நபி (ஸல்) அவர்களின் அறிவில் இல்லாத விஷயங்கள் அதில் இருக்கின்றன என்றும், நபி (ஸல்) அவர்களைவிட அது சிறந்ததென்று கருத்தும் வந்து விடும்.
நபி (ஸல்) அவர்கள் மனித இனத்தில் மட்டுமன்றிப் பொதுவாக அல்லாஹ்வின் அனைத்து சிருஷ்டிகளிலும் மிகச் சிறந்தவர்களாக இருப்பதினாலும், “லவ்ஹுல் மஹ்பூல்” என்பதும் அவனின் சிருஷ்டிகளில் ஒன்றாக இருப்பதினாலும் நிச்சயமாக நபி (ஸல்) அவர்களை விட அது சிறந்ததாக இருக்க முடியாது.
எனவே நபி (ஸல்) அவர்களின் அறிவு அதிலுல்லவற்றில் நின்றுமுள்ளதென்றும் கூறுதல் பொருத்த மற்றது.
ஆகவே “லவ்ஹுல் மஹ்பூழில்” இருப்பதெல்லாம்நபி (ஸல்) அவர்களின் அறிவில் நின்றுமுள்ளவையென்றும் கொள்வதுதான் பொருத்தமானதும், எதார்த்தத்துக்கு ஏற்றதுமாகும்.
புர்தா காப்பியத்தின் தந்தை இமாம் பூஸீரீ (றஹ்) அவர்கள் தங்களின்”கஸீத்துல் புர்தா” வில் இந்தக் கருத்தையே வலியுறுத்தியுள்ளார்கள்.
“பயின்ன மின்ஜூதிகத் துன்யா வளர்றதஹா வமின் உலூமிக இல்முல்லவ்ஹி வல்கலமீ “
“இம்மையும், அதன் சக்களத்தியான மறுமையும் உங்களின் சன்மானங்கள்தான். இன்னும் “லவ்ஹு” எனும் பலகையின் அறிவும், கலம் எனும் எழுதுகோலின் அறிவும் உங்களின் அறிவில் நின்றுமுள்ளவைதான் ” என்று இந்தக் கருத்தை உள்ளடக்கி,
“இம்மை மறுமை நுத்தம் இருங்கொடையில் வந்தவையே செம்மையி லௌஹு கலம் சேர் அறிவும் நீர் அறிவீர்.
என்றுமரைக்காயர்பாடியுள்ளார்.
இந்த விபரங்களிலிருந்து “லவ்ஹுல் மஹ்பூல்” எனும் ஏட்டின் அறிவு நபி (ஸல்) அவர்களின் அறிவில் ஒரு பகுதி என்பதும், அதிலுள்ளவை யனைத்தும் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியுமென்பது தெளிவாகின்றது.
“இல்முல்கைப்” மறைவானசெய்தி என்ற தலைப்பில் இதுவரை திருக்குர்ஆன் வசனங்கள் மூலம் நான் கூறிவந்த விவரங்களிலிருந்து நபிமார்களும், வலிமார்களும் மறைவான செய்திகளை அறிவார்கள் என்ற உண்மை வெளியாகி விட்டது.
இதுவரை “இல்முல்கைப்” மறைவானவிஷயங்களை நபிமார்களும், வலிமார்களும் அறிவார்கள் என்பதற்கு திருக்குர்ஆனிலிருந்து சில வசனங்களை ஆதாரமாகக் கூறினேன். இனி நபி (ஸல்) அவர்களின் ஹதீதுலிருந்து ஒன்றை மட்டும் இங்கு எழுதுகிறேன்.
“எனது இறைவனை நான் கண்டேன். அப்பொழுது ‘அமரர்கள் என்ன விஷயத்தில் தர்க்கம் செய்து கொள்கிறார்கள்’ என்று அவன் என்னிடம் கேட்டான். அதற்கு நான் “அதுபற்றி நீதான் நன்கறிந்தவன்” என்றுசொன்னேன். அப்பொழுது அல்லாஹ் தனது கையை இரு தோட்புயங்களுக்கிடையில் வைத்தான். அந்நேரம் அவனின் கையுடைய குளிரை எனது இரண்டு மார்புகளுக்கிடையில் நான் பெற்றுக் கொண்டேன். அதோடு வானங்களில் உள்ளவற்றினதும், பூமியில் உள்ளவற்றினதும் அறிவையெல்லாம் நான் அறிந்து கொண்டேன். என நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு “வகதாலிகநுரீ இப்றாஹீம் மலகூதஸ்ஸமாவாதி வல்அர்ளி வலியகூனமினல் மூகினீன்” என்ற திருவசனத்தையும் ஓதிக் காட்டினார்கள்.
ஆதாரம்: மிஷ்காத், துர்முதி, தாரமீ
அறிவிப்பு: அப்துர் றஹ்மான் பின் ஆயிஷ்றழி
திருவசனத்தின்பொருள்:”நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் “யகீன்” நம்பிக்கையுள்ளவர்களில் ஆவதற்காக அவ்வாறே அவர்களுக்கு வானங்களினதும், பூமியினதும் “மலகூத்தை” நாங்கள் காட்டுவோம்.
மேலே எழுதிய நபி மொழி மிக அழகான கருத்துக்களையும், அதியுயர்ந்த தத்துவங்களையும் உள்ளடக்கி நிற்கிறது.
இவ்விஷயங்கள் “இல்முல்இர்பான்” எனும்இறைஞானகலையுடன் தொடர்புள்ள விஷயங்களாயிருப்பதால் இதில் அவற்றை விளக்கமாக எழுத விரும்பவில்லை. மேலே குறித்த ஹதீது மிஷ்காத், துர்முதி, தாரமீமுதலான ஹதீதுக் கிரந்தங்களிலும் வந்துள்ளது.
எனினும் மேலே குறித்த ஹதீதிலிருந்து நான் எழுத வருகின்ற தலைப்புக்குப் பொருத்தமான கருத்துக்களை மட்டும் இங்கு எழுதுகின்றேன்.
வானங்களில் உள்ளவற்றினதும், பூமியில் உள்ளவற்றினதும் அறிவை அறிந்து கொண்டேனென்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதால் அவர்களுக்கு எல்லாம் தெரியுமென்பது சந்தேகமின்றித் தெளிவாகி விட்டது.
இதே போன்று இன்னுமொரு ஹதீது வருகிறது.
அதில்: “அலிம்து இல்ம மாபிஸ்ஸமாவாதி, வல் அர்ளி”
“வானங்களில் உள்ளவற்றினதும், பூமியில் உள்ளவற்றினதும் அறிவை அறிந்து கொண்டேன்”
என்ற வசனத்திற்கு பதிலாக
“அலிம்து இல்மல் அவ்வலீன வல் ஆகிரீன்” முன்னோர்கள், பின்னோர்கள் அனைவரின் அறிவையும் நான் அறிந்து கொண்டேன்.” என்றுவந்துள்ளது.
நபிமார்களுக்கும், வலிமார்களுக்கும் மறைவான செய்தி யொன்றும் தெரியாதென்று கூறிவருகின்றவர்களும் மேலே எழுதிக்காட்டிய விஷயங்களை “இக்லாஸ்”கலப்பற்ற மனதுடன் விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.
இந்தக் ஹதீதை ஆதாரமாகக் கொண்டு….
“நபி (ஸல்) அவர்களுக்கு ஏழு வானங்களில் உள்ளவை பற்றிய அறிவும், வானங்களுக்கு மேலுள்ளவை பற்றிய அறிவும், பூமிக்கு கீழுள்ளவை பற்றிய அறிவும் உண்டு என சட்டமேதை அல்லாமா இப்னு ஹஜர் (றஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.”
ஆதாரம்: மிஷ்காத்
“ஒரு சமயம் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு அறிவுரை பகர்ந்து கொண்டிருந்த பொழுது சிருஷ்டியின் உற்பத்தியிலிருந்து சுவர்க்கவாதிகள் சுவர்க்கத்திலும், நரகவாதிகள் நரகத்திலும் நுழைவது வரையிலான சகல விஷயங்களையும் கூறிக்காட்டினார்கள். அவற்றை பாடமிட்டவர்கள் பாடமிட்டுக் கொண்டார்கள். ஏனையோர் மறந்து விட்டனர் என கலீபா உமர் (றழி) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்:புஹாரி
இந்த ஹதீதிலிருந்து நபி (ஸல்) அவர்கள் வெளிரங்கமான, உள்ளரங்கமான சகல அறிவுகளும் பெற்றிருந்தார்களென்பது தெளிவாகி விட்டது.
நபி (ஸல்) அவர்களக்கு மறைவான செய்திகள் தெரியுமென்பதற்கு ஆதாரமான ஹதீதுக்கு அநேக முள்ளன.
நபி புகழ் கூறும் ஸலவாத்
நபி ஸல் அவர்கள் மீது “ஸலவாத்” சொல்வது தொடர்பாக திருக்குர்ஆன் வசனங்களும், அநேக ஹதீதுகளும் வந்துள்ளன. அவற்றில் சிலதையும், “ஸலவாத்” உணர்த்தும் நபியின் அகமியத்தையும் இங்கு சுருக்கமாக எழுதுகிறேன். நான் இப்படியொரு தலைப்பில் எழுதுவதற்கும் வழிகேடர்களின் விஷமப் பிரச்சாரமே காரணமாகும்.
அல்லாஹ்வும், அவனின் அமரர்களும் நபி (ஸல்) அவர்கள் மீது “ஸலவாத்” சொல்கிறார்கள். விசுவாசிகளே நீங்களும் அவர்கள் மீது ஸலவாத் சொல்லுங்கள். இன்னும் ஸலாமும் சொல்லுங்கள்.
திருக்குர்ஆன்: 33 : 56
“ஒருவன் என்மீது ஒருதரம் “ஸலவாத் சொல்வானாயின் அல்லாஹ் அவன்மீது பத்துத்தரம் “ஸலவாத்” சொல்கிறான். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்: முஸ்லிம்
அறிவிப்பு: அபூஹுறைறா (றழி)
ஒருவன் என்மீது ஒரு முறை “ஸலவாத்” சொல்வானாயின் அல்லாஹ் அவன்மீது பத்துத்தரம் “ஸலவாத்” சொல்கிறான். மேலும் அவனின் பத்துப் பாவங்கள் மன்னிக்கப்பட்டு பத்துப் பதவிகளும் அவனுக்கு உய்ர்த்தப்படு மென்று நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்.
ஆதாரம்: நஸயீ
அறிவிப்பு:அனஸ் (றழி)
“மறுமை நாளில் மனிதர்களில் எனக்கு மிக விருப்பமானவன் அவர்களில் என்மீது அதிகமாக ஸலவாத் சொல்பவனாவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்:துர்முதி
அறிவிப்பு: இப்னு மஸ்ஊத் (றழி)
நான் மேலே எழுதிக்காட்டிய திருக்குர்ஆன் வசனமும், நாயக வாக்கியங்களும் நபி (ஸல்) அவர்கள் மீது “ஸலவாத்” சொல்வதிலுள்ள மகிமையை எடுத்துக்காட்டுகின்றன்.
திருக்குர்ஆன் வசனத்தில் “ஸலவாத்தும் ஸலாமும்”சேர்த்து சொல்லப் பட்டிருப்பதால், “ஸலவாத்” சொல்பவர்கள் ஸலாமும் சேர்த்துச் சொல்லுதல் வேண்டும். ஸலாமின்றி ஸலவாத் மட்டும் சொல்வதும், ஸலவாத் இன்றி ஸலாம் மட்டும் சொல்வதும் “மக்றூஹ்” வெறுக்கப்பட்ட விஷயமென்று சட்டக்கலை மேதைகள் கூறுகிறார்கள்.
ஒருவன் குறைந்த பட்சம் “அல்லாஹும்ம ஸல்லி வஸல்லிம் அலா ஸெய்யிதினா முஹம்மதின் வஅலா ஆலி ஸெய்யிதினாமுஹம்மத்” என்று சொல்வானாயின் இரண்டையும் சேர்த்துச் சொன்னவனாகிவிடுவான்.
ஸலவாத் சொல்வது எவ்வாறு?
திருக்குர்ஆனின் “ஸல்லூ அலைஹிவ வஸல்லிமூ” அவர்கள்மீது நீங்கள் ஸலவாத்தும் ஸலாமும் சொல்லுங்கள் என்ற வசனத்தின்படியும் அதே போல் ஹதீதுகளில் வந்துள்ள வசனத்தின்படியும் நபி (ஸல்) அவர்கள் மீது “ஸலவாத்”,”ஸலாம்”சொல்லும்ஒருவன் “உஸல்லீ வஉஸல்லிமு அலன் நபிய்யீ” நாயகத்தின் மீதும் ஸலவாத்தும், ஸலாமும் சொல்கிறேன். என்றுதான் சொல்லவேண்டுமேயல்லாமல் “அல்லாஹும்ம ஸல்லி வஸல்லிம்” என்று சொல்லுதல் கூடாது.
ஏனெனில், “அல்லாஹும்ம ஸல்லி வஸல்லிம்” என்ற சொற்கள் அல்லாஹ்வை விளித்துச் சொல்லப்படுகின்ற சொற்களாகும்.
எனவே, “ஸலவாத்தும் ஸலாமும்”சொல்லுங்கள்என்றுமக்களைப் பணித்தஅல்லாஹ்வை விளித்து நீயே அவர்கள் மீது “ஸலவாத்தும், ஸலாமும்” சொல்என்று சொல்வதில் நபி (ஸல்) அவர்களின் மகத்துவம் மறைந்துள்ளது.
அதெவ்வாறெனில் நபி (ஸல்) அவர்கள் மீது”ஸலவாத்தும் ஸலாம்” சொல்வதற்குத்தகுதியானவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமேயாவான். அவனின் சிருஷ்டிகளில் எந்த ஒரு சிருஷ்டியும் அதற்குத் தகுதியுடையதல்ல. இதனால்தான் நாம் “ஸலவாத்தும் ஸலாமும்”சொல்லாமல் நீயே அவர்கள் மீது “ஸலவாத்தும் ஸலாமும்”சொல்என்று அப்பாரிய பணியை அதற்குத் தகுதியான அல்லாஹ் விடம் ஒப்படைத்து விடுகிறோம். நபி(ஸல்) அவர்களின் அகமியத்தை வெளிப்படுத்தும் “ஸலவாத்” இன்னநேரம்தான்சொல்வேண்டும் இன்நேரம்சொல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு எதுவுமில்லாததாகும்.
மலசல கூடங்கள் போன்ற அசுத்தமான இடங்கள் மட்டும்தான் அதற்குத் தடைசெய்யப்பட்ட இடங்களாகும்.
ஒரு நிகழ்ச்சியை “கிறாஅத்” திருக்குர்ஆன் வசனத்தை ஓதித் துவங்குவது போன்றும், நபி (ஸல்) அவர்கள் மீது “ஸலவாத்” சொல்லி முடிப்பது போன்றும், நபி (ஸல்) அவர்கள் மீது “ஸலவாத்” சொல்லியும் துவங்க முடியும்.
இது போல் ‘பாங்கு’ சொல்வதற்கு முன்னாலும் ‘ஸலவாத்’சொல்ல முடியும். அதன் பின்னாலும் ‘ஸலவாத்’சொல்ல முடியும். அது மார்க்கத்தில் விலக்கப்பட்ட காரியமில்லை. அது விலக்கு என்பதற்கு இமாம்களால் எழுதப்பட்ட எந்தவொரு நூலிலும் ஆதாரம் இல்லை. அது நல்ல காரியமே அன்றி பாவமான காரியமில்லை. அது பாவமான காரியமென்று மூளையுள்ள எவரும்சொல்லமாட்டார்கள். இதால்தான் தொன்று தொட்டு நம் நாட்டுப் பள்ளிவாயல்களில் பாங்கு சொல்வதற்கு முன் ஸலவாத் சொல்லி வருகிறார்கள்.
ஆனால் பாங்கு சொலடவதற்கு முன் ‘ஸலவாத்’சொல்வதைவழிகேடர் மட்டும்தான் அனாச்சாரமென்றும் கருதுகிறார்கள். இதனால்தான் பல்லாண்டுகலாக “பாங்கு” சொல்வதற்கு ‘ஸலவாத்’சொல்லப்பட்டு வந்த பள்ளிவாயல்களில் இன்று அதை தடை செய்து விட்டார்கள்.
வஹ்ஹாபிஸத்தின் தந்தை நஜ்தி ஸாஹிபு தனது காலத்தில் பாங்கு சொல்வதற்கு முன் ‘ஸலவாத்’சொன்ன ஒரு முஅத்தினைக் கொன்றான் என்ற செய்தியை ‘ இமாம் ஸெய்னி தஹ்லான் (றஹ்)அவர்கள் தங்களின் பல நூல்களில் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஸலவாத்தின் மகிமையும், சங்கை நபியின் அகமியமும் புரியாத வஹ்ஹாபிகளின் வலையில் விழுந்து விடாமல் அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக.!
(முற்றிற்று).