Saturday, May 18, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஒரு முஸ்லிமை “காபிர்” ஆக்கி வைப்பது அவனைக் கொலை செய்வது போன்றதே! (நபீ மொழி) ஒரு...

ஒரு முஸ்லிமை “காபிர்” ஆக்கி வைப்பது அவனைக் கொலை செய்வது போன்றதே! (நபீ மொழி) ஒரு முஸ்லிமை இன்னொரு முஸ்லிம் “காபிர்” என்று சொன்னால் இருவரில் ஒருவர் “காபிர்” ஆகிவிட்டார். (நபீ மொழி)

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
ஒரு முஸ்லிமையோ, முஸ்லிம் அல்லாத பிற மதத்தவரையோ நாய், பன்றி, எருமை, குரங்கு, வேசை மகன், ஹறாமில புறக்கி போன்ற கீழ்த்தரமான சொற்களால் ஏசுவது பாவமாயிருந்தாலும் இவ்வாறு ஏசுவதன் மூலம் ஏசுபவன் “காபிர்” ஆகமாட்டான்.
ஆயினும் ஒரு முஸ்லிமை “காபிர்” என்று சொன்னவன் – ஏசியவன் நிச்சயமாக “காபிர்” ஆகிவிடுவான். ஏசப்பட்ட முஸ்லிம் “குப்ர்” நிராகரிப்புத் தொடர்பான எந்தவொரு சொல்லையும் சொல்லாமலும், அல்லது எந்த ஒரு செயலையும் செய்யாமலும் இருக்கும் வரை. இதற்கு மாறாக ஏசப்பட்டவன் “குப்ர்” நிராகரிப்பை ஏற்படுத்தக் கூடிய ஒரு சொல்லைச் சொல்லியிருந்தால், அல்லது ஒரு செயலைச் செய்திருந்தால் ஏசியவன் “காபிர்” ஆகமாட்டான்.

تَكْفِيْرُ الْمُسْلِمِ كَقَتْلِهِ
ஒரு முஸ்லிமை “காபிர்” ஆக்கி வைத்தல் அவனைக் கொலை செய்வது போன்றதென்ற நபீ மொழியின் படி ஸூபிஸ முஸ்லிம்கள் அனைவரும் “காபிர்” ஆக்கி வைத்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அவர்களும், அவ்வாறு “பத்வா” எழுதியவர்களும் பல்லாயிரம் முஸ்லிம்களைக் கொலை செய்த கொலைக் குற்றவாளிகளேயாவர். அவ்வாறில்லை என்று ஒருவர் சொன்னாராயின் அவர் மேற்கண்ட நபீ மொழியை மறுத்த “காபிர்” ஆகிவிடுவார்.
நான் கூறும் இச்சட்டம் “ஷரீஆ”வின் சட்டமேயாகும். ஷரீஆவின் சட்டம் இவ்வாறில்லை என்று உலமா சபை சொல்லுமாயின் தமது கூற்றை ஆதாரத்துடன் நிறுவுமாறு அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
 
உலமா சபை கடந்த காலங்களில் எத்தனையோ தவறுகள் செய்துள்ளார்கள். அவற்றைச் சுட்டிக் காட்ட நான் தொடங்கினால் அம்பட்டன் குப்பையை கிழறின கதை போலாகிவிடும். உலமா சபை முழுக்க முழுக்க நேர்மையான அங்கத்தவர்களைக் கொண்ட ஓர் அமைப்பல்ல என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். ஆயினும் அதில் நல்லவர்கள் உள்ளார்கள் என்பதையும் நான் மறுக்கவில்லை. எனினும் அவர்கள் என்னதான் சொன்னாலும் அது எடுபடமாட்டாது. ஆகையால் அவர்கள் அனைவரும்
«مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ، وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ».
என்ற நபீ மொழியின் மூன்றாம் இடத்திலிருந்து பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமை செய்து வருகிறார்கள்.
 
உலமா சபை செய்யும் தவறை யாராவதொரு மௌலவீ எழுத்து மூலமோ, பேச்சு மூலமோ சுட்டிக் காட்டினால் அவர் ஒரு பள்ளிவாயலின் “இமாம்” ஆக இருந்தால், அல்லது ஒரு அறபுக் கல்லூரியில் “உஸ்தாத்” ஆசிரியராக இருந்தால் அன்றுடன் அவரின் “டிக்கட்” வெட்டப்படும். அன்று முதல் அவரின் மனைவி மக்கள் அனைவரும் பட்டினி பசியிலேயே வாழ வேண்டி வரும்.
 
இன்று இலங்கைத் திரு நாட்டில் வாழ்கின்ற உலமாஉகளில் அநேகர் பள்ளிவாயல்களிலும், அறபுக் கல்லூரிகளிலும் பணி செய்பவர்களாகவே உள்ளனர். இவர்கள் உலமா சபையின் நடவடிக்கையை எதிர்த்தால் நடப்பது என்ன தெரியுமா? மேலிடத்திலிருந்து உடனே ஆடர்தான் வரும். மறுநாள் அவர் வெளியேதான். இவ்வாறு பலர் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். இவ்விடத்தில் தம்பி ரிஸ்வீ சற்று இரக்கம் காட்டினாலும் அவரின் “காதிம்”கள் இடி அமீனை வென்றவர்கள்.
இதனால்தான் பல உலமாஉகள் உலமா சபையின் நடவடிக்கையை எதிர்க்காமல் இருப்பதற்கான காரணம் எனலாம்.

அன்புக்குரிய தம்பி ரிஸ்வீ அவர்கள் ஒரு சமயம் பௌத மத சகோதரர்களின் வணக்க வழிபாட்டுத் தலம் சென்று கையில் வெசக் விளக்கேந்தி பக்திப் பரவசத்துடன் நின்றாரல்லவா? இலங்கையில் எங்களிடம் 9000க்கும் அதிகமான உலமாஉகள் உள்ளனர் என்று மார்தட்டிப் பேசும் தம்பி ரிஸ்வியின் மேற்கண்ட இச் செயலை அவர்களில் பகிரங்கமாக எதிர்த்தவர் யார்? எவருமே இல்லை. எனினும் யாரோ ஒரேயொரு மௌலவீ மட்டும் தலைவரின் செயலை எதிர்த்து مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ என்ற ஹதீதை ஆதாரமாகக் கூறி ஓர் உரையாடல் செய்தார். அவர் யாரென்று எனக்குப் புரியவில்லை. அவர் யாரென்று தெரிந்தால் அவருக்கு எனது அன்பளிப்பாக 50 ஆயிரம் ரூபாய்ப் பணம் அனுப்பியிருப்பேன். காலம் கடந்தாலும் கவலையில்லை. அந்த மௌலவீ அவ்வாறு சொன்னவன் நான்தான் என்று நிறுவுவாராயின் அடுத்த கணமே அவருக்கு 50 ஆயிரம் அன்பளிப்புச் செய்ய நான் ஆயித்தமாயுள்ளேன்.
 
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ جَعَلَ رِزْقِي تَحْتَ رُمْحِي وَجَعَلَ الذِّلَّةَ وَالصَّغَارَ عَلَى مَنْ خَالَفَ أَمْرِي، مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ» (مصنف أبي شيبة)
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ» (سنن أبى داؤود)
عَنْ قَتَادَةَ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَأَى رَجُلًا قَدْ حَلَقَ قَفَاهُ، وَلَبِسَ حَرِيرًا، فَقَالَ: «مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ» (جامع معمر بن راشد)
பொருளும், விளக்கமும்:
01. எனது “ரிஸ்க்” உணவை எனது ஈட்டியின் கீழ் அல்லாஹ் வைத்துள்ளான். இழிவையும், கீழ்த்தரத்தையும் எனது கட்டளைக்கு மாறு செய்பவன் மீது ஆக்கியுள்ளான். எவன் எந்தக் கூட்டத்திற்கு ஒப்பாகிறானோ அவன் அவர்களில் உள்ளவனே என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
(ஆதாரம்: முஸன்னப் அபீ ஷைபா, அறிவிப்பு: இப்னு உமர்)
 
இந்த நபீ மொழியின் சுருக்கம் என்னவெனில் நபீ பெருமானாரின் “ரிஸ்க்” உணவு அவர்களது ஈட்டியின் கீழ் உள்ளதென்றால் அவர்கள் அல்லாஹ்வினால் புனித யுத்தம் செய்யுமாறு பணிக்கப்பட்டவர்கள். இஸ்லாமியப் போர் செய்யுமாறு ஏவப்பட்டவர்கள். போர் செய்வதென்பது சாதாரண வேலையல்ல. அதில் வெற்றி பெறுவதற்காக யுத்தம் நடைபெறுவதற்கு பல மாதங்கள் முன்னிருந்தே அதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். பொருளாதார, போர்க் கருவிகள் – வாள், அம்பு, வாகனம் போன்றவை ஏற்பாடு செய்ய வேண்டும். இத்தகைய ஏற்பாடுகள் செய்வதிலும், மற்றும் மார்க்கப் பணிகள் செய்வதிலும் முழுக் கவனம் செலுத்தினார்கள் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள்.
 
இதனால் அவர்கள் தங்களினதும், தங்களின் மனைவி மக்களினதும் அன்றாட உணவுகளுக்காகவோ, மற்றும் தேவைகளுக்காகவோ எந்த ஒரு தொழிலோ, வியாபாரமோ செய்யவில்லை. அவர்களுக்கு எந்தவொரு நிரந்தர வருமானமும் இருக்கவுமில்லை. எனினும் போரின் போது கிடைக்கின்ற “ஙனீமத்” வெற்றிப் பொருள்களை மட்டுமே அவர்களினதும், அவர்களின் மனைவியர்களினதும் ஜீவனோபாயத்திற்காக பயன்படுத்தி வந்தார்கள். இதனால் அல்லாஹ் எனது உணவை எனது ஈட்டியின் கீழ் வைத்துள்ளான் என்று அருளினார்கள்.
 
இந்த நபீ மொழியின் வெளித் தோற்றத்தை மட்டும் கருத்திற் கொண்டு பெருமானார் அவர்கள் மீது தப்பான எண்ணம் கொள்வதை முற்றாகத் தவிர்க்க வேண்டும்.
முதலாவது நபீ மொழி மூலம் விளங்கப்படுகின்ற மற்றதொரு கருத்து, நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் சொல்லுக்கும், கட்டளைக்கும் மாறு செய்பவர்கள் இழி நிலைக்குத் தள்ளப்படுவர் என்பதாகும். ஆகையால் ஒரு முஸ்லிம் பெருமானார் அவர்களின் வழிகாட்டலின் படி தனது வாழ்வை அமைத்துக் கொள்ளுதல் வேண்டும்.
 
முதலாவது நபீ மொழி மூலம் விளங்கப்படுகின்ற இன்னுமொரு கருத்து ஒரு முஸ்லிம் ஏனைய மதங்களின் மத கலாச்சாரத்தை பின்பற்றுவானாயின் அவன் அவர்களில் ஒருவனே என்பதாகும்.
இது தொடர்பாக முதலில் நான் எழுதிவிட்டேன். மீண்டும் சுருக்கமாகச் சொல்வதாயின் ஒரு முஸ்லிம் மற்ற மதத்தவர்களின் மதக் கலாச்சாரத்தை பின்பற்றுதல் கூடாது என்பதாகும். அவ்வாறு ஒருவன் பின்பற்றினால் அவனும் அவர்களில் ஒருவனேயாவான்.
 
02. மேற்கண்ட இரண்டாவது நபீ மொழியும் முதலாவது நபீ மொழி போல் எவன் எந்தக் கூட்டத்துக்கு ஒப்பாகிறானோ அவன் அக் கூட்டத்தைச் சேர்ந்தவன் என்ற கருத்தையே வலியுறுத்துகிறது.
 
ஆதாரம்: ஸுனன் அபீ தாவூத், அறிவிப்பு: இப்னு உமர்.
03. மூன்றாவது நபீ மொழி மூலம் விளங்கப்படுகின்ற கருத்து பின்வருமாறு.
கலீபா உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒருவரைக் கண்டார்கள். அவர் தனது பிடரி முடிகளைச் சவரம் செய்திருந்தார். பட்டுத் துணியும் உடுத்திருந்தார். இவரைக் கண்ட உமர் நாயகம் எவன் எந்தக் கூட்டத்திற்கு ஒப்பாகிறானோ அவன் அந்தக் கூட்டத்தைச் சேர்நதவனே என்று கூறினார்கள்.
 
ஆதாரம்: ஜாமிஉ மஃமர் இப்னி றாஷித், அறிவிப்பு: கதாதா,
உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் இஸ்லாம் வழியை ஏற்றுக் கொள்ளாத ஒரு கூட்டம் இருந்தது. அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் தமது பிடரி முடியை வழித்து பட்டுத் துணியும் உடுப்பவர்களாக இருந்தார்கள். உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கண்ட அந்த மனிதன் முஸ்லிமாக இருந்தார். ஆயினும் அக் கூட்டத்தவர்கள் போல் காணப்பட்டார். இதனால்தான் எவன் எந்தக் கூட்டத்துக்கு ஒப்பாகிறானோ அவன் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவனே என்று கூறினார்கள்.
 
மேற்கண்ட மூன்று நபீ மொழிகளும் ஒரு முஸ்லிம் பிற மதத்தவர்களின் மதக் கலாச்சாரத்தை – அனுஷ்டானத்தைப் பின்பற்றினால் அவனும் அவர்களைச் சேர்ந்தவனே என்று எச்சரித்துள்ளன.
ஆகையால் பிற மதத்தவர்களின் மதக் கலாச்சாரமில்லாததை ஒரு முஸ்லிம் பின்பற்றினால் அது தவறாக மாட்டாது. உதாரணமாக சோறு சாப்பிடுதல், ரொட்டி சாப்பிடுதல், றவ்சர் அணிதல், புகைத்தல் போன்று. இவை எந்த ஒரு மதத்தினதும் மதக் கலாச்சாரமில்லாததால் இவற்றில் ஒன்றைப் பின்பற்றுதல் குற்றமாகாது. மாறாக குறுக்கு நூல் போடுதல், காதில் செம்பருத்தி மலர் வைத்தல், நெற்றியில் திருநூறு பூசுதல், வயது வந்தவர்கள் நெற்றியில் பொட்டு வைத்தல் போன்ற கருமங்கள் பிற மதத்தவர்களின் மத அனுஷ்டானங்களாயிருப்பதால் அவற்றில் அவர்களைப் பின்பற்றுதல் குற்றமேயாகும்.
 
எங்களின் முன்மாதிரியான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் ரிஸ்வீ அவர்கள் பௌத மதத்தவர்களின் நிகழ்வின் போது கையில் வெசக் விளக்கேந்தி நின்றது பௌத மதக் கலாச்சாரமேயன்றி அது சோறு சாப்பிடுதல் போன்ற காரியமல்ல.
தம்பி ரிஸ்வீ அவர்கள் இவ்வாறு செய்து பல வருடங்கள் கடந்து விட்டன. அவர் இவ்வாறு செய்த ஆரம்ப கால கட்டத்தில் முஸ்லிம்களிடையே, குறிப்பாக உலமாஉகளிடம் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. அக்கால கட்டத்தில் ஒரு மௌலவீ நான் மேலே எழுதியுள்ள مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ என்ற ஹதீதைக் கூறி தம்பி ரிஸ்வி செய்தது பிழையென்று கூறினார். அவரின் பெயர் எனது நினைவில் இல்லை. இதன் பிறகு அறிந்தால் அவரின் பெயரை குறிப்பிடுவேன்.
 
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தம்மிடம் சுமார் 9000 க்கும் அதிகமான உலமாஉகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதிசயம் என்னவெனில் அவர்களில் ஒருவருக்கு மட்டுமே தம்பியின் இச் செயல் பிழையென்று விளங்கியது போலும். ஏனையோர் குறித்த நபீ மொழியை அறியாமலிருந்தது வியப்பிற்குரியதேயாகும். ஏனைய அனைத்து உலமாஉகளும் அவ்வேளை கோமாவில் இருந்தார்களா? அல்லது தம்பி ரிஸ்வி அவர்கள் செய்த அந்த வேலை சரியென்று சொல்கிறார்களா?
மௌலவீயாயிருந்த, இதுவரையும் இருந்து வருகின்ற உலமாஉகளிடம் அன்போடு நான் கேட்டுக் கொள்வது என்னவெனில் அவர்கள் நினைப்பது போல் தம்பி ரிஸ்வீ அவர்கள் செய்தது சரியென்றால் நான் குறிப்பிட்டுள்ள நபீ மொழிகளுக்கான விளக்கத்தை சகல மக்களும் அறியும் வகையில் அவர்கள் கூற வேண்டும்.
உலமா சபையின் முப்தீகளே!
 
தம்பி ரிஸ்வீ விளக்கேந்தி நின்ற வேளை நீங்கள் “முப்தீ” பட்டம் பெறாமலா இருந்தீர்கள்? அல்லது பெற்றிருந்தும் தம்பி மீதுள்ள அனுதாபம் காரணமாக அவருக்கு “சப்போர்ட்” பண்ணினீர்களா?
எனக்கும், எனது கருத்தை சரி கண்ட ஸூபிஸ முஸ்லிம்களுக்கும் “சுடுகுது மடியைப் பிடி” என்ற பாணியில் “முர்தத்” பத்வா வழங்கிய நீங்கள் தம்பியின் விடயத்தில் வருடக் கணக்கில் மௌனிகளாயிருப்பது நியாயமா?
 
தம்பி ரிஸ்வீ அவர்கள் செய்த வேலை “ரித்தத்” மத மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய செயல் என்று ஆதாரத்துடன் நான் நிறுவியுள்ளேன். இதை மறுத்து நீங்கள் அவர் செய்தது சரிதான் என்று உங்களால் நிறுவ முடிந்தால் நிறுவுங்கள். உங்களின் கூற்று சரியானதாயின் அதைப் பரிசீலித்து ஏற்றுக் கொள்வதற்கு தயாராக உள்ளேன்.
 
தொடரும்………….
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments