Saturday, May 18, 2024
Homeஎழுத்தாக்கங்கள்முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் மனிதர்களே!

முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் மனிதர்களே!

எவர் எந்த மதத்தைச் சேர்ந்தவராயினும், எந்த நாட்டைச் சேர்ந்தவராயினும், எந்த நிறமுள்ளவராயினும், எந்த தொழில் செய்பவராயினும், எக்குல வழி வந்தவராயினும் அவர்கள் அனைவரும் மனிதர்களே!

எனதன்பிற்குரிய முரீதீன்களே! என்னை முஸ்லிம் என்று ஏற்றுக் கொண்டவர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்.

எனது இவ் அறிவுரையும், ஆலோசனையும் உங்களுக்கு மட்டும் உரியதாகும். வாசித்து இதன் மூலம் என் மனக்குமுறலைப் புரிந்து நீங்கள் அனைவரும் நமதூர் மக்களுடன் பொது விடயங்களில் ஒன்றிணைந்து செயல்படுமாறு உங்களை அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன். நான் இங்கிருந்தாலும், எங்கிருந்தாலும் நமதூர் மக்களின் ஒற்றுமை கண்டு நான் மகிழ்வதே எனது குறிக்கோள். إِنَّ أَرْضِيْ وَاسِعَةٌ எனது பூமி விசாலமானது என்பது திருக்குர்ஆனின் கூற்று.

எனக்கும், உங்களுக்கும் உலமாஉகள் “முர்தத்” என்று “பத்வா” வழங்கி 43 ஆண்டுகளாகிவிட்டன. கடந்த 43 ஆண்டுகளாக அவர்கள் செய்த தவறை உணர்த்தி பல கட்டுரைகளும், பல நூல்களும் எழுதி அவர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளேன். பொது மக்களுக்கும் அறிவித்துள்ளேன். பொது மக்கள் அப்பாவிகள். அவர்களால் ஒன்றுமே செய்ய முடியாது. “பத்வா” வழங்கியவர்களே அதை வாபஸ் பெற வேண்டும். இதேபோல் அதை அமுல் படுத்திக் கொண்டிருப்பவர்களுமே வாபஸ் பெற வேண்டும். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா “பத்வா”வை வாபஸ் பெற்று முஸ்லிம்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள பிளவை நீக்கி சமாதானத்தை நிலை நாட்ட முன்வருவார்கள் என்று எதிர்பார்த்தேன். அதற்காக என்னாலான முயற்சிகளையும் மேற்கொண்டேன். ஒன்றுமே பலிக்கவில்லை. எனது முயற்சிகள் செவிடன் காதில் சங்கூதிய கதை போலாகிவிட்டது. ரிஸ்வீ முப்தீ அவர்கள் அல்லாஹ்வை மிஞ்சிய பாணியில் “உலமா சபை வழங்கிய “பத்வா”வை வாபஸ் பெற்றதற்கு வரலாறே இல்லை” என்று முழங்கிவிட்டார். அவரையும், அவருடன் உள்ளவர்களையும் அல்லாஹ் கவனித்துக் கொள்வான்.

#மார்க்கஅனுஷ்டானங்கள்தவிரஏனையமனிதாபிமான_விடயங்களிலும், நமதூரினதும், இவ்வூர் மக்களினதும் பொது விடயங்களிலும் சமாதானத்தையும், ஒற்றுமையையும் நிலை நாட்டுவோம் என்ற நல்லெண்ணத்துடன் இவ் அறிவுரையையும், ஆலோசனையையும் உங்கள் முன் வைக்கிறேன். பொது நலன் கருதி இதை ஏற்றுச் செயல்படுமாறு உங்களை அன்பாய்க் கேட்டும் கொள்கிறேன்.

#என் அன்பிற்குரிய முரீதீன்களே! என்னை முஸ்லிம் என்று ஏற்றுக் கொண்டவர்களே!

நானும், நீங்களும் “தஸவ்வுப்” எனும் ஸூபிஸ வழியில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறோம். எமது இலக்கு “ஷரீஆ, தரீகா, ஹகீகா, மஃரிபா” (ஷரியை, கிரியை, யோகம், ஞானம்) எனும் நான்கு வழிகளையும் பேணி அல்லாஹ்வை அடைவதேயாகும்.

ஸூபிஸ வழி செல்லும் நாம் ஒரு மனிதனை அவன் பின்பற்றும் மதத்தைக் கொண்டும், அவன் பேசும் மொழியைக் கொண்டும், அவன் வாழும் நாட்டைக் கொண்டும், அவனின் நிறத்தைக் கொண்டும், அவனின் பொருளாதாரத்தைக் கொண்டும், அவனின் கோலத்தைக் கொண்டும், மற்றும் அவனின் பட்டம் பதவி கொண்டும் எடை போடாமல், நோக்காமல் அவனை “இன்ஸான்” மனிதன் என்று மட்டுமே நோக்க வேண்டும். இது உங்களின் மாற்ற முடியாத கொள்கையாக இருக்க வேண்டும்.

இது போன்றே “லா இலாஹ இல்லல்லாஹ்” அல்லாஹ் தவிர வேறொன்றுமில்லை என்று “ஈமான்” நம்பிக்கை கொண்டு வாழும் ஸூபீகள், மற்றும் ஸுன்னீகளான நாம், வஹ்ஹாபீகள், காதியானிகள், ஜமாஅதே இஸ்லாமீ அமைப்பினர், மற்றும் தப்லீக் அமைப்பினர் அனைவரையும், மற்றும் “தரீகா” அடிப்படையில் காதிரிய்யா, ஷாதுலிய்யா, ரிபாஇய்யா, சிஷ்திய்யா, அலவிய்யா, நக்ஷபந்திய்யா முதலான தரீகாக்களைச் சேர்ந்தவர்களையும், இதேபோல் ஷாபிஈ, ஹனபீ, மாலிகீ, ஹன்பலீ முதலான மத்ஹபுகளைச் சேர்ந்தவர்களையும் மனிதர்களாகவே நோக்க வேண்டும்.

இன்னுமிதேபோல் اَلْخَلْقُ عِيَالُ اللهِ படைப்புக்கள் எல்லாம் அல்லாஹ்வின் குடும்பம் என்ற நபீ மொழியின் படி அப்புஹாமியையும், அருணாசலத்தையும், அண்டனியையும், மற்றும் ஏனைய மதங்களைப் பின்பற்றுவோரையும் அல்லாஹ்வின் குடும்பமாகவே நாம் நோக்க வேண்டுமேயன்றி பௌதன், இந்து, கிறித்துவன் என்று நோக்குதல் கூடாது.

இதேபோல் நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளிய

اِرْحَمُوْا مَنْ فِى الْأَرْضِ يَرْحَمْكُمْ مَنْ فِى السَّمَاءِ
“பூமியில் உள்ளவர்களுக்கு அன்பு காட்டுங்கள். வானத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு அன்பு காட்டுவார்கள்” என்ற நபீ மொழியின் படியும் உலகில் வாழ்கின்ற அனைத்து இன, மத மக்களுக்கும் பாரபட்சமின்றி அன்பு காட்ட வேண்டும்.

இந்த நபீ மொழியில் வந்துள்ள مَنْ – “மன்” என்ற சொல் முஸ்லிம்களை மட்டுமன்றி அனைத்து இன, மத மக்களையும் உள்வாங்கிய ஒரு சொல் என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமன்றி இச் சொல் ஆடு, மாடு, சிங்கம், கரடி போன்ற கால் நடைகளையும், கோழி, பருந்து, குருவி, கொக்கு முதலான பறப்பனவற்றையும், பாம்பு, பூரான் முதலான ஊர்வனவற்றையும், பொதுவாக உயிரினங்கள் அனைத்தையும் உள்வாங்கிய ஒரு சொல் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நபீ மொழியும் மேற்கண்ட நபீ மொழி போல் இன, மத பேதமின்றி எவரும், எவருக்கும் அன்பு காட்ட வேண்டும் என்பதையே உணர்த்துகிறது.

மேற்கண்ட நபீ மொழிகள் போன்று பின்வரும் நபீ மொழியும் உயிரினங்கள் எதுவாயினும் அதற்கு இரக்கம் காட்ட வேண்டும் என்பதையும், அதை வேதனைப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் என்பதையும் உணர்த்துவது அறிவுள்ளவர்களுக்கு மறைவானதல்ல.

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَال: «دَخَلَتِ النَّارَ امْرَأَةٌ فِي هِرَّةٍ رَبَطَتْهَا، فَلَمْ تَدَعْهَا تَأْكُلُ مِنْ خَشَاشِ الْأَرْضِ»
ஒரு பெண் ஒரு பூனையின் விடயத்தில் நரகம் சென்றாள். அவள் அதைக் கட்டி வைத்தாள். பூமியில் உள்ள அதன் உணவைச் சாப்பிடுவதற்கு அதை அவள் விடவில்லை என்று நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
ஆதாரம்: முஸ்னத் அஹ்மத், அறிவிப்பு: அபூ ஹுறைறா

பூனை என்பது மென்மையான ஒரு பிராணி. இது மனிதனுக்கு தானாக எந்த ஒரு தீங்கும் செய்யாது. இதற்கு வேதனை செய்தால் மட்டுமே தீண்டும்.

ஆனையாயினும், பூனையாயினும், இவையல்லாத வேறு பிராணிகளாயினும் அவற்றை வீட்டில் வளர்ப்பவர்கள் அவற்றுக்கு உரிய நேரத்தில் உணவும், நீரும் கொடுக்க வேண்டும். நோய் ஏற்பட்டால் மிருக வைத்தியரிடம் காட்டி மருந்தும் செய்ய வேண்டும்.

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள அஜ்மீர் நகர் குளிர் கடுமையான பிரதேசம். அங்கு அடக்கம் பெற்றுள்ள கரீப் நவாஸ் ஹாஜா முயீனுத்தீன் றஹிமஹுல்லாஹ் அவர்களைத் தரிசிப்பதற்காக வெள்ளைக் காரர்களும் வருவார்கள். அவர்களில் அறபு மொழி கற்றவர்களும் உள்ளனர். ஒரு நாளிரவு ஒரு வெள்ளைக் காரன் பெரிய ஆடு ஒன்றைப் பிடித்து அதன் வாயை இரு கைகளாலும் விரித்து அவனின் வாயில் அடக்கி வைத்திருந்த புகையை ஊதினான். இதைக் கண்ட நான் அவனிடம் என்ன செய்கிறாய் என்று கேட்டேன். அதற்கவன் குளிர் தாங்க முடியாமல் ஆடு நடுங்குகிறது. அதற்கு உதவி செய்வதற்காக மருந்துப் புகையை அதன் வயிற்றுக்குள் அனுப்புகிறேன் என்றான்.

முஸ்லிம் அல்லாத ஒருவன் பிராணிகள் மீது வைத்துள்ள அன்பை அறிந்த நான் ஒரு முஸ்லிம் இவ்வாறு செய்வானா என்று வியந்தேன்.

இதேபோல் பின்வரும் நபீ மொழி அல்லாஹ்வின் படைப்பு நாயாயிருந்தாலும் கூட அதற்கு இரக்கம் காட்ட வேண்டும் என்பதை உணர்த்துவதை கவனிப்போம்.

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ‘ بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ، إِذِ اشْتَدَّ عَلَيْهِ الْعَطَشُ، فَوَجَدَ بِئْرًا فَنَزَلَ فِيهَا فَشَرِبَ، وَخَرَجَ، فَإِذَا كَلْبٌ يَلْهَثُ، يَأْكُلُ الثَّرَى مِنَ الْعَطَشِ، فَقَالَ الرَّجُلُ: لَقَدْ بَلَغَ هَذَا الْكَلْبَ مِنَ الْعَطَشِ مِثْلُ الَّذِي بَلَغَ مِنِّي، فَنَزَلَ الْبِئْرَ، فَمَلَأَ خُفَّهُ، ثُمَّ أَمْسَكَهُ بِفِيهِ، حَتَّى رَقِيَ، فَسَقَى الْكَلْبَ، فَشَكَرَ اللَّهُ لَهُ، فَغَفَرَ لَهُ ‘ فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَإِنَّ لَنَا فِي الْبَهَائِمِ لَأَجْرًا؟ فَقَالَ: «فِي كُلِّ ذَاتِ كَبِدٍ رَطْبَةٍ أَجْرٌ»

“ஒரு மனிதன் ஒரு வழியால் நடந்து சென்று கொண்டிருந்த போது அவனுக்கு கடுமையான தாகம் ஏற்பட்டது. அவ்வழியில் ஒரு கிணறு இருந்ததைக் கண்ட அவன் அதில் இறங்கி குடித்து விட்டு வெளியேறினான். அவ்வேளை ஒரு நாய் தாகத்தின் கடுமையால் நாக்கை வெளியே தொங்கவிட்ட நிலையில் மண்ணை சாப்பிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டு தனக்கு ஏற்பட்ட தாகம் இந்த நாய்க்கும் ஏற்பட்டுள்ளது என்று சொன்னவனாக அவன் மீண்டும் அக்கிணற்றில் இறங்கி தனது “சூ” சப்பாத்தில் நீரை நிரப்பி அதைத் தனது வாயால் கடித்துக் கொண்டு வெளியே வந்து அந்த நாய்க்கு நீரைப் புகட்டினான். அவனுக்கு அல்லாஹ் நன்றி தெரிவித்து அவன் செய்த குற்றங்களை மன்னித்தான்” என்று அருளினார்கள். அப்போது நபீ தோழர்கள் மிருகங்களுக்கு நீர் கொடுத்தாலும் கூலி – நன்மை உண்டா? என்று வினவ, ஆம். உயிருள்ள எந்தப் பிராணிக்கு உதவி செய்தாலும் நன்மை உண்டு என்று அருளினார்கள்.

ஆதாரம்: முஅத்தா மாலிக், ஆசிரியர்: இமாம் மாலிக்,
அறிவிப்பு: அபூ ஹுறைறா

ஸுப்ஹானல்லாஹ்! சாப்பிடுவதற்கு “ஹறாம்” விலக்கப்பட்ட, அசுத்தமான, அது ஈரத்தோடு பட்ட துணியை, அல்லது இடத்தை, அல்லது உடலை 7 தரம் கழுவ வேண்டும் என்றும், அவற்றில் ஒரு தரம் மண் கலந்து கழுவ வேண்டும் என்றும் “ஷரீஆ” வில் சொல்லப்பட்ட ஒரு நாய்க்கு உதவுவதால் – அதற்கு அன்பு காட்டுவதால் பாவம் மன்னிக்கப்படும் என்று சொல்லப்பட்டிருப்பதன் மூலம் உயிரினங்களுக்கு இரக்கம் காட்டுவதன் மூலம் ஏற்படுகின்ற நன்மை எம்மாத்திரம் என்பதை விளங்க முடிகிறது.

அபூ பக்ர் ஷிப்லீ என்று உலகப் பிரசித்தி பெற்ற ஓர் இறைஞானி பக்தாத் நகரில் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் ஒரு வழியால் சென்று கொண்டிருந்த வேளை பழக் குலைகள் நிறைந்த மரமொன்று அவர்களுடன் பின்வருமாறு பேசியது.

يَا شِبْلِيْ كُنْ مِثْلِيْ، اَلنَّاسُ يَرْمُوْنَنِيْ بِالْأَحْجَارِ، وَأَنَا أَرْمِيْهِمْ بِالْأَثْمَارِ،

“ஷிப்லீ மகானே! நீங்கள் என்போல் இருந்து கொள்ளுங்கள். மனிதர்கள் எனக்குக் கல்லால் எறிகிறார்கள், நானோ அவர்களுக்கு பழங்களால் எறிகிறேன்” என்று. அதாவது தீமை செய்பவர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என்று கூறியது.

ஸுப்ஹானல்லாஹ்! பகுத்தறிவற்ற மரம் பகுத்தறிவுள்ள மனிதனுக்கு இவ்வாறு அறிவுரை வழங்கியதென்றால் மனிதன் எவ்வாறிருக்க வேண்டும் என்பது விளங்கப்படுகிறது.

அன்புக்குரிய முரீதீன்களே! என்னை முஸ்லிம் என்று ஏற்றுக் கொண்டவர்களே!

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை ஸூபிஸ ஞானம் பேசிய என்னை ஒரு தரமேனும் விசாரிக்காமலும், எனது பேச்சுக்குரிய விளக்கத்தை என்னிடமே கேட்டறிந்து கொள்ளாமலும், முஸ்லிம்களை மதம் மாற்றி “பத்வா” வழங்கும் அதிகாரம் இலங்கை அரசினால் வழங்கப்படாமல் இருக்கும் நிலையிலும், “தஸவ்வுப்” ஸூபிஸக் கலையோடு தொடர்புள்ள இறைஞான மகான்களான, “தரீகா”வோடு தொடர்புள்ள ஷெய்குமார்களை கலந்தாலோசித்துச் செயல்படாமலும், இவ் விவகாரத்தை காலம் பிற்போட்டு அலசி ஆராயாமலும் அவசரப்பட்டு “முர்தத்” என்று “பத்வா” வழங்கியது முழு மடையர்கள் கூட சரி காணாத அறிவிலிகளின் செயலாகும். இது மட்டுமல்ல. பிற மதத்தவர்கள் கூட இவர்களின் இச் செயலைக் கேள்விப்பட்டு தலையில் கை வைத்து வியப்படைகிறார்கள். பிற மதத்தைச் சேர்ந்த எவருக்கும் அம்மதத்தின் தலைவர்கள் மதம் மாற்றித் தீர்ப்புக் கூறியதற்கு வரலாறில்லை என்றும் சொல்கிறார்கள்.

உலமாஉகளின் இக் கொடிய செயலை ஸூபிஸ சமூகமும் சரி காணவில்லை. மனிதாபிமான மனமுள்ள எவரும் சரிகாணவுமில்லை.

تَكْفِيْرُ الْمُسْلِمِ كَقَتْلِهِ
“ஒரு முஸ்லிமை மதம் மாற்றி வைப்பது அவனைக் கொலை செய்வது போன்றது” என்ற நபீ மொழியை உலமாஉகள் அறிந்திருந்தும் கூட தன்னிச்சையாகச் செயல்பட்டது கடும் தண்டனைக்குரிய செயலாகும்.

நமது இலங்கைத் திரு நாட்டில் முஸ்லிம் அமைச்சர்கள், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இருந்தும் கூட அவர்களில் ஒருவர் கூட கடந்த 43 ஆண்டுகளில் ஒரு தரமேனும் இது தொடர்பாக நாடாளுமன்றில் வாய் திறக்காமல் இருந்தது கவலைக்குரியதும், வேதனைக்குரியதுமாகும்.

#அன்பிற்குரிய முரீதீன்களே! என்னை முஸ்லிம் என்று ஏற்றுக் கொண்டவர்களே!

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஸூபிஸம் பேசிய என்னையும், அதை ஏற்றுக் கொண்ட உங்களையும் நாய்களையும், பூனைகளையும் விடக் கேவலமாக எண்ணி “முர்தத்” என்று மதம் மாற்றித் தீர்ப்பு வழங்கியிருப்பது இவர்களின் அறியாமை என்று சொல்வதை விட இவர்களுக்கும், வஹ்ஹாபீகளுக்கும் என் மீதுள்ள எரிச்சலும், பொறாமையும் என்றே சொல்ல வேண்டும்.

நாய்க்கு நீர் கொடுத்தவன் தனது குற்றம் மன்னிக்கப்படுகிறான் என்றும், பூனையை வேதனைப்படுத்திய பெண் நரகம் சென்றாள் என்றும், பூமியில் உள்ளவர்களுக்கு அன்பு காட்டுங்கள், வானத்திலுள்ளவர்கள் உங்களுக்கு அன்பு காட்டுவார்கள் என்றும் எம் பெருமானார் அறிவுரை வழங்கியிருக்கும் நிலையில் உலமாஉகள் பல இலட்சம் முஸ்லிம்களை மதம் மாற்றித் தீர்ப்பு வழங்கிவிட்டு மதம் பிடித்த யானை போல் அட்டூழியம் செய்வது மன்னிக்க முயாத குற்றமாகும். “ஷரீஆ”வின் சட்டப்படியும், ஜனநாயக நாடான இந் நாட்டின் சட்டப்படியும் இவர்களுக்கு 43வது “கத்தம்” ஓதியிருக்க வேண்டும்.

#என் அன்பிற்குரிய முரீதீன்களே! என்னை முஸ்லிம் என்று ஏற்றுக் கொண்ட முஹிப்பீன்களே!

உலமாஉகள் உண்மையை உணர்ந்து “பத்வா”வை வாபஸ் பெற்று நமது நாட்டில் வாழும் முஸ்லிம்களின் ஒற்றுமைக்கு உதவட்டும். அல்லது அந்தப் பாவத்தை அவர்கள் சுமக்கட்டும். நாம் நமது ஸூபிஸ வழியிற் சென்று அல்லாஹ்வை அறிந்து அவனை அடைவோம்.

நாம் அனைவரும் இன்றிலிருந்து ஸூபிஸத்தின் எதார்த்தத்தையும், அதன் மகிமையையும் மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டும் வகையில் #மார்க்க அனுஷ்டானங்கள் தவிர்ந்த ஏனைய விடயங்களில்_மட்டும் “வஹ்ஹாபீ, காதியானீ, தப்லீக் ஜமாஅத், ஜமாஅதே இஸ்லாமீ” என்ற பாகுபாடு, பாரபட்சமின்றி அனைவருடனும் இணைந்து ஒற்றுமையாக வாழ வேண்டுமென்று உங்கள் அனைவரையும் அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

ஆகையால் மேற்கண்ட அமைப்புக்களைச் சேர்ந்த யாராவது நோயுற்றால் அவரைப் பார்க்கச் செல்லுமாறும், அவருக்கு உங்களால் ஏதேனும் உதவி செய்ய முடிந்தால் செய்யுமாறும், அவர்களில் யாராவது மரணித்தால் அவரின் “ஜனாசா”வை பார்க்கச் செல்லுமாறும், அந்த “ஜனாசா” ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்ததாயின் உங்களால் முடிந்த பண உதவி, மற்றும் உடலுதவி செய்யுமாறும், அவர்களில் யாராவது மயக்கமுற்று பாதையில் விழுந்து கிடந்தால் அவருக்கு உதவி செய்யுமாறும், அவர்களில் யாராவது உங்களுக்கு “ஸலாம்” சொன்னால் மட்டும் அவருக்கு பதில் சொல்லுமாறும், அவர்களின் குடும்பத்தில் நடைபெறுகின்ற விருந்து, மற்றும் விஷேட நிகழ்வுகளுக்கு உங்களை அழைத்தால் அங்கு சென்று சிறப்பிக்குமாறும், அவர்களில் யாருடனாவது நீங்கள் பங்குதாரர்களாக வியாபாரம் செய்ய விரும்பினால் செய்யுமாறும், அவர்களுக்குப் பண உதவி அல்லது வேறு உதவிகள் செய்ய விரும்பினால் செய்யுமாறும், அவர்களுடன் நட்பாகவும், உறவாகவும் இருந்து கொள்ளுமாறும், அவர்களின் இன்ப, துன்பங்களில் பங்கு கொள்ளுமாறும், சுருக்கமாகச் சொல்வதாயின் “பத்வா” வழங்கப்படுமுன் நீங்கள் அவர்களுடன் எவ்வாறிருந்தீர்களோ அவ்வாறு இருந்து கொள்ளுமாறும் உங்களை அன்பாய்க் கேட்டுக் கொள்வதுடன் நானும் அவ்வாறே நடந்து கொள்வேன் என்பதையும் உங்களுக்கு அறிவித்துக் கொள்கிறேன்.

உலமாஉகள் நமக்கு “முர்தத்” என்று வழங்கிய “பத்வா”வை அவர்கள் வாபஸ் பெறும் வரைதான் நானும், நீங்களும் மேற்கண்டவாறு நடந்து கொள்ள வேண்டும். இதுவே நியாயம்.

எனினும் அவர்கள் எந்த ஒரு நிபந்தனையுமின்றி தமது “பத்வா”வை வாபஸ் பெற்றுக் கொண்டார்களாயின் நானும், நீங்களும் மார்க்க அனுஷ்டானங்கள் உள்ளிட்ட அனைத்திலும் ஒன்று படுவோம். நீங்களும் உங்களுக்கு விருப்பமான பள்ளிவாயல்களுக்குச் சென்று, விரும்பிய மௌலவீமாரைப் பின்பற்றித் தொழலாம். நான் அழைக்கப்படும் எந்த நிகழ்வாயினும், எந்தப் பள்ளிவாயலாயினும் அங்கு செல்வேன். இன்ஷா அல்லாஹ்!

முக்கிய குறிப்பு: நான் எக்காரணம் கொண்டும், எவர் வேண்டிக் கொண்டாலும் “கலிமா” சொல்லி உலமாஉகள் கூறும் இஸ்லாத்திற்கு வரவோ, நான் பேசிய கருத்துக்கள் பிழை என்று ஏற்றுக் கொள்ளவோ, இனிமேல் பேசவுமாட்டேன், எழுதவுமாட்டேன் என்று வாக்களிக்கவோ மாட்டேன். இதில் மிக உறுதியாக இருப்பேன். لَكُمْ دِيْنُكُمْ وَلِيَ دِيْنِ உங்களுக்கு உங்கள் மார்க்கம். எனக்கு எனது மார்க்கம். அல்லாஹு அக்பர்.

காதிமுல் கவ்மி,
மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
13.03.2023

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments