ஆக்கம் – அஷ்ஷெய்க், மௌலவீ, அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ அவர்கள்
தொடர் – 01
நபீ (ஸல்) அவர்கள் மனிதனா? “மலக்” எனப்படும் அமரரா? அல்லது ஜின்னா?
இப்படியான கேள்விகள் இன்று நேற்று எழுந்த கேள்விகளில்லை.
நபீ ஸல் அவர்களின் காலத்திலேயே இப்படியான கேள்விகள் அன்று வாழ்ந்த மக்களின் நெஞ்சங்களைத் துளைத்துக் கொண்டிருந்தன. இதனால்தான்….
قل إنــّمـا أنـا بشـر مـثـلـكم
“குல் இன்னமா அன பஷறுன் மித்லுகும்” 18 : 110
‘முஹம்மதே ! நான் உங்கள் போன்ற மனிதனென்று (அந்த மக்களிடம்) சொல்லுங்கள்’ என்ற திருமறை வசனம் இறங்கிற்று.
நபீ ஸல் அவர்களின் காலத்தில் வாழ்ந்த அந்த மக்களின் நெஞ்சங்களை மேற்கூறிய வினாக்கள் துளைக்வில்லையாயின், நான் உங்கள் போன்ற மனிதனென்று நபீ ஸல் அவர்கள் சொல்லியிருக்கத் தேவையில்லை. ஏனெனில் அவர்கள் – மனிதனென்பது அந்த மக்களனைவருக்கும் தெரிந்த விஷயமாகத்தானிருந்தது.
நபீ ஸல் அவர்களின் அபார அற்புதங்களையும், அகமியங்களையும் கண்ட அந்த மக்களுக்கு மேற்கண்டவாறெல்லாம் அவர்களைப்பற்றி எண்ணத்தோன்றிற்று.
அந்த மக்களின் நெஞ்சங்களில் நிழலாடிய வினாக்களையறிந்த அல்லாஹ் மேற்கண்டவாறு சொல்லுமாறு நபீ ஸல் அவர்களுக்குத் திருக்குர்ஆன் மூலம் கட்டளையிட்டான்.
நபீ ஸல் அவர்கள் நம் போன்ற இரண்டு கைகளையும், இரண்டு கால்களையும், இரண்டு காதுகளையும் மற்றும் மனித உறுப்புக்கள்போல் ஏனைய உறுப்புக்களையும் உடையவராவார்கள்.
இந்த அம்சங்களில் மட்டும்தான் அவர்கள் நம் போன்ற மனிதன். விஷேசமாக நம்மிலில்லாத அல்லது நமது உறுப்புக்ளுக்கு மாறான எந்த ஒரு உறுப்பும் அவர்களின் திருவுடலில் இருக்கவில்லை.
சாதாரண மனிதனுக்குரிய உடலமைப்பிலேயே நபியவர்களின் திருவுடலும் அமைந்திருந்தது.
அவர்கள் நம்மைப்போல காலால் நடப்பார்கள். வலக்கரத்தினால் சாப்பிடுவார்கள். கண்களினால் பார்ப்பார்கள். காதால் கேட்பார்கள். நம்மைப்போல்தான் குளிப்பார்கள்.
உலகத்தோடு ஒட்டிய ஒரு சில நடவடிக்கைகள் தவிர்ந்த ஏனைய சகல நடவடிக்கைகளிலும் நம் போன்றுதான் நபீ ஸல் அவர்கள் நடந்து கொள்வார்கள்.
மேலே சொல்லப்பட்ட உடலமைப்பு அம்சத்தில் அவர்கள் நம் போன்ற ஒரு மனிதன்தான். நமக்கு மாற்றமாக அவர்கள் தலையால் நடப்பதுமில்லை, காலால் சாப்பிடுபவர்களுமில்லை, காதால் பார்ப்பவர்களுமில்லை, கண்ணால் கேட்பவர்களுமில்லை.
எனினுமவர்கள் அந்தஸ்த்திலும், எதார்த்தத்திலும் நமக்கு முற்றிலும் முரணானவர்கள். உலகில் பிறந்த, இதன் பிறகு பிறக்கப்போகின்ற எந்த மனிதனும் அவ்விரண்டிலும் அவர்களை நெருங்கவுமில்லை, நெருங்கவும் முடியாது.
அந்தஸ்த்திலும் எதார்த்த அகமியத்திலும் அணுப்பிரமாணமேனும் அவர்கள் நம்மைப் போன்றவர்களில்லை.
நான் மேலே எழுதிக் காட்டிய “குல் இன்னமா அனபஷறுன் மித்லுகும்” முஹம்மதே ! நான் உங்களைப் போன்ற மனிதனென்று சொல்லுங்களென்ற திருக்குர்ஆன் வசனத்தை வைத்துக் கொண்டு முஹம்மத் ஸல் அவர்கள் நம்போன்ற சாதாரண மனிதனென்று வழிதவறியோரின் தந்தை நஜ்தி சாஹிபும், அவரின் முகவர்களும் நாடெங்கும் பறைசாற்றிவருகிறார்கள்.
இத்திருவசனத்தின் சரியான விளக்கம் தெரியாத காரணத்தால் இதைத் தமது பிழையான வாதத்துக்குச் சாதகமான ஆதாரமென்றெண்ணிக் கொள்கிறார்கள். இத்திருவசனத்தைக் கொண்டு நபீ ஸல் அவர்களைச் சாதாரண மனிதன்தானென்று நிரூபித்துவிடத் துடியாய்த் துடிக்கிறார்கள். அவர்களின் அறியாமை எல்லை கடந்து, கட்டுக்கடங்காமல் போய் விட்டபடியால் கண்டதையெல்லாம் “ஷிர்க்” “பித்அத்” என்று கூறுவதற்கும், தமது அறியாமையினால் தமக்குப்பாதகமான ஆதாரங்களைத் தமக்குச் சாதகமானவையென்றெண்ணிக் கொண்டு சண்டைக்கு வருவதற்கும் துணிந்து விட்டார்கள்.
அவர்கள் மேலே எழுதிக்காட்டிய திருக்குர்ஆன் வசனத்தின் விளக்கத்தைச் சரியாக புரிந்து கொள்ளாமல் இருப்பதுடன் அறபு மொழிப்பாணியையும் திருக்குர்ஆனின் மொழி நடையையும் தெரியாதவர்களாகவே உள்ளார்கள்.
நபீ(ஸல்) அவர்கள் நம்போன்று சாதரண பிரஜையென்ற நம்பிக்கையும், முடிவும் அவர்களிடம் இருப்பதினால்தான் நபீ(ஸல்) அவர்களுக்கு கொடுக்க வேண்டிய கண்ணியமும், மரியாதையும் கொடுக்காமல் அவர்களைக் கீழ்த்தரமாகக் கருதிவருகிறார்கள்.
இதனால்தான் நஜ்தி சாஹிபுடைய சிஷ்யர்களிலொருவன் “அஸாய ஹாதிஹீ கைறுன் மின் முஹம்மதின்” எனது கையிலிருக்கும் இத்தடி முஹம்மதை விடச் சிறந்ததென்று கூறினான்.
இச்செய்தியை “இமாம் ஸெய்னீ தஹ்லான் (றழி)” அவர்கள் தங்களின் “அத்துறறுஸ்ஸனிய்யா” என்னும் நூலில் எழுதியுள்ளார்கள்.
இமாம் ஸெய்னீ தஹ்லான் றழி
தோற்றம் : 1817
மறைவு : 1887
வயது : 70
அவர்கள் மக்கா நகரின் “முப்தீ” மார்க்கத் தீர்ப்பு வழங்கும் மாமேதையாக திகழ்ந்தார்கள். அங்கேயே மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தார்கள். இறுதியில் திருமதீனா நகர் வந்து இறையடி சேர்ந்தார்கள்.
அல் புதூஹாதுல் இஸ்லாமிய்யா, அல் ஜதாவில் மர்ழிய்யா, அஸ்ஸீறதுன் நபவிய்யா, அத்துறறுஸ்ஸனிய்யா முதலான நூல்கள் இவர்களின் பிரசித்தி பெற்ற நூல்களாகும்.
வழி தவறியோரின் தலைவர் நஜ்தி சாஹிபு நபீஸல் அவர்களைத் தரக்குறைவாகக் கண்டதினால்தான் அவர்களை “றஸுல்” என்று சொல்வதற்குப் பதிலாக “தாரிஷ்” என்று சொல்லிவந்தார்.
“தாரிஷ்” என்றால் ஒரு கூட்டத்திடமிருந்து இன்னொரு கூட்டத்திற்குச் செய்தி கொண்டு செல்லும் ஒருவனுக்கு சவூதி அரேபியாவின் கிழக்குப் பகுதியில் வாழ்பவர்கள் சொல்வார்கள். வழிதவறிய நஜ்தி ஸாஹிபு சவூதியின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“றஸூல்” என்ற சொல் தருகின்ற “தூது” என்ற அர்த்தம். “தாரிஷ்” என்ற சொல்லுக்கு இருந்தாலுங்கூட இச்சொல் அவர்களின் பேச்சு வழக்கில் கீழ்த் தரமான விஷயங்களுக்குத் தூது கொண்டு செல்லும் கீழ்த்தரமான ஒருவனுக்கு வழங்கப்பட்டு வந்தது.
திருக்குர்ஆனில் நபீ(ஸல்) அவர்கள் “றஸூல்” என்ற கௌரவமான சொல் கொண்டுதான் அழைக்கப்பட்டார்களேயன்றி, வழிதவறியவர் கூறுவதுபோல் “தாரிஷ்” என்ற கீழ்த்தரமான சொல் கொண்டு அழைக்கப்பட்டதற்கு எந்த ஓர் இடத்திலும் ஆதாரமில்லை.
இவர் நபீஸல் அவர்களைச் சாதாரண மனிதனென்று கணித்திருந்ததினால்தான், “றஸூல்” என்று சொல்வதற்கு பதிலாக “தாரிஷ்” எனக் கூறினார்.
நான் உங்களைப் போன்ற மனிதனென்று நபீ(ஸல்) அவர்கள் கூறியது தங்களின் பணிவை வெளிப்படுத்திக் காட்டுவதற்கேயன்றி – அந்தஸ்த்திலும், எதார்த்த அகமியத்திலும் உங்களைப் போன்றவனென்ற கருத்தைக் காட்டுவதற்காக அல்ல.
பணிவும், தாழ்மையுமுள்ள ஒரு நாட்டின் ஜனாதிபதி அந்நாட்டு மக்களுடன் அன்னியோன்னியமாக உரையாடும் பொழுது தனது பணிவை வெளிப்படுத்தி நான் உங்களைப் போன்ற மனிதனென்று சொன்னால் அவ்வாறு சொன்னதற்கான அடிப்படைக் காரணத்தை உணராமல் மக்கள் அவரைப் பார்த்து என்ன மச்சான்? என்று கேட்டுவிட முடியுமா? அவரின் பெயர் சொல்லி அழைக்க முடியுமா? அல்லது அவரின் தோளில் கைபோட்டுக் கொண்டு தெருவெல்லாம் சுற்றத்தான் முடியுமா?
பணிவும், தாழ்மையுமுள்ள ஓர் அறிஞன் “அவாம்” படிக்காதவர்கள் முன்னிலையில் நான் உங்களைப் போன்ற மனிதனெனக்கூறித் தனது பணிவை வெளிப்படுத்தினால் அவர் அவ்வாறு சொன்னதற்கான அடிப்படை நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் அவர்கள் தங்களுக்கிடையில் உறவாடுவதைப்போல் அவருடன் உறவாட முடியுமா? அவ்வாறு உறவாடுதல் ஒழுக்கமாக ஆகுமா?
எனவே ஜனாதிபதியும், அறிஞனும் தமது பணிவை வெளிப்படுத்துவதற்காக அவ்வாறு சொன்னதுபோல் நபீ (ஸல்) அவர்களும் தமது பணிவை வெளிப்படுத்துவதற்காகத்தான், அவ்வாறு சொன்னார்கள் என்று கொள்ளவேண்டுமே தவிர அவர்களையும் நம்போன்ற மனிதனென்றெண்ணி மச்சான் என்று கூப்பிட்டுவிடவோ, எங்கடா போகிறாய் என்று கேட்கவோ முடியாது.
நபீ ஸல் அவர்களின் விடயத்தில் அவர்கள் தரக்குறைவாக நடந்து கொள்ளக் காரணம் அவர்கள் நபீ ஸல் அவர்களை நம்போன்ற சாதாரண மனிதனென்று எண்ணிக் கொண்டதேயாகும்.
இரு நிலையுள்ள றஸூல்
நபீ ஸல் அவர்களுக்கு இரண்டு நிலைகள் உள்ளன.
ஒன்று – தங்களை உயர்த்திப் பேசும் நிலை.
இரண்டு – தங்களை தாழ்த்திப் பேசும் நிலை, பணிவை வெளிப்படுத்தும் நிலை.
இவ்விரு நிலைகளில் தங்களையுயர்த்திப் பேசும் நிலையை “ஜலால்” என்றும், தாழ்த்திப்பேசிப் பணிவைக் காட்டும் நிலையை “ஜமால்” என்றும் கொள்ளலாம்.
இவ்விரு நிலைகளும் அல்லாஹ்வின் நிலைகள்தான். அல்லாஹ்வின் திருநாமங்களை ஞானிகள் இரு பிரிவாகப் பிரித்துள்ளனர். அவ்விரண்டில் ஒன்று “அல் அஸ்மாஉல் ஜலாலிய்யா” என்றும், மற்றது “அல் அஸ்மாஉல் ஜமாலிய்யா” என்றும் சொல்லப்படும்.
“அல் அஸ்மாஉல் ஜலாலிய்யா” என்றால் அதிகாரம், அடக்குமுறை, பழிவாங்கல், தண்டித்தல், வேதனை செய்தல் போன்ற அர்த்தங்களைத் தரக்கூடிய திருநாமங்களாகும்.
“அல் கஹ்ஹார்”, “அல் ஜப்பார்”, “அல் முன்தகிம்”, “அல் முதகப்பிர்”, “அல் காபிள்”, “அல் முதில்லு”, “அல் ஜலீல்”, “அல் கவிய்யு”, “அல் மதீன்” போன்ற வன்மைமிகு திருநாமங்கள் அல் அஸ்மாஉல் ஜலாலிய்யாவில் அடங்கும்.
இத்திருநாமங்களின் செயற்பாடுகள் கடுமையானவையாகவும், பயங்கரமானவையாகவும், வேதனைக்குரியனவையாகவும் சோதனைக்குரிய-னவையாகவும் இருக்கும்.
அல்லாஹ் திருக்குர்ஆனில் தன்னைப் பற்றிப்பேசும் பொழுது “அன” என்று ஒருமையில் பேசியது “ஜலாலியத்”தான திருநாமங்களின் பிரதிபலிப்பும், “நஹ்னு” என்று பன்மையில் பேசியது “ஜமாலிய்யத்”தான திருநாமங்களின் பிரதிபலிப்புமாகும்.
“அல் அஸ்மாஉல் ஜமாலிய்யா” என்றால் அன்பு, இரக்கம், அருள், ஈடேற்றம், நம்பிக்கை, மன்னித்தல், சிறப்புபோன்ற அர்த்தங்களைத் தரக்கூடிய திருநாமங்களாகும்.
“அர்றஹ்மான்”, “அர்றஹீம்”, “அல்முன்இம்”, “அல்கப்பார்”, அர்றஊப்”, “அல்பத்தாஹ்”, “அல்அபுவ்வு” போன்ற மென்மையும், கருணையுமுள்ள திருநாமங்கள் “அல் அஸ்மாஉல் ஜமாலிய்யா” எனும் பிரிவில் அடங்கும்.
இத்திருநாமங்களின் செயற்பாடுகள் அன்பானவையாகவும், மகிழ்ச்சிகரமானவையாகவும் , திருப்திகரமானவையாகவும் இருக்கும்.
ஒருவனின் வாழ்வில் ஏற்படுகின்ற பயங்கரம், வேதனை, சோதனை போன்றவை “ஜலாலிய்யத்”தான திருநாமங்களின் செயற்பாடுகளும், அன்பு, இரக்கம், மகிழ்ச்சி போன்றவை “ஜமாலிய்யத்”தான திருநாமங்களின் செயற்பாடுகளுமாகும்.
அல்லாஹ்வின் இவ்விருவகைத் திருநாமங்களின் செயற்பாடுகளும் அவனுடைய சிருஷ்டிகள் மூலமாகவே நிகழும்.
அப்துல்லாஹ் என்பவன் அன்பு காட்டும் பொழுது அவனில் அல்லாஹ்வினது “ஜமாலிய்யத்”தான திருநாமங்களில் “றஹ்மான்”, “றஹீம்” போன்ற திருநாமங்கள் செயற்படுகின்றன.
அவன் கோபப்படும் பொழுது, அவனில் அல்லாஹ்வினது “ஜலாலிய்யத்”தான திருநாமங்களில் “கஹ்ஹார்”, “ஜப்பார்” போன்றவை செயற்படுகின்றன.
நபீ ஸல் அவர்கள் “நான் உங்களைப் போன்ற மனிதன்” என்று சொன்னது அவர்களில் அல்லாஹ்வின் “ஜமாலிய்யத்”தான திருநாமம் செயற்பட்டதினாலாகும்.
நபீ ஸல் அவர்கள் இன்னொரு சமயம்لا تفضـّـلونى على يونس بن متـى “லாதுபள்ளிலூனீ அலா யூனுஸப்னி மத்தா” நபீ யூனுஸ் பின் மத்தாவைவிட என்னைச் சிறப்பாக்கிவிடாதீர்கள் என்று சொல்லியுள்ளார்கள்.
நபீ ஸல் அவர்கள் நபீ யூனுஸ் பின் மத்தாவைவிடவும், நபீ யூசுப் பின் யஃகூபைவிடவும் சிறந்தவர்களென்பது இஸ்லாம் கூறியுள்ள முடிவாகவும், இஸ்லாமியக் கொள்கையாகவுமிருக்க நபீ ஸல் அவர்கள் அவ்வாறு கூறியது தங்களின் பணிவை வெளிப்படுத்துவதற்காகவேயன்றித் தங்களின் தாற்பரியத்தை வெளிப்படுத்துவதற்காக அல்ல. அவர்களின் இப்பேச்சுக் கூட அல்லாஹ்வின் “ஜமாலிய்யத்”தான திருநாம வெளிப்பாட்டைச் சேர்ந்ததேயாகும்.
இந்த விபரங்களைத் தெரிந்து கொள்ளாமல் நான் உங்களைப் போன்ற மனிதனென்று நபீ ஸல் அவர்கள் சொன்னதை வைத்துக் கொண்டு அவர்களைக் கீழ்த்தரமாகவும், தரக்குறைவாகவும், சாதாரண மனிதனென்றும் எழுதியும், பேசியும் வருகின்றவர்கள் அல்லாஹ்வின் தண்டனையைப் பயந்து கொள்ளுதல் வேண்டும்.
நபீ ஸல் அவர்கள் பணிவை வெளிப்படுத்துவதற்காக “நான் உங்களைப் போன்ற மனிதன்” என்று சொன்னதை வைத்துக் கொண்டு நபீ ஸல் அவர்கள் தம்மைப் போன்ற மனிதனென்று சொல்வோர் கீழே தரப்படுகின்ற நபீ மொழிகளை ஊன்றிக் கவனிக்க வேண்டும்.
“நான் உங்களைப் போன்றவனல்ல, எனக்கு உணவு தருபவன் ஒருவன் இருக்கிறான். அவன் எனக்கு உணவு தருகிறான். எனக்குக் குடிக்கத் தருபவன் ஒருவன் இருக்கிறான். அவன் எனக்குக் குடிக்கத் தருகிறான்.” என நபீ ஸல் அவர்கள் அருளினார்கள்.
ஆதாரம் : புஹாரி
அறிவிப்பு : அனஸ் (றழி)