Saturday, May 18, 2024
Homeஎழுத்தாக்கங்கள்சிறப்பு வேண்டாம் என்று விரண்டோடு. அது உன்னைத் தொடர்ந்து வரும்.

சிறப்பு வேண்டாம் என்று விரண்டோடு. அது உன்னைத் தொடர்ந்து வரும்.

தொகுப்பு: ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
فِرَّ مِنَ الشَّرَفِ يَتْبَعُكَ الشَّرَفُ،
قَالَ الْعَارِفُ بِاللهِ تَاجُ الدِّيْنِ عَطَاءُ اللهِ السِّكَّنْدَرِيْ فِى كِتَابِهِ الْحِكَمِ، (إِنَّ الشُّهْرَةَ آفَةٌ، كُلٌّ يَتَمَنَّاهَا، وَإِنَّ الْخُمُوْلَ نِعْمَةٌ، وَكُلٌّ يَأْبَاهَا)
சிறப்பு வேண்டாம் என்று விரண்டோடு. அது உன்னைத் தொடர்ந்து வரும்.
 
இறைஞானி தாஜுத்தீன் அதாஉல்லாஹ் ஸிக்கந்தரீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “ஹிகம்” என்ற நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

(பிரசித்தி பெறுதல் ஆபத்து. ஆயினும் அதை அனைவரும் விரும்புகின்றனர். பிரசித்தி பெறாமல் இலை மறை காய் போல் மறைந்து வாழ்வது ஓர் அருள். ஆயினும் அதை அனைவரும் வெறுக்கின்றனர்.
 
கௌரவம், பட்டம், பதவி என்பன மனிதனைப் படுகுழியில் தள்ளிவிடும் தீக்குணங்களாகும். அது மட்டுமல்ல. “நப்ஸ்” எனும் கொடிய மிருகத்திற்கு விருப்பமான உணவுமாகும்.
 
கௌரவம், பதவி, புகழ் என்பவை போல் “நப்ஸ்” என்ற மனவெழுச்சிக்கு விருப்பமான உணவுகள் வேறொன்றுமே இல்லை. இத்தகைய உணவுகளைத் தொடர்ந்து கொடுத்து வந்தால் அது மேலும் வலுப்பெற்று வீரியம் மேலோங்கி அதன் அட்டூழியம் அதிகரித்து விடும். அது வலுப்பெற்ற பின் அதை முடக்கவோ, அடக்கவோ முடியாமற் போய்விடும். அதன் வலிமை கூடக் கூட அதன் அட்டூழியமும் கூடிக் கொண்டே போகும். அதன் பின் எந்த ஒரு மந்திரமும் பலிக்காது. மருந்தும் ஏறாது.
 
அதன் அட்டூழியத்தைக் குறைப்பதாயின் அதற்கு விருப்பமான உணவுகளைக் கொடுக்காமல் அதைப் பட்டினி போட வேண்டும். அதன் மூலம் அதன் வீரியத்தை குறைக்க வேண்டும்.
 
குத்துச் சண்டை வீரன், மல்யுத்த வீரன் போன்றவர்களுக்கு சத்தான உணவுகள் வழங்குவதை நிறுத்தி அவர்களின் பலத்தைக் குறைப்பது போல் அதற்கும் (நப்ஸ்) பதவி, புகழ் போன்ற சத்தான உணவுகளை வழங்குவதை முற்றாக நிறுத்தினால் அதன் பலம் குன்றி அதன் அட்டூழியமும் இல்லாமற் போய்விடும். அதற்கு வழிப்பட்டு வாழ்ந்தவன் அதையடக்கி வாழும் நிலைமைக்கு அவன் வந்துவிடுவான்.
 
திருக்குர்ஆனும், திரு நபீயின் நிறை மொழிகளும், ஸூபீ மகான்களின் வழிகாட்டல்களும் “நப்ஸ்” என்ற மனவெழுச்சியை கொன்று விடுமாறே கூறுகின்றன.
 
“நப்ஸ்” எதைக் கேட்கிறதோ அதைக் கொடுக்காமல் அதற்கு மாறு செய்தல் பெரும் வணக்கமாகும். பெருமை, வஞ்சகம், கோபம், எரிச்சல், மமதை, அகங்காரம், பதவி மோகம் என்பனவும், இன்னுமிவை போன்ற இழி குணங்களும் “நப்ஸ்” என்ற மனவெழுச்சியின் பண்பாடுகளேயாகும்.
 
“நப்ஸ்” என்பதை அதன் தன்மைகளைப் பொறுத்து ஏழு வகைகளாக ஸூபீ மகான்கள் வகுத்துச் சொல்லியுள்ளார்கள்.
 
அவை “நப்ஸ் அம்மாறா”, “நப்ஸ் லவ்வாமா”, “நப்ஸ் முல்ஹிமா”, “நப்ஸ் முத்மஇன்னா”, “நப்ஸ் றாழியா”, “நப்ஸ் மர்ழியா”, “நப்ஸ் காமிலா” என்பனவாகும்.
 
இவற்றில் மிகக் கொடியதும், கீழ்த்தரமானதும் முதலாவது “நப்ஸ்” “அம்மாறா” என்பதேயாகும். “அம்மாறா” என்றால் தீமையைச் செய்யுமாறு மனிதனை அதிகம் தூண்டும் “நப்ஸ்” என்பதாகும்.
 
இத்தன்மையுள்ள “நப்ஸ்” உடையவனில் தீய பழக்க வழக்கங்களில் அதிகமானவை இருக்கும். அவன் ஒரு பாவத்தைச் செய்துவிட்டு இருக்கும் போது மறு பாவத்திற்கு அவனைத் தூண்டும். இப்போதுதானே ஒரு பாவம் செய்தேன் என்று மறு பாவம் செய்ய அவனின் மனம் தயங்கினால் கூட அவனின் கெட்ட “நப்ஸ்” ஏன் தயங்குகிறாய்? தயங்காதே! “தவ்பா” பாவ மன்னிப்பு வழங்கும் வாசல் பூட்டப்படவில்லை. ஒரு பாவம் செய்தால் மறு பாவம் செய்வதற்கிடையில் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளலாமென்று அவனின் மனம் அவனைத் தூண்டிய வண்ணமே இருக்கும்.
 
இந்நேரம்தான் அவன் கடுமையாக அந்த “நப்ஸ்” உடன் போர் செய்ய வேண்டும்.
أَعْدَى عَدُوٍّ لَكَ نَفْسُكَ الَّتِي بَيْنَ جَنْبَيْكَ، (اعتلال القلوب للخرائطي)
உனது விரோதிகளில் மிகக் கொடிய விரோதி உனது இரண்டு விலாக்களுக்குமிடையில் உள்ள “நப்ஸ்” என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
 
வெளியிலுள்ள எதிரி ஒருவனுக்கு தீமை செய்வதை விட அவனுள்ளே இருக்கும் எதிரியால் மிக நுணுக்கமாக தீமை செய்ய முடியும். மிக இலகுவாகவும் அவன் தீமை செய்ய அவனுக்கு சாத்தியமுண்டு.
 
இவ்வாறுதான் வீட்டிலுள்ள திருடனுமாவான். வீட்டின் வெளியே உள்ள கள்வனை விட வீட்டினுள்ளே இருக்கின்ற திருடனால் மிக இலகுவாகத் திருட முடியும்.
 
கோபம் என்பதும் “நப்ஸ்” என்ற மிருகத்தின் குணமேயாகும். அடிக்கடி கோபம் கொள்வது மனிதனின் உயர் பண்பல்ல. மிகக் கீழ்த்தரமான பண்பேயாகும்.
 
மன்னர் ஹாறூன் றஷீத் அவர்களிடம் ஓர் அடிமைப் பெண் இருந்தாள். ஒரு நாட்காலை அரசனுக்கு தேனீர் வழங்குவதற்காக தேனீர் பாத்திரத்தோடு வரும் நேரம் கால் சறுக்கி அவள் கீழே விழுந்துவிட்டாள். இதைக் கண்ட அரசன் கோபம் தாங்க முடியாமல் அவளை அடித்தார். அப்போது அவரின் முகம் பார்த்து
وَالْكَاظِمِينَ الْغَيْظَ
கோபத்தை சப்பி விழுங்குவோர் நல்ல மனிதர்கள் என்ற பொருளைத் தருகின்ற திருமறை வவசனத்தின் முற்பகுதியை ஓதினாள். உடனே அரசன் ஹாறூன் றஷீத் كَظَمْتُ الغَيْظَ கோபத்தை சப்பி விழுங்கிவிட்டேன் என்றார்கள். அதைத் தொடர்ந்து அவ்வசனத்தின் இரண்டாம் அடியை ஓதினாள் அதாவது وَالْعَافِينَ عَنِ النَّاسِ மனிதர்களை மன்னிப்பவர்கள் சிறந்தவர்கள் என்ற கருத்தை தருகின்ற அவ்வசனத்தின் மறு அடியை ஓதினாள். عَفَوْتُ عَنْكِ உன்னை நான் மன்னித்துவிட்டேன் என்றார் அரசர். அதைத் தொடர்ந்து அத்திரு வசனத்தின் மூன்றாம் தொடரை وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ அல்லாஹ் உபகாரம் செய்பவர்களை விரும்புகிறான் என்று ஓதினாள். அவர் أَعْتَقْتُكِ நான் உன்னை விடுதலை செய்துவிட்டேன் என்றார்.
 
அவர் அரசனாயிருந்தும் கூட அவருக்கு இப்படியொரு மன நிலை மாற்றம் ஏற்பட்டது பாராட்டுதற்குரியதாகும்.
 
தமது வீடுகள், கடைகளில் வேலைக்காக அமர்த்தியுள்ளவர்கள் பணியாட்களை அடிக்காமலும், ஏசாமலும், எந்த வகையிலும் துன்புறுத்தாமலும் அவர்களை கண்ணியமாக வைத்திருக்க வேண்டும். அவ்வாறு வைத்திருக்க விரும்பவில்லையானால் பணியாட்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
 
சில செல்வந்தர்கள் தமது வீடுகளில் சிறுவர்கள், சிறுமியர்கள், ஏழைப் பெண்களை பணிகளுக்காக அமர்த்திக் கொண்டு அவர்களுடன் தகாத முறையில் நடந்து கொள்வதும், அவர்களை அடித்து துன்புறுத்துவதும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டிய விடயங்களாகும். கேட்கவும், பார்க்கவும் எவரும் இல்லையென்ற நினைப்பால் சிறுவர்களையும், பெண்களையும் கடுமையாகத் தண்டிக்கும் வீட்டுக் காரர்களை ஊரவர்களும், மஹல்லா வாசிகளும் சேர்ந்து பொலீஸில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நடவடிக்கை எடுப்பவர்களுக்கு அல்லாஹ்விடம் உயர்வான கூலியுண்டு.
 
கணவனுக்கு கட்டுப்படாத மனைவிக்கு கணவன் அடிப்பதும் இவ்வாறுதான். அடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் காயம் ஏற்படாதவாறுதான் அடிக்கலாமே தவிர மனச் சாட்சிக்கு விரோதமாக மாடுகளை அடிப்பது போல் அடிப்பதும் இவ்வாறுதான்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments