Saturday, May 18, 2024
Homeஎழுத்தாக்கங்கள்“சகாத்” வழங்கும் செல்வந்தர்களே!

“சகாத்” வழங்கும் செல்வந்தர்களே!

 
தொகுப்பு: அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்.
 
புனித றமழான் வருகிறது. “சகாத்” நிதியை உரியவர்களுக்கு வழங்குவதற்கும், நோன்பாளிகளை நோன்பு திறக்க வைப்பதற்கும், நோன்பு நோற்கும் ஏழைகளுக்கு முன்கூட்டியே பேரீத்தம்பழம், அரிசி, பருப்பு, சீனி போன்ற உணவுப் பொருட்கள் வழங்குவதற்கும் ஆயித்தமாகுங்கள்!

“சகாத்” நிதி பெறுவதற்கு தகுதியானவர்கள் எட்டுக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமேயாவர். இவர்கள் தவிர வேறு எவருக்கும் உங்களின் “சகாத்” நிதியை வழங்காதீர்கள். மற்றவர்களுக்கு கொடுக்க விரும்பினால் சகாத் நிதியிலிருந்து கொடுக்காமல் உங்களின் சொந்தப் பணத்தை அதற்காக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
 
எட்டுக் கூட்டத்தவர்களிலும் உங்களின் இரத்த உறவினர்களுக்கு முன்னுரிமை வழங்குங்கள். உலமாஉகளில் “சகாத்” நிதி பெற தகுதியானவர்களுக்கும் முன்னுரிமை வழங்குங்கள்.
 
எட்டுக் கூட்டத்தவர்களாயினும் அவர்களில் தொழாதவர்கள், நோன்பு நோற்க சக்தியிருந்தும் நோற்காதவர்கள், மதுபானம் அருந்துபவர்கள், மற்றும் மார்க்க விரோதச் செயல்கள் செய்பவர்களுக்கு “சகாத்” நிதி வழங்காதீர்கள். இவர்களுக்கு உங்களின் சொந்த நிதியிலிருந்து கொடுப்பதையும் தவிர்ந்து கொள்ளுங்கள்.
 
ஏனெனில் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
 
قال صلى الله عليه وسلم لَا تَأْكُلْ إِلَّا طَعَامَ تَقِيٍّ وَلَا يَأْكُلْ طعامك إلا تقي
நீ சாப்பிடுவதாயினும் “தகீ” இறையச்சம் உள்ளவனின் உணவையே சாப்பிடு. உனது உணவை சாப்பிடுவதாயினும் இறையச்சம் உள்ளவனே சாப்பிடட்டும். (இஹ்யாஉ உலூமித்தீன்)
 
இந்த நபீ மொழியின் படி “தக்வா” இறையச்சம் இல்லாதவனின் உணவை இறையச்சம் உள்ளவர்கள் சாப்பிடவும் கூடாது. இதேபோல் இறையச்சம் இல்லாதவர்களுக்கு இறையச்சம் உள்ளவர்கள் உணவு வழங்கவும் கூடாது.
 
நபீ மொழியில் “தஆம்” உணவு என்ற சொல் வந்திருந்தாலும் இதில் பணம், மற்றும் உதவிகளும் அடங்கிவிடும்.
 
பண வசதியுள்ளோர் மேற்கண்ட விதிகளைப் பேணி நடந்தால்தான் தொழாதவர்களை தொழச் செய்யவும் முடியும், மார்க்கத்திற்கு முரணாக நடப்பவர்களை நல்வழிப்படுத்தவும் முடியும். கொலை காரனுக்கு கொலைச் சாதனங்கள் விற்பது கூட கொலைக் குற்றத்திற்கு உதவுவதாகவே ஆகும்.
 
மனிதர்களிற் சிலர் உள்ளனர். அவர்கள் “சகாத்” நிதி பெறுவதற்கு தகுதி பெற்றவர்களாயிருந்தாலும் கூட தமது கௌரவத்தை இழக்க விரும்பாதவர்களாயிருப்பர். கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்பது போல் உடைகளைக் கழுவிச் சுத்தமாக உடுத்திருப்பார்கள். எவரிடமும் கை நீட்டாமல் வறுமையாயினும் அதில் இன்பம் கண்டு இறைவனுக்கு “ஷுக்ர்” நன்றி சொல்பவர்களாயிருப்பார்கள். இவர்களுக்கு “சகாத்” நிதி கொடுப்பதும், இவர்களைக் கவனிப்பதும் அதிக நன்மையைப் பெற்றுத் தரும் என்பதில் சந்தேகமில்லை. இன்னோரைத் தேடித்தான் கண்டு பிடிக்கலாம். பள்ளிவாயல்களிலும் இன்னோரைக் காணலாம்.
 
لِلْفُقَرَاءِ الَّذِينَ أُحْصِرُوا فِي سَبِيلِ اللَّهِ لَا يَسْتَطِيعُونَ ضَرْبًا فِي الْأَرْضِ يَحْسَبُهُمُ الْجَاهِلُ أَغْنِيَاءَ مِنَ التَّعَفُّفِ تَعْرِفُهُمْ بِسِيمَاهُمْ لَا يَسْأَلُونَ النَّاسَ إِلْحَافًا وَمَا تُنْفِقُوا مِنْ خَيْرٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ
விசுவாசம் கொண்டவர்களே! தர்மமானது அல்லாஹ்வின் பாதையில் தங்களை முற்றிலும் போர் செய்வதற்கென அர்ப்பணஞ் செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார்களே அத்தகைய ஏழைகளுக்குரியதாகும். தங்களின் சொந்த வாழ்க்கைத் தேவைக்கு பூமியில் பிரயாணம் செய்ய அவர்கள் சக்தி பெறமாட்டார்கள். அன்றி, அவர்கள் பிறரிடம் யாசிக்காத அவர்களின் பேணுதலினால் அவர்களின் நிலையை அறியாதவர் அவர்களைச் சீமான்களென எண்ணுவார். அவர்களின் அடையாளங்களால் நீங்கள் அவர்களை அறிந்து கொள்வீர்கள். அவர்கள் மனிதரிடத்தில் வருந்திக் கேட்கமாட்டார்கள். நல்லதிலிருந்து நீங்கள் எதனை செய்த போதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவன். (திருக்குர்ஆன் 2-273)
 
பள்ளிவாயல் இமாம்களில் ஒரு சிலர் தவிர மற்றவர்களும், “முஅத்தின்” – பாங்கு சொல்வோர் – அனைவரும் ஏழைகளாகவே இருப்பார்கள். இவர்களும், குர்ஆன் மத்ரஸாக்கள், அறபுக் கல்லூரிகளில் கடமை செய்வோரும் ஏழைகள் பட்டியலில்தான் சேர்வார்கள். இவர்களும் முன்னுரிமை கொடுத்து கவனிக்கப்பட வேண்டியவர்களேயாவர். இவர்கள் போன்றவர்களே அறபுக் கல்லூரி மாணவர்களும், மற்றும் தொழில்வாய்ப்பின்றி வாழும் மௌலவீமார்களுமாவர்.
 
“சகாத்” வழங்கும் செல்வந்தர்கள் சரியாக கணக்கிட்டு சகாத் நிதி வழங்க வேண்டும். சில செல்வந்தர்கள் சரியாகக் கணக்கிடாமல் ஏதோ ஒரு தொகையை மதிப்பிட்டு கொடுக்கின்றார்கள். இவர்களின் “சகாத்” நிறைவேறாது. “சகாத்” ஒவ்வொரு வருடமும் கடமையானதல்ல. வாழ்நாளில் ஒரு தரம் கொடுத்தால் மட்டும் போதுமென்ற கூற்றை ஸுன்னீகள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
 
“சகாத்” வழங்கத் தகுதி பெற்ற செல்வந்தர்கள் முதலில் தமது இரத்த உறவுகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களைக் கவனிக்க வேண்டும். குமர்களை வைத்துக் கொண்டு வீடு கட்டுவதற்குக் காணி வாங்க வசதியற்ற நிலையிலுள்ள உறவினர்களுக்கு காணி வாங்கி வீடு கட்டி திருமணம் செய்து வைக்க வேண்டும்.
 
செல்வந்தர்களிற் சிலர் தமது குடும்பத்தவர்கள் என்ற வகையில் “சகாத்” நிதி பெறத் தகுதியற்றவர்களுக்கும் கொடுக்கின்றார்கள். இது முற்றிலும் தவறு. யாராவது அவ்வாறு செய்திருந்தால் அந்தப் பணத்தை அவர்களிடம் கேட்டு பிரச்சினையை வளர்க்காமல் தமது பணத்தில் அத் தொகையை கொடுத்து பாவத்திலிருந்து தப்பிக் கொள்ள வேண்டும்.
 
ஒருவன் ஓர் ஏழைக்கு ஏழை என்ற வகையில் “சகாத்” கொடுத்து விட்டு பின்னர் அவனிடம் வேலை வாங்கி விட்டு கூலியில் கழிக்கக் கூடாது. “ஹறாம்” ஆகும்.
 
“சகாத்” நிதியென்று ஒதுக்கிய நிதியில் கொடுத்தது போக பாக்கி இருக்கும் நிலையில் நோன்பு பெருநாள் வந்து விட்டால் எஞ்சிய பணத்தை அல்ஹம்துலில்லாஹ் என்று அவன் சொந்தமாக்கிக் கொள்வது “ஹறாம்” ஆகும்.
 
“சகாத்” நிதியில் “ஸாதாத்” மௌலானாமார்களுக்கு கொடுப்பதும் “ஹறாம்” ஆகும். அவர்களுக்கு கொடுக்க விரும்பினால் கொடுப்பவன் தனது சொந்தப் பணத்தலிருந்து அன்பளிப்பாக கொடுக்கலாம். “ஸாதாத்”மார் “சகாத்” காலங்களில் செல்வந்தர்களின் வீடுகளுக்குச் செல்வதும் தவிர்க்கப்பட வேண்டும்.
 
“சகாத்” பெற தகுதியுள்ள மௌலவீமார் “சகாத்” காலத்தில் செல்வந்தர்களின் வீட்டுக் கதவைத் தட்டிக் கொண்டு நிற்பதும் தவிர்க்கப்பட வேண்டும். செல்வந்தர்கள்தான் “சகாத்” நிதியை மௌலவீமார்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களிடம் கண்ணியமாக கொடுக்க வேண்டும். உலமாஉகள் “சகாத்” காலத்தில் செல்வந்தர்களுக்கு அதிகம் “ஸலாம்” சொல்வதையும், குசலம் விசாரிப்பதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
 
“சகாத்” கொடுப்பதற்கு தகுதி பெற்ற செல்வந்தன் உலோபித் தனத்தால் கொடுக்காமலிருந்தால் அவனை சபித்து விட்டு வரத் தேவையில்லை. ஏனெனில் அவனை தினமும் இரு மலக்குகள் சபிப்பதாக அண்ணலெம் பெருமானே 1400 வருடங்களுக்கு முன் கூறிவிட்டார்கள். இத்தகையோர் ஒரு நாள் யாசகன் வேஷம் போடத்தான் வேண்டும்.
 
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ‘ مَا مِنْ يَوْمٍ يُصْبِحُ العِبَادُ فِيهِ، إِلَّا مَلَكَانِ يَنْزِلاَنِ، فَيَقُولُ أَحَدُهُمَا: اللَّهُمَّ أَعْطِ مُنْفِقًا خَلَفًا، وَيَقُولُ الآخَرُ: اللَّهُمَّ أَعْطِ مُمْسِكًا تَلَفًا ‘
ஒவ்வொரு நாளும் அடியார்கள் காலைப்பொழுதை அடையும்போது, இரு வானவர்கள் (வானிலிருந்து) இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், “இறைவா! (நல்வழியில்) செலவு செய்பவருக்குப் பிரதிபலன் வழங்குவாயாக!” என்று கூறுவார். மற்றொருவர், “இறைவா! (நல்வழியில்) செலவு செய்ய மறுப்பவருக்கு இழப்பைத் தருவாயாக!” என்று கூறுவார். (அதாரம்: புகாரீ – 1442) அல்லாஹ்வின் பாதையில் அள்ளி இறைக்காத ஒவ்வோர் உலோபியும் இவ் எச்சரிக்கைக்கு ஆளாக வேண்டும்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments