Friday, May 3, 2024
Homeஎழுத்தாக்கங்கள்அல்லாஹ் தன்னைக் கொண்டு நிலை நிற்பவன். படைப்பு அல்லாஹ்வைக் கொண்டு நிலை நிற்பதாகும்.

அல்லாஹ் தன்னைக் கொண்டு நிலை நிற்பவன். படைப்பு அல்லாஹ்வைக் கொண்டு நிலை நிற்பதாகும்.

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
وَاللهُ قَائِمٌ بِنَفْسِهِ وَالْخَلْقُ قَائِمٌ بِاللهِ،
 
அல்லாஹ்வுக்கு மட்டுமுள்ள தன்மைகளில் قائمٌ بنفسِه அவன் தன்னைக் கொண்டு நிற்பவன் என்பதும் ஒன்று. இதற்கு எதிரான தன்மை قَائِمٌ بِغَيْرِهِ அவன் தன்னைக் கொண்டு நிற்காமல் இன்னொன்று கொண்டு நிற்பதாகும்.
 
அல்லாஹ் தன்னைக் கொண்டு நிற்பதானது அவனில் அவசியம் இருக்க வேண்டிய “வாஜிப்” ஆன “ஸிபத்” தன்மையாகும். இத்தன்மை சிருட்டியில் – படைப்பில் இருக்க முடியாது. யாராவது இத் தன்மை படைப்புக்கு உண்டு என்று நம்புவானாயின் இவ்விடயத்தில் அவன் அல்லாஹ்வுக்கு இணை வைத்தவனாகிவிடுவான். “முஷ்ரிக்” ஆகிவிடுவான்.

எனவே, ஒருவன் விசுவாசியாக – முஃமினாக இருப்பதாயின் அல்லாஹ் தன்னைக் கொண்டு நிற்பவனேயன்றி இன்னொன்றைக் கொண்டு நிற்பவனல்ல என்று உறுதியாக நம்பியிருத்தல் வேண்டும். இதேபோல் படைப்பு எதுவாயினும் அது தன்னைக் கொண்டு நிற்காமல் அல்லாஹ்வைக் கொண்டே நிற்கிறது என்று திட்டமாக நம்ப வேண்டும். இவ்வாறுதான் ஒரு “முஃமின்” விசுவாசியின் நம்பிக்கை இருக்க வேண்டும்.
 
இக்காலத்தைப் பொறுத்த வரை “முஸ்லிம்” என்ற பெயரில் உள்ள ஆண்களிலும், பெண்களிலும் நூற்றுக்கு நூறு வீதம் “அல்லாஹ்” ஒருவன் உள்ளான் என்று நம்பினவர்களே உள்ளனர்.
 
ஆயினும் ஒரு முஸ்லிம் அல்லாஹ்வின் விடயத்தில் அவனை எவ்வாறு நம்பியிருக்க வேண்டுமோ அவ்வாறு நம்பியவர்கள் நூற்றுக்கு ஐம்பது வீதமானோர் கூட இல்லை என்றே சொல்ல வேண்டும்.
 
இஸ்லாமிய “அகீதா” கொள்கை நூல்களில்
يَجِبُ عَلَى كُلِّ مُسْلِمٍ أَنْ يَعْرِفَ مَا يَجِبُ لِمَوْلَانَا عَزَّ وَجَلَّ وَمَا يَسْتَحِيْلُ عَلَيْهِ وَمَا يَجُوْزُ لَهُ،
என்ற வசனங்கள் கூறப்பட்டுள்ளன. அதாவது முஸ்லிமான ஆண், பெண் அனைவர் மீதும் அல்லாஹ்வுக்கு “வாஜிப்” கடமையான “ஸிபாத்” தன்மைகள் எத்தனை? அவை எவையென்றும், அவனில் அறவே இருக்க முடியாத “ஸிபாத்” தன்மைகள் எத்தனை என்றும், அவை எவையென்றும், அவனுக்கு “ஜாயிஸ்” ஆன “ஸிபாத்” எத்தனை என்றும், அவையெவை என்றும் அறிந்திருப்பது அவர்கள் மீது கடமை – வாஜிப் என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோல் நபீமார்கள் விடயத்தில் அவர்கள் பற்றி எவ்வாறு அறிந்திருக்க வேண்டும் என்ற விபரங்களும் கூறப்பட்டுள்ளன.
 
இவ் அடிப்படையில் இன்று வாழும் முஸ்லிம்களில் நூற்றுக்கு ஐம்பது வீதமானோர் கூட மேற்கண்ட விபரங்களை அறியாதவர்களாகவே உள்ளனர். இவர்கள் அனைவரும் “ஷரீஆ”வின் அடிப்படையில் தமது கடமையை விட்ட பாவிகளேயாவர்.
உலமாஉகள், அறபுக் கல்லூரி மாணவர்கள், மௌலவிய்யாக்கள், அறபுக் கல்லூரி மாணவிகள் தவிர ஏனையோர் மேற்கண்ட விபரங்களை அறியாதவர்களாயும், நம்பாதவர்களாயுமே இருப்பார்கள். இருக்கின்றார்கள்.
 
ஒவ்வொருவரும் தனது குடும்பத்தவர்களை ஆய்வு செய்து பார்த்தால் உண்மை தெளிவாகும். மேற்கண்ட இவர்கள் அனைவரும் முஸ்லிம் ஆன பெற்றோருக்குப் பிறந்தவர்கள் என்ற வகையில் முஸ்லிம்களாயிருந்தாலும் இவர்கள் நிரந்தர பாவிகளாகவே வாழ்ந்து பாவிகளாகவே மரணிக்க நேரிடும்.
நான் மேலே கூறிய விபரங்களை அறிந்திருப்பது ஆகக் குறைந்த பட்ச அளவேயாகும்.
ஆயினும் அல்லாஹ்வுக்கு “வாஜிப்” ஆன, அவனில் அவசியம் இருக்க வேண்டிய மேலே சொன்ன மூன்று வகையான “ஸிபாத்” தன்மைகளையும் சரியாக விளங்கி நம்பாதவர்களின் கதி அதே கதிதான்.
 
நான் தலைப்பில் எழுதியுள்ள “அல்லாஹ் தன்னைக் கொண்டு நிற்பவன், படைப்பு அல்லாஹ்வைக் கொண்டு நிற்கிறது” என்ற விபரத்தை பொது மக்கள் அறிந்துள்ளார்களா? என்று சிந்திப்பதை விட ஓதிப் படித்தவர்கள் அறிந்துள்ளார்களா? என்று சிந்திக்க வேண்டும்.
நான் கீழே எழுதப் போகின்ற விளக்கம் உலமாஉகள் அனைவரும் அறிந்திருப்பார்கள் என்று நான் நம்பவில்லை. சிலர் அறிந்திருக்கலாம். பலர் அறியாமலும் இருக்கலாம். என்னால் முடிந்தவரை மேற்கண்ட தலைப்பு தொடர்பாக எழுதுகிறேன். நான் எழுதப் போகின்ற விடயத்தை உன்னிப்பாகவும், கவனமாகவும் வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். வாசிப்பவர்களுக்கு சாராம்சம் தெளிவாக விளங்காமற் போனால் இது தொடர்பாக தெளிவு பெற்றவர்களிடம் கேட்டறிந்து கொள்ளுமாறும் ஆலோசனை கூறுகிறேன்.
 
அல்லாஹ் தன்னைக் கொண்டு நிற்பவன் என்றால் அவன் நிலை பெற்று நிற்பதற்கு இன்னொன்று தேவையில்லை என்பது இதன் சுருக்கமாகும். அவன் இன்னொன்றைக் கொண்டு நிற்கின்றான் என்றால் அந்த ஒன்று அவனுக்கு மூலமாகிவிடும். அல்லாஹ்வுக்கு இன்னொன்று மூலமாகவோ, கருவாகவோ இருக்க முடியாது.
அவன் நிலை பெற்றிருப்பதற்கு இன்னொன்று தேவையானால் அவன் இன்னொன்றின் பால் தேவையாகிறான் என்ற கருத்துக்கு இடமாகிவிடும். அவனோ இணை துணையற்றவன். தேவையற்றவன். தனித்தவன். இன்னொன்றின் பால் தேவையானவன் இறைவனாயிருப்பதற்கு தகுதியற்றவனாகிவிடுவான்.
 
படைப்பு என்பது அவன் போல் தன்னைக் கொண்டு நிற்பதல்ல. அது அவனைக் கொண்டே நிற்பதாகும். படைப்பு அவனைக் கொண்டு நிற்கிறதென்று சொல்லும் போது ஒரு வாழை மரம் தரையில் விழுவதற்கு சாய்ந்து கொண்டிருக்கிறதென்று வைத்துக் கொள்வோம். அது தரையில் விழுந்து விடாமல் ஒரு “முட்டு”க் கொடுத்து வைத்துள்ளோம் என்றும் வைத்துக் கொள்வோம். இப்போது வாழை மரம் முட்டைக் கொண்டு நிற்கிறதென்று நாம் சொல்வோம். அல்லது முட்டில் நிற்கிறதென்று சொல்வோம். எவ்வாறு சொன்னாலும் இரண்டு வஸ்துக்களின் பெயர்கள் சொல்கிறோம். அதேபோல் இரண்டு வஸ்துக்களும் உள்ளன. ஒன்று வாழை மரம். மற்றது முட்டு.
 
படைப்பு அல்லாஹ்வைக் கொண்டு நிற்கிறதென்பது முட்டைக் கொண்டு வாழை மரம் நிற்பது போன்றதல்ல என்பதை தெளிவாகவும், திட்டமாகவும் விளங்கிக் கொள்ள வேண்டும். இங்கு இரண்டு பொருட்கள் தேவைப்பட்டன. ஒன்று வாழை மரம். மற்றது முட்டு.
 
ஆனால் படைப்பு அல்லாஹ்வைக் கொண்டு நிற்கிறதென்பதற்கு இரண்டு வஸ்துக்கள், தேவையில்லை. பெயரில் மட்டும்தான் இரண்டு வஸ்துக்கள் சொல்லப்படுமேயன்றி எதார்த்தத்தில் இரண்டு வஸ்துக்கள் இருக்காது. இதை இவ்வாறு மட்டும் சொல்லி விளங்குவது கடினம். ஓர் உதாரணம் மூலம் சொன்னால் தெளிவாக விளங்க முடியுமென்று நம்புகிறேன்.
 
உதாரணமாக பாய் பன்னைக் கொண்டு நிற்கிறது, ஷேட் பஞ்சைக் கொண்டு நிற்கிறது. மோதிரம் தங்கத்தைக் கொண்டு நிற்கிறது என்ற உதாரணங்கள் போன்று.
இவ் உதாரணங்களில் “பாய் பன்” என்றும், “ஷேட் பஞ்சு” என்றும், “மோதிரம் தங்கம்” என்றும் இரண்டு வஸ்துக்களின் பெயர்கள் சொல்லப்பட்டாலும் கூட இரண்டு வஸ்துக்கள் இருக்காது. பெயரளவில்தான் இரண்டு வஸ்துக்கள் இருக்குமேயன்றி எதார்த்தத்தில் இரண்டு வஸ்துக்கள் இருக்காது. மேற்கண்ட மூன்று உதாரணங்களையும் நிதானமாக ஆய்வு செய்தால் இவ் உண்மை விளங்கும்.
 
பன்னைக் கொண்டு பாய் நிற்கிறது, பஞ்சைக் கொண்டு ஷேட் நிற்கிறது, தங்கத்தைக் கொண்டு மோதிரம் நிற்கிறது என்று சொல்லும் போது பெயரளவில்தான் இரண்டு பொருட்களின் பெயர்கள் சொல்லப்படுகின்றனவேயன்றி எதார்த்தத்தில் இருப்பது ஒரு பொருள் மட்டுமேயாகும்.
 
பாய் பன்னைக் கொண்டு நிற்கிறதென்றால் பன்தான் பாயாகத் தோற்றுகிறதேயன்றி பாய் என்று எதார்த்தத்தில் பன்னுக்கு வேறான ஒன்று இல்லவே இல்லை. இதுபோன்றுதான் ஷேட் பஞ்சைக் கொண்டு நிற்கிறதென்ற உதாரணமுமாகும். இவ் உதாரணத்தில் பஞ்சுதான் ஷேட்டாகத் தோற்றுகிறதேயன்றி ஷேட் என்று எதார்த்தத்தில் பஞ்சுக்கு வேறான ஒன்று இல்லவே இல்லை. இது போன்றுதான் மோதிரம் தங்கத்தைக் கொண்டு நிற்கிறதென்ற உதாரணமுமாகும். இவ் உதாரணத்தில் தங்கம்தான் மோதிரமாகத் தோற்றுகிறதேயன்றி மோதிரம் என்று எதார்த்தத்தில் தங்கத்திற்கு வேறான ஒன்று இல்லவே இல்லை.
 
மேற்கண்ட மூன்று உதாரணங்களில் முதலாம் உதாரணத்தில் பன்னுக்கு மட்டும்தான் “வுஜூத்” இருப்பு உள்ளதேயன்றி பாய்க்கு “வுஜூத்” இருப்பு இல்லை. இதேபோல் இரண்டாம் உதாரணத்தில் பஞ்சுக்கு மட்டும்தான் “வுஜூத்” இருப்பு உள்ளதேயன்றி ஷேட்டுக்கு “வுஜூத்” இருப்பு இல்லை. இதேபோல் மூன்றாம் உதாரணத்தில் தங்கத்திற்கு மட்டும்தான் “வுஜூத்” இருப்பு உள்ளதேயன்றி மோதிரத்திற்கு இருப்பு இல்லை.
 
முதலாம் உதாரணத்தில் பாயாகத் தோற்றியது பன்தானேயன்றி வேறொன்றல்ல. இதேபோல் இரண்டாம் உதாரணத்தில் ஷேட்டாகத் தோற்றியது பஞ்சேயன்றி வேறொன்றல்ல. இதேபோல் மூன்றாம் உதாரணத்தில் மோதிரமாகத் தோற்றியது தங்கமேயன்றி வேறொன்றல்ல.
 
எனவே, அல்லாஹ் தன்னைக் கொண்டு நிற்கிறானேயன்றி அவன் வேறொன்று கொண்டு நிற்கவில்லை. ஆனால் அவன் படைத்த எந்த ஒரு படைப்பாயினும் அது அவனைக் கொண்டேதான் நிற்கிறதேயன்றி தன்னைக் கொண்டு நிற்கவில்லை.
எவனொருவன் படைப்பு என்பது قَائِمٌ بِنَفْسِهِ தன்னைக் கொண்டு நிற்கிறதென்று நம்பினால் அவன் இவ்விடயத்தில் “முஷ்ரிக்” இணை வைத்தவனாகிவிடுவான்.
 
இவ் அடிப்படையில் அனைத்து படைப்புக்களும் அல்லாஹ்வின் “தாத்” அல்லது “வுஜூத்” உள்ளமையின் வெளிப்பாடுகளாயிருப்பதால் அவற்றில் ஒன்று கூட அவனுக்கு வேறான, தன்னைக் கொண்டு நிற்கும்படியான தனிப் பொருளாகாது. அவனின் உள்ளமைக்கு வேறான ஒன்றாக இருக்க முடியாது.
 
எவன் அல்லாஹ் வேறு, படைப்பு வேறு என்று நம்புகிறானோ அவன் படைப்பு அல்லாஹ்வைக் கொண்டு நிற்கவில்லை, அது அல்லாஹ் போல் தன்னைக் கொண்டே நிற்கிறதென்று நம்பினவனாகின்றான். இது “அகீதா”வின் அடிப்படைக்கு முரணானதாகும்.
 
ஆகையால் ஒருவன் விசுவாசியாக வேண்டுமாயின் அவன் எல்லாச் செயலும் அல்லாஹ்வின் செயலென்று நம்புவது போல் எல்லாமே அல்லாஹ்வின் வேறுபடாத வெளிப்பாடு என்றும் நம்ப வேண்டும்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments