Thursday, May 2, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஸூபிஸ ஞானம் علم التصوّف

ஸூபிஸ ஞானம் علم التصوّف

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
قال سيد الطائفة جنيد البغدادي رضي الله عنه ‘لَوْ نَعْلَمُ أَنَّ تَحْتَ أَدِيْمِ السَّمَاءِ أَشْرَف مِنْ هَذَا الْعِلْمِ الَّذِيْ نَتَكَلَّمُ فِيْهِ مَعَ أَصْحَابِنَا لَسَعَيْتُ إِلَيْهِ ‘
 
ஸூபீகளின் தலைவர் என்று உலகில் தோன்றி மறைந்த மெய்ஞ்ஞானிகளாலும், இன்று உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இறைஞானிகளாலும் போற்றிப் புகழப்படுகின்ற இமாம் ஜுனைத் பக்தாதீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸூபிஸ ஞானம் எனப்படும் “இல்முத் தஸவ்வுப்” பற்றிக் கூறுகையில் (வானத்தின் கீழுள்ளவற்றில் நாங்கள் எங்களின் தோழர்களுடன் பேசிக் கொண்டிருக்கின்ற ஸூபிஸ ஞானத்தை விடச் சிறந்த ஓர் அறிவு இருக்குமாயின் அதைப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சிப்பேன்) என்று கூறினார்கள். (ஆதாரம்: ஈகாழுல் ஹிமம் பி ஷர்ஹில் ஹிகம், பக்கம் 08, ஆசிரியர்: அஜீபதுல் ஹஸனீ)

قال الشّيخ الصقلي رحمه الله فى كتابه المسمّى بـ ‘أنوار القلوب فى العلم الموهوب ‘ (وَكُلُّ مَنْ صَدَّقَ بِهَذَا الْعِلْمِ فَهُوَ مِنَ الْخَاصَّةِ، وَكُلُّ مَنْ فَهِمَهُ فَهُوَ مِنْ خَاصَّةِ الْخَاصَّةِ، وَكُلُّ مَنْ عَبَّرَ عَنْهُ وَتَكَلَّمَ فِيْهِ فَهُوَ النَّجْمُ الَّذِيْ لَا يُدْرَكُ وَالْبَحْرُ الَّذِيْ لَا يُنْزَفُ)
அஷ்ஷெய்குஸ்ஸகலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “அன்வாறுல் குலூப் பில் இல்மில் மவ்ஹூப்” எனும் நூலில் பின்வருமாறு எழுதியுள்ளார்கள்.
 
(எவன் ஸூபிஸ ஞானம் உண்டு என்றும், அது உண்மை என்றும் சொல்கிறானோ அவன் விஷேடமானவன். எவன் அதை விளங்கிக் கொண்டானோ அவன் அதி விஷேடமானவன். எவன் அதைப் பேசுகின்றானோ அவன் எட்டிக் கொள்ளப்படாத தாரகையும், இறைத்துக் கரை காண முடியாத கடலுமாவான்)
ஈகாழுல் ஹிமம் பீ ஷர்ஹில் ஹிகம்,
பக்கம் 08, ஆசரியர்: அஜீபதுல் ஹஸனீ
 
وقال شيخ المشائخ إِذَا رَأَيْتَ مَنْ فُتِحَ لَهُ بِالتَّصْدِيْقِ بِهَذِهِ الطَّرِيْقَةِ فَبَشِّرْهُ، وَإِذَا رَأَيْتَ مَنْ فُتِحَ لَهُ فِى الْفَهْمِ فِيْهِ فَاغْتَبِطْهُ، وَإِذَا رَأَيْتَ مَنْ فُتِحَ لَهُ فِى النُّطْقِ فِيْهِ فَعَظِّمْهُ، وَإِذَا رَأَيْتَ مُنْتَقِدًا عَلَيْهِ فَفِرَّ مِنْهُ فِرَارَكَ مِنَ الْأَسَدِ وَاهْجُرْهُ، وَمَا مِنْ عِلْمٍ إِلَّا وَقَدْ يَقَعُ الْإِسْتِغْنَاءُ عَنْهُ فِى وَقْتٍ مَّا، إِلَّا عِلْمَ التَّصَوُّفِ، فَلَا يَسْتَغْنِى عَنْهُ أَحَدٌ فِى وَقْتٍ مِنَ الْأَوْقَاتِ،
 
ஸூபீ மகான்களில் ஒருவர் பின்வருமாறு சொல்கிறார்.
 
(ஸூபிஸ ஞானத்தை உண்மைப்படுத்தி வைக்கும் நற்பாக்கியம் எவனுக்கு வழங்கப்பட்டுள்ளதோ அவனை நீ கண்டால் அவனுக்கு சுபச் செய்தி சொல். ஸூபிஸ ஞானத்தை விளங்கும் பாக்கியம் எவனுக்கு வழங்கப்பட்டுள்ளதோ அவனை நீ கண்டால் அவன் போல் நீயும் வர வேண்டும் என்று ஆசை வை. ஸூபிஸ ஞானம் பேசுவதற்கு அல்லாஹ் எவனுக்கு நற்பாக்கியம் வழங்கியுள்ளானோ அவனை நீ கண்டால் அவனுக்கு நீ மரியாதை செய், அவனை கண்ணியப்படுத்து. ஸூபிஸ ஞானத்தை எதிர்ப்பவனை நீ கண்டால் சிங்கத்தைக் கண்டு நீ ஓடுவது போல் ஓடு. அவனை வெறுத்து விடு. எந்த ஓர் அறிவாயினும் அது சில நேரம் தேவையில்லாமற் போகலாம். “தஸவ்வுப்” ஸூபிஸ ஞானம் தவிர. இந்த ஞானம் எந்த சந்தர்ப்பத்திலும், எவருக்கும் தேவையில்லாமற் போகாது.
ஈகாழுல் ஹிமம் பீ ஷர்ஹில் ஹிகம்,
பக்கம் 08, ஆசிரியர்: அஜீபதுல் ஹஸனீ
 
وَاعْلَمْ أَنَّ هَذَا الْعِلْمَ الَّذِيْ ذَكَرْنَا لَيْسَ هُوَ اللَّقْلَقَةَ بِاللِّسَانِ، وَإِنَّمَا هُوَ أَذْوَاقٌ وَوِجْدَانٌ، وَلَا يُؤْخَذُ مِنَ الْأَوْرَاقِ، وَإِنَّمَا يُؤْخَذُ مِنْ أَهْلِ الْأَذْوَاقِ، وَلَيْسَ يُنَالُ بِالْقِيْلِ وَالْقَالِ، وَإِنَّمَا يُؤْخَذُ مِنْ خِدْمَةِ الرِّجَالِ،
 
நாங்கள் மேலே சொன்ன ஸூபிஸ ஞானம் என்பது அர்த்தமில்லாமல் நாவால் வளவளவென்று கத்துவதல்ல. அந்த அறிவு அனுபவித்து உணரும் அறிவாகும். அது “பேப்பர்” தாள்களிலிருந்து பெறக் கூடிய அறிவல்ல. அதாவது நூல்கள் படித்துப் பெறக் கூடிய அறிவல்ல. இதற்கு மாறாக இந்த அறிவு அனுபவத்தில் பெற்றவர்களிடமிருந்து பெறக் கூடிய அறிவாகும். இன்னும் இந்த அறிவு அவரும், இவரும் சொல்லிப் பெறக் கூடிய அறிவுமல்ல. ஆயினுமிந்த அறிவு ஸூபிஸ மகான்களுக்கு தொண்டு செய்வதன் மூலமே பெறக் கூடிய அறிவாகும்.
 
ஈகாழுல் ஹிமம் பீ ஷர்ஹில் ஹிகம்,
பக்கம் 08, ஆசிரியர்: அஜீபதுல் ஹஸனீ
 
அன்புக்குரிய பொது மக்களே!
நாங்கள் பேசி வருகின்ற ஸூபிஸ ஞானம் – “வஹ்ததுல் வுஜூத்” தத்துவம் சாதாரண அறிவல்ல. மிகப் பெறுமதியான அறிவாகும். இந்த அறிவுக்கு நிகர் சொல்வதற்கு வேறெந்த அறிவுமில்லை.
 
சுமார் 75 வருடங்களுக்கு முன் நமது நாட்டிலும், நமதூரான காத்தான்குடியிலும் இந்த அறிவில் திறமையுள்ளவர்கள் பலர் வாழ்ந்துள்ளனர். அவர்களும் தம்மால் முடிந்த வரை ஸூபிஸ ஞானம் பேசியும், எழுதியும் வந்துள்ளனர். அவர்களுக்கு எதிரிகள் இருந்து தொல்லை கொடுத்தே வந்துள்ளனர். அவ்வாறு தொல்லை கொடுத்த வழிகெட்ட பரம்பரையில் வந்தவர்கள்தான் இன்று இந்த ஞானத்திற்கு எதிரானவர்களாக உள்ளனர்.
 
காத்தான்குடியில் நெருப்பு மஸ்தான் என்று ஒரு ஞான மகான் இருந்துள்ளார். இவர் நான் பிறப்பதற்கு முன் வாழ்ந்தவர். இவரும் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசியவரும், “மஜ்தூப்” நிலை அடைந்தவருமாவார். இவரிடம் “பைஅத்” செய்து கொண்ட குடும்பத்தவர்களில் சிலரை நான் சந்தித்து இவர்கள் மூலம் அவருடைய விபரங்களை அறிந்துள்ளேன். இவர் காய்ந்த இலைகளை ஒன்று கூட்டி அதில் “ஹூ” என்று ஊதினால் அவை எரிந்து சாம்பலாகிவிடும். இவர் போன்று இன்னும் பலர் இருந்துள்ளனர். அவர்களில் ஒருவர் “குடை மஸ்தான்” என்று அழைக்கப்பட்டு வந்துள்ளார். இவரை நான் நேரில் பார்த்துள்ளேன். இவர் காத்தான்குடியில் வாழ்ந்து மறைந்தவராவார்.
 
ஒரு சமயம் நான் எனது நண்பர்களுடன் ஒரு வீதியால் வந்து கொண்டிருந்த போது அவர் அவ்வழியில் நின்றிருந்தார். எனது நண்பர்கள் இவர்தான் குடை மஸ்தான், இவருக்கு யாராவது ஸலாம் சொன்னால் வணக்கம் என்று பதில் சொல்வார் என்றார்கள். நான் அவரை நேருங்கி ஸலாம் சொன்ன போது அவர் மௌனியாக நின்றாரேயன்றி எந்த ஒரு பதிலும் கூறவில்லை.
நான் சற்று நேரம் அவரின் முகம் பார்த்தவனாக நின்றிருந்தேன். அவர் எதிர்பாராத நிலையில் அறபியில் ஒரு பாடல் பாடினார். அது என்னைத் தூக்கியெறிந்தாற் போல் இருந்தது.
 
بِـذِكْرِ اللهِ تَـزْدَادُ الـذُّنُـوْبُ – وَتَـنْـمَـحِـقُ الْبَصَائِرُ وَالْقُلُوْبُ
فَتَرْكُ الذِّكْرِ أَفْضَلُ كُلِّ شَيْءٍ – وَشَمْسُ الذَّاتِ لَيْسَ لَهَا غُرُوْبُ
பொருள்:
அல்லாஹ்வை நினைப்பதால் பாவங்கள் அதிகமாகின்றன. அதோடு அகப்பார்வைகளும், மனப் பார்வைகளும் மங்கிப் போகின்றன.
ஆகையால் “திக்ர்” செய்யாமல் அதை விடுவதே சிறந்ததாகும். ஏனெனில் “தாத்” என்ற சூரியன் மறைவதில்லை.
 
ஓதவும், வாசிக்கவும் தெரியாத, அறபு மொழிக்கும், அவருக்கும் சம்பந்தமில்லாத சாதாரண ஒருவர் இவ்வாறு பாடியது எனக்கு பெரும் வியப்பாக இருந்தது.
 
இப்பாடலுக்கு நான் சரியான விளக்கம் கூறினால் ஸூபிஸ ஞானம் தெரியாதவர்கள் இது “ஷரீஆ”வுக்கு முரணான பாடல் என்று சொல்லிவிடுவார்கள். முல்லாக்களும் ஒரு “பத்வா” எழுதுவதற்கு தயாராகிவிடுவார்கள். குறித்த இந்த ஞானத்தில் ஆழமான அறிவுள்ளவர்கள் நேரில் என்னிடம் கேட்பார்களாயின் அவர்களுக்கு விளக்கம் கொடுப்பேன்.
 
காத்தான்குடியில் இன்னுமொரு மஸ்தான் இருந்தார். இவைரயும் நான் நேரில் கண்டுள்ளேன்.
 
ஒரு சமயம் – சுமார் 30 வருடங்களுக்கு முன் நான் தேனீர் குடிப்பதற்காக ஒரு ஹோட்டலுக்குச் சென்றேன். அங்கு ஒரு வயோதிபர் கதிரையில் அமர்ந்திருந்தார். அப்போது இவர் யாரென்று நான் அறிந்திருக்கவில்லை. அவர் “றவ்ஸர்” உடுத்திருந்தார். “கோர்ட்” போட்டிருந்தார். ஆடாமலும், அசையாமலும் அமைதியாக இருந்த அவர் எதிர்பாராமல் உரத்த குரலில் “நூறுல் இலாஹியைத் தேடுதடி, தேடுதடி” என்று கூறினார். அவ்வேளைதான் இவர் ஒரு மஸ்தானாக இருக்கலாம் என்று புரிந்து கொண்டு பாவா! உங்களுக்கு என்னைத் தெரியுமா என்று கேட்டேன். அதற்கவர், உன்னையும் தெரியும், உனது வாப்பாவையும் தெரியும், உனது அப்பாவையும் எனக்குத் தெரியும் என்றார். அதோடு அவர் எழுந்து சென்று விட்டார். இவர்தான் காத்தான்குடி – காங்கேயனோடையில் வாழ்ந்த “அத்தாங்கர் மஸ்தான்” ஆவார்.
 
இன்னும் இவர் போல் இன்னொரு மஸ்தானும் வாழ்ந்துள்ளார். இவர் “அபின்குடி மஸ்தான்” என்று அழைக்கப்பட்டு வந்தார்.
 
இன்னுமொருவர் இங்கு வாழ்ந்துள்ளார். இவர் “மான்குட்டி மஸ்தான்” என்று அழைக்கப்பட்டு வந்தார். இவர் இந்தியாவிலிருந்து இங்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இவ்வாறு மஸ்தான்மார்களில் பலர் காத்தான்குடி நகரில் வாழ்ந்துள்ளனர். இவர்கள் வாழ்ந்த கால கட்டங்களில் வஹ்ஹாபிஸம் இருக்கவில்லை. இன்னுமொருவர் இருந்தார். இவர் “பன ஓலை மஸ்தான்” என்று அழைக்கப்பட்டு வந்தார். இவர் பன ஓலையால் சாரன், தொப்பி, கை பேக், கைக் கோல், செருப்பு போன்றவற்றை தானே செய்து உடுத்துக் கொள்வார். இவரையும் நான் சந்தித்துள்ளேன்.
 
وأمّا حكم الشّارع فيه فقال الغزّالي إنّه فرض عين، إذ لا يخلوا أحدٌ مِن عيب أو مرض إلّا الأنبياء عليهم الصّلاة والسّلام، وقال الإمام الشّاذلي مَن لمْ يتغلغل فى علمنا هذا مات مُصِرًّا على الكبائر وهو لا يشعر، وحيثُ كان فرضَ عينٍ يجب السّفرُ إلى من يأخذه عنه، إذا عُرف بالتربية واشتهر الدّواءُ على يده وإن خالف والدَيْهِ، حَسْبَمَا نصَّ عليه غيرُ واحد كالبلالي والسنُوسي وغيرهما، قال الشّيخ السنوسي النّفسُ إذا غَلَبَتْ كالعدُوِّ إذا فَجأَ تجب مجاهدتُها والإستعانةُ عليها وإن خالف الوالدين كما فى العدُوِّ إذا بَرَزَ،
பொருள்:
“ஸூபிஸம் கற்பது தொடர்பாக மார்க்கச் சட்டம் என்ன? அது கடமையா? அல்லது “ஸுன்னத்”தா? அது தொடர்பாக இமாம் ஙஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகையில் “ஸூபிஸம்” கற்பது “பர்ழ் ஐன்” கட்டாயக் கடமை என்று கூறியுள்ளார்கள். இதற்கு அவர்கள் கூறும் காரணம் என்னவெனில் ஒரு மனிதன் உடல் நோய் இல்லாதவனாயிருந்தாலும் கூட உள நோய் இல்லாதவனாய் இருக்கமாட்டான். பொறாமை, வஞ்சகம், எரிச்சல் போன்ற உள நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவனாகவே இருப்பான். இதனால்தான் ஸூபிஸம் கற்பது கடமை என்று கூறியுள்ளார்கள். ஆயினும் நபீமார்கள் தவிர. இவர்கள் உள நோய்களை விட்டும் பாதுகாக்கப்பட்டவர்களாவர். இவர்கள் தவிர ஏனையோர் உள நோய்களால் பாதிக்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள். ஆகையால் இவர்கள் உள நோய்களிலிருந்து தப்புவதற்காக ஸூபிஸ ஞானம் கற்பது இவர்களுக்கு “பர்ழ்ஐன்” கட்டாயக் கடமை என்று கூறியுள்ளார்கள்.
 
இமாம் அபுல் ஹஸன் ஷாதுலீ நாயகம் பின்வருமாறு கூறியுள்ளார்கள். “எங்களின் இந்த அறிவில் அதாவது ஸூபிஸ ஞான அறிவில் எவர் முழுமை பெறவில்லையோ அவர் தான் அறியாமலேயே பெரும்பாவத்தில் நிலைத்திருந்தவராக மரணிப்பார்” என்று கூறியுள்ளார்கள்.
 
இமாம் ஙஸ்ஸாலீ அவர்களின் “பர்ழ் ஐன்” என்ற கருத்தின் படி ஸூபிஸம் கற்றுக் கொள்வதற்காக பயணிப்பதும் கடமையாகிவிடும். எங்காவது ஓர் ஊரில் ஸூபிஸ ஞானம் கற்ற, பிரசித்தி பெற்ற ஒருவர் உள்ளார் என்றறிந்தால் அவரிடம் குறித்த ஞானத்தைக் கற்றுக் கொள்வதற்காக அவர் இருக்கும் ஊருக்குப் பயணிப்பது கடமையாகிவிடும். இவ்விடயத்தில் பெற்றோருக்கு மாறு செய்தாலும் சரியே! அதாவது ஸூபிஸம் கற்ற, வெளியூரில் உள்ள ஒருவரிடம் அதைக் கற்றுக் கொள்வதற்காகப் பயணிக்கும் விடயத்தில் பெற்றோர் தடை செய்தால் இவ்விடயத்தில் அவர்களுக்கு மாறு செய்யலாம். குற்றமாகாது.
 
தொடரும்….
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments