Saturday, May 4, 2024
Homeஎழுத்தாக்கங்கள்மேகத்தால் வான் இருண்டால் நாய்கள் குரைப்பது வழக்கம்தான். இதனால் மேகத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.

மேகத்தால் வான் இருண்டால் நாய்கள் குரைப்பது வழக்கம்தான். இதனால் மேகத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
نَبْحُ الْكِلَابِ لَا يَضُرُّ السَّحَابَ،
 
இது அறபு மக்கள் பயன்படுத்துகின்ற ஒரு பழ மொழி.
 
மழை மேகங்களால் ஆகாயம் இருண்டால் பூமியில் வாழும் நாய்களுக்கு பயம் ஏற்படுமாம். எல்லா நாய்களுக்குமல்ல. ஒரு சில நாய்களுக்கு மட்டும். உடல் ஆரோக்கியமற்ற, உண்ண உணவின்றியும், குடிக்க நீரின்றியும், படுக்க இடமின்றியும் சாலைகளில் அலைந்து திரியும் உடல் மெலிந்த, தைரியமற்ற, கொஞ்சம் கூட அறிவற்ற மட நாய்கள் பயந்து போகுமாம். உலகம் அழியப் போகிறதோ என்ற பயத்தால் வானைப் பார்த்துக் குரைக்குமாம். இவ்வாறு நாய்கள் குரைப்பதால் மழை பொழிய இருண்ட மேகங்கள் பயந்து கலைந்து விடாமல் அது அதன் வேலையை செய்யுமாம். இவ் உண்மையை நாய்கள் அதிகமாக உள்ள இடங்களில் காண்கிறோம். ஆழ் கடலில் நீர் குடித்து மழை பொழிந்து நாட்டைச் செழிப்பாக்க வந்த மேகங்கள் நாய்களைக் கண்டு ஓடுவதில்லை. ஒதுங்குவதுமில்லை. மேகம் மழை பொழிந்து கொண்டே இருக்கும்.

இப்போது நாய்களும் குரைக்கின்றன. நரிகளும் ஊளையிடுகின்றன. காகங்களும் கரைகின்றன. காட்டு யானைகளும் பிளிர்கின்றன. நான் என் காதை அடைத்துக் கொண்டு என் காரியத்தில் கண்ணாயிருக்கிறேன்.
 
எவர் வந்தாலும், எவர் போனாலும் எவருக்கும் அஞ்சாமலும், எதற்கும் அஞ்சாமலும் என் பணியை தொடர்கிறேன்.
போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும். புகழுவோர் புகழட்டும். இகழுவோர் இகழட்டும்.
 
மழை பெய்தால் ஆமைகளுக்கும், தவளைகளுக்கும் கொண்டாட்டம்தான். அவை கத்திக் கொண்டே இருக்கட்டும். நான் எனது பணியை இன்னும் சற்று வேகமாக தொடர்ந்து கொண்டே இருப்பேன்.
 
“எதார்த்தவாதி பொது சன விரோதி” என்ற பழமொழி பொய்யாகாது. நான் எதார்த்தம் பேசுகிறேன். தத்துவம் பேசுகிறேன். ஸூபிஸம் பேசுகிறேன். வாழைப்பழத்தை உரித்து அதன் தோலை பகுத்தறிவற்ற ஆடுகளுக்கும், மாடுகளுக்கும் கொடுத்துவிட்டு பழத்தை மட்டும் பகுத்தறிவுள்ள பேசும் பிராணிகளுக்கு கொடுத்து வருகிறேன். ஞானக் கடலில் நான் இறங்கி அதனடியிலுள்ள முத்தை எடுத்து பகுத்தறிவுள்ள பிராணிகளுக்கு அன்பளிப்பாக கொடுத்து வருகிறேன். இது எனது கடமை. கடமையைச் செய்கிறேன். கடலில் பயணிக்கும் போது பல இன்னல்கள் வருவதுண்டு. ஒரு பக்கம் காற்றடிக்கும். மறுபக்கம் கடல் கொந்தளித்து அலையெழும்பும். இவற்றையெல்லாம் சகித்துக் கொண்டு கடலில் பயணித்தால்தான் முத்தை எடுத்து மக்களை வாழ வைக்க முடியும்.
 
ஸூபிஸ வழியிலும், “வஹ்ததுல் வுஜூத்” தத்துவ வழியிலும் பயணிப்பவர்களுக்கு அவற்றின் எதிரிகளான பொறாமை நோயால் பாதிக்கப்பட்டவர்களால் பல்வேறு துன்பங்களும், துயரங்களும், கஷ்டங்களும், நஷ்டங்களும் ஏற்படுவதுண்டு. இது உலக வழக்கமும், வரலாறு கூறும் உண்மையுமாகும்.
 
நபீமார் தமது எதிரிகளால் துன்புறுத்தப்பட்டதற்கு வரலாறு இல்லையா? எம் பெருமானார் கூட அவர்களின் எதிரிகளால் எதிர்க்கப்பட்டதற்கு வரலாறு இல்லையா? மத்ஹபுடைய நான்கு இமாம்களும் அவர்களின் விரோதிகளால் நசுக்கப்பட்டதற்கு வரலாறு இல்லையா? அவர்களுக்குப் பின் தோன்றிய குத்புமார், வலீமார், மற்றும் இமாம்கள் ஆகியோர் தமது எதிரிகளால் கொலை செய்யப்பட்டதற்கு வரலாறு இல்லையா? அவர்கள் நாடு கடத்தப்பட்டதற்கு வரலாறு இல்லையா? அவர்களுக்குப் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டதற்கு வரலாறு இல்லையா? அவர்களிற் பலர் வன விலங்குகளுக்கு இரையாக்கப்பட்டதற்கு வரலாறு இல்லையா? அவர்களிற் பலர் தலைகீழாய் கட்டித் தொங்கவிடப்பட்டு தோல் உரிக்கப்பட்டதற்கு வரலாறு இல்லையா? பொறுமையுள்ளவர்கள் பொறாமைக் காரர்களால் துன்புறுத்தப்பட்டதற்கு வரலாறு இல்லையா?
 
இடைக்குறிப்பு: எதிர்வரும் 21ம் திகதி வெள்ளிக்கிழமை اَلنَّاسُ أَعْدَاءُ مَا جَهِلُوْا “மனிதர்கள் தமக்குத் தெரியாதவற்றின் எதிரிகள்” என்ற தலைப்பில் எனது வெளியீடு ஒன்றையும், எம் பெருமானார் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தங்களை அல்லாஹ் என்று சொல்லியுள்ளார்கள் என்பது தொடர்பான எனது வெளியீடு ஒன்றையும் எதிர்பாருங்கள்.
 
وَجَعَلْنَا بَعْضَكُمْ لِبَعْضٍ فِتْنَةً أَتَصْبِرُونَ
உங்களிற் சிலரை சிலருக்கு சோதனையாக ஆக்கி வைத்தோம். நீங்கள் பொறுமையாக இருப்பீர்களா? (திருக்குர்ஆன் 20-25)
نقل الجلال السيوطي رحمه الله فى كتابه ‘ التحدّث بالنعمة ‘ وممّا أنعم الله به عليّ! أَنْ أَقَامَ لِيْ عَدُوًّا يُؤْذِيْنِيْ ويَمْزِقُ فى عِرْضِيْ ليكونَ لِي اُسْوَةٌ بالأنبياء والأولياء، قال رسول الله صلى الله عليه وسلّم: أشدّ النّاس بلاءا الأنبياءُ ثمّ العلماء ثمّ الصالحون، (رواه الحاكم فى مستدركه)
இமாம் ஜலாலுத்தீன் ஸுயூதீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “அத்தஹத்துது பின் நிஃமதி” எனும் நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
 
(அல்லாஹ் எனக்குச் செய்த அருட்களில் ஒன்று, என்னை வேதனை செய்யக் கூடிய ஒரு எதிரியை, என்னை அவமானப்படுத்தும் ஓர் எதிரியை எனக்கு ஆக்கி வைத்ததாகும். இதில் எனக்கு நபீமார், வலீமார்களில் ஒரு முன்மாதிரி உண்டு. சோதனை கடுமையானவர்கள் நபீமார், அதையடுத்து மத குருமார், அதையடுத்து நல்லடியார்கள்” என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளியுள்ளார்கள்)
அறிவிப்பு: ஹாகிம்,
நூல்: முஸ்தத்றக்.
 
أَوْحَى اللهُ إِلَى عِيْسَى عَلَيْهِ السَّلَامُ لَا يَفْقِدُ نَبِيٌّ حُرْمَتَهُ إِلَّا فِى بَلَدِهِ،
எந்த ஒரு நபீயாயினும் அவர் தனது கௌரவம் – மரியாதையை தனது ஊரிலேயே இழப்பார்.
قَالَ الجلالُ السُّيوطي رحمه الله واعلم أنّه ما كان كَبِيْرٌ فى عَصْرٍ قَطُّ إلّا كان له عَدُوٌّ مِنَ السَّفَلَةِ، إذِ الْأشرافُ لم تزل تُبْتَلَى بالأطْرَافِ
எந்த ஒரு காலமாயினும் அக்காலத்தில் ஒரு பெரிய மனிதன் இருந்தால் அவருக்கு கீழ்த்தரமானவர்களில் ஒருவன் எதிரியாகவே இருப்பான்.
 
ஒரு மனிதனுக்கு ஒரு எதிரியாவது இருப்பதே அவன் முன்னேற்றத்திற்கு நல்லது. ஏனெனில் அவனால் இவன் பொறுமை என்ற பெரும் “அமல்” வணக்கத்தை செய்யக் கூடிய வாய்ப்பு கிடைக்கும். பொறுமை என்பது வணக்கங்களில் சிறந்தது.
ஸூபிஸ ஞானம் அல்லாஹ்வைக் காட்டும் உயர் ஞானமாகும். இறையியல் போல் சிறந்த எந்த ஓர் அறிவியலும் கிடையாது.
 
இவ் அறிவை அறிந்தவரின் சிறப்பு பற்றிக் கூறிய ஓர் இறைஞானி பின்வருமாறு சொல்லியுள்ளார்.
‎قال الشّيخ الصقلي رحمه الله فى كتابه المسمّى بـ ‘أنوار القلوب فى العلم الموهوب ‘ (وَكُلُّ مَنْ صَدَّقَ بِهَذَا الْعِلْمِ فَهُوَ مِنَ الْخَاصَّةِ، وَكُلُّ مَنْ فَهِمَهُ فَهُوَ مِنْ خَاصَّةِ الْخَاصَّةِ، وَكُلُّ مَنْ عَبَّرَ عَنْهُ وَتَكَلَّمَ فِيْهِ فَهُوَ النَّجْمُ الَّذِيْ لَا يُدْرَكُ وَالْبَحْرُ الَّذِيْ لَا يُنْزَفُ)
அஷ்ஷெய்குஸ்ஸகலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “அன்வாறுல் குலூப் பில் இல்மில் மவ்ஹூப்” எனும் நூலில் (இந்த அறிவை உண்மையென்று நம்பினவன் மனிதர்களில் விஷேடமானவன், அதை விளங்கியவன் விஷேடமானவர்களில் விஷேடமானவன். அதை மக்கள் மத்தியில் பேசியவன் எட்டிக் கொள்ளப்படாத நட்சத்திரமும், இறைத்துக் கரை காண முடியாத கடலுமாவான்” என்று கூறியுள்ளார்கள்.
 
“இன்ஸான்” மனிதனை “இன்ஸான் காமில்” பூரண மனிதனாக்கும் மா மருந்துதான் “தஸவ்வுப்” ஸூபிஸம் எனும் இவ் அறிவாகும்.
இவ் அறிவு பெருந் தொகைப் பணம் செலவிட்டும், காடு கடல் கடந்தேனும் தேடிப் பெறக் கூடிய அறிவாகும். இவ் அறிவு பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில்
وَمَنْ يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ
“உங்களின் இரட்சகனின் வழிக்கு “ஹிக்மத்” கொண்டும், அழகிய உபதேசம் கொண்டும்மக்களை அழையுங்கள். எவருக்கு “ஹிக்மத்” கொடுக்கப்படுகிறதோ அவர் அதிக நன்மை வழங்கப்பட்டவராவார். இத்தத்துவத்தை “லுப்பு” உள்ளவர்கள் மட்டுமே விளங்கிக் கொள்வர்” (திருக்குர்ஆன் 269-02)
 
இவ்வசனத்தில் “ஹிக்மத்” என்று சொல்லப்பட்டது இறைஞானத்தையே குறிக்கும். “லுப்பு” என்றாலும் ஞானத்தையே குறிக்கும். எனினும் அது قَلْبُ الْقَلْبِ “உள்ளத்தின் உள்ளம்” என்று சொல்லப்படுகிறது.
قال ابن عجيبة الحسني رحمه الله:إن هذا العلم الّذي ذكرناه لَيْسَ هُوَ اللَّقْلَقَةَ بِاللِّسَانِ، وَإِنَّمَا هُوَ أَذْوَاقٌ وَوِجْدَانٌ، وَلَا يُؤْخَذُ مِنَ الْأَوْرَاقِ، وَإِنَّمَا يُؤْخَذُ مِنْ أَهْلِ الْأَذْوَاقِ، وَلَيْسَ يُنَالُ بِالْقِيْلِ وَالْقَالِ، وَإِنَّمَا يُؤْخَذُ مِنْ خِدْمَةِ الرِّجَالِ، وَصُحْبَةِ أَهْلِ الْكَمَالِ، وَاللهِ مَا أَفْلَحَ مَنْ أَفْلَحَ إِلَّا بِصُحْبَةِ مَنْ أَفْلَحَ، (إيقاظ الهمم فى شرح الحكم، ص 😎
இப்னு அஜீபதல் ஹஸனீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
(நாங்கள் பேசி வருகின்ற இந்த அறிவு நாவினால் வளவளக்கின்ற அறிவல்ல. அது அனுபவத்தின் மூலம் பெறப்படுகின்ற அறிவாகும். பேப்பர் – தாள்களில் இருந்து பெறப்படுகின்ற அறிவல்ல. அது அனுபவித்தவர்கள் மூலம் பெறப்படும் அறிவாகும். அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று சொல்லக் கூடிய அறிவுமல்ல. இறை நேசர்களுக்கு பணி செய்வதன் மூலமும், அவர்களை நேசிப்பதன் மூலமும் பெறப்படும் அறிவாகும். அல்லாஹ்வின் மீது சத்தியமாக வெற்றி பெற்றவர்கள் அனைவரும் வெற்றி பெற்றது வெற்றி பெற்றவர்களை நேசிப்பது கொண்டேயாகும்.
ஈகாழுல் ஹிமம், பக்கம்: 08.
 
அன்பிற்குரிய றப்பானீ மௌலவீமார்களே!
ஸூபிஸ சமூகத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளே!
எனது அன்பிற்குரிய முரீதீன்களே!
என்னை நேசிக்கின்றவர்களே!
ஸூபிஸ சமூகத்திலிருந்து சிலர் தமது சுயநலன்களுக்காகப் பிரிந்து செல்கிறார்கள். இதேபோல் பலர் தமது ஆன்மிக நலன் கருதி அதோடு இணைந்து கொள்கிறார்கள். இது பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. “நஸீப்” நற்பாக்கியம் உள்ளவர்கள் வருவார்கள். இல்லாதவர்கள் போவார்கள். போகின்றவர்கள் போகட்டும். வருகின்றவர்கள் வரட்டும்.
 
எவர் வந்தாலும், எவர் போனாலும் நான் கற்ற கல்வியை, நான் பெற்ற இறைஞானத்தை எனது இறுதி மூச்சு வரை பேசிக் கொண்டும், எழுதிக் கொண்டுமே இருப்பேன். நான் மட்டுமல்ல. என்னுடனுள்ள றப்பானீகளும் என் போன்றே இருப்பார்கள்.
 
அன்பிற்குரிய றப்பானீகளே!
நான் பேசும் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை எவரை நம்பியும் நான் பேசவில்லை. எந்த ஒரு மௌலவியை நம்பியும், எந்த ஒரு மௌலானாவை நம்பியும், எந்த ஒரு ஷெய்கை நம்பியும் நான் பேசவில்லை.
 
அல்லாஹ் தந்த திருக்குர்ஆனையும், நபீ பெருமானார் தந்த அருள் மொழிகளையும், இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய இறைஞான மகான்கள், மற்றும் ஸூபீ மகான்கள் ஆகியோரையும் மட்டும் நம்பியே பேசியுள்ளேன். பேசிக் கொண்டுமிருக்கிறேன்.
இந்த ஞானத்தை எந்த ஆலிம் எதிர்த்தாலும், எந்த உஸ்தாத் எதிர்த்தாலும், எந்த ஹஸ்றத் எதிர்த்தாலும், எந்த முப்தீகள் எதிர்த்தாலும், எந்த மௌலானா எதிர்த்தாலும் நான் அஞ்சவுமாட்டேன், அவர்களிடம் தஞ்சம் கேட்கவுமாட்டேன். அவர்களிடம் கெஞ்சவுமாட்டேன்.
 
அன்பிற்குரிய றப்பானீகளே!
நீங்கள் எந்த ஓர் ஆலிமையோ, உஸ்தாதையோ, ஹஸ்றத்தையோ எதிர்த்துப் பேசவும் வேண்டாம், எழுதவும் வேண்டாம் என்று உங்களை அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன். ஆயினும் நீங்கள் கற்ற கல்வியை, நீங்கள் சரிகண்ட தத்துவத்தை எவருக்கும் அஞ்சாமல் மக்கள் மத்தியில் தெளிவாக, ஆதாரங்களோடு பேசுங்கள். எழுதுங்கள். ரோஷமுள்ளவர்களை ஏசினால்தான் பயன் கிடைக்கும். ரோஷம் இல்லாதவர்களை ஏசி என்ன பயன்?
 
مَنْ كَسَرَ الْجِيْمَ جَنَى وَدَخَلَ النَّارَ، وَمَنْ فَتَحَ الْجِيْمَ فَازَ وَدَخَلَ دَارَ الْقَرَارِ،
போலிகளில் இருவர் பயணித்து விட்டனர். ஒருவர் இன்னும் சில நாட்களில் பயணிப்பார்.
 
பல்லவி
மீசையுள்ளாண் பிள்ளைச் சிங்கங்களென் கூட
வெளியினில் வாருங்கள் காணும்
அனு பல்லவி
நாசி நிரம்பவுமயிர்தா – னிரண்டுகால்
நடுவினு மொரு கூடை மயிர்தான்
ரோசங்கெடுவார்களென்கடைமயிர்தான் – குணங்
குடி கொண்டாலென்னுயிர்க் குயிர்தான். (மீசை)
 
சரணங்கள்
படிக்கும் படி நடக்கப் படிக்காலோபிகள் மோஷப்
பதமற்றுப் போனாலும் போகட்டும் – அவர்
முடிக்கு முடிதரித்து முடிய முடிய வாழ்ந்து
முடிந்து முடி போனாலும் போகட்டும் – இன்னுங்
குடிக்கக் கஞ்சியுமற்றுக் குண்டிக்கும் துணியற்றுக்
குருடராய்ப் போனாலும் போகட்டும்
அடித்தாலு மெலும்பெலாமொடித்தாலுமவர்க்கஞ்சேன்
அடித்தாலடித்துக் கொண்டு போகட்டும்
கெடுவார்களென் கடைமயிர்தான் – குணங்
குடி கொண்டாலென்னுயிர்க்குயிர்தான். (மீசை)
 
மடையரெல்லாங் கூடிக் கூத்தாடிக் கூத்தாடி
வையாளி போட்டாலும் போடட்டும் – இன்னும்
விடிய விடியப் பரத்தையர் மடிகளில்
விளையாடினும் விளையாடட்டும் – கள்ளுக்
குடியரெல்லாம் கள்ளைக் குடித்துக் குடித்தவர்கள்
குடிகெட்டுப் போனாலும் போகட்டும் – ஞானம்
படியாரெல்லாம் என்னைப் பழித்துப் பழித்துக் கொண்டு
பகைத்தால் பகைத்துக் கொண்டு சாகட்டும் – அந்தக்
கெடுவார்களென் கடை மயிர்தான் – குணங்
குடி கொண்டாலென்னுயிர்க்குயிர்தான். (மீசை)
 
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments