Sunday, May 19, 2024
Homeஎழுத்தாக்கங்கள்படைப்புக்களில் முதற் படைப்பு முஹம்மத் அலைஹிஸ்ஸலாம் அவர்களே!

படைப்புக்களில் முதற் படைப்பு முஹம்மத் அலைஹிஸ்ஸலாம் அவர்களே!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ

நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மனிதர்களில் முந்தினவர்களாவர். அவர்கள்தான் மனிதர்களில் முதற் படைப்பாவார்கள். அவர்களின் விலா எலும்பிலிருந்தே “ஹவ்வா” அலைஹஸ்ஸலாம் அவர்கள் படைக்கப்பட்டார்கள். அவர்கள் இருவரிலிருந்துமே மனுகுலம் வெளியாகத் தொடங்கியது.

அல்லாஹ்வின் படைப்புக்களில் முதற் படைப்பு எது என்று ஆய்வு செய்தால் அதன் இறுதி முடிவு “நூரே முஹம்மத்” பெருமானார் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஒளி என்றே கிடைக்கும்.

இந்த முடிவுதான் சரியான முடிவாக இருந்து வந்தது. இந்த முடிவுதான் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் சிறப்பையும், அகமியத்தையும் எடுத்துக் காட்டும் முடிவுமாகும்.

இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய வலீமார்களின் முடிவும் இந்த முடிவாகவே இருந்து வந்தது. இதுவே சரியான முடிவென்பதற்கு நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அருள் மொழிகளும், வலீமாரின் தத்துவங்களும் ஆதாரங்களாக உள்ளன. அவற்றில் அதி முக்கியமான தகவல்களை மட்டும் எழுதுகிறேன்.

ஆதாரங்களில் இருவகை உண்டு. ஒருவகை الدَّلَائِلُ النَّقْلِيَّةُ என்றும், மற்றது الدَّلَائِلُ الْعَقْلِيَّةُ என்றும் வழங்கப்படும். முந்தினது திருக்குர்ஆன், ஹதீது, ஸஹாபாக்கள், தாபியீன்கள், அவ்லியாஉகள் ஆகியோரின் பேச்சு என்பனவாகும். இரண்டாவது புத்திக்குப் பொருத்தமான, அது ஏற்றுக் கொள்ளக் கூடியவையாகும்.

இவ்விரு ஆதாரங்களும் ஒரு விடயத்தை நிறுவுவதற்குத் தேவையானவைதான். எனினும் முந்தின வகை ஆதாரங்களுக்கே முதலிடம் வழங்க வேண்டும்.

முந்தின ஆதாரங்களில் சிலதை இங்கு எழுதுகிறேன்.
நபீ தோழர் ஜாபிர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபீ அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் பின்வருமாறு கேட்டார்கள்.
قَالَ جَابِرٌ سَئَلْتُ رَسُوْلَ اللهِ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَوَّلِ شَيْئٍ خَلَقَهُ الله، فَقَالَ نُوْرَ نَبِيِّكَ يَا جَابِرُ
நான் நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் அல்லாஹ் முதலில் எதைப் படைத்தான் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “உங்களின் நபீயின் ஒளியை” என்று பதில் கூறினார்கள்.
(ஆதாரம்: முஸன்னப் அப்திர் றஸ்ஸாக் (அல்மப்கூத் மினல் ஜுஸ்இல் அவ்வல்) பக்கம் 63, ஹதீது இல 18)

நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் كُنْتُ نَبِيًّا وَآدَمُ بَيْنَ الْمَاءِ وَالطِّيْنِ “நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் களி மண்ணுக்கும், நீருக்கும் இடையில் இருந்த போது நான் நபீயாக இருந்தேன்” என்று அருளினார்கள். ஆதாரம்: அத்துறர் லிஸ்ஸுயூதீ – 126 (அதாவது ஆதம் நபீ படைக்கப்படுமுன்)

இவ்விரு நபீ மொழிகளும் நபீ அலைஹிஸ்ஸலாம் அவர்கள்தான் முதற் படைப்பு என்பதை தெளிவாகக் காட்டுகின்றன.

அல்லாஹ் நபீ அலைஹிஸ்ஸலாம் அவர்களின் “நூர்” ஒளியை படைத்தபின் ஏனைய படைப்புக்களை எவ்வாறு படைத்தான் என்பது பற்றி பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளது.
ثم خَلَقَ منه أي من نور النبي صلى الله عليه وسلم كُلَّ خَيْرٍ وَخَلَقَ بَعْدَهُ كُلَّ شَيْئٍ، وحِيْنَ خَلَقَهُ أَقَامَهُ قُدَّامَهُ فى مقام القرب اثنتي عشـرة ألف سنة،
பெருமானாரின் அந்த ஒளியில் இருந்து நன்மைகள் அனைத்தையும் படைத்தான். பின்னர் அனைத்து வஸ்த்துக்களையும் படைத்தான். நபீ அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஒளியை தன் முன்னால் 12 ஆயிரம் வருடங்கள் நிறுத்தி வைத்து அதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.

ثم جعله أربَعَةَ أَقْسَامٍ، فَخَلَقَ الْعَرْشَ مِنْ قِسْمٍ، والكرسِيَّ منْ قِسمٍ، وَحَمَلَةَ العرش وَخَزَنَةَ الكرسي من قِسم،

பின்னர் அவ் ஒளியை நான்கு பங்குகளாக்கி அவற்றில் ஒரு பங்கிலிருந்து “அர்ஷ்” என்பதை படைத்தான். இரண்டாம் பங்கிலிருந்து “குர்ஸீ” என்பதைப் படைத்தான். மூன்றாம் பங்கிலிருந்து “அர்ஷ்” சுமந்திருக்கும் மலக்குகளையும், “குர்ஸீ” என்ற இடத்தின் – களஞ்சியப் பொறுப்பாளர்களையும் படைத்தான்.

وأقام القسم الرابعَ فى مقام الحبّ اِثْنَتَيْ عشرة ألف سنة،
நாலாம் பங்கினை எதையும் படைக்காமல் அந்தப் பங்கை 12 ஆயிரம் வருடங்கள் “மஹப்பத்” அன்பு என்ற இடத்தில் வைத்து ரசித்தான்.

ثمّ جعله أربعة أقسام، فخلق القَلَمَ من قسم، واللَّوْحَ من قسم، والجنّةَ من قسم،

பின்னர் அந்த நாலாம் பங்கை நான்கு பங்குகளாக ஆக்கி அவற்றில் ஒரு பங்கினால் “கலம்” என்ற எழுதுகோலையும், இன்னொரு பங்கினால் “லவ்ஹ்” என்ற பலகையையும், இன்னொரு பங்கினால் சுவர்க்கத்தையும் படைத்தான்.

وأقام الرابع فى مقام الخَوْفِ اِثْنَتَيْ عَشْرَةَ ألْفِ سَنَةً،
இந்த நாலாம் பங்கை “கவ்பு” பயம் என்ற இடத்தில் 12 ஆயிரம் வருடங்கள் தனக்கு முன்னால் வைத்து பார்த்து ரசித்தான்.

ثم جعله أربعة أجزاء، فخلق الملائكة من جزء، والشمس من جزء، والقمر والكواكب من جزء

பின்னர் அதை நான்கு பங்குகளாக ஆக்கி அவற்றில் ஒரு பாகத்தால் மலக்குகளையும், இன்னொரு பாகத்தால் சூரியனையும், இன்னொரு பாகத்தால் சந்திரனையும், நட்சத்திரங்களையும் படைத்தான்.

وأقام الجزء الرابع فى مقام الرجاء اثنتي عشرة ألف سنة،

அந்த நாலாம் பாகத்தை “றஜா” ஆதரவு என்ற இடத்தில் 12 ஆயிரம் வருடங்கள் தனக்கு முன் வைத்து பார்த்து ரசித்தான்.

இவ்வாறு இந்த விபரம் இன்னும் தொடர்கிறது. தொடர் அனைத்தையும் எழுதுவதாயின் தலைப்புக்குரிய ஆதாரங்களை எழுத முடியாமற் போகும் என்பதற்காக இதோடு இதை நிறைவு செய்கிறேன்.

மேலே எழுதிய நீண்ட இவ்விபரம் மூலம் முதற் படைப்பு நபீ பெருமானின் ஒளி என்பது தெளிவாகிறது.

ஆதாரம்: ஈகாழுல் ஹிமம் ஷர்ஹுல் ஹிகம், பக்கம்: 396, ஆசிரியர்: அல் ஆரிப்பில்லாஹ் அஸ்ஸூபிய்யுல் ஜலீல் அஹ்மத் இப்னு முஹம்மத் இப்னு அஜீபதல் ஹஸனீ, இரண்டாம் பதிப்பு: 1913.

அல்லாஹ் ஆலங்கள் அனைத்தையும் படைத்தான் என்று நாம் சொன்னாலும் 14 ஆலங்களையும், அல்லது பதினெண்ணாயிரம் ஆலங்களையும் அவன் படைத்த மாதிரியை நாம் ஆய்வு செய்யும் போது தலை பம்பரம் போல் சுழலுகின்றது. ஆய்வு செய்பவர் ஆன்மீகக் கொன்றோல் உள்ளவராயிருத்தல் வேண்டும். தவறினால் அங்கோடைதான் தஞ்சம்.

“பர்ஸன்ஜீ” என்று நபீ அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வரலாறு கூறும் நூல் ஒன்று உண்டு. இதை எழுதிய அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்கு ஜஃபர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் குறித்த நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.
اللهم صَلِّ وَسَلِّمْ عَلَى أَوَّلِ قَابِلٍ لِلتَّجَلِّيْ مِنَ الْحَقِيْقَةِ الْكُلِّيَّةِ

இறைவா! “ஹகீகதுல் குல்லிய்யா” அனைத்தையும் உள்வாங்கிய மெய்ப்பொருளின் முதல் வெளிப்பாடான முஹம்மத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீது “ஸலவாத் ஸலாம்” சொல்வாயாக!

இந்த மகானின் கூற்றுப்படி பெருமானார் முஹம்மத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்தான் முதற்படைப்பு என்பது தெளிவாகின்றது. இதை விபரமாக எழுத முடியாமற் போனதையிட்டு வருந்துகிறேன்.

ஷாதுலிய்யா தரீகாவின் தாபகர் உலகம் வாழ்த்தும் மா மேதை அபுல் ஹஸன் அலீ அஷ் ஷாதுலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஞான குரு அல்குத்புஷ் ஷஹீத் அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் புகழும் போது

اللهم صَلِّ عَلَى مَنْ مِنْهُ انْشَقَّتِ الْأَسْرَارُ وَانْفَلَقَتِ الْأَنْوَارُ

இறைவா! நீ ஒருவருக்கு அருள் புரிவாயாக! அவர் மீது ஸலவாத் சொல்வாயாக! அவர் யாரெனில் அவரில் நின்றுமே இரகசியங்கள் யாவும் பிறந்து வந்தன. ஒளிகள் யாவும் வெடித்து வந்தன என்று புகழ்ந்துள்ளார்கள்.

இவர்கள் இவ்வாறு பெருமானாரைப் புகழ்ந்திருப்பது அனைத்துக்கும் அவர்களே கரு என்பதை தெளிவாகக் கூறுகிறது. ஒன்றுக்கு எது கருவோ அந்தக்கரு அந்த ஒன்றுக்கு முந்தினதாகவே இருக்க வேண்டும்.

சுருக்கம் என்னவெனில் அல்லாஹ்வின் விருப்பம் முதலில் முஹம்மதாக அவன் வெளியாக வேண்டுமென்பதேயாகும்.

அண்ணலின்றேல் அல்லாஹ்வை அறிவது எவ்வாறு?

மூல முஹம்மது முப்பாள் முஹம்மது
மோனமுள்ள
பால முஹம்மது பக்தியுள்ளோர்களும்
பாய்ந்தெடுக்கும்
வேலு முஹம்மது வேதாந்த மூல
விளக்குடைய
கோல முஹம்மது குன்றாக் குணங்குடி
கொண்டவர்க்கே!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments