Monday, May 20, 2024
Homeஎழுத்தாக்கங்கள்இறைஞானிகள் இறை அகமியங்களை மக்கள் மத்தியில் தெளிவாகச் சொல்லாமல் நொடி போல் ஜாடையாகச் சொல்வதேன்? சொன்னதேன்?

இறைஞானிகள் இறை அகமியங்களை மக்கள் மத்தியில் தெளிவாகச் சொல்லாமல் நொடி போல் ஜாடையாகச் சொல்வதேன்? சொன்னதேன்?

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ

இறைஞானிகளிற் சிலர் இறை தத்துவங்களை மக்கள் மத்தியில் பகிரங்கமாகச் சொல்லாமல் நொடி போல் ஜாடையாகவும், சிலேடையாகவும் சொல்வதேன்? சொன்னதும் ஏன்?


وكان سيّدي عليُّ الوفا رضي الله عنه إذا سُئل لِمَ رَمَزَ القومُ كلامَهم؟ يقول اِفْهَمُوْا هذا المثالَ، تَعْلَمُوْا سبَبَ رَمَزِهِمْ،
وذلك أنّ الدنيا غَابَةٌ، ونُفُوْسُ الْمَحْجُوْبِيْنَ عَنْ حَقَائِقِ الْحَقِّ الْمُبِيْنِ مِنْ أَهْلِهَا كَالسِّبَاعِ وَالْوُحُوْشِ الْكَوَاسِرِ، وَالْعَارِفُ بَيْنَهُمْ كإِنْسَانٍ دَخَلَ لَيْلًا إِلَى تِلْكَ الْغَابَةِ، وَهُوَ حَسَنُ الْقِرَائَةِ وَالصَّوْتِ، فَلَمَّا أَحَسَّ بِمَا فِيْهَا مِنَ السِّبَاعِ الْكَوَاسِرِ اِخْتَفَى فِى بَطْنِ شَجَرَةٍ وَلَمْ يَجْهَرْ بِالْقُرْآنِ يَتَغَنَّى بِهِ هُنَاكَ حَذَرًا مِنْهُمْ، أَلَيْسَ يَدُلُّ اِخْتِفَائُهُ عَنْهُمْ وَعَدَمُ رَفْعِ صَوْتِهِ بِالْقُرْآنِ عَلَى أَنَّهُ عَلِيْمٌ حَكِيْمٌ، إِذْ لَوْ تَرَائَى لَهُمْ، أَوْ أَسْمَعَهُمْ صَوْتَهُ وَقِرَائَتَهُ لَمْ يَهْتَدُوْا بِهِ وَلَمْ يَفْهَمُوْا عَنْهُ وَسَارَعُوْا إِلَى تَمْزِيْقِ جَسَدِهِ وَأَكْلِ لَحْمِهِ، وَكَانَ هُوَ الْمُلْقِيَ لِنَفْسِهِ إِلَى التَّهْلُكَةِ، وَذَلِكَ حَرَامٌ، فَافْهَمُوْا هَذَا الْمِثَالَ،
அஸ்ஸெய்யித் அலீ இப்னு வபா றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் யாராவது பின்வருமாறு கேட்டால் – அதாவது இறைஞானிகள் இறை தத்துவங்களையும், அவனின் அகமியங்களையும் தெளிவாக மக்களிடம் சொல்லாமல் நொடி போலும், ஜாடையாகவும், சிலேடையாகவும் சொன்னதேன்? என்று கேட்டால், நான் ஓர் உதாரணம் சொல்கிறேன். இதை நீங்கள் விளங்கிக் கொண்டால் அதற்கான காரணத்தையும் புரிந்து கொள்வீர்கள் என்று சொல்வார்கள்.

உதாரணம் – இவ்வுலகம் ஒரு காடு போன்றது. இக்காட்டில் வாழும் எதார்த்தமும், தத்துவமும் புரியாதவர்கள் பயங்கர மிருகங்கள், விலங்குகள் போன்றவர்களாவர்.

இத்தகைய மிருகங்களுக்கும், விலங்குகளுக்குமிடையே வாழ்கின்ற, அழகிய குரல் வளமுள்ள, திறமையாக ஓதத் தெரிந்த ஓர் இறைஞானி ஒரு நாளிரவு அக்காட்டிற்குச் சென்றான். அங்கு பயங்கர மிருகங்களும், விலங்குகiளும் வாழ்வதையறிந்த அந்த ஞானி அந்த மிருகங்கள், விலங்குகளினதும் தீமையைப் பயந்து அவற்றுக்கு தன்னை காட்டிக் கொள்ளாமல் ஓர் மரத்தின் கீழ் மறைந்து கொண்டு சத்தம் காட்டாமல் மௌனியாயிருந்தார்.

இவ்வாறு இறைஞானி நடந்து கொண்டது அவர் ஒரு புத்திசாலி என்பதற்கு ஆதாரமா? இல்லையா? ஞானி அவ்வாறு நடந்து கொள்ளவில்லையானால் – தன்னைக் காட்டிக் கொள்ளாமல் இருக்கவில்லையானால் வன விலங்குகள் அவரைத் தாக்கி அவரைக் கடித்து சாப்பிட்டிருக்குமா? இல்லையா? நிச்சயமாக அவர் மிருகங்களுக்கு பலியாகியிருப்பார். இதில் சந்தேகமே இல்லை. இறைஞானி தனது அறிவையும், புத்தியையும் பயன்படுத்தி அவ்வாறு நடக்காமலிருந்து வன விலங்குகளுக்கு இரையாகியிருந்தால் இறைஞானி தானாக ஓர் அழிவை தேடி அதில் விழுந்த குற்றவாளியாகியிருப்பார்.

எனவே, لَا تُلقوا بِأَيْدِيْكُمْ إِلَى التَّهْلُكَةِ நீங்களாகவே அழிவுக்கு வழி செய்யாதீர்கள் என்ற திரு மறை வசனத்தின்படி நாமாக அழிவுக்கு வழிதேடலாகாது என்பது தெளிவாகிறது. இதை அந்த ஞானமகானும் புரிந்திருந்தார்.

இவ் உதாரணத்தின் சுருக்கம் என்னவெனில், “துன்யா” எனும் இவ்வுலகம் பயங்கர மிருகங்கள் வாழும் காடு போன்றது. பயங்கர மிருகங்கள் என்பன மிருகங்களின் பண்புகளையுடைய மனிதர்களையே குறிக்கும். இந்த மிருகங்கள் அதாவது மிருகங்களின் பண்புள்ள கெட்ட மனிதர்களுடன் ஒரு ஞானி போய் சேர்ந்து அவர் மௌனியாக வாழ்ந்தால், தான் யாரென்று அவர்களுக்கு காட்டிக் கொள்ளாமல் வாழ்ந்தால் அவர்களால் இறைஞானிக்கு எந்தவொரு கஷ்டமும், துன்பமும் ஏற்படமாட்டாது. அவர் நிம்மதியாக எந்த ஓர் அச்சமும், பயமுமின்றி வாழ்வார். இதுவே அறிவுடைமையாகும்.

இறைஞானி இதற்கு மாறாக அவர்களிடம் இறைஞானங்களையும், அவனின் அகமியங்களையும் கூறுவாராயின் அறியாமைத் திரையில் வாழ்கின்ற அந்த மிருகங்கள் ஞானியைக் கீறிக் கிழித்து அவரைக் கொன்று சாப்பிட்டு ஏப்பம் விட்டுவிடும்.

எனவே, பயங்கர மிருகங்கள் வாழும் காட்டுக்குச் சென்ற ஞான மகான் வாய் மூடி தன்னை யாரென்று காட்டிக் கொள்ளாமல் வாழ்ந்தால் அவர் நிம்மதியாக வாழ முடியும். இன்றேல் அவருக்குத் தொல்லைதான்.

உலக வரலாற்றில் இவ்வாறு வாழ்ந்தவர்களும் உள்ளனர். இதற்கு மாறாக இறைஞானம் பேசி அதை அறியாத மனித மிருகங்களால் துன்புறுத்தப்பட்டவர்களும் உள்ளனர்.

அன்புக்குரிய சகோதர, சகோதரிகளே!

இவ் உதாரணம் இக்காலத்தைப் பொறுத்தவரை அப்துர் றஊப் ஆகிய எனக்கே பொருத்தமானதாகும். “துன்யா” என்ற பயங்கர மிருகங்களின், விலங்குகளின் குணங்களுடைய மிருகங்கள் வாழும் காட்டிற்கு வந்த நான் இங்குள்ள சூழ்நிலைகளையும், மனித மிருகங்களின் பண்பாடுகளையும், பழக்க வழக்கங்களையும் அவதானித்து நான் யாரென்று காட்டிக் கொள்ளாமல் புத்தியைப் பயன்படுத்தி மௌனியாக வாழ்ந்திருக்க வேண்டும். அவ்வாறு வாழ்ந்திருந்தால் யானை, கறடி, புலி, சிங்கம் முதலான மனித மிருகங்களுக்கு இரையாகாமல் நிம்மதியாக வாழ்ந்திருக்கலாம்.

ஆயினும் வனவிலங்குகள் தமக்கென்ன செய்யப் போகின்றனவென்று அவற்றின் மீது நல்லெண்ணம் கொண்ட காரணமாக நான் யாரென்று காட்டிக் கொண்டதால் இக்காட்டில் வாழும் ஒவ்வொரு மிருகமும் என்னைத் தொல்லைப் படுத்துகிறது.

இக்காட்டில் மனித உருவத்தில் வாழ்கின்ற கறடிகள் வந்து என் காலைக் கடிக்கின்றன. சிங்கங்கள் வந்து என்மீது சீறிப் பாய்கின்றன. புலிகள் வந்து என்னுடலை கீறிக் கிழிக்கின்றன. பல்லிகள் என்னைப் பகடி பண்ணுகின்றன. உடும்புகள் என் உடலை கடிக்கின்றன. பன்றிகள் என்மீது பாய்கின்றன.

இந்த அற்ப துன்யாவில் வாழ்கின்ற வேற்றுமைத்திரை போட்டுக் கொண்ட விஷ ஜந்துக்கள் எல்லாம் நான் போகுமிடங்களை அவதானித்து அங்கெல்லாம் வந்து எனக்கு தொல்லை தருகின்றன.

இதற்கெல்லாம் மூல காரணம் மிருகங்கள் மத்தியில் நான் மனிதனாக வாழ்வதேயாகும்.
என்னதான் நடந்தாலும் நடக்கட்டும் என்று எவருக்கும் அஞ்சாமல் அல்லாஹ்வின் அகமியங்களை மிருகங்களுக்கு மத்தியில் கூறி, இறைஞானம் கூறி வாழ்ந்தவர்களும் ஞான மகான்களில் உள்ளனர். அவர்கள் எதையும் தாங்கும் இதயமுள்ளவர்களாக இருந்தார்கள். அவர்களை எந்தவொரு மனித மிருகத்தாலும் வெல்லமுடியாமற் போயிற்று.

இவற்றுக்கு உதாரணமாக பல்லாயிரம் இறைஞான மகான்களை குறிப்பிடலாம். உதாரணமாக உலகில் தோன்றிய இறைஞான மகான்களில் குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் போன்று.

இவர்கள் மிருகங்கள் வாழும் காட்டில் வசித்து தங்களை யாரென்று காட்டினவர்கள்தான். இறைஞானங்களை அள்ளி வழங்கினவர்கள்தான். قَدَمِيْ هَذِهَ عَلَى رَقَبَاتِ كُلِّ وَلِيٍّ للهِ எனது காற்பாதம் உலகில் வாழ்கின்ற அனைத்து வலீமாரின் பிடரியிலும் உள்ளது என்று சொன்னவர்கள்தான். செத்துப் போன – மரணித்த மக்களை உயிர்ப்பித்துக் காட்டியவர்கள்தான். ஆனால் எந்த ஒரு மனித மிருகத்தாலும் அவர்களைத் தீண்ட முடியாமற் போயிற்று. இவர்கள் போல் பல ஞான மகான்கள் மனித மிருகங்களிடம் மாட்டிக் கொள்ளாமல் வாழ்ந்து மறைந்துள்ளார்கள் என்பதற்கு வரலாறுகள் நிறைய உள்ளன. சமீபத்தில் வெளியாகவுள்ள “அல்கிப்ரீதுல் அஹ்மர்” எனும் நூலை வாசிப்பவர்கள் பயன் பெறுவர்.

இன்னும் பல ஆன்மீக மகான்கள் மனித மிருகங்களிடம் மாட்டிக் கொல்லப்பட்டதற்கும் வரலாறு உண்டு. அவற்றை எழுதத் தொடங்கினால் எழுதிக் கொண்டே போகலாம். மேலே குறிப்பிட்ட நூலிலும் அவர்களின் வரலாறு கூறப்பட்டுள்ளது.

எனினும் சிலரின் வரலாறை மட்டும் சுருக்கமாக சுட்டிக் காட்டுகிறேன்.

இமாம் மன்ஸூர் ஹல்லாஜ் றஹிமஹுல்லாஹ் அவர்கள். இவர்கள் பக்தாத் நகரில் இமாம் “ஸெய்யிதுத் தாயிபா” ஸூபீகளின் தலைவர் என்று பிரசித்தி பெற்ற இமாம் ஜுனைதுல் பக்தாதீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் காலத்தவர்கள்.

அன்று அவர்களின் காலத்தில் வாழ்ந்த மனித மிருகங்களால் “முர்தத்” அல்லது “சிந்தீக்” என்று “பத்வா” தீர்ப்பு வழங்கப்பட்டு பல இலட்சம் மக்கள் மத்தியில் கை, கால்கள் வெட்டப்பட்டும், கண்கள் தோண்டப்பட்டும், இன்னும் பல சித்திரவதைகள் செய்யப்பட்டும் கொல்லப்பட்டார்கள். இவர்கள் போல் இன்னும் பலர் கொல்லப்பட்டுமுள்ளார்கள். இன்ஷா அல்லாஹ் நான் உயிருடன் இருந்தால் இவர்களின் வரலாற்றையும், இவர்கள் போல் கொல்லப்பட்ட பெரு மகான்களின் வரலாற்றையும் ஒரு விரிவான நூலாக எழுதுவேன்.

இன்னும் பல ஞான மகான்கள் மனித மிருகங்களின் தொல்லைகள் தாங்க முடியாமல் வருடக் கணக்கில் மருத்துவ மனைகளை தமது வீடுகளாக ஆக்கி வாழ்ந்தும் மறைந்துள்ளார்கள்.

இத்தகைய மகான்களை கொன்றொழித்தவர்கள் பொது சனங்கள் அல்ல. கற்றறிந்த பொறாமை, ஆற்றாமையால் தாக்கப்பட்ட மனித உருவத்தில் வாழ்ந்த மிருகங்களேயாகும்.

மேலே நான் எழுதிக்காட்டிய உதாரணத்துக்கு இக்காலத்தில் நமது நாட்டைப் பொறுத்து நான் இருந்தாலும் கூட இதுவரை அல்லாஹ் வன விலங்குகளுக்கு என்னை இரையாகாமல் காப்பாற்றிக் கொண்டே இருக்கிறான். இதை நிரூபிக்க எத்தனையோ வரலாறுகள் கூறலாம். அவற்றில் கை வைத்தால் கட்டுரை நீண்டுவிடும். எனினும் சிறு குறிப்பு ஒன்றை மட்டும் எழுதுகிறேன்.

அவ்லியாஉகளுக்கு எதிரியான ஒருவன் என்னிடம் “பைஅத்” செய்து கொண்ட ஒரு முரீதிடம், றஊப் மௌலவீ றஊப் மௌலவீ என்று அவரின் காலடியில் மண்டியிட்டுக் கிடக்கிறீர்களே! அவரில் எதைக் கண்டீர்கள்? என்று கேட்டாராம். அதற்கு அந்த முரீத், ஓரிரு அற்புதங்கள் என்றால் என்னால் கூற முடியும். அவரின் வாழ்வே அற்புதமென்றால் நான் எவ்வாறு கூறுவேன் என்றாராம். அப்போதவர் தலை குனிந்து சென்றுவிட்டாராம்.

நான் அந்த முரீதிடம் நீங்கள் இப்படியெல்லாம் சொல்லாமல் (அல்லாமாக்களும், முல்லா மகான்களும் வாழும் இவ்வையகத்தில் அல்லாஹ் யாரென்று காட்டித் தந்தாரே அது ஒன்று மட்டுமே போதும் என்று சொல்ல வேண்டும்.) என்று கூறினேன்.

மேலே நான் எழுதிக் காட்டிய உதாரணத்திற்கு மாறாக காட்டில் வாழும் மனித மிருகங்களை தமது ஆன்மீகப் பலத்தால் அடக்கி ஒடுக்கி வாழ்ந்த மகான்களினது வரலாறும் உண்டு. அவர்கள் தமது அரசியல் பலம், ஆட் பலம், பணப் பலம் போன்ற பலங்களைக் கொண்டு காட்டு ராஜாக்களின் கொட்டத்தை அடக்கி வென்றவர்களல்லர். மாறாக அவர்களே அல்லாஹ்வின் பண்புகளின் வெளிப்பாடாகி அவனாகச் செயல்பட்டு ஆன்மீக அரசரானவர்களாவர்.

சுருக்கம் என்னவெனில் மனித மிருகங்களின் அட்டூழியத்தை பயந்தவர்கள் மட்டுமே இறைஞானத்தை சூசகமாகவும், சிலேடையாகவும் சொன்னார்களேயன்றி எதார்த்தத்தில் இறைஞானம் சிலேடையாகத்தான் சொல்லப்பட வேண்டுமென்பது கருத்தல்ல.

(தந்தைக்குத் தெரியாதது தனயனுக்கு எவ்வாறு தெரிந்தது?)

இவ்வாறு எனது தந்தை பற்றியும், என்னைப் பற்றியும் காத்தான்குடி மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

ஓர் ஆலிம் “வஹ்ததுல் வுஜூத்” இறைஞானம் பேசவில்லை என்பதால் அவருக்கு அது தெரியாதென்றோ, அல்லது அவர் அதை பிழைகண்டு பேசாமல் விட்டார் என்றோ முடிவு செய்தல் அறியாமையாகும்.

எனது தந்தை அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” இறையியலில் என்னைவிட பதின் மடங்கு விளக்கமுள்ளவர்களும், அனுபவமுள்ளவர்களும், மிகவும் பேணுதலானவர்களுமாவார்கள்.

தங்களின் உள்ளத்தில் பெருக்கெடுத்து வரும் ஞானத்தை நிம்மதி பெறுவதற்காக ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மூவரை தனது மனப் பாரத்தைக் குறைப்பதற்காக விஷேடமாக வைத்திருந்தார்கள். அவர்களிடம் பேசும் போது கூட சுட்டிக் காட்டுவார்களேயன்றி புட்டுக் காட்டமாட்டார்கள்.

அவர்களிடம் குறித்த ஞானம் கற்ற ஓய்வு பெற்ற மூன்று அதிபர்களில் ஆதம் லெப்பை அதிபர் அவர்கள் மட்டுமே நீண்ட காலம் தொடர்பாயிருந்தவர்களும், விளக்கமுள்ளவராயிருந்தவருமாவார். அவ்வாறிருந்தும் கூட அவர்களும் இந்த ஞானத்தை ஐயமறத் தெரிந்து கொள்ளவில்லை.

ஒரு நாள் என் தந்தை அவரிடம் இந்தக் கொள்கை தெடர்பாக பேசிய போது, உங்களுக்கு இக் கொள்கை தொடர்பாக ஒரு முடிச்சு இருப்பதை நான் அறிவேன். அதை அவிழ்ப்பதற்குரியவன் நான் அல்ல. எனக்குப் பின் ஒருவன் வருவான். அவன்தான் அதை அவிழ்த்து வைப்பான் என்று அவரிடம் சொன்னதாக அதிபர் அவர்களே என்னிடம் கூறி நீதான்டா தம்பி அதை அவிழ்த்து வைத்தவன் என்று என்னிடம் சொன்னார்கள்.

திருக்குர்ஆனினதும், நபீ மொழிகளினதும் வடித்தெடுத்த சாறுதான் “வஹ்ததுல் வுஜூத்” என்பதை நாம் அறிந்து அதை தெளிவாக விளங்கிக் கொண்டால் மட்டுமே நாம் “முஃமின்” விசுவாசியாகலாம்.

وذلك حرام، فافهموا هذا المثال، وقولوا لمن يَعْتَرِضُ على العارفين فى رَمْزِهم لكلامهم، قد أنزل الله على محمد صلّى الله عليه وسلّم فَوَاتِحَ سُوَرٍ كَثِيْرَةٍ من القرآن مرموزةٍ، وقال تعالى وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ أي بِقِرَائَتِكَ وَلَا تُخَافِتْ بها، فَأَمَرَهُ أن لا يَجْهَرَ بالقرآن حيث يَسْمَعُهُ الْجَهَلَةُ الْمُنْكِرُوْنَ، فَيَسُبُّوْنَ بِجَهْلِهِمْ مَنْ لَا يَجُوْزُ سَبُّهُ وَلَا يُخْفِيْهِ عَمَّنْ يؤمن به، فكما لم يدلّ إخفاء النبي صلى الله عليه وسلم قرائتَه عن الجاهلين المنكرين على بطلان قرائته، ولا قَدَحٍ فى صِحَّتِها، كذلك لا بد إخفاء العارفين كلامَهم على المجادلين بغير علم على بطلانه ومخالفته للشريعة، فافهم،

முதலில் மேற்கண்ட அறபு வரிகளுக்கான தமிழாக்கம்.

இறைஞானிகள் இறைஞானத்தையும், தத்துவத்தையும் தெளிவாகவும், விளக்கமாகவும் சொல்லாமல் நொடி போலும், ஜாடையாகவும், சிலேடையாகவும் சொன்னதற்கு மேலே கூறப்பட்ட உதாரணம் பொருத்தமானதென்பதை வாசகர்கள் அறிந்திருப்பார்கள்.

அதைத் தொடர்ந்து அவர்கள் கூறுகையில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.


(இறைஞானிகள் தமது கருத்துக்களை ஜாடையாகவும், சிலேடையாகவும் கூறியதை ஆட்சேபிக்கின்ற மனித மிருகங்களிடம் பின்வருமாறு சொல்ல வேண்டும்.

அல்லாஹ் திருக்குர்ஆல் சில அத்தியாயத்தின் ஆரம்பத்தில் சில வசனங்கள் கூறியுள்ளான். உதாரணமாக الم , حمعسق, كهيعص என்பன போன்று இவ்வசனங்களுக்கு திருமறை விரிவுரை நூலான “தப்ஸீர்”களில் விளக்கம் எழுதப்படவில்லை. விரிவுரை நூலை எழுதியவரே இப்படியான வசனங்களுக்கு الله أعلم بمراده بذلك இவ்வசனத்தின் பொருள் அல்லாஹ்வுக்கே தெரியும் என்று மட்டும் எழுதியுள்ளாரே தவிர வேறெந்த விளக்கமும் கூறவில்லை. இது தெளிவாக சொல்லப்படாமல் ஜாடையாக அல்லது சூசகமாக அல்லது சிலேடையாக சொல்லப்பட்ட வசனங்களாகும்.

அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறியது ஞானிகள் தமது கருத்தை ஜாடையாகவும், சூசகமாகவும், நொடி போலும் கூறியது போலவே உள்ளது. இந்த அடிப்படையை ஆதாரமாக எடுத்தும், இன்னுமொரு திருமறை வசனத்தை ஆதாரமாக எடுத்துமே ஆரிபீன்களும் ஜாடை வழியில் நொடியின் பாணியில் பேச ஆரம்பித்தனர்.

மற்றொரு திரு வசனம் وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ என்ற வசனமாகும். உங்களின் தொழுகையில் சத்தமிட்டு ஓத வேண்டாம். (திருக்குர்ஆன் 17-110)

இது இஸ்லாம் ஆரம்பமான காலத்தின் நிலைமை. சத்தமிட்டு ஓத வேண்டாம் என்ற தடைக்கான காணரம் முஸ்லிம்கள் ஓதும் சத்தம் கேட்டு “காபிர்”கள் அட்டூழியம் செய்யாமல் இருப்பதற்காகும்.

இதன் மூலம் எதிரிகள் யாரை ஏசவோ, சபிக்கவோ கூடாதோ அவனைச் சபிக்கவும், ஏசவும் செய்வார்கள் என்பதற்காகவே இத்தடை ஏற்பட்டது.

இதன் மூலம் தமது நடவடிக்கைகள் காபிர்களுக்குப் பிடிக்கவில்லையானால் அவற்றில் தவிர்த்துக் கொள்ளக் கூடியவற்றை மட்டும் தவிர்ப்பது நல்லதென்ற கருத்து கிடைக்கிறது. இவ்விடத்தில் நமது நாட்டின் முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றியும் சிந்திக்க வேண்டும். முஸ்லிம்கள் ஆளுக்கொரு தோணியில் ஏறிச் செல்வதைத் தவிர்த்து அனைவரும் ஒரே தோணியில் பயணிப்பது பற்றி சிந்திக்க வேண்டும்.

பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தொழுகையில் சத்தமிட்டு ஓத வேண்டாம் என்று தடை செய்யப்பட்டதாலும், அவர்கள் அதை விட்டதாலும் சத்தமிட்டு ஓதுவது பிழை என்பதற்காக அல்ல. மாறாக எதிரிகளின் அட்டூழியத்தை தடுப்பதற்காகவேதான்.

இவ்வாறுதான் ஆரிபீன் – இறை ஞானிகள் இறை தத்துவத்தை பகிரங்கமாக சத்தமிட்டுக் கூறாமல் அதை நொடி போலும், சூசகமாகவும், சிலேடையாகவும் பேசி வந்தார்கள்.

இதனால் இறைஞானிகள் கூறும் கருத்துக்கள் பிழையானவை என்று கருத்து வராது.

இஸ்லாமிய வரலாற்றில் அவ்லியாஉகளிற் பலரும், ஞானமகான்களிற் பலரும் இறை ஞானத்தைப் பகிரங்கமாக பேசாமல் விட்டது அது பிழை என்பதற்காக அல்ல என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.


இறைஞானிகள் இறைஞானத்தை மக்களிடம் பகிரங்கமாகச் சொல்லாமல் சூசகமாகவும், ஜாடையாகவும், சிலேடையாகவும் சொன்னதற்கான காரணம் நாட்டில் வாழ்கின்ற மனித விலங்குகளால் தமக்கு கஷ்ட நஷ்டங்களும், சிக்கல்களும் ஏற்படாமல் இருப்பதற்கேயாகும்.

ஏனெனில் ஜாடையாகவோ, சிலேடையாகவோ சொல்லாமல் பகிரங்கமாகவும், தெளிவாகவும் சொன்னால் அந்த மனித விலங்குகள் விளங்கியோ, விளங்காமலோ தமக்கு அநீதியும், அட்டூழியமும் செய்துவிடுவார்கள் என்று அவர்கள் பயந்ததேயாகும்.

எல்லா நாட்டிலும், எல்லாக் காலத்திலும் ஸூபிஸ மகான்களுக்கும், அவ்லியாஉகளுக்கும் எதிராக குரல் கொடுப்பவர்களும், கொடி தூக்குபவர்களும் அரை குறை உலமாஉகளும், அரை குறை சட்ட மேதைகளுமேயாவர். நிறை குடங்கள் ஒன்றும் ஸூபீகளுக்கு எதிராக இயங்கவில்லை. அன்று வாழ்ந்த சட்ட மேதைகளும், இன்று வாழ்கின்ற சட்ட மேதைகளும் ஸூபிஸ கொள்கையுடையோரை நசுக்குவதிலும், பழி வாங்குவதிலுமே முழுக்கவனம் செலுத்தி வந்துள்ளார்கள். ஸூபிஸத்தின் ருசி அவர்களுக்கு கிடைக்கவில்லை போலும். நக்குண்பதற்கும் “நஸீப்” அவசியமே!

ஸூபீ மகான்கள் இறைஞானத்தை ஜாடையாகவும், சிலேடையாகவும் சொல்லி வந்தது மனித மிருகங்களின் அட்டூழியத்தையும், அரை குறை உலமாஉகளின் “பத்வா” எனும் தீர்ப்பையும் பயந்ததற்காக என்று நாம் காரணம் சொல்லிக் கொண்டாலும் கூட அட்டூழியக் காரர்களின் அட்டூழியத்தைப் பயப்படும் போது இறையியற் கொள்கையை பகிரங்கமாகவும், தெளிவாகவும் சொல்லாமல் மறைத்தும், சூசகமாகவும், சிலேடையாகவும் சொல்வதற்கு மார்க்க அடிப்படையில் ஆதாரம் உண்டு. இதனால்தான் ஸூபீ மகான்களில் பலர் அவ்வாறு செய்தார்கள். அரை வேக்காடு முப்தீகள் சொல்வது போல் ஸூபீ மகான்கள் எதையும் ஆதாரமின்றிச் செய்வதில்லை.

பொது சனத்திற்கு ஸூபீகள் மீது வெறுப்பை ஏற்படுத்துவதற்காக அவர்கள் பற்றி தவறான பல கருத்துக்கள் பரப்பி வருகிறார்கள் ஆகையால் பொது மக்கள் ஏமாந்து விடாமலிருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

அட்டூழியக் காரர்களைப் பயந்து இறையியலை சூசகமாகவும், ஜாடையாகவும், நொடி போலும் பேசலாம் என்பதற்கான ஆதாரங்கள் பின்னால் வருகின்றன.

لكن إن هيّأ الله تعالى للعارف أسبابَ ظُهور شأنه وقَدِرَ على قَهْرِ المنكرين عليه بالحال أو بإدحاض أقوالِهم بالحُجج الواضحة، حتّى صاروا يُقِرُّون له بالفضل طَوعا وكرها، فله حينئذ إظهارُ معارفه على رؤوس الأشهاد، كما أظهر رسولُ الله صلى الله عليه وسلّم قرائتَه بالقرآن على رؤوس الكفّار، حين تهيّأتْ أسبابُ الظُّهور، وتمكَّنَ فى أمره، وصار له أنصارٌ يحفظونه من الأذى، فعُلم أنّ للعارفين فى ذلك الأسوة برسول الله صلّى الله عليه وسلّم،

எனினும் இறைஞான மகானுக்கு அல்லாஹ்வின் ஞானத்தை வெளிப்படுத்துவதற்கான காரணங்களை ஏற்பாடு செய்து கொடுத்து, அந்த இறைஞானியும் எதிரிகளை – அட்டூழியக் காரர்களை தெளிவான ஆதாரங்கள் மூலம் அடக்கி ஒடுக்குவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்து அந்த எதிரிகளும் இறைஞானியை விரும்பியோ, விரும்பாமலோ சரியானவர் என்று ஏற்றுக் கொள்ளும் சூழ் நிலையும் ஏற்பட்டால் அவ்வேளை அந்த இறைஞானி மக்களிடம் இறைஞானத்தையும், அகமியத்தையும் வெளிப்படையாக சொல்வதற்கு அவர்களுக்கு அனுமதி உண்டு.

நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களும் இஸ்லாம் தோன்றிய ஆரம்ப கால கட்டத்தில் “காபிர்”களிடம் திருக்குர்ஆனை வெளிப்படையாக ஓதிக் காட்டவில்லை. எனினும் அதற்கான வாய்ப்பு வசதி கிடைத்து, எதிரிகளின் அட்டூழியத்திலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் ஆட்களும் ஒன்று சேர்ந்து சகல வாய்ப்பு வசதிகளும் கைக் கூடிய பிறகுதான் எதிரிகள் மத்தியில் திருக்குர்ஆனை வெளிப்படுத்தினார்கள். இவ்வாறுதான் இறைஞானிகளும் செய்தார்கள். இறைஞானிகளுக்கு இவ்விடயத்தில் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் ஒரு முன்மாதிரியாவார்கள்.

இரகசியம் சொல்லப்பட வேண்டியதா? மறைக்கப்பட வேண்டியதா?

ஸுன்னத் வல்ஜமாஅத் கொள்கையையும், “தஸவ்வுப்” ஸூபிஸ ஞானத்தையும் ஏற்றுக் கொண்ட உலமாஉகளிற் சிலரும், பொது மக்களிற் பலரும் நான் பேசி வருகின்ற ஞானக் கருத்துக்கள் “ஷரீஆ”வுக்கு முரணானதென்றும், சொல்லக் கூடாத அல்லாஹ்வின் இரகசியம் என்றும் கூறுகின்றார்கள். இது அவர்களின் கருத்தும், அபிப்பிராயமுமின்றி அல்லாஹ்வின் கட்டளையோ, றஸூல் நாயகம் அவர்களின் கட்டளையோ அல்ல.

இவ்வாறு சொல்வோர் இரண்டு ஆதாரங்களை முன்வைக்கின்றார்கள்.
ஒன்று – إِفْشَاءُ سِرِّ الرُّبُوْبِيَّةِ كُفْرٌ என்பது.

இரண்டு – كَلِّمِ النَّاسَ عَلَى قَدْرِ عُقُوْلِهِمْ என்பது.

இவ்விரண்டு விடயத்திற்கும் சிறிய அளவு விளக்கம் கூறுகின்றேன். மேலதிக விபரம் தேவையானோர் இதுவரை நான் வெளியிட்ட நூல்களையும், இதன்பிறகு நான் வெளியிடவுள்ள நூல்களையும் வாசிக்க வேண்டும். அதோடு நான் பேசிய CDகளையும் கேட்க வேண்டும். அனைத்தையும் எழுத்து மூலம் மட்டும் விளங்க முடியாது. ஒரு ஞானியின் முகம் பார்ப்பதும் விளக்கத்திற்கு வழிகோலும் என்பது மனோ தத்துவமாகும்.

إفشاء سر الربوبية كفر – இறை இரகசியத்தை வெளிப்படுத்துவது “குப்ர்” நிராகரிப்பாகும்.

எவர் எவர் சொல்லியிருந்தாலும் இது சரியான பேச்சேயாகும். இதில் எமக்கு மாற்றுக் கருத்து ஒன்றுமே இல்லை. எனினும் இறை இரகசியம் என்றால் என்ன? என்று முதலில் விளங்கிய பிறகுதான் அதை வெளிப்படுத்தக் கூடுமா? கூடாதா? என்று முடிவு செய்ய வேண்டும்.

எனவே, இவ்வாறு சொல்வோர் முதலில் இறை இரகசியம் என்றால் என்ன? என்று தெரிந்துகொள்வது அவசியம். இது தனியான தலைப்பில் எழுத வேண்டிய விரிவான விளக்கங்கள் கொண்ட ஒரு விடயமாகும்.

இறை இரகசியம் என்பது அவ்லியாஉகளுக்கு அல்லாஹ் விஷேடமாக வழங்கும் ஓர் அறிவாகும். அந்த இடத்திற்கு இன்னும் நான் பயணிக்கவில்லை. இரண்டாவது விடயம் كلم الناس على قدر عقولهم மனிதர்களோடு அவர்களின் புத்திக்கு ஏற்றவாறு பேசுவீராக! என்பதாகும்.

இதன் சுருக்கம் என்னவெனில் மனிதர்களில் கூடிய புத்தி உள்ளவர்களும் இருப்பார்கள், மங்கிய புத்தி உள்ளவர்களும் இருப்பார்கள், மடையர்களும் இருப்பார்கள்.

இவர்களிடம் ஒரு விடயம் தொடர்பாகப் பேசும் போது அவர்களின் புத்திக்கு ஏற்றவாறு பேச வேண்டும் என்பதே இவ்வசனத்தின் கருத்தாகும். எவருடனும் எந்த வகையிலும் பேசக் கூடாதென்பது கருத்தல்ல.

மேற்கண்ட இரண்டு விடயங்களுக்கும் நான் எழுதி வெளியிட்ட நூல்களிலும் விளக்கம் எழுதியுள்ளேன். இதன் பிறகு வெளியடவுள்ள நூல்களிலும் எழுதுவேன். தாகமுள்ளவர்கள் தேடியலைந்து பெற்றுக் கொள்ள வேண்டும். அதில்தான் சுவையுண்டு.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments