Sunday, May 5, 2024
Homeஎழுத்தாக்கங்கள்பக்தாத் நகர் ராஜா “அல்பாஸுல் அஷ்ஹப்” குத்பு நாயகம்.

பக்தாத் நகர் ராஜா “அல்பாஸுல் அஷ்ஹப்” குத்பு நாயகம்.

தொகுப்பு: அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
அண்ட கோடிகளையும் பந்தெனக் கைக்குள் அடக்கிய குத்பே! ராஜாளியே!
 
பாதுஷா முஹ்யித்தீனே!
 
ஒரு மாத காலம் உங்கள் காலடியில் நான் கிடந்து காலையும், மாலையும், இரவும், பகலும் இடையறாது கேட்டதை தந்துவிட்டீர்கள் நாயகமே! என் தாயகமே!
 
நான் வாழும் இலங்கை நாட்டு முஸ்லிம்கள் சுமார் முப்பதாண்டுகளுக்கு முன் அவர்களுக்கு ஒரு துன்பம் நேர்ந்தால் “யா முஹ்யித்தீன்” என்று அவர்கள் உங்களைத்தான் அழைத்து வந்தார்கள். யா அல்லாஹ்! என்று அவர்கள் அழைத்ததில்லை. அவர்களின் அழைப்பை எங்கிருந்தாலும் செவியேற்று உதவினீர்கள் யா குத்பே!

يَا فَقِيْرْ مُحْيِ الدِّيْنْ!
பகீர் முஹ்யித்தீனே!
فقير
– பகீர் என்ற சொல்லுக்கு பாடலில் விளக்கம் சொன்ன பாவலரே! என் காவலரே! என் காதலரே!
 
سُئل الشّيخُ محي الدين عن معنى اسم الفقير فقال: ف – ق -ي -ر ثمّ أنشد:
فَاءُ الْفَقِيْرِ فَنَائُهُ فِى ذَاتِهِ – وَفَرَاغُهُ مِنْ نَعْتِهِ وَصِفَاتِهِ
وَالْقَافُ قُوَّةُ قَلْبِهِ بِحَبِيْبِهِ – وَقِيَامُهُ للهِ فِى مَرْضَاتِهِ
وَالْيَاءُ يَرْجُوْ رَبَّهُ وَيَخَافُهُ – وَيَقُوْمُ بِالتَّقْوَى بِحَقِّ تُقَاتِهِ
وَالرَّاءُ رِقَّةُ قَلْبِهِ وَصَفَائُهُ – وَرُجُوْعُهُ للهِ عَنْ شَهَوَاتِهِ
فقير
– பகீர் என்ற பெயரின் பொருள் என்ன என்று அவர்களிடம் கேட்கப்பட்ட போது, அதில் நான்கு எழுத்துக்கள் உள்ளன. அவை பேF, காப்K, யே, றே என்று கூறிய குத்பு நாயகம் மேற்கண்ட பாடலில் நான்கு எழுத்துக்களில் ஒவ்வொன்றும் எதைக்குறிக்கின்றது என்று பாடலில் கூறினார்கள்.
 
“பகீர்” என்ற சொல்லில் முதலெழுத்தான “பேF” என்பது فناء – “பனா” என்பதைக் குறிக்கிறது என்று கூறினார்கள். அதாவது “பகீர்” என்பவர் அல்லாஹ்வில் “பனா” ஆனவராகவே இருப்பார். “பனா”வில் மூன்று வகையுண்டு. ஒன்று – فناء فى الذّات அல்லாஹ்வின் “தாத்” உள்ளமையில் “பனா” ஆவதாகும். “பனா” என்றால் அழிதல். அதாவது அடியான் அல்லாஹ்வின் உள்ளமையில் அழிந்து தானில்லாமற் போதல். தானில்லை என்று உணர்தல். இரண்டு – فناء فى الأفعال அவனின் செயல்களில் அடியான் அழிந்து போதல். அதாவது அடியான் தனக்கு எச் செயலும் இல்லை என்று உணர்தல். மூன்று – فناء فى الأسماء – அல்லாஹ்வின் திருப் பெயர்களில் அடியான் அழிந்து போதல். அதாவது தனது பெயரும், ஏனைய படைப்புக்களின் பெயர்களும் அவனின் பெயர்கள் என்று உணர்தல்.
 
இம் மூன்று வகையிலும் “பகீர்” என்பவர் அல்லாஹ்வின் “தாத்” உள்ளமையில் அழிந்து தானில்லையென்றும், அவன் தவிர வேறொன்றும் இல்லையென்றும் உணர்ந்தவனாயிருப்பார். அதுமட்டுமன்றி அந்த “பகீர்” என்பவன் தனது தன்மைகளை விட்டும் விடுபட்டவனாகவும் இருப்பான்.
 
“பகீர்” என்ற சொல்லில் உள்ள இரண்டாவது எழுத்து “காப்” ஆகும். இந்த “காப்” “பகீர்” என்பவனின் கல்பு – உள்ளம் அல்லாஹ் என்ற அவனின் காதலனால் மிக சக்தியுள்ளதாகவும், அந்தக் காதலனின் திருப் பொருத்தத்தைக் கொண்டு நிலை பெற்றதாகவும் இருக்கும் என்பதை குறிக்கின்றது.
 
“பகீர்” என்ற சொல்லின் மூன்றாம் எழுத்து “யே” ஆகும். இது அந்த பகீர் என்பவன் தனது காதலனை ஆதரவு வைக்கிறான் என்பதையும், அவனுக்கு அஞ்சுகிறான் என்பதையும், உரிய முறையில் உண்மையாக அவனை பயந்து நடக்கிறான் என்பதையும் குறிக்கும்.
 
“பகீர்” என்ற சொல்லில் உள்ள நாலாம் எழுத்து “றே” ஆகும். இது அந்த “பகீர்” என்பவனின் உள்ளம் மென்மையானதாயும், தெளிவானதாயும் இருப்பதைக் குறிப்பதுடன் அவன் தனது மனவெழுச்சியிலிருந்து விடுபட்டவன் என்பதையும் குறிக்கும்.
 
எனவே, மேற்கண்ட சிறப்பம்சங்களைக் கொண்டவனாக அவன் இருப்பதினால்தான் அவனுக்கு “பகீர்” என்று பெயர் வரலாயிற்று. மேற்கண்ட இத்தன்மைகள் உள்ளவன்தான் எதார்த்தத்தில் “பகீர்” என்ற பட்டம் சூட்டப்படுவதற்கு தகுதி உள்ளவனாவான். இவன்தான் “பகீர்” என்ற பட்டத்திற்கு தகுதியும், அருகதையும் உள்ளவனாகிறான். தவிர “தகறா” அடித்துக் கொண்டும், பெரிய சட்டையும், பெரிய தலைப்பாகையும் அணிந்து யாசகம் செய்து வருகின்றவன் அல்ல.
 
குத்பு நாயகம் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்கள் பாடலில் கூறப்பட்ட தன்மைகளும் தராதரமும் உள்ளவர்களாயிருந்ததினாலேயே “பகீர் முஹ்யித்தீன்” என்று அழைக்கப்பட்டார்கள்.
 
குத்பு நாயகம் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் ஆன்மிகப் படித்தரத்திற்கேற்றவாறு பொருத்தமான பல பெயர்களால் அழைக்கப்பட்டார்கள்.
 
“குத்பு” நாயகம் அவர்களிடம் நீங்கள் “குத்பு” என்று உங்களுக்கு எப்போது தெரியுமென்று கேட்கப்பட்ட போது பின்வருமாறு சொன்னார்கள்.
 
كنت وأنا ابن عشـر سنين فى بلدنا، أخرج مِن دارنا وأذهبُ إلى المَكتَب، فأرى الملائكةَ عليهم السلام تمشـي حَولِي، فإذا وصلتُ إلى المكتب سمعت الملائكة يقولون اِفْسَحُوا لوليّ الله حتّى يجلس، فمرَّ بنا رجلٌ يوما ما عرفتُه يومئذٍ، فسمع الملائكة يقولون ذلك، فقالأحدهم ما هذا الصبيّ، فقال له أحدهم هذا من بيت الأشراف، قال سيكون لهذا شأنٌ عظيم، هذا يعطي فلا يمنع، ويمكّن فلا يحجُب، ويقرِّب فلا يَمْكُرُ به، ثمّ عرفت ذلك الرجل بعد أربعين سنة، فإذا هو من أبدال، ذلك الوقت، (قلائد الجواهر، ص 11)
நான் எனதூரில் பத்து வயதுச் சிறுவனாயிருந்த போது எனது வீட்டிலிருந்து பாடசாலைக்குச் செல்வேன். அப்போது “மலக்” அமரர்கள் என்னைச் சூழ்ந்தவர்களாக வருவார்கள். நான் பாடசாலையை அடைந்ததும் என்னுடன் வந்த மலக்குகள் அல்லாஹ்வின் வலீ அமர்வதற்கு இடம் கொடுங்கள் என்று சொல்வார்கள்.
 
அவ்வேளை எனக்குத் தெரியாத ஒருவர் அவ்வழியால் சென்றார். இவருக்கு இடம் கொடுங்கள் என்று மலக்குகள் கூறியதை அவர் செவிமடுத்தார் போலும். அப்போதவர் யார் இச்சிறுவன் என்று அங்கிருந்தவர்களில் ஒருவரிடம் அவர் கேட்டார். அதற்கு அங்கு இருந்தவர்களில் ஒருவர் இவர் கண்ணியத்திற்குரிய ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறினார். அதற்கு அந்த மனிதர் இவருக்கு வலுப்பமிகு ஒரு விடயம் பின்னொரு காலத்தில் உண்டு என்று கூறிவிட்டு இவர் கொடுப்பார். இல்லையென்று சொல்லமாட்டார், அனைவரையும் ஆதரிப்பார், எவரையும் தடுக்கமாட்டார் என்று கூறிவிட்டுப் போய்விட்டார். பின்னர் 40 வருடங்களின் பிறகுதான் அந்த மனிதர் “அப்தால்”களில் ஒருவர் என்று நான் அறிந்து கொண்டேன் என்றார்கள் குத்பு நாயகம் றழியல்லாஹு அன்ஹு அவர்கள்.
 
قال الحافظان الذّهبي وابن رَجَب أنّ أباه أبو صالح عبد الله بن جَنْكِيْ دُوْسْتْ، والله أعلم، وأقول وجَنْكِيْ دُوْسْتْ لفظ عجميٌّ، معناه يحبُّ القتال، والله أعلم، وأمّه أمُّ الخير، فاطمة بنت الشّيخ عبد الله الصومعي الحُسينيُّ الزاهد، وكان لها حظٌّ وافر من الخير والصّلاح، نُقِلَ عنها أنّها كانت تقول لمّا وضعت ابني عبد القادر كان لا يرفع ثَديَه فى نهار رمضان، وغُمَّ على النّاس هلال رمضان، فأتوني وسئلوني عنه، فقلت لهم لَمْ يَلْقَمِ الْيَومَ ثديا، ثمّ اتّضَحَ أنّ ذلك اليوم كان من رمضان، واشتهر ذلك بِبِلادِ جِيلان أنّه وُلد للأشراف ولدٌ لا يرضع نهار رمضان،
 
அல்ஹாபிள் தஹபீ, அல் ஹாபிள் இப்னு றஜப் றஹிமஹுமல்லாஹ் இருவரும் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
குத்பு நாயகம் அப்துல் காதிர் ஜீலானீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் தந்தையின் பெயர் அபூ ஸாலிஹ் அப்துல்லாஹ் இப்னு “ஜன்கீ தோஸ்த்” என்பதாகும். “ஜன்கீ தோஸ்த்” என்ற சொல் அறபு மொழியல்ல. பாரசீக மொழியாக இருக்கலாம் என்பது எனது கருத்து. இதன் பொருள் போரை விரும்புகின்றவர் என்பதாகும்.
 
குத்பு நாயகம் அவர்களின் தாயார் “உம்முல் கைர் பாதிமா” என்பதாகும். இவர்கள் அஷ் ஷெய்கு அப்துல்லாஹ் அஸ்ஸவ்மஈ அவர்களின் மகள் ஆவார்கள்.
 
குத்பு நாயகம் அவர்களின் தாயார் பின்வருமாறு கூறுகின்றார்கள். எனது மகன் அப்துல் காதிர் அவர்களை நான் பெற்ற போது றமழான் மாத பகல்களில் மட்டும் அவர்கள் என்னிடம் பால் குடிக்கமாட்டார்கள். ஒரு முறை றமழான் மாத்திற்கான தலைப்பிறை ஊர் மக்களால் அன்று காண முடியாமல் போயிற்று. ஊர் மக்கள் அன்று நோன்புதானா இல்லையா என்பதை அறிந்து கொள்வதற்காக அன்று பகல் அவர்களின் தாயாரிடம் வந்து குழந்தை இன்று பகல் பால் குடித்ததா என்று கேட்டார்கள். இல்லை என்று தாயார் சொன்னதால் அன்று தலை நோன்பு என்று ஊர் மக்கள் முடிவு செய்தார்கள். இந்தச் செய்தி ஜீலான் நகர் எங்கும் பரவலாயிற்று.
 
குத்பு நாயகம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் எண்ணிலடங்காத அற்புதக் கடலாக விளங்கினார்கள். அவர்களின் “கறாமாத்” அற்புதங்கள் இவ்வளவுதான் என்று எந்த ஒருவராலும் எழுத முடியாமற் போயிற்று.
 
அல்லாஹ்வின் நல்லருளாலும், குத்பு நாயகம் அவர்களின் அற்புதத்தாலும் எனக்கும், அல்ஹாஜ் MCM ஹுஸைன் அவர்களுக்கும், வெளியூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இன்னொருவருக்கும் அவர்களின் தர்ஹாவுக்குப் பக்கத்திலிருந்த ஹோட்டல் ஒன்றில் ஒரு மாதம் தங்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களைத் தினமும் தரிசிப்பதற்கும், நீண்ட நேரம் அங்கு தங்கியிருந்து அவர்களின் அருளைப் பெறுவதற்கும் பெரியதோர் பாக்கியமாயிற்று. அல்ஹம்துலில்லாஹ். 
 
நான் இன்றுவரை ஆரோக்கியமாக உயிர் வாழ்வதற்கு வலீமாரின் ஆசீர்வாதமே காரணம் எனலாம். என் வாழ்வு மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.
 
(குத்பு நாயகம் புனித றமழான் மாதம் முதலாம் நாள் அன்று பிறந்ததை நினைவூட்டுவதற்காக இக்கட்டுரை எழுதப்பட்டது)
எனது கருத்துக்களை வாசிப்பவர்கள் எனக்காக ஒரு நொடி நேரம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments