Saturday, May 18, 2024
Homeஎழுத்தாக்கங்கள்பாவம் செய்யாதவன் பாவ மன்னிப்பு கேட்க வேண்டுமா?

பாவம் செய்யாதவன் பாவ மன்னிப்பு கேட்க வேண்டுமா?

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
பாவமே செய்யாத ஒருவன் பாவ மன்னிப்பு கேட்க வேண்டுமா? என்ற இக்கேள்விக்கு ஆம் என்றோ, அல்லது இல்லை என்றோ விபரமின்றி பதில் கூற முடியாது. ஆகையால் முதலில் பாவம் என்றால் என்ன? என்பதை அறிந்து கொள்தல் அவசியமாகும்.
பாவம் என்றால் என்னவென்று சுருக்கமாகச் சொல்வதாயின் பின்வருமாறு சொல்லலாம்.

وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا
நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் எதைச் செய்ய வேண்டுமென்று உங்களைப் பணித்தார்களோ அதை நீங்கள் செய்யுங்கள். எதைச் செய்ய வேண்டாமென்று உங்களைத் தடுத்தார்களோ அதை நீங்கள் செய்யாதீர்கள். (59-07)
இத்திரு வசனத்தின் படி நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மனிதர்களுக்கு எதைச் செய்யுமாறு கட்டளையிட்டார்களோ அதை அவர்கள் செய்ய வேண்டும் என்பதும், அதுவே நன்மை என்பதும், அவர்கள் எதைச் செய்யக் கூடாதென்று அவர்களைத் தடுத்தார்களோ அதை நிச்சயமாக செய்யக் கூடாதென்பதும், அதுவே பாவம் என்பதுமாகும்.

இதே கருத்தை இன்னொரு பாணியில் சொல்வதாயின் செய்யுமாறு ஏவப்பட்டவற்றை செய்வது நன்மையும், செய்ய வேண்டாமென்று தடுக்கப்பட்டவற்றைச் செய்வது பாவமுமாகும்.
 
மேற்கண்ட வசனத்தில் رَسُوْلْ “திருத்தூதர்” என்ற சொல் வந்துள்ளதேயன்றி அல்லாஹ் என்ற சொல் வரவில்லை. இதனால் திருத்தூதர் சொன்னதை மட்டுமே எடுக்க வேண்டும். அல்லாஹ் சொன்னதை எடுப்பது அவசியமில்லை என்று, மார்க்க அறிஞர்களிற் சிலர் எனது கருத்தை – கொள்கையை தவறாக விளங்கிக் கொண்டது போல் தவறாக எவரும் விளங்கிக் கொள்தல் கூடாது.
ஏனெனில் நபீ மொழிகள் மூலம் சொல்லப்பட்ட ஏவல், விலக்கல்களும், திருக்குர்ஆன் வசனங்கள் மூலம் சொல்லப்பட்ட ஏவல், விலக்கல்களும் அல்லாஹ்வின் பேச்சுக்கள்தான். கருத்தின் கரு அவன்தான். முஹம்மத் என்ற ஒலி பெருக்கி மூலம் பேசியவன் அவனே!
 
திரு வசனத்தில் அல்லாஹ் என்ற இடத்தில் றசூல் என்ற சொல் வந்திருப்பதாக விளங்கிக் கொண்டால் போதும்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ
விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், றசூல் அவர்களுக்கும், மார்க்க அறிஞர்களுக்கும் வழிப்படுங்கள் என்ற வனத்தில் கூறப்பட்ட கருத்து மூவரின் வழியால் வெளியானதாயினும் கருத்தின் கர்த்தாக்கள் அல்லாஹ்வும், றசூலுமேயாவர். இருவரும் ஒருவரா? இல்லையா? இதை தெளிவாக விளங்குவதாயின் “ஸூபிஸம்” எனும் “தஸவ்வுப்” கோட்டைக்குள் புக வேண்டும்.
 
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ
என்ற திரு வசனத்தில் “அல்லாஹ்” என்ற சொல்லிலும், “றசூல்” என்ற சொல்லிலும் “அதீஊ” என்ற சொல் மடங்கி மடங்கி வந்திருப்பதும், “உலுல் அம்ரி” என்ற சொல்லிலும் அது வர வேண்டியதாயினும் வராமற் போனதும் ஒரு தத்துவத்தை திரைமறைவில் உணர்த்துவது ஸூபிஸம் கற்றவர்களுக்கு மறைவானதன்று. அதை இங்கு நான் தெளிவாக எழுதினால் “பத்வா” வியாபாரிகள் சீற்றம் கொண்டு சீறியெழுந்து முஸ்லிம்களை இரு கூறுகளாக்கி விடுவார்கள் என்பதற்காகவும், அறிவிலிகளில் ஒரு கூட்டம் அவர்களுக்கு ஆதரவாக கூஜா தூக்க முன் வந்துவிடுவார்கள் என்பதற்காகவும் தவிர்த்தேன்.
 
திருக்குர்ஆன் மூலமும், நபீ மொழிகள் மூலமும் எவையெல்லாம் கடமை என்று சொல்லப்பட்டுள்ளதோ அவற்றைச் செய்யவும் வேண்டும். எவையெல்லாம் விலக்கப்பட்டதென்று சொல்லப்பட்டுள்ளதோ அவற்றைத் தவிர்க்கவும் வேண்டும்.
ஒருவன் பருவ வயதை அடைந்ததில் இருந்து அவன் மரணிக்கும் வரை எந்தவொரு பாவச் செயலும் செய்யவில்லை என்றும், எந்த ஒரு கடமையான செயலை விடவில்லை என்றும் வைத்துக் கொள்வோம்.
 
இதை இன்னும் விளக்கமாகச் சொல்வதாயின் எந்த ஒரு “ஹறாம்” மார்க்கத்தில் விலக்கப்பட்ட விடயத்தை செய்யவில்லை என்றும், மார்க்கத்தில் அவன் மீது விதிக்கப்பட்ட எந்த ஒரு நன்மையான செயலையும் அவன் செய்யாமல் விடவில்லை என்றும், அதோடு செய்தால் குற்றமில்லை என்று சொல்லப்பட்ட எந்த ஒரு “மக்றூஹ்” ஆன செயலைக் கூட செய்யவில்லை என்றும், இதேபோல் செய்தால் நன்மை உண்டு என்று சொல்லப்பட்ட எந்த ஒரு “ஸுன்னத்”தான செயலைக் கூட செய்யாமல் விடவில்லை என்றும் வைத்துக் கொள்வோம்.
 
இவர் பாவியாவாரா? இவர் பாவ மன்னிப்பு கேட்க வேண்டுமா?
 
இக்கேள்விக்கு “ஷரீஆ”வின் வெளிக் கண்ணோட்ட அடிப்படையில் மட்டும் சொல்வதாயின் அவன் பாவியாக மாட்டான் என்றும், அவன் பாவ மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை என்றுமே நான் பதில் சொல்வேன்.
இவ்வாறு நான் பதில் கூறினால் ஓர் ஆய்வாளன் பின்வருமாறு என்னிடம் ஒரு கேள்வி கேட்கலாம்.
 
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மனிதர்களில் புனிதமானவர்களாயிருந்தும் கூட
وَإِنِّي لَأَسْتَغْفِرُ اللهَ، فِي الْيَوْمِ مِائَةَ مَرَّةٍ
“நான் ஒரு நாளில் 100 தரம் பாவ மன்னிப்புக் கேட்கிறேன்” (அதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்) என்று கூறியுள்ளார்கள்.
 
இவ்வாறு நபீ பெருமானார் ஏன் சொன்னார்கள்?
இவ் ஆய்வாளரின் கேள்விக்கு பின்வருமாறு நான் பதில் கூறுவேன்.
எம் பெருமானார் உள்ளிட்ட நபீமார் அனைவரும் مَعْصُوْمُوْنْ – பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் என்பது “அஷ்அரிய்யா” கொள்கை – “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கையாகும். இவ்வாறு நம்பினவன்தான் “ஸுன்னீ” ஆவான். இதற்கு மாறாக நபீமார் பாவம் செய்தார்கள் என்றோ, செய்வார்கள் என்றோ நம்புவது வழிகேடு என்பதில் சந்தேகமே இல்லை.
ஆகையால் நபீ பெருமானார் அவர்களோ, அல்லது ஏனைய நபீமார்களோ பாவம் செய்தார்கள் என்ற கருத்து தொனிக்கும் வகையில் வந்துள்ள திருக்குர்ஆன் வசனங்களுக்கும், அதேபோல் வந்துள்ள நபீ மொழி வசனங்களுக்கும் வலிந்துரை மூலம் பொருத்தமான கருத்துக் கூறி நபீமாரை பாவத்திலிருந்து பாதுகாக்க வேண்டும்.
 
ஸூபீ மகான்களிடம் عُرُوْجْ என்றும், نُزُوْلْ என்றும் இரண்டு அம்சங்கள் உள்ளன. இவ் இரண்டையும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
“உறூஜ்” என்றால் மேலேறிச் செல்லுதல், “நுசூல்” என்றால் கீழிறங்கி வருதல். இவ்விரண்டும் ஞானக் கலையில் ஏற்றம், இறக்கம் என்று சொல்லப்படும். இது குறித்துப் பாடிய ஒரு கவிஞர் “ஏற்றிறக்கம் எந்நாளும் ஏற்றியேற்றி நித்திரை செய்” என்று கூறியுள்ளார்.
 
எம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் ஆன்மிகப் படித்தரங்களில் ஏறி ஏறி அதியுச்சியை அடைந்துவிட்டார்களாயின் شِدَّةُ النُّوْرِ ظُلْمَةٌ கடுமையான ஒளி இருள் என்ற தத்துவத்தின் படி ஆன்மிக உச்சியை எட்டியதும் இருள் சூழ்ந்த நிலை ஒன்று ஏற்படும். இந்நிலை ஒரு வகை கலக்கமான நிலையாகும். இந்நிலை தொடர்வதை மகான்கள் விரும்பவில்லை.
 
இதைத்தான் எம்பெருமானார் அவர்கள் அவ் உச்ச நிலையில் இருந்து “இஸ்திக்பார்” பாவ மன்னிப்புக் கோரல் எனும் ஏணி மூலம் கீழே இறங்குவதற்காக أَسْتَغْفِرُ اللهَ الْعَظِيْمَ என்று பாவ மன்னிப்புக் கேட்டு கீழே இறங்கி தெளிவு நிலை பெற்றார்கள்.
“உறூஜ் – நுசூல்” என்ற விபரம் இறைஞானம், ஸூபிஸம் போன்ற கலைகளில் மட்டுமே பேசப்படும். வேறு கலைகளில் பேசப்படமாட்டா. இதனால் மேற்கண்ட கலைகளில் ஆழமான அறிவில்லாதவர்கள் இச் சொற்களைக் கூட அலட்சியம் செய்வார்கள். நையாண்டி பண்ணுவார்கள்.
இவ்வாறுதான் “மலகூத், லாஹூத், ஜபறூத், நாசூத்” முதலான சொற்களுமாகும். இவையும் மேற்கண்ட கலைகளில் நடமாடும் சொற்களேதான். ஆகையால் மேற்கண்ட கலைகளுடன் தொடர்பில்லாதவர்களுக்கு இச் சொற்கள் புதியனவாயும், நகைப்புக்குரியனவாயும் தெரியும்.
 
நான் “ஷரீஆ”வின் கல்வி கற்ற ஆசிரியர்களில் ஒருவர் இருந்தார். அவருக்கும், ஞானக் கலைக்கும் சம்பந்தமே இல்லை. அவர் எப்போதும் மேற்கண்ட நான்கு சொற்களையும் சொல்லும் போது “பீச்சூத்” என்ற சொல்லையும் சேர்த்துக் கொள்வார். இதேபோல் غَوْثَ الْوَرَى “கவ்தல்வறா” என்ற சொல்லை சொல்லும் போது “கவ்து பன” என்றும் நையாண்டி பண்ணுவார்.
 
நபீ பெருமானார் அவர்கள் ஒரு நாளில் நூறு தரம் பாவ மன்னிப்புக் கேட்பார்கள் என்ற ஹதீதை – நபீ மொழியை ஆதாரமாக வைத்துக் கொண்டு அவர்களைப் பாவி என்று நினைப்பது கூட ஈமானை – நம்பிக்கையை பறித்துச் சென்றுவிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதோடு அவர்கள் பாவ மன்னிப்புக் கேட்பது இருளில் இருந்து ஒளிக்கு வருவதற்கே என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
 
شِدَّةُ النُّوْرِ ظُلْمَةٌ
(கடும் ஒளி இருள்) இவ்வாறு ஒரு தத்துவம் உண்டு என்பதை பின்வரும் வரலாறின் மூலம் துலக்கமாக்கி வைக்கிறேன்.
எனது தந்தை மர்ஹூம் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் றஹிமஹுல்லாஹ் அவர்கள் ஒரு ஞான மகான் ஆவார்கள். இவர்கள் அட்டாளைச் சேனையில் அடக்கம் பெற்றுள்ள ஞானமகான் புலவர் அஹ்மத் மீரான் வெள்ளி ஆலிம் றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் “பைஅத்” ஞான தீட்சை பெற்றவர்களாவர்.
 
குரு மகான் மரணப் படுக்கையில் இருந்த சமயம் என் தந்தை தங்களின் தோழர் அல்ஹாஜ் மஹ்மூத் லெப்பை என்பவருடன் அவர்களைப் பார்க்கச் சென்ற போது தங்களின் நண்பரிடம் பின்வருமாறு சொல்லியுள்ளார்கள். “ஹாஜியார்! நாம் நமது ஷெய்கு அவர்களுக்காக இக்கட்டத்தில் “துஆ” பிரார்த்தனை செய்வதாயின் யா அல்லாஹ்! எங்களின் ஷெய்கு அவர்களின் “மர்தபா” பதவியை குறைத்து விடுவாயாக! அவர்களை உயர் பதவியிலிருந்து இறக்கிவிடுவாயாக!” என்றுதான் கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.
என் தந்தையின் இவ் அறிவுரை மூலம் “கடும் ஒளி இருள்” என்ற தத்துவம் உண்மை என்பது தெளிவாகிறது.
ஒரு பாவமும் செய்யாதவன் மன்னிப்புக் கேட்க வேண்டுமா? அவன் பாவியா? என்ற தலைப்பின் கேள்விக்கு “ஷரீஆ”வின் வெளிப்பார்வையில் அவன் பாவியுமல்ல, அவன் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியமுமில்லை என்று பதில் எழுதியிருந்தேன். அதேபோல் பாவமே அறியாத பயஙம்பர் பெருமானார் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பாவ மன்னிப்புக் கேட்டது தங்களின் உச்சக்கட்ட “பனா” நிலையில் ஏற்படுகின்ற இருளில் இருந்து விடுபட்டு தெளிவு நிலை பெறுவதற்காக என்றும் எழுதியிருந்தேன்.
 
மேற்கண்ட விளக்கம் பொதுவாக எல்லோரும் புரிந்து கொள்ளக் கூடிய விளக்கமேயாகும். எனினும் இதன் பிறகு நான் எழுதவுள்ள விளக்கத்தை விளங்கிக் கொள்வது – கற்றுக் கொள்வது சற்றுக் கடினமானதாகும்.
ஒருவன் நான் மேலே எழுதியது போல் “ஷரீஆ”வுக்கு அணுவளவேனும் மாறு செய்யாது போனாலும் அல்லாஹ்வின் நம்பிக்கை விடயத்தில் அல்லாஹ் வேறு, படைப்பு வேறு என்ற غَيْرِيَّةْ “ஙெய்ரிய்யத்” நம்பிக்கை உள்ளவனாயிருந்தானாயின் “ஹகீகத்” அடிப்படையில், ஸூபீகளின் கொள்கைப்படி அவன் பாவியேதான். அது மட்டுமல்ல. அவன் இறைவனுக்கு இணை கற்பித்த “முஷ்ரிக்” தான். இதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
 
அல்லாஹ் படைப்புத் தானானவனேயன்றி அவன் “வுஜூத்” உள்ளமை அடிப்படையில் அதற்கு வேறானவன் அல்ல. இதுவே எதார்த்தமும், உண்மையுமாகும்.
இதை உதாரணம் மூலம் தெளிவு படுத்துவதாயின் பல உதாரணங்கள் கூறலாம். உதாரணங்களையே சொல்லிக் கொண்டிருந்தால் குறிக்கோளை விளக்கி வைக்க முடியாமற் போய் விடும். ஆகையால் விளக்கி வைப்பதற்காக சில உதாரணங்களை மட்டும் தொட்டுக் காட்டுகிறேன்.
 
“இன்ஸான்” மனிதன் என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். இச் சொல் அவனின் தலை உச்சியிலிருந்து கால் விரல் நுணி உள்ளிட்ட முழுவுடலையும் எடுத்துக் கொள்ளும் சொல்லாகும். இதேபோல் இச் சொல் அவனின் தலை முடி உள்ளிட்ட கால் விரல் நுணி வரையான அனைத்து உறுப்புக்களையும் உள்வாங்கிய ஒரு சொல்லுமாகும்.
 
மனிதனின் தலை முடி முதல் அவனில் உள்ள எந்த ஒரு உறுப்பாயினும் அது அவன் தானானதேயன்றி அவனுக்கு வேறானதுமல்ல, அவனை விட்டும் பிரிந்ததுமல்ல.
இவ்வாறுதான் “அல்லாஹ்” என்ற சொல். இது அவன் படைத்த அனைத்தையும் உள்வாங்கிய ஒரு சொல்லாகும். அவற்றில் ஒன்று கூட அவனுக்கு வேறானதுமல்ல. அவனை விட்டும் பிரிந்ததுமல்ல.
இன்னும் மரம் என்ற சொல்லையும் எடுத்துக் கொள்வோம். இச் சொல் அதன் காய்கள், கனிகள், பூக்கள், இலைகள், மற்றும் அதன் கிளைகள் அனைத்தையும் உள்வாங்கிய ஒரு சொல்லாகும்.
 
மரத்தின் எந்த ஓர் உறுப்பாயினும் அது மரம் தானானதேயன்றி அதற்கு வேறானதல்ல. அதை விட்டும் பிரிந்ததுமல்ல.
இவ்வாறுதான் அல்லாஹ் என்ற சொல்லுமாகும். இது அவன் படைத்த அனைத்தையும் உள்வாங்கிய ஒரு சொல்லாகும். அவற்றில் ஒன்று கூட அவனுக்கு வேறானதுமல்ல. அவனை விட்டும் பிரிந்ததுமல்ல.
 
இறை ஞானத் தாகம் கொண்ட ஒருவன் அல்லாஹ்வை அறிந்து கொள்வதற்காக ஒரு ஞானியிடம் சென்று எனக்கு அல்லாஹ் யாரென்று சொல்லித் தாருங்கள் என்றான். அதற்கவர் எனக்குக் கடற்கரையில் ஒரு தோட்டம் உண்டு. அங்கு வா சொல்லித் தருகிறேன் என்றார். அவன் அங்கு சென்ற போது அவனின் கைபிடித்து தோட்டம் முழுவதையும் சுற்றிக் காட்டி அங்கு நின்ற ஒவ்வொரு மரத்தின் பெயரையும், மற்றும் செடி கொடிகளின் பெயர்களையும் சொல்லிக் காட்டிய பின் வா போவோம் என்றார்.
 
அதற்கவன், குருவே தோட்டமிருப்பதாகச் சொன்னீர்கள். அதைக் காட்டவில்லையே! அல்லாஹ் யாரென்று சொல்லித் தருவதாகச் சொன்னீர்கள் சொல்லித் தரவில்லையே! என்றான். அவனிடம் அக்குரு இரண்டும் சொல்லிவிட்டேன் என்றார். அவன் விளக்கம் கேட்ட போது தோட்டம் என்பது ஓர் இடத்திலுள்ள மரங்கள், மற்றும் கொடி செடிகள் யாவையும் உள்வாங்கிய அவ் இடத்தின் பெயரேயன்றி அவற்றை விட்டும் வேறான, அவற்றைப் பிரிந்த தனியான ஓர் இடமல்ல என்றும், இவ்வாறுதான் இறைவன் என்றும் சொல்லி முடித்தார். இப்போதுதான் அல்லாஹ்வை அறிந்தேன் எனக் கூறி குருவின் கால் முத்தி விடைபெற்றுச் சென்றான்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments