Saturday, May 18, 2024
Homeஎழுத்தாக்கங்கள்இன்ஸான் - நிஸ்யான் (கல்ப் - தகல்லுப்)

இன்ஸான் – நிஸ்யான் (கல்ப் – தகல்லுப்)

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
“இன்ஸான்” என்றால் மனிதன். “நிஸ்யான்” என்றால் மறதி. “கல்ப்” என்றால் உள்ளம். “தகல்லுப்” என்றால் புரள்தல்.
وَمَا سُمِّيَ الْإِنْسَانُ إِلَّا لِنَسْيِهِ – وَلَا الْقَلْبُ إِلَّا أَنَّهُ يَتَقَلَّبُ

பாடலின் பொருள்:
மனிதன் மறதியுள்ளவனாயிருப்பதினால்தான் அவன் “இன்ஸான்” என்று பெயர் சொல்லப்பட்டான்.
 
“கல்பு” – உள்ளம் என்பது புரள்வதினால்தான் அது “கல்ப்” என்று பெயர் சொல்லப்பட்டது.
 
“இன்ஸான்” என்றால் மனிதன். இச் சொல்லில் ஐந்து எழுத்துக்கள் உள்ளன. அவை அலிப், நூன், ஸீன், அலிப், நூன்.
 
“நிஸ்யான்” என்றால் மறதி. இச் சொல்லில் ஐந்து எழுத்துக்கள் உள்ளன. அவை நூன், ஸீன், யே, அலிப், நூன்.
 
முந்தின “இன்ஸான்” என்ற சொல்லில் ஐந்து எழுத்துக்கள். பிந்தின “நிஸ்யான்” என்ற சொல்லிலும் ஐந்து எழுத்துக்கள்.
إِنْسَانْ
– இன்ஸான் என்ற சொல்லும், نِسْيَانْ நிஸ்யான் என்ற சொல்லும் தோற்றத்திலும், மொழித்தலிலும் சிறிய அளவிலான வித்தியாசம் இருந்தாலும் பெரிய அளவில் ஒன்று போலவே உள்ளது.
 
மனிதனுக்கும், மறதிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது போல் இவ்விரு சொற்களின் அமைப்புகளுக்கிடையிலும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
 
“கல்ப்” என்றால் உள்ளம். “தகல்லுப்” என்றால் புரள்தல். இவ்விரு சொற்களுக்குமிடையில் மொழித்தலிலும், தோற்றத்திலும் நெருங்கிய தொடர்பு உண்டு.
 
ஏனெனில் “கல்ப்” என்ற சொல் “தகல்லுப்” என்ற சொல்லின் மாறுபட்ட தோற்றமேயாகும்.
 
“கல்ப்” உள்ளம் என்பது எல்லா நேரங்களிலும் ஒரே நிலையில் இருக்காது. அது புரண்டு கொண்டே இருக்கும். இதனால்தான் ஒரு வேலையை சுணக்காமல் முடிக்க வேண்டுமென்றும், காலம் தாழ்த்தினால் அவன் மனம் மாறிவிடுமென்றும் மக்கள் சொல்வர். மேலும் இதனால்தான் மனம் ஒரு குரங்கு என்று ஒரு கவிஞன் சொன்னான் போலும். அது ஒரே கொப்பில் நீண்ட நேரம் தங்கியிருக்காது. கொப்பு விட்டுக் கொப்பு தாவிக் கொண்டிருக்கும் இயல்புடையது. இதேபோல் மனித மனம் ஒரே முடிவில் இருக்காது. சந்தர்ப்ப சூழ் நிலைக்கேற்ப மாறிக் கொண்டே இருக்கும்.
 
இவ்வாறு அறபு மொழியில் பல சொற்கள் உள்ளன. ஒரு சொல்லின் ஓர் எழுத்து மாறுவதாலும், ஓர் எழுத்தின் نُقْطَةٌ – புள்ளி மாறுவதாலும் பொருள் மாறிவிடும். இதேபோல் குறியீடுகள் மாறுவதாலும் பொருள் மாறிவிடும். உதாரணமாக خَلَقَ என்ற சொல்லின் முதல் எழுத்திலுள்ள புள்ளியை நீக்கினால் حَلَقَ என்று அமையும். புள்ளியிருந்தால் படைத்தான் என்றும், அதை நீக்கினால் முடியை சிரைத்தான் என்றும் பொருள் வரும். خَلَّاقْ என்றால் படைப்பவன் என்றும், حَلَّاقْ என்றால் சிரைப்பவன் என்றும் பொருள் வரும். ஒரு சொல்லின் குறியீடு மாறுவதால் பொருள் மாறுபடும். உதாரணமாக فَرْجٌ என்றால் பெண் குறி என்றும், فَرَجٌ என்றால் துன்பம் நீங்குதல் என்றும் பொருள் வரும். ذِكْرٌ என்றால் நினைத்தல் என்றும், ذَكَرٌ என்றால் ஆண்குறி என்றும் பொருள் வரும். عَطِشَ என்றால் தாகித்தான் என்றும், عَطَسَ என்றால் தும்மினான் என்றும் பொருள் வரும்.
 
معرفة – مغرفة
இவ்விரு சொற்களும் தோற்றத்தில் ஒன்று போலவே இருக்கும். “ஐன்” என்ற எழுத்துக்கு மேற்பக்கம் ஒரு “டொட்” نُقْطَةٌ புள்ளி வைத்தால் அகப்பை என்று பொருளும், புள்ளி வைக்காவிட்டால் ஞானம் என்ற பொருள் வரும்.
 
இதற்கு ஒரு வரலாறும் உண்டு. அதை இங்கு சுட்டிக் காட்டுவது பொருத்தமானதாகும்.
சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் இலங்கையிலிருந்த ஓர் ஊரில் நடந்த உண்மைச் சம்பவம்.
 
ஓர் ஆலிம் மார்க்க அறிஞர் எதிர்பாராமல் ஒரு வெள்ளிக்கிழமை அவ் ஊருக்குச் சென்றார். “ஜும்ஆ” தொழுகைக்காக மக்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் ஒவ்வொருவரும் தனது இடுப்பில் ஓர் அகப்பை வைத்திருந்தனர். இது கண்ட அங்கு சென்ற ஆலிம் அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. தொழுகை முடிந்த பின் விசாரித்தறிந்து கொள்வோம் என்று அவர் மட்டும் அகப்பை இல்லாமல் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டார்.
 
தொழுகை முடிந்த பின் அங்கு சென்ற ஆலிம் அவர்கள் பள்ளிவாயல் “இமாம்” அவர்களை அணுகி அகப்பை தொடர்பாக வினவிய போது, “அகப்பை இன்றித் தொழுதால் தொழுகை நிறைவேறாது” என்று அவர் கூறினார். ஆலிம் அவர்கள் அவரிடம் அதற்கான ஆதாரம் கேட்ட போது சட்ட “கிதாபு” ஒன்றைக் கொடுத்தார். ஆலிம் அவர்கள் குறித்த இடத்தைப் பார்த்து விட்டு مَعْرِفَةْ என்ற சொல்லின் “ஐன்” எழுத்தின் மேலிருந்த “டொட்” نُقْطَةْ – புள்ளியை தனது விரலால் நீக்கிவிட்டு பள்ளிவாயல் இமாம் அவர்களிடம் கொடுத்து அகப்பை எங்கே என்று கேட்டார். இமாம் அவர்கள் “ஙெய்ன்” ஐனாக மாறியிருந்தது கண்டு வியந்தவராக ஆலிம் அவர்களிடம் விளக்கம் கேட்டார்.
 
ஆலிம் அவர்கள் விளக்கம் கூறினார். அதாவது “ஐன்” என்ற எழுத்துக்கு மேலிருந்தது “நுக்தா” அல்ல. அது பல்லியின் பீ. அதை நான் விரலால் நீக்கிவிட்டேன். இப்போது لَا تَصِحُّ الصَّلَاةُ إِلَّا بِالْمَعْرِفَةِ இறைஞானமின்றித் தொழுகை நிறைவேறாது என்று வசனம் அமைந்து விட்டது என்று விளக்கம் சொன்னார். பள்ளிவாயல் இமாம் அவர்கள் அதை ஏற்றுக் கொண்டு தனது தவறுக்காக மன்னிப்புக் கேட்டதாக ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.
 
இதை எதற்காக எழுதினேன் என்றால் அறபு மொழியில் “நுக்தா” புள்ளியை சரியாக விளங்காமல் விடுவதால் அது பெரியதோர் குழப்பத்தை ஏற்படுத்திவிடுவதால் அறபு மொழியில் திறமையில்லாத உலமாஉகள் மிகவும் திறமையாக இருந்து கொள்ள வேண்டும். தனக்குத் தெரியாது போனால் தெரிந்தவர்களிடம் கேட்டுச் செயல்பட வேண்டும்.
فَاسْئَلُوْا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُوْنَ،
முற்றும்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments