Saturday, May 4, 2024
Homeஎழுத்தாக்கங்கள்நாற்பெரும் தத்துவங்கள்.

நாற்பெரும் தத்துவங்கள்.

 

سُبْحَانَ مَنْ لَا فَاعِلَ سِوَاهُ،

لَا مَوْجُوْدَ بِذَاتِهِ إِلَّا إِيَّاهُ،

وَاللهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُوْنَ،

وَلَا يُسْئَلُ عَمَّا يَفْعَلُ وَهُمْ يُسْئَلُوْنَ،

மேற்கண்ட வசனங்கள் எனது வசனங்கள் அல்ல. இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ் ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் ஞானப் பெட்டகம் “அல்யவாகீத் வல் ஜவாஹிர்” என்ற நூல் பாகம் ஒன்று பக்கம் ஐந்தின் இறுதியில் எழுதியுள்ள வசனங்களாகும்.
 
வசனங்களின் பொருள்:
ஒன்று: எச்செயலாயினும் அதைச் செய்பவனும், அதற்கு உரியவனும் – சொந்தக் காரனும் அல்லாஹ் மட்டுமேயாவான்.
இரண்டு: இருப்பவற்றில் அதாவது உள்ளவற்றில் தனது “தாத்” – “வுஜூத்” உள்ளமை கொண்டு இருப்பவன் அவன் மட்டுமே!
மூன்று: அல்லாஹ்தான் உங்களையும், நீங்கள் செய்பவைகளையும் – உங்களின் செயல்களையும் படைத்தான்.
நான்கு: அவன் செய்வது பற்றி அவன் கேட்கப்படமாட்டான். அவர்கள் – படைப்புக்கள் செய்பவை பற்றி அவர்கள் கேட்கப்படுவார்கள்.
 
மேற்கண்ட நான்கு தத்துவங்களும் யாரால் சொல்லப்பட்டனவாயினும் அவை திருக்குர்ஆனையும், நபீ மொழிகளையும் நுணுக்கமாக ஆய்வு செய்து எடுக்கப்பட்ட தத்துவங்களேயாகும்.
 
இதை இன்னுமொரு பாணியில் சொல்வதாயின் திருக்குர்ஆனையும், நபீ மொழிகளையும் கசக்கிப் பிழிந்து வடித்தெடுக்கப்பட்ட சாறு என்றும் சொல்லலாம்.
 
ஆகையால் உலகில் தோன்றிய அறிஞர்களிலும், மகான்களிலும் இவற்றில் ஒன்றையாவது பிழையென்று சொல்பவர் ஒருவர் கூட இருக்கமாட்டார். யாராவதொருவர் அவ்வாறு சொன்னால் எனது பார்வையில் அவர் அறிஞர் அல்லன். அறிஞன் உருவிலுள்ள ஓர் அறிவிலிதான்.
 
இந்த நான்கு அம்சங்களின் விளக்கத்தையும் ஒரே தலைப்பில் எழுதுவதற்கு முடியுமாயினும் வாசிப்பவர்களின் நலன் கருதி கட்டம் கட்டமாக எழுதலாமென்று நினைக்கிறேன்.
 
நான்கு தலைப்புக்களில் முதலாம் தலைப்பு தருகின்ற தத்துவத்தின் படி எழுதுகின்றவன் நான் அல்லன். وَالْقَدْرُ خَيْرُهُ وَشَرُّهُ مِنَ اللهِ تَعَالَى நன்மையும், தீமையும் அவன் செயலேதான். இதுவே நம்பிக்கை. ஒரு விசுவாசியின் நம்பிக்கையும் இவ்வாறே இருக்க வேண்டும். அறிவிலிகள் அறிஞர்கள் போல் நடிப்பதினாலேயே பொது மக்கள் தத்துவத்தை தலை கீழாய்ப் புரிந்து கொண்டனர். பொது மக்களின் வழிகேட்டிற்கும், அவர்களின் அறியாமைக்கும் காரண கர்த்தாக்கள் மௌலவீ வேஷம் போட்ட சில பொய்யர்களேயாவர்.
 
முதற் தத்துவம் (سُبْحَانَ مَنْ لَا فَاعِلَ سِوَاهُ) எச்செயலாயினும் அச்செயலுக்குரியவன் – சொந்தக் காரன் அல்லாஹ்வேதான். படைப்புகளில் எதற்கும், எவருக்கும் எச் செயலுமில்லை. இவ்வாறு நான் எழுதுவதால் அல்லாஹ்தான் சொந்தக் காரனாயினும் செய்வது படைப்பு என்று எவரும் நம்பிவிடவோ, விளங்கிவிடவோ கூடாது. மாறாக செயலுக்குச் சொந்தக் காரனும் அவன்தான் என்றும், செய்பவனும் அவன்தான் என்றுமே விளங்கவும் வேண்டும், நம்பவும் வேண்டும்.
 
அல்லாஹ்வின் படைப்புக்கள் உயர்திணையாயினும், அஃறிணையாயினும் அவை யாவும், அல்லது அவர்கள் யாவரும் “மளாஹிர்” அவனின் செயல்கள் வெளியாவதற்கான பாத்திரங்களேயாகும். அல்லது பாத்திரங்களேயாவர்.
 
நான் மேலே எழுதிய தத்துவத்தை இன்னுமொரு பாணியில் கூறலாம். அதாவது அல்லாஹ்வுக்கு மட்டுமே சுயமான செயலுண்டு என்றும், படைப்புகளில் எதற்கும், எவருக்கும் சுயமான செயல் இல்லையென்றும் சொல்லலாம். எந்தப் பாணியில் சொன்னாலும் செயலுக்குரியவனும், எதார்த்தத்தில் செய்பவனும் அல்லாஹ்தான் என்றும், படைப்புக்கள் எதுவாயினும் அது அவனின் செயல் வெளியாவதற்கான, அவனுக்கு வேறுபடாத பாத்திரம் என்றும் விளங்கி நம்ப வேண்டும். இவ்வாறு நம்பாதவன் மன்னாதி மன்னனாயினும், மௌலானாவாயினும், முப்தீயாயினும் அவன் “முஃமின்” விசுவாசியல்லன். இது நிச்சயம்.
 
கத்தி வெட்டும், நெருப்பு சுடும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான். ஆயினும் மௌலவீகளிற் சிலர் தவிர மற்ற மௌலவீமாருக்கும், பொது சனத்துக்கும் அது எவ்வாறு வெட்டுகிறது? எவ்வாறு சுடுகிறது? என்ற விபரம் தெரியாமலேயே காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவையும், அதிலும் குறிப்பாக முப்தீ மகான் மௌலவீ ரிஸ்வீ அவர்களையும் சுட்டிக் காட்டுகிறேன். இவர்கள் இறையியல், ஸூபிஸம் தெரிந்தவர்களாயிருந்திருந்தால் எனக்கும், அப்பாவிப் பொது மக்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று தீர்ப்புக் கூறியிருக்கமாட்டார்கள். கூறியிருப்பார்களா? “லாஇலாஹ இல்லல்லாஹ்” எனும் திருக் கலிமாவை மொழிந்த ஸூபிஸ முஸ்லிம்களை “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று சொல்லியிருக்கமாட்டார்கள். சொல்லியிருப்பார்களா? இவர்களின் நெஞ்சில் சரியான “ஈமான்” நம்பிக்கை இருந்திருந்தால் என்னையும், எனது கருத்தை ஏற்றுக் கொண்டவர்களையும் – இந்நாட்டவர்களையும், வெளிநாட்டவர்களையும் – கொலை செய்ய வேண்டுமென்று “பத்வா” கொடுத்திருக்கமாட்டார்கள். கொடுத்திருப்பார்களா? எங்களைக் கொலை செய்ய வேண்டுமென்று கொலை காரக் கும்பல்களை தூண்டியிருப்பார்களா? தூண்டியிருக்கமாட்டார்கள். உண்மையான “காபிர்”களில் குறவன், நழவன் போன்ற கீழ்சாதிகள் கூட அவ்வாறு செய்திருக்கமாட்டார்கள். செய்வார்களா? இல்லை ஒருபோதும் அவ்வாறு செய்திருக்கமாட்டார்கள். அவர்களுக்கு “ஈமான்” விசுவாசம் இல்லாது போனாலும் மனச் சாட்சியுண்டு.
 
“முர்தத்” என்ற “பத்வா”வை இதுகாலவரை அமுல்படுத்திக் கொண்டிருந்த மௌலவீ ரிஸ்வீ அவர்களும், “பத்வா” குழுவினரும் அல்லாஹ்வின் கடும் தண்டனைக்கும், சோதனைக்கும் உள்ளாகும் காலம் நெருங்கிவிட்டது. இல்லை. தொடங்கிவிட்டதென்றே கூற வேண்டும்.
 
மௌலவீ ரிஸ்வீ அவர்களும் , “பத்வா” குழுவினரும் பின்னால் நான் எழுதுகின்ற விடயத்தை ஏற்றுக் கொண்டார்களாயின் அவர்கள் அனைவரும் இந்த துன்யாவின் நீதித்துறை சட்டத்திலிருந்தும், “ஆகிறா” மறுமையில் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்தும் தப்பிக் கொள்வார்கள். இன்றேல் ஈருலகிலும் தண்டனைக் குள்ளாகிவிடுவார்கள்.
 
இதற்கு இரண்டு வழிகள்தான் உள்ளன. ஒன்று அவர்கள் “பத்வா”வை எந்தவொரு நிபந்தனையுமின்றி “வாபஸ்” பெற வேண்டும். இதை அவர்கள் செய்தால் ஈருலகத் தண்டனையிலிருந்தும் தப்ப முடியும்.
 
இரண்டு. அவர்கள் என்மூலமோ, அல்லது வேறு ஞானவான்கள் மூலமோ “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் தொடர்பாக ஐயமறக் கற்றுக் கொள்ள வேண்டும். அதாவது இந்த ஞானம் சரியானதென்று ஏற்றுச் செயல்பட வேண்டும். இரண்டாம் நிபந்தனை அவர்களின் ஈடேற்றத்திற்கு மட்டும் உரியதாகும். அதைச் செயல்படுத்துவது அவர்களின் விருப்பத்தைப் பொறுத்ததாகும்.
 
முக்கிய குறிப்புகள்:
 
கத்தி சுயமாக வெட்டுவதுமில்லை, அறுப்பதுமில்லை. நெருப்பு சுயமாக சுடுவதுமில்லை. கத்தி சுயமாக வெட்டுமென்றிருந்தால் நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்களின் மகன் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அறுத்த நேரத்தில் கத்தி அவர்களின் கழுத்தை அறுத்திருக்க வேண்டும். அது அறுக்கவில்லை.
 
நெருப்பு சுயமாக சுடும் என்றிருந்தால் நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அவர்களின் எதிரி நும்றூத் என்பவன் நெருப்புக் கிடங்கில் எறிந்த நேரம் நெருப்பு அவர்களை சுட்டிருக்க வேண்டும். அது சுடவில்லை.
 
இவ்விரு நிகழ்வுகளும் திருக்குர்ஆன் கூறும் நிகழ்வுகளாகும். இந்நிகழ்வுகள் மூலம் கத்திக்கு சுயமாக வெட்டும் சக்தியும், நெருப்புக்கு சுயமாக சுடும் சக்தியும் இல்லையென்பது தெளிவாகும். இவ்வாறுதான் ஏனைய படைப்புகளுக்குரிய சக்திகளுமாகும்.
 
கத்தி என்ற படைப்பில் அல்லாஹ் வெட்டுபவன் என்ற தன்மையில் வெளியானால் மட்டும் கத்தி வெட்டும். இவ்வாறுதான் நெருப்பு சுடுவதுமாகும். நெருப்பு என்ற படைப்பில் அல்லாஹ் சுடுபவன் என்ற தன்மையில் வெளியானால் மட்டுமே அது சுடும்.
 
மேற்கண்ட விபரங்கள் மூலம் سُبْحَانَ مَنْ لَا فَاعِلَ سِوَاهُ செய்பவன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை என்ற தத்துவம் வெளிச்சமாகிவிட்டது.
அடுத்து இரண்டாம் தத்துவம்.
 
இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் ஞானப் பெட்டகம் “அல்யவாகீத் வல் ஜவாஹிர்” எனும் நூல் பாகம் ஒன்று, பக்கம் ஐந்தின் இறுதியில் எழுதியுள்ள வசனங்களில் سُبْحَانَ مَنْ لَا فَاعِلَ سِوَاهُ செய்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லையே அவன் துய்யவன் என்ற வசனத்திற்கு மட்டும் கடந்த பதிவில் விளக்கம் எழுதியிருந்தேன்.
 
இரண்டாம் தத்துவமான لَا مَوْجُوْدَ بِذَاتِهِ إِلَّا إِيَّاهُ தனது “தாத்” உள்ளமை கொண்டு இருப்பவன் அவனையன்றி வேறு யாருமில்லை என்ற தத்துவம் பற்றி இந்த இரண்டாம் பதிவில் குறிப்பிடுகிறேன்.
جوهر نفيس
القائل بالغيريّة بين الخالق والمخلوق قائلٌ بقيام الخلق بنفسه من حيث لا يشعر، ولا يتدبّر ولا يتفكّر، كما أنّ الخالق قائم كذلك، وقد أشرك هذا القائل بالله عزّ وجلّ، دون القائل بالعينيّة بينهما، فإنّه قائل بقيام الخلق به تعالى،
فالحاصل أنّ الأوّل مشرك بالله لاعتقاده الغيريّة، والثاني مؤمن موحّد لاعتقاده العينيّة،
والمثال لقيام الخلق بالله تعالى كقيام الخاتم بالذّهب، وقيام القميص بالقطن، وقيام المسمار بالحديد، لعدم الإثنينيّةِ فى الأمثلة المذكورة، لا كقيام الشّجرة المائلة بالعمود، والجدار المائل به، لوجود الإثنين فى هذين المثالين، هنا شيئان، شجرة وعمود فى المثال الأوّل، وجدار وعمود فى المثال الثاني،
அறபு வசனங்களுக்கு சுருக்கமான விளக்கம்:
படைத்தவன் வேறு, படைப்பு வேறு என்று சொல்பவன் தான் அறியாமலும், சிந்திக்காமலும், ஆய்வு செய்யாமலுமேயே பெரும் தவறு செய்கிறான். அதாவது இறைவன் தன்னைக் கொண்டு நிற்பது போல் படைப்பும் தன்னைக் கொண்டே நிற்கிறதென்று சொல்கிறான்.
இவ்வாறு சொன்னவன் இறைவனில் அவசியம் இருக்க வேண்டிய ஒரு தன்மை படைப்பிலும் உள்ளதென்று நம்புகிறான். இறைவனுக்கு மட்டுமுள்ள ஒரு தன்மை படைப்புக்கும் உண்டு என்று எவன் நம்புகிறானோ அவன் இத்தன்மையில் இறைவனுக்கு நிகர் கற்பித்தவனாகிவிடுகிறான். இணை கற்பித்தவனாகிவிடுகின்றான்.
 
இறைவன் திருக்குர்ஆனில் لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ அவன் போன்று எதுவுமில்லை என்று 42ம் அத்தியாயம் 11வது வசனத்திலும், وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ அவனுக்கு நிகராக எதுவுமில்லை என்று 112ம் அத்தியாயம் 4வது வசனத்திலும் கூறியுள்ளான்.
 
இத்திரு வசனங்கள் மூலம் அல்லாஹ்வின் தாத் – உள்ளமையிலோ, அவன் “ஸிபாத்” தன்மைகளிலோ அவனுக்கு நிகராக யாருமில்லை என்றும், எதுவுமில்லை என்றும் கூறியிருக்கும் நிலையில் அவன் வேறு, படைப்பு வேறு என்று சொல்பவன் எதார்த்தத்தில் படைப்பு அவன் போன்று தன்னைக் கொண்டு நிற்கிறதென்று சொல்கிறான். நம்புகிறான். இவ்வாறு நம்பினவன் இறைவனுக்கு நிகர் கற்பித்து விட்டான் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லையாதலால் படைப்பு வேறு, படைத்தவன் வேறு என்று நம்பினவன் எந்த ஒரு கருத்து வேறுபாடுமின்றி இறைவனுக்கு இணை – நிகர் கற்பித்தவனாகிவிடுகின்றான்.
 
இவ்வடிப்படையில் இன்று உலகில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் இவ்விடயத்தில் எவ்வாறு நம்பியுள்ளார்கள் என்று ஆய்வு செய்தால் அவர்களில் ஸூபிஸ – தஸவ்வுப் வழி செல்வோர் தவிர ஏனைய முஸ்லிம்கள் அனைவரும் இறைவனுக்கு நிகர் – இணை கற்பித்தவர்களாகவே உள்ளனர்.
 
இன்று உலகிலுள்ள أديان – மார்க்கங்களில் அல்லது சமயங்களில் கிறித்துவ சமயத்தை ஏற்றுக் கொண்ட கிறித்துவர்களும், பௌத்த சமயத்தை ஏற்றுக் கொண்ட பௌத்தர்களும், இந்து சமயத்தை ஏற்றுக் கொண்ட இந்துக்களும் படைத்தவன் வேறு, படைப்பு வேறு என்ற கொள்கையுள்ளவர்களாகவே உள்ளனர். அவர்களை விட்டும் தூர நின்று சிந்திக்காமல் அவர்களை நெருங்கி அவர்களில் படித்தவர்களிடம் கேட்டால் இவ்வுண்மை குன்றின் மேல் தீபம் போல் வெளிச்சமாகும்.
 
மேற்குறித்த மூன்று மதத்தைச் சேர்ந்த, மதஞானமுள்ளவர்களிடம் பின்வருமாறு கேட்டால் அவர்கள் கூறும் விடையிலிருந்து அவர்கள் இறைவனை எவ்வாறு நம்பியுள்ளார்கள் என்று தெளிவாக தெரியவரும்.
 
அவர்களின் நம்பிக்கை எவ்வாறுள்ளதென்பதை அவர்கள் மூலமே அறிந்து கொள்வதற்காக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிறித்துவர்கள், பௌத்தர்கள், இந்துக்கள் ஆகியோருடன் உரையாடிய வகையில் அவர்கள் அனைவரும் படைத்தவன் வேறு, படைப்பு வேறு என்ற கொள்கையுள்ளவர்களாகவே உள்ளார்கள் என்று நான் தெரிந்து கொண்டேன். உண்மையும், எதார்த்தமும் இதுவேதான்.
 
அப்புஹாமியின் கொள்கையும், பெர்ணந்துவின் கொள்கையும், அருணாசலத்தின் கொள்கையும், நம்பிக்கையும் படைத்தவன் வேறு, படைப்பு வேறு என்ற நம்பிக்கையாயின் அப்துல்லாஹ்வின் நம்பிக்கை இவர்களின் நம்பிக்கைக்கு முரண்பட்டதாக, வேறு பட்டதாக இருக்க வேண்டும். முஸ்லிம்களும் அவர்கள் போன்ற நம்பிக்கையுள்ளவர்களாயின் மார்க்கங்களில் இஸ்லாம் ஒன்றே சரியான மார்க்கம் என்று إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الْإِسْلَامُ அல்லாஹ்வின் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம் ஒன்றே என்று திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறியிருப்பதன் கருத்து என்ன?
 
படைத்தவனும், படைப்பும் ஒன்றுதானா? அல்லது அவன் வேறு, படைப்பு வேறா என்ற விடயத்தில் மேற்கண்ட மூன்று மதவாதிகளும், இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவனும் ஒரே கொள்கையுள்ளவர்களென்றால் பிற மதவாதிகளை முஸ்லிம்கள் “காபிர்”கள் – நிராகரித்தவர்கள் என்று ஏன் சொல்ல வேண்டும்? அவர்கள் மட்டுமல்ல இறைவனே அவர்களைக் “காபிர்” என்று நிறைய இடங்களில் சொல்லியுள்ளானே ஏன் அவ்வாறு சொல்ல வேண்டும்?
 
அனைத்து மதவாதிகளும் ஒரு கொள்கையுள்ளவர்களாயிருப்பதால் அவர்களை ஒட்டு மொத்தமாக “முஃமின்” விசுவாசிகளென்று சொல்லியிருக்கலாமே?
 
நமது இலங்கை நாட்டைப் பொறுத்த வகையிலும், வெளிநாடுகளைப் பொறுத்த வகையிலும் முஸ்லிம்கள் அல்லாதவர்களை – பிற மதத்தவர்களை முஸ்லிம்கள் (காபிர் – காபிறூன் – காபிரீன்) என்ற அறபுச் சொற்கள் கொண்டே அழைக்கின்றனர். இது ஏன்?
 
“காபிர்” சொல் விளக்கம்.
 
“காபிர்” என்ற சொல்லுக்கு “நிராகரிப்பவன்” என்றுதான் தமிழ் மொழியில் திருக்குர்ஆன் விரிவுரை எழுதியவர்களும், நபீ மொழிகளுக்கு விளக்கம் எழுதியவர்களும், பேசுபவர்களும் கூறுகிறார்கள். இவர்களிடம் பின்வருமாறு கேட்பதற்கு எனக்குத் தோணுகிறது. அல்லது இச்சொல் பற்றி சிறியதோர் விளக்கம் கூறத் தோணுகிறது. இவர்களிடம் கேட்கும் விளக்கத்தையே எழுதுகிறேன்.
 
முஸ்லிம்கள் பிற மதத்தவர்களை “காபிர்” என்று அழைப்பதற்கான காரணம் – தத்துவம் புரியாமலேயே அவ்வாறு அழைத்துக் கொண்டுள்ளார்கள்.
 
“காபிர்” என்ற சொல்லுக்கு நிராகரிப்பவன் என்று பொருள் சொல்வதை நான் மறுக்கவில்லை. பொருள் சரியானதே. எனினும் இறைவன் அவர்களை என்ன காரணத்திற்காக “காபிர்” என்ற சொல் கொண்டு அழைத்தான் என்பதற்கான காரணம் தெரியாமல் முஸ்லிம்கள் அவர்களை அழைத்து வருகிறார்கள்.
 
வெள்ளிக்கிழமை மின்பர் – மேடையில் நின்று முழங்கும் மௌலவீகளும், அறபுக் கல்லூரிகளில் கற்றுக் கொடுக்கும் ஸூபிஸம் தெரியாத, இறையியல் புரியாத ஹஸ்றத்மார்களும் “காபிர்” என்ற சொல்லின் தாற்பரியம் புரியாமலேயே மற்றவர்களை “காபிர்” என்று குறிப்பிட்டு வருகிறார்கள்.
 
இவர்கள் “காபிர்” என்று குறிப்பிடும் கிறித்துவ மதவாதி இறைவனை நிராகரிப்பவன் என்றால் அவனுக்கு வணக்க வழிபாட்டுக்கான ஆலயம் எதற்கு? ஏன் அவன் கடவுளை வணங்க வேண்டும்? இதேபோல் பௌத மதமாதி இறைவனை நிராகரிப்பவனாயின் அவனுக்கு வணக்க வழிபாட்டுக்கான பன்ஸலை – விகாரை எதற்கு? இந்து மதவாதி இறைவனை நிராகரிப்பவன் என்றால் அவனுக்கு வணக்க வழிபாட்டுக்கான கோவில் எதற்கு? ஏன் அவன் வணக்க வழிபாடு செய்ய வேண்டும்?
 
கடவுள் இல்லை என்பவனுக்கும், அவனை நிராகரிப்பவனுக்கும் வணக்க வழிபாட்டுத் தலங்கள் தேவையுமில்லை, அவன் வழிபடத் தேவையுமில்லை. இன்று முஸ்லிம்கள் யாரையெல்லாம் காபிர்கள் என்று சொல்கிறார்களோ அவர்கள் அனைவரும் ஆத்திகர்களாக – கடவுள் உள்ளான் என்ற கொள்கையுள்ளவர்களாகவே உள்ளார்கள். இந்நிலையில் மாற்று மதத்தினர்களை “காபிர்” இறைவனை நிராகரிப்பவர்கள், மறுப்பவர்கள் என்று முஸ்லிம்கள் சொல்வது முற்றிலும் பிழையானதேயாகும். முஸ்லிம்கள் விடயம் விளங்காமல் அவ்வாறு சொல்கிறார்கள் என்றால் அல்லாஹ் அவர்களை காபிர்கள் என்று கூறுவது எந்த வகையில் என்று கேட்பவர்களுக்கு நான் கூறும் பதில் பின்வருமாறு.
 
முஸ்லிம்கள் “காபிர்” என்ற சொல்லுக்கு நிராகரிப்பவன் என்று பொருள் கூறுவது சரிதான். அதை நான் மறுக்கவில்லை. அதேபோல் அல்லாஹ் அவர்களை காபிர் – நிராகரிப்பவர்கள் என்று கூறுவதும் சரிதான். ஆயினும் அவர்கள் இறைவனை நிராகரிக்கிறார்களா? அல்லது வேறொன்றை நிராகரிக்கின்றார்களா? என்பதை அல்லாஹ் அறிந்தவன்தான். ஆயினும் இன்னும் முஸ்லிம்கள் புரிந்து கொள்ளவில்லை. (தொடரும்)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments