Saturday, May 18, 2024
Homeஎழுத்தாக்கங்கள்பாடலில் “வஹ்ததுல் வுஜூத்” கூறிய குத்புஸ்ஸமான் அபூ மத்யன் மக்ரிபீ றழியல்லாஹு அன்ஹு!

பாடலில் “வஹ்ததுல் வுஜூத்” கூறிய குத்புஸ்ஸமான் அபூ மத்யன் மக்ரிபீ றழியல்லாஹு அன்ஹு!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
யார் இந்த மகான்?
 
இவர்களின் பெயர் அபூ மத்யன் ஷுஐப். بُوْمَدْيَنْ என்றும் அழைக்கப்படுவார்கள். இவர்களின் பின்னால் “திலம்ஸான்”, “மக்ரிபீ” என்றும் சேர்த்துச் சொல்வார்கள்.
ஸூபீ மகான்களால் شَيْخُ الشُّيُوْخْ – “ஷெய்குஷ் ஷுயூக்” தலைமைக் குரு என்றும் அழைக்கப்பட்டார்கள். இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் இவர்களுக்கு مُعَلِّمُ الْمُعَلِّمِيْنْ – “முஅல்லிமுல் முஅல்லிமீன்” ஆசிரியர்களின் ஆசிரியர் என்று பட்டம் சூட்டினார்கள்.

இவர்கள் சட்ட மேதையும், ஸூபீயும், இஸ்பெய்ன் கவிஞருமாவார்கள். இஸ்பானியா மொறோக்கோ நாடுகளில் ஸூபிஸ ஞான கல்வித் தாபனங்களைத் தோற்றுவித்தார்கள். இஷ்பீலிய்யா, பாஸ் ஆகிய நாடுகளில் கல்வி கற்றார்கள். “பஜாயா” எனும் ஊரில் அதிக காலம் தங்கியிருந்தார்கள். அங்கு அவர்களுக்கு ஆதரவாளர்கள் பெருகினர்.
 
இதனால் அவர்கள் மீது பொறாமை கொண்ட சிலர் – உலமாஉகள் – இவர்களுக்கு எதிராக மார்க்க ரீதியான சலசலப்பை ஏற்படுத்தி அவர்களைக் கொன்றொழிக்கத் திட்டமிட்டு அவ் ஊரில் அதை அமுலாக்க முடியாது போனதால் அவர்களை “திலம்ஸான்” நகருக்கு எடுத்துச் சென்று அங்கு கொலை செய்வதற்காக பயணித்துக் கொண்டிருக்கையில் அவர்கள் தங்களைக் கொலை செய்ய அழைத்துச் சென்றவர்களிடம், நான் “திலம்ஸான்” ஐ அடையுமுன் இடைவழியில் மரணித்தால் என்னை அங்கேயே எடுத்துச் சென்று அடக்கி விடுங்கள் என்று “வஸிய்யத்” இறுதியுபதேசம் செய்தார்கள். அவர்கள் கூறியது போல் “திலம்ஸான்” ஐ அடைவதற்கு சில கிலோமீற்றர்கள் இருக்கையிலேயே அவர்களின் விருப்பம் போல் இயற்கை மரணம் தழுவி அவர்கள் சொன்னது போல் அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். அங்கு அவ்வேளை ஆட்சி பீடத்திலிருந்த “பனூ மதீன்” மன்னர்கள் அவர்களின் அடக்கவிடத்திற்கு செல்பவர்களின் வசதி கருதி “தர்ஹா” ஒன்றையும், ஒரு பள்ளிவாயலையும் கட்டினார்கள். இதனால் இவர்கள் “திலம்ஸானீ” என்றும் மொறோக்கோவில் பிறந்ததால் “மக்ரிபீ” என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
“வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பகிரங்கமாகப் பேசியும், எழுதியும் கூட உலமாஉகளான எதிரிகளின் கொலை வலையில் மாட்டிக் கொள்ளாத பலரும் உள்ளனர். மாட்டிக் கொண்ட பலரும் உள்ளனர். இவர்கள் மயிரிழையில் உயிர் தப்பிய மகான்களில் ஒருவராவார்கள்.
“வஹ்ததுல் வுஜூத்” பேசிய எவராயினும் அவர் “விலாயத்” எனும் ஒலித்தனம் பெற்றவராகவே இருந்துள்ளார். வரலாறு இவ்வாறுதான் கூறுகிறது. வரலாற்றாசிரியர்களுக்கு இது மறைவான செய்தியல்ல.
ஷுஐப் அபூ மத்யன் அவர்கள் ஹிஜ்ரீ 509 – கி.பி. 1115ல் பிறந்து ஹிஜ்ரீ 594 – கி.பி. 1198ல் “வபாத்” மறைந்தார்கள். இவர்களின் “தர்ஹா” அடக்கவிடம் “திலம்ஸான்” இல் உள்ளது. வயது 85.
 
அபூ மத்யன் அவர்களின் பாடல்:
اَللهَ قُلْ وَذَرِ الْوُجُوْدَ وَمَا حَوَى
إِنْ كُنْتَ مُرْتَادًا بُلُوْغَ كَمَالٍ
فَالْكُلُّ دُوْنَ اللهِ إِنْ حَقَّقْتَهُ
عَدَمٌ عَلَى التَّفْصِيْلِ وَالْإِجْمَالِ
مَنْ لَا وُجُوْدَ لِذَاتِهِ مِنْ ذَاتِهِ
فَوُجُوْدُهُ لَوْلَاهُ عَيْنُ مُحَالٍ
وَالْعَارِفُوْنَ بِرَبِّهِمْ لَمْ يَشْهَدُوْا
شَيْئًا سِوَى الْمُتَكَبِّرِ الْمُتَعَالِيْ
وَرَأَوْا سِوَاهُ عَلَى الْحَقِيْقَةِ هَالِكًا
فِى الْحَالِ وَالْمَاضِيْ وَالْإِسْتِقْبَالِ
பாடல் வரிகளுக்கான தமிழாக்கம்:
பாடல் ஒன்று: நீ அல்லாஹ் என்று சொல். (அல்லாஹ் என்று நீ சொல்) “வுஜூத்” உள்ளமையையும், அது தொடர்பான விடயத்தையும் விடு. நீ சம்பூரணத்தை விரும்பினால்.
இவ்வரியின் சுருக்கம் என்னவெனில் அல்லாஹ் மட்டுமே உள்ளான் என்று பேச வேண்டும். அவன் வெளியானான் என்றோ, வெளியாகிறான் என்றோ பேசக் கூடாது என்பதாகும்.
 
“வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசுகின்றவர்களில் அநேகர் அல்லாஹ்வின் “வுஜூத்” உள்ளமை படைப்பாக வெளியானதென்றும், வெளியாகிறதென்றும் பேசுவார்கள். நாங்களும் இவ்வாறு பேசுகிறோம்.
எனினும் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசுகின்றவர்களில் இன்னும் சிலர் உள்ளனர். அவர்கள் மேற்கண்டவாறு பேசாமல் அல்லாஹ் மட்டுமே உள்ளான் என்று பேசுவார்களேயன்றி வெளியானான், வெளியாகிறான் என்று பேசமாட்டார்கள். இவ்வாறு பேசுவது ஒரு வகையில் சரியானதாயிருந்தாலும் இவ்வாறு பேசுவதை அவர்கள் விரும்பமாட்டார்கள். அவர்களில் அபூ மத்யன் அவர்களும் ஒருவர் என்று நான் நினைக்கிறேன். இவர்களின் பாணியிலேயே “கம்பம்” நகரில் வாழ்ந்து மறைந்த மா மேதை குத்புஸ்ஸமான் அப்துர் றஹ்மான் அம்பா நாயகம் அவர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்று அவர்களுடன் நெருங்கியிருந்த நான் கருதுகிறேன்.
அல்லாஹ்வின் “வுஜூத்” உள்ளமைதான் படைப்பாக வெளியானது அல்லது வெளியாகிறது என்று சொல்வதால் இரண்டு என்ற கருத்து வருவதற்கு சாத்தியமுண்டு என்பதே அவர்கள் கூறும் காரணமாகும். ஒரு வகையில் இதே கருத்தை நானும் சரி காண்கிறேன்.
எனினும் நானும், என்னுடன் இருக்கும் மௌலவீமார்களும் அல்லாஹ் வெளியானான், வெளியாகிறான் என்று பேசினாலும் கூட இரண்டு என்ற கருத்துக்கு இடமில்லாமலேயே விளக்கம் சொல்லி வருகிறோம் என்பதை இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகிறேன். அம்பா நாயகம் றஹிமஹுல்லாஹ் அவர்களின் கருத்தையும் நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்.
 
அம்பா நாயகம் அவர்களின் தந்தை அல் வலிய்யுல் காமில் முஹம்மத் ஸயீத் ஜல்வதீ அவர்கள் “கல்வத்” நாயகம் றஹிமஹுல்லாஹ் அவர்களின் “கலீபா” ஆவார்கள். “கல்வத்” நாயகம் அவர்களோ “வஹ்ததுல் வுஜூத்” கொள்கை விளக்கத்தில் மிக ஆழமானவர்களும், வேகமானவர்கள் என்பதும் குறிப்பிட வேண்டியதாகும்.
 
பாடல் இரண்டு:
 
நீ “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையை சரியாகவும், திட்டமாகவும் விளங்கிக் கொண்டால் அல்லாஹ் தவிரவுள்ள யாவும் இன்மையாகும், இல்லாதவையாகும் என்பது உனக்குப் புரியும். நீ மொத்தமாக ஆய்வு செய்தாலும், விபரமாக ஆய்வு செய்தாலும் இதுவே முடிவாகும்.
 
பாடல் மூன்று:
 
அல்லாஹ்வும், மற்றுமுள்ள சர்வ சிருட்டிகளும் அவனில்லையெனில் அவையாவும் இல்லாதவை என்பதை அறிந்து கொள்.
 
பாடல் நான்கு:
 
அல்லாஹ்வின் “தாத்” உள்ளமையிலிருந்து எதற்கு “வுஜூத்” உள்ளமை இல்லையோ அது அசாத்தியமேயாகும். இதன் சுருக்கம் என்னவெனில் எந்த ஒரு படைப்பாயினும் அது அல்லாஹ்வின் “தாத்” உள்ளமையின் வெளிப்பாடு என்பதேயாகும்.
 
பாடல் ஐந்து:
 
அல்லாஹ்வின் ஞானிகள் அவன் தவிர வேறொன்றையும் காணவில்லை. அதாவது அவர்கள் எதைப் பார்த்தாலும் அதை அல்லாஹ்வாகவே பார்ப்பார்கள்.
 
பாடல் ஆறு:
 
அல்லாஹ் தவிரவுள்ள யாவும் முக்காலமும் (சென்ற காலம், நிகழ் காலம், எதிர் காலம்) இல்லாதவையேயாகும்.
மேற்கண்ட ஆறு பாடல்களில் ஒவ்வொன்றையும் ஸூபிஸக் கலையில் அதாவது “வஹ்ததுல் வுஜூத்” கோட்பாட்டில் தெளிவான விளக்கமுள்ள ஒரு வழிகாட்டியின் உதவியுடன் ஆய்வு செய்தால் குன்றின் மேல் தீபம் போல் இக்கோட்பாடு துலங்கும்.
குறிப்பாக “வஹ்ததுல் வுஜூத்” என்று ஒன்று உண்டு என்றும், ஆனால் அதற்கு மௌலவீ அப்துர் றஊப் சொல்லும் விளக்கம் பிழை என்றும் சொல்கின்ற ஆலிம்கள் ஆய்வு செய்தார்களாயின் அவர்கள் தமது கருத்தை மீளப் பெற்றுக் கொள்வார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
 
ஏனெனில் மேற்கண்டவாறு பலர் சொல்லியுள்ளார்கள் என்பதற்கு என்னிடம் ஆதாரம் உண்டு. அவ்வாறு சொல்பவர்கள் சொல்வதோடு மட்டும் நின்று கொள்கிறார்களேயன்றி அதற்கான சரியான விளக்கம் என்னவென்று கேட்டால் அவர்களில் குறைந்த வயதுள்ளவர்கள் அதற்கு அனுமதி வேண்டும் என்று சொல்கிறார்கள். இன்னும் சிலர் அது சொல்ல முடியாது என்று கூறுகிறார்கள். இவர்கள் கூறும் இவ்விரு காரணங்களும் வேலைக் காரிக்குப் பிள்ளைச் சாட்டு என்ற கதை போன்றதேயாகும். ஏற்றுக் கொள்ள முடியாத காரணங்களாகும்.
ஏனெனில் மார்க்க சட்டங்கள் சொல்வதற்கோ, “தவ்ஹீத்”, “ஈமான்” – விசுவாசம், “ஸூபிஸம்” தொடர்பாகப் பேசுவதற்கோ எவரும் எவருக்கும் அனுமதி கொடுக்க வேண்டிய அவசியமில்லை. மௌலவீ தராதரம் இருந்தால் போதும். அது இல்லாது போனாலும் “பிக்ஹ்”, “ஷரீஆ”வின் சட்டங்கள் தெரிந்திருந்தால் அது போதும். ஆயினும் இறைஞானம், “அகீதா” கொள்கை, ஸூபிஸம், “வஹ்ததுல் வுஜூத்” முதலானவை பேசுவதாயின் இதற்கும் மௌலவீ தராதரப் பத்திரம் தேவையில்லை. ஆயினும் பேசுகின்றவர் இவை தொடர்பான ஆழமான அறிவு ஞானம் உள்ளவராக இருத்தல் அவசியம். அரை குறை வைத்தியனிடம் மருந்து எடுக்காமல் இருந்தால் போதும்.
 
ஆண்களிலும், பெண்களிலும் 50 வயதைக் கடந்த சில முதியவர்கள் உள்ளனர். அவர்கள் அவர்களின் ஞான குருக்களான ஷெய்குமாரிடம் “பைஅத்” பெற்று ஞானம் கற்றவர்களாயிருப்பார்கள். அவர்களில் ஞான விளக்கத்தில் தெளிவு பெற்றவர்கள் தாம் அறிந்ததைப் பிறருக்குச் சொல்லிக் கொடுக்க முடியும். எனினும் கொள்கை விளக்கம் சொல்லும் விடயத்தில் “ஹுலூல் – இத்திஹாத்” இல்லாத வகையில் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
“வஹ்ததுல் வுஜூத்” பேசுவதற்கு அனுமதி வேண்டுமென்று கூறும் இளம் குருமாரிடம் அவர்களுக்கு இவ்வாறு கூற அனுமதி கொடுத்தவர்கள் யாரென்று நான் கேட்க விரும்புகிறேன்.
 
இவ்வாறு சொல்லும் குருமார் தமக்குத் தெரியாது போனால் தெரியாதென்று சொல்ல வேண்டுமேயன்றி அனுமதிக்கதை சொல்லி பொது மக்களை ஏமாற்றுவது கூடாது.
அனுமதியிருந்தாலும், இல்லாவிட்டாலும் பொதுவாக “வஹ்ததுல் வுஜூத்” பேசுவது கூடாதென்போர் திருக்குர்ஆனிலிருந்தோ, நபீ மொழிகளிலிருந்தோ ஓர் ஆதாரமாவது கூறி தமது கருத்தை முன்வைத்தார்களாயின் அதை ஏற்றுக் கொள்ள முடியும். எந்த ஓர் ஆதாரமும் இன்றிக் கூறினால் அது அவர்களின் சொந்தக் கருத்தாகும்.
 
தொடரும்…
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments